செவ்வாய், 3 மார்ச், 2015

மருத்துவக்காப்பீட்டு பிரிமியத்தை அதிகரிக்க மோடி சூழ்ச்சி...!


                     ''ஆயுள் காப்பீடு'' என்பது நமது நாட்டில் வாங்கக்கூடியப் பொருளல்ல. விற்கக்கூடிய பொருள். இந்திய மக்கள் ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவம் உணர்ந்து தானாக முன் வந்து தங்களுக்கு வேண்டிய ஆயுள் காப்பீட்டை வாங்கிக்கொள்ளும் அளவிற்கு அவர்களின் பொது அறிவு என்பது மிகவும் குறைவானதே. ஆனால் வாகனத்திற்கான ''ஆயுள் அல்லாத காப்பீடு'' என்பது கட்டாயம் தேவை என்பதை மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.  அதுவும் குறிப்பாக தங்கள் வாகனத்திற்கு கட்டாயத்தின் பேரில் மனமுவந்து தேடித்தேடி காப்பீடு செய்துவிடுகிறார்கள். ஏனென்றால் தங்கள் வாகனங்கள் தொலைந்துவிட்டாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ இழப்பீடுகளை பெறுவதற்கு ''ஆயுள் அல்லாத காப்பீடு'' என்பது அத்தியாவசமானது என்பதை நன்கு தெரிந்துவைத்திருக்கிறார்கள். காவல்துறையின் நெருக்கடியை சமாளிப்பதற்காகவே கூட கட்டாயத்தின் பேரில் காப்பீடு செய்துகொள்கிறார்கள்.
                அதேப்போல் இன்றைக்கு  மக்களின் மாறிவிட்ட உணவு பழக்கங்களாலும், நிறைய வாகனங்கள் பெருகிவிட்டதாலும் நாட்டில் ஏகப்பட்ட நோய்களும், விபத்துகளும் அன்றாட வழக்கமான விஷயமாக போய்விட்டது. நோய்வாய்பட்டாலோ, விபத்தினால் எலும்பு முறிவு ஏற்பட்டாலோ மக்கள் அரசு மருத்துவமனையை நாடுவதில்லை. ஆம்புலன்சை வரவழைத்து நேராக ஏதாவது ஒரு தனியார் மருத்துவமனையை நோக்கி சென்றுவிடுகிறார்கள். அரசு மருத்துவமனையின் மீது நம்பிக்கையில்லாமல் தனியார் மருத்துவமனையை நாடி சிகிச்சை பார்த்துக்கொள்வதால் சாதாரண மக்கள் தங்கள் சக்தியை மீறி செலவு செய்யவேண்டியிருக்கிறது. அதன் காரணமாக அவர்கள் வெளியே கடன் வாங்குவதும், கடனை திரும்பக்கட்டமுடியாமல் கஷ்டப்படுவதாலும், அந்த பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் இன்றைக்கு ''மருத்துவக்காப்பீட்டை'' நாடுகிறார்கள். ஒரு குடும்பத்தில் உள்ள  கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள், கணவனின் பெற்றோர் மற்றும் மனைவியின் பெற்றோர் என அனைவருக்கும் சேர்த்து மருத்துவக்காப்பீடு செய்யலாம்.
                   இந்த மருத்துவக்காப்பீட்டில் இரண்டு வகைகள் உள்ளன. அவைகள் (1) மருத்துவச்செலவை திரும்பப்பெறுதல்  (2) பணமில்லா சிகிச்சை வசதி என இரண்டு வகைகள் உள்ளன.

மருத்துவச்செலவை திரும்பப்பெறுதல் :

            இந்த முறையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், மருத்துக்காப்பீடு பெற்றவர் வழக்கம்போல் கடனை - உடனை வாங்கி செலவு செய்துகொள்ளவேண்டும். மருத்துவமனையில் கொடுக்கப்படும் ரசீதுகள்  மற்றும் மருந்துக்கடைகளில் கொடுக்கப்படும் ரசீதுகள் என பாதிக்கப்பட்ட நோயாளியின் பெயரில் வாங்கவேண்டும். பின் உடல் நலம்பெற்று வீடு திரும்பியவுடன் ரசீதுகள் அத்தனையையும் இன்சூரன்ஸ் கம்பெனியில் கொடுத்து செலவு செய்தப் பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ளவேண்டும். இதில் பல்வேறு விதிமுறைகளும், சட்டத்திட்டங்களும் இருப்பதால், இந்த முறையில் தவறு நடப்பதற்கு மிகக்குறைவான வாய்ப்புகளே உள்ளன. அதனால் தான் அரசுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி மற்றும் நான்கு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளும் தங்களது மருத்துவக்காப்பீட்டில் மருத்துவச்செலவை திரும்பப்பெறும் முறையைத்தான் நடைமுறையில் வைத்திருக்கிறார்கள்.

பணமில்லா சிகிச்சை வசதி :

                   ஆனால் இந்தியாவிலுள்ள தனியார் கம்பெனிகள் அனைத்தும் பணமில்லா சிகிச்சை வசதி முறையைத்தான் பின்பற்றுகிறார்கள். இந்தக் காப்பீட்டை வைத்திருப்பவர்கள், ஏதாவது சிகிச்சைஎன்றால் பாக்கெட்டுல ஒரு பைசா இல்லாமல் மருத்துவக்காப்பீட்டு அட்டையை மட்டும் எடுத்துக்கொண்டு, ஒரு தனியார் மருத்துவமனைக்கு போய் படுத்துக்கொள்ளலாம். அவர் எந்தக் கம்பெனி காப்பீட்டை வைத்திருக்கிறாரோ, அந்தக் கம்பெனிக்கு ''அய்யா இந்த சிகிச்சைக்காக எங்க மருத்துவமனைக்கு வந்திருக்காரு. இவருக்கு சிகிச்சை அளிக்க இவ்வளவு செலவாகும். அதை உடனடியாக எங்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வையுங்கள்'' என்று காப்பீட்டு நிறுவனத்திற்கு எழுதிப் போட்டால் போதும், ஏன் - எதுக்கு என்றெல்லாம் கேள்வி கேட்காமல் கேட்டப் பணத்தை தாராளமாக அனுப்பி வைத்துவிடுவார்கள். மக்களுக்கும் இது தான் சுலபமான முறையாக உணருகிறார்கள். இந்த வகையான பணமில்லா  சிகிச்சை வசதி முறையை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மட்டும் தான் தருகிறார்கள். அதனால் மக்களும் அரசு நிறுவனத்தை விட தனியார் நிறுவனத்தையே நாடுகிறார்கள்.
              அரசு நிறுவனமோ அல்லது தனியார் நிறுவனமோ யார் மருத்துவக்காப்பீடு அளித்தாலும், மேலே சொன்னபடி ஒரு குடும்பத்திலுள்ள எட்டு பேருக்கும் சேர்த்து அளித்தாலும் கூட ஆண்டுக்கு ரூ.12,000 அல்லது 13,000 ருபாய் தான் பிரிமியமாக கட்டவேண்டியிருக்கும். பிரிமியம் அதற்கு மேல் போவதற்கு வாய்ப்பே இல்லை.
              இது  இப்படியிருக்க பிப்ரவரி 28 -ஆம் தேதி பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மாத சம்பளக்காரர்களின் எந்தவிதமான எதிர்ப்பார்ப்பையும் நிறைவேற்றாமல், வருமானவரிச்சட்டம்-80D அடிப்படையில் மருத்துவக்காப்பீட்டிற்கு தரப்படும் சலுகையை ரூ.15,000-திலிருந்து 25,000 ஆகவும், மூத்த குடிமக்களுக்கு ரூ.20,000-திலிருந்து 30,000 ஆகவும் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஏதோ  பெரிய சலுகையை கொடுத்துவிட்டது போன்று பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் கூவிக்கொண்டிருக்கின்றன. ஆனால் தற்சமயம் மருத்துக்காப்பீட்டில் 12,000-மோ அல்லது 13,000-மோ அதிகப்பட்ச பிரிமியமாக பெறப்படும் சூழ்நிலையில், 20,000 மாக உயர்த்தினால் என்ன...? 30,000 மாக உயர்த்தினால் என்ன...? மாத சம்பளக்காரர்களுக்கு ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை.
             ஆனால் இதையெல்லாம் தெரியாமல் மோடியும், அருண் ஜெட்லியும் பட்ஜெட்டில் சும்மா அறிவித்துவிடவில்லை. இந்த அறிவிப்புக்குப் பின்னால் மோடியின் மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கிறது என்பதை மக்கள் உணரவேண்டும். இந்தியாவில் மருத்துவக்காப்பீடு வழங்கும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் எதிர்க்காலத்தில் மக்களிடம் கொள்ளை இலாபம் அடிப்பதற்காக, மருத்துவக்காப்பீட்டுக்கான  பிரிமியத்தை மேலும் கடுமையாக உயர்த்தப்போவதற்கான அறிகுறி தான் இந்த பட்ஜெட் அறிவிப்பு என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். பிரிமியத்தை உயர்த்துவதற்கு முன்பே அதற்கு வசதியாக சலுகையை உயர்த்தியிருக்கிறார்கள் என்பதே உண்மை.

கருத்துகள் இல்லை: