''டீஸ்டா செடல்வாட்'' - 2002 குஜராத் கலவர வழக்கைப் பற்றிப் பேசும்போது தவிர்க்க
முடியாத பெயர்களில் முக்கியமானது. ஆளும் கட்சிக்கு எதிராகவும்,
இந்தியாவின் பெரிய மதவாத அமைப்புக்கு எதிராகவும் தொடர்ந்து போராடிவருவது
அத்தனை எளிதல்ல. அந்தப் போராட்டத்தின் விளைவாக இவர் மீதும் இவரது
செயல்பாடுகள் மீதும் கீழ்த்தரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கொலை
மிரட்டல்கள் குவிந்தன. இவற்றுக்கெல்லாம் கொஞ்சமும் அசராமல், பாதிக்கப்பட்ட
முஸ்லிம் மக்களுக்கு நீதி கேட்டுப் போராடுவதில் பின்வாங்காமல் இருப்பதொன்றே
டீஸ்டாவின் மனஉறுதிக்குச் சான்று. சென்னை வந்திருந்தவரிடம் பேசினோம்...
உங்கள் சமூகப் பார்வைக்கான அடித்தளம் எது?
என் வீடுதான் என் போராட்ட வாழ்வுக்கான முதல் படியை அமைத்துத் தந்தது.
மும்பையில் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தேன். என் தாத்தா எம்.சி.
செடல்வாட், இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரல். என் அப்பா அதுல் செடல்வாட்,
ஒரு வழக்கறிஞர். எனக்கும் என் தங்கைக்கும் அநாவசியக் கட்டுப்பாடு இல்லை.
இருந்தாலும் நாங்கள் எங்கள் சுதந்திரத்தின் எல்லையை உணர்ந்தே இருந்தோம்.
சிறு வயதில் இருந்தே நான் நிறைய படிப்பேன். உணவு மேசையில் அப்பா நிறைய
விஷயங்களைப் பேசுவார். நாங்கள் பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து
விவாதித்திருக்கிறோம். வாசிப்பும் விவாதமும் புதிய வாசல்களைத் திறந்தன.
பத்திரிகைப் பணி எந்த வகையில் உங்கள் சமூகப் பார்வைக்கு உதவியது?
பள்ளி நாட்களிலேயே பாப் வுட்வர்ட் போன்ற பத்திரிகையாளர்களின் புத்தகங்களைப்
படித்தேன். உலகின் சிறந்த பத்திரிகையாளர்களின் கட்டுரைகளை வாசித்தேன்.
அதுதான் பத்திரிகைத் துறையின் மீது எனக்கு ஆர்வம் ஏற்படக் காரணம். ஏழு
தலைமுறை வழக்கறிஞர்களைக் கொண்ட குடும்பத்தில், நானும் அதே துறையில்
பணியாற்றுவேன் என்ற எதிர்பார்ப்பு எழுவது இயல்புதானே. ஆனால், நான்
பத்திரிகைத் துறையைத் தேர்ந்தெடுதேன். என் முடிவை என் அப்பா வரவேற்றார்.
‘டெய்லி,’ ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ்களிலும், பிறகு ‘பிஸினஸ்
இந்தியா’ பத்திரிகையிலும் பணியாற்றினேன்.
சமூகத்துக்கு நீதி சொல்கிற பத்திரிகைத் துறையிலும் ஆண், பெண்
சமநிலையின்மையை உணர்ந்தேன். பெண் நிருபருக்கு அரசியல் செய்திகளைச் சேகரிக்க
அனுமதியில்லை. பெண்களுக்கு அரசியல் அறிவு இல்லை என்ற பிற்போக்குத்தனமான
எண்ணமே இதற்குக் காரணம். ஒருமுறை ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி
போர்க் கப்பலைப் பார்வையிட்டுச் செய்தி சேகரிக்கப் போயிருந்தோம்.
கப்பலுக்குள் பெண் நிருபர்கள் வந்தால் கமாண்டர்களின் கவனம் சிதறும் என்று
எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. அப்போது இந்திரா காந்தி பிரதமராக
இருந்தார். ஒரு பெண், பிரதமராக இருக்கும் நாட்டில் பெண் நிருபர்களுக்கு
இப்படியொரு அவமானமா என்று அங்கேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
பத்திரிகைப் பணியைத் துறந்தது ஏன்?
பத்திரிகைப் பணியில் நான் சமரசம் செய்துகொண்டதில்லை. இருந்தாலும் ஏதோ ஒரு
தேக்க நிலை இருப்பதாகத் தோன்றியது. நானும் என் கணவர் ஜாவேத் ஆனந்தும்
பத்திரிகைப் பணியைத் துறந்துவிட்டு, ‘கம்யூனலிசம் காம்பாட்’ இதழைத்
தொடங்கினோம். மதவாதத்தை எதிர்ப்பதுதான் இதன் முக்கிய நோக்கம். மதத்தின்
பெயரால் சூறையாடப்படப்படுகிற மக்களுக்கு வேறு எதையும்விட சட்டத்தின் துணை
அவசியம். அதை எங்கள் பத்திரிகை வாயிலாகச் சொல்கிறோம்.
மதவாதத்துக்கு எதிராக நீங்கள் செயல்பட ஆரம்பித்தது எப்படி?
மதவாதத்தின் கோரத் தாண்டவத்தின் விளைவுகளை மிக அருகில் இருந்து பார்த்தேன்.
தங்கள் அடிப்படை உரிமைகளுக்குக்கூடக் குரல் எழுப்ப முடியாத சிறுபான்மை
மக்களுக்கு நீதி மட்டும் தானாகக் கிடைத்துவிடுமா என்ன? அதனால் முழு நேர
மனித உரிமை செயல்பாட்டில் என்னை இணைத்துக்கொண்டேன். சில பத்திரிகை
நண்பர்களுடன் சேர்ந்து ‘நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்’ (Citizens for
Justice and Peace) என்ற அமைப்பைத் தொடங்கினோம். குஜராத் கலவரத்தில்
பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்து
போராடிக்கொண்டிருக்கிறோம்.
உங்கள் கணவர் முஸ்லிமாக இருப்பதால்தான் நீங்கள் குஜராத் கலவரத்தில் ஆர்வம் காட்டுவதாகச் சொல்லப்படுகிறதே?
இந்த ஒரு வழக்கில் மட்டுமா ஈடுபாடு காட்டுகிறேன்? இந்த நாட்டில் நடக்கும்
எத்தனையோ செயல்களை எதிர்த்துப் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன். சிறுபான்மை
மக்களுக்காகக் குரல் கொடுக்க யாரும் இல்லை, நான் துணிந்து போராடுகிறேன்.
அவ்வளவே.
ஆளுங்கட்சியை எதிர்த்து நிற்பது எப்படி இருக்கிறது?
முன்னாள் குஜராத் முதல்வரும் இந்நாள் பிரதமருமான நரேந்திர மோடியையும் வேறு
சில அரசியல் பிரமுகர்களின் பெயர்களையும் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்கச்
சொல்லி வலியுறுத்தி நாங்கள் வழக்கு தொடர்ந்த நாளில் இருந்தே எங்களுக்குப்
பிரச்சினைகள் தொடங்கிவிட்டன. ஏகப்பட்ட கொலை மிரட்டல்கள். கொலை
மிரட்டல்களைக்கூடச் சமாளித்துவிடுகிறேன். ஆனால், சிலரின் கொச்சையான
வார்த்தைகளையும் அருவருக்கத் தக்க வசைகளையும் காதுகொடுத்துக் கேட்க
முடியவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை. எங்களுக்கு
வேண்டியதெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி.
பள்ளிகளின் பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் என்ற நோக்கத்துடன் நீங்கள் தொடங்கிய ‘கோஜ்’ அமைப்பின் நிலை என்ன?
மறைக்கப்பட்ட வரலாறுகளை மீட்டெடுத்து, அதை இளைய தலைமுறையினருக்கு
அறிமுகப்படுத்துவதுதான் ‘கோஜ்’ அமைப்பின் நோக்கம். தென்னிந்தியாவில்
இன்னும் எங்கள் பணிகளை ஆரம்பிக்கவில்லை. மகாராஷ்டிரத்தில் ஓரளவுக்கு
நாங்கள் நினைத்ததைச் செயல்படுத்த முடிகிறது. பள்ளிகளில் பல்வேறு
கலாச்சாரங்களைக் கொண்ட மாணவர்களை உரையாடச் செய்கிறோம். பல்வேறு
கலாச்சாரங்களோடு ஒன்றிணைந்து வாழும் வேற்றுமையில் ஒற்றுமைதான் நாங்கள்
விரும்புவது. இந்தியப் பாடப் புத்தங்களில் திட்டமிட்ட சதி
அரங்கேறிவருகிறது.
முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் இவர்கள் யாருக்கும்
இந்திய சுதந்திர வரலாற்றில் இடமே இல்லையா? அம்பேத்கர், பெரியார், நாராயண
குரு, கான் அப்துல் கஃபார் கான், சந்தால் இன மக்கள் எல்லாம் இந்திய
வரலாற்றுப் புத்தகங்களிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்படுவதற்கும்
மறைக்கப்படுவதற்கும் என்ன காரணம்? இந்துத்துவம் என்பது சிறுபான்மையினரையும்
அவர்களின் அடையாளங்களையும் அழித்தொழிப்பதா?
ஒரு செயல்பாட்டாளராக, இந்தியாவில் பெண்களின் நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பெண்கள் இங்கே சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். ஆண்,
பெண் சமநிலையின்மை குறித்த கருத்தரங்கில் பேசுவதற்காக லக்னோ
சென்றிருந்தேன். ஆண்கள் நிறைந்திருந்த அந்த மேடையில் என்னையும் சேர்த்து
இரண்டே பெண்கள். எத்தனை முரண்...! ‘எங்கே என் சகோதரிகள்?’ என்ற கேள்வியோடுதான்
என் பேச்சைத் தொடங்கினேன். நம் சமூக அமைப்பிலேயே கோளாறு இருக்கிறது. ஆண்
குழந்தையைக் கொண்டாடுவதும் பெண் குழந்தையை அடக்கிவைப்பதும் இங்கே ஆண்டாண்டு
காலமாக நடந்துவருகிறது. அந்த எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். மனித உரிமை
என்பது பெண்ணுக்கான உரிமையும்தானே.
ஊடகப் பெண்களுக்கான கூட்டமைப்பிலும் நீங்கள் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறீர்களல்லவா?
பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் பற்றி ஊடகப் பெண்களுடன் தொடர்ந்து
விவாதித்துவருகிறோம். பெண்கள் பணியாற்றும் இடங்களில் அவர்களின்
பாதுகாப்புக்காக ஒரு குழு செயல்பட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. அது
எத்தனை இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது? உச்ச நீதிமன்றத்
தீர்ப்பு எழுதிய காகிதத்தை வைத்துக்கொண்டு பெண்கள் தங்களுக்கு எதிரான
பாலியல் வன்முறைகளைச் சமாளித்துவிட முடியுமா? பெண்கள் எதையும் துணிச்சலுடன்
எதிர்த்துப் போராட வேண்டும். அந்தப் போராட்ட குணம்தான் அவர்களைப்
பாதுகாக்கும் கவசம்.
போராட்டத்தின் பலன் கைது செய்யப்படுவதா?
நரேந்திர மோடிக்கு எதிராக டீஸ்டா செயல்படத் தொடங்கியதுமே அதற்கான விளைவு
எப்படியிருக்கும் என்பதையும் அவர் உணர்ந்தே இருந்தார். காங்கிரஸ் முன்னாள்
எம்.பி ஈஷான் ஜாஃப்ரியும் அவரது வீட்டில் தஞ்சம் புகுந்தவர்களும் குஜராத்
கலவரத்தின்போது படுகொலை செய்யப்பட்டனர். தன் கணவரின் மரணத்துக்கு நீதி
கேட்டு வழக்குத் தொடர்ந்தார் ஈஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜக்கியா ஜாஃப்ரி.
குஜராத் கலவர வழக்கில் நரேந்திர மோடியுடன் சேர்த்து 59 பேரைக்
குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் என்று அவர் 2006-ல் உச்ச நீதிமன்றத்தில்
வழக்கு தொடுத்தார். நரேந்திர மோடிக்கு எதிரான சாட்சிகள் இருந்தாலும் அவை
வழக்கு தொடரக்கூடிய அளவுக்கு வலுவானவை இல்லை என்று அந்த வழக்கில் 2012-ல்
தீர்ப்பு வெளியானது.
அதைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டீஸ்டாவின்
ஆதரவுடன் 2013-ல் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்தப் புள்ளிதான்
டீஸ்டா மீதும் அவருடைய கணவர் ஜாவேத் மீதும் மோடி அரசாங்கம் தாக்குதல்
நடத்தக் காரணமாக இருந்தது. இவர்கள் இருவர் மீதும் மோசடி வழக்கு
தொடரப்பட்டு, கைது செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ‘மோடி போன்றவர்களின்
கையில் அதிகாரம் இருந்தால், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கிறவர்களின்
நிலை என்ன ஆகும் என்பதற்கு டீஸ்டா மற்றும் ஜாவேத் மீது மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கைகளே சாட்சி’ என்று அரசியல் ஆர்வலர்களும் விமர்சகர்களும் கருத்து
தெரிவித்தனர். இருவருக்கும் தொடர்ந்து முன் ஜாமீன் மறுக்கப்பட்டது. கபில்
சிபல் தலையிட்டதன் பேரில் டீஸ்டா கைது செய்யப்படுவது நின்றது. ஆனால் இது
தற்காலிகமானதுதான்.
- பிருந்தா சீனிவாசன்
தொடர்புக்கு : brindha.s@thehindutamil.co.in
நன்றி : தி இந்து - தமிழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக