சனி, 7 மார்ச், 2015

மோடி உருவாக்கிய புதிய நெம்பர் ஒன் பணக்காரர்...!

               
              மத்தியில் இந்திய ஆட்சியாளர்கள்  நாட்டின் பெரும்பாலான ஏழை - எளிய மக்களின் ஓட்டுகளை பெற்று  தான் ஆட்சியில் அமருகிறார்கள். ஆனால் அவர்கள், அன்றைய நேருவில் தொடங்கி இன்றைய மோடி வரை ஓட்டுப்போட்ட அந்த மக்களுக்காக வேலை செய்வதில்லை. அன்றைக்கு நேருவுக்கு ஓட்டுப்போட்ட மக்கள் எந்த குடிசையிலிருந்து ஓட்டுப்போட்டார்களோ, அதே குடிசையிலிருந்து தான் அவர்களது பிள்ளைகளும் இன்றைக்கு மோடிக்கும் ஓட்டுப்போட்டு பிரதமராக உட்கார வைத்திருக்கிறார்கள். ஆனால் 1947-ஆம் ஆண்டிலிருந்து 2015-ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகாலத்தில் ஏராளமான ஆட்சி மாற்றங்கள் தான் ஏற்பட்டிருக்கின்றனவே தவிர, ஓட்டுப்போட்ட மக்களின் பொருளாதாரத்தில் எந்தவிதமான மாற்றங்களும்  ஏற்படவுமில்லை. அவர்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்தபாடில்லை. அதே சமயத்தில் இந்தியாவில் ஆட்சியாளர்களை - அவர்களின் ஆட்சியை வழிநடத்துகிற பெருமுதலாளிகள்  மற்றும் பெரும்பணக்காரர்களின் பொருளாதாரத்தில் மட்டும்  மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. முன்னைவிட அவர்களின் வருமானமும், கொள்ளை இலாபமும் உயர்ந்துகொண்டே தான்  போகின்றன. அனைத்து இந்திய இந்திய பெருமுதலாளிகளும், பெரும்பணக்காரர்களும் ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளைகளாய் இருப்பது என்பதும், அவர்களில் பிரதமருக்கு நெருக்கமானவ்ரர்கள் மட்டும் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்கள் மட்டும் நெம்பர் ஒன் இடத்திற்கு வருவது என்பதும் நம் நாட்டில் காலகாலமாக நடந்துவரும் வழக்கமாகும். அப்படித்தான் ஆரம்பக் காலத்திலிருந்து டாட்டா, பிர்லா, கோயங்கா, திருபாய் அம்பானி, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி என ஆட்சியாளரிடத்தில் இவர்களுக்கு இருக்கும் நெருக்கத்தின் காரணமாக, காலத்திற்கு தகுந்தாற்போல் இவர்களில் ஒருவர்  அவ்வப்போது இந்தியாவின் நெம்பர் ஒன் பணக்காரராக முன்னிலைக்கு வந்தனர்.
            அதிலும் கடந்த 1991-ஆம் ஆண்டிற்கு பின் இந்தியாவில் புகுந்த  உலகமயக்கொள்கையின் காரணமாக உலகப்பணக்காரர்கள் வரிசையில் இடம்பெறும் அளவிற்கு இந்திய பெரும்பணக்காரர்களின்   பொருளாதாரம் தாறுமாறாக உயர்ந்தது. ஆரம்பத்தில் ஐந்து பெரும்பணக்காரர்கள் மட்டுமே இருந்த நம் நாட்டில், இந்த காலக்கட்டத்தில் மாறி மாறி வந்த ஆட்சியாளர்களின் முழு ஒத்துழைப்போடும், ஆதரவோடும் நூற்றுக்கணக்கில் பெரும்பணக்காரர்கள் உருவாகினர் என்பது தான் உண்மை. இது போன்று உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெறும் அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான பெரும்பணக்காரர்களை அடையாளம் காட்டி,  ''இந்தியப்  பொருளாதாரம்  முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரும் வளர்ச்சி அடைந்திருக்கிறது'' என்று ஆட்சியாளர்கள் ஒன்றுமறியா நம் நாட்டு ஏழை எளிய மக்களிடமே மார்தட்டிக்கொண்டனர். நம் ஆட்சியாளர்கள் பெருமுதலாளிகளின் எண்ணிக்கை வளர்ச்சியும், அவர்களின் பொருளாதார வளர்ச்சியும் மட்டுமே நாட்டு  வளர்ச்சியின் அளவுகோளாக காட்டித்தான் இதுவரையில் மக்களை ஏமாற்றிவருகின்றனர். 
                அண்மையில் மோடி தலைமையில் பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சியை பிடித்தவுடன், மோடியின் ''பொருளாதார அடியாளான'' குஜராத் மாநிலத்தை சேர்ந்த  அதானி என்ற பணக்காரர் உலக அரங்கில் போட்டிப்போடக்கூடிய பணக்காராராக மோடியால் முன்னிறுத்தப்பட்டார். அதேப்போல் திரைமறைவில் உலக அளவில் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் ஒருவராகவும், இந்தியாவின் நெம்பர் ஒன் பணக்காரராகவும் பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்டவர் தான் ''சன் பர்மாசுடிக்கல்ஸ்'' என்ற மருந்து உற்பத்தி செய்யும்   நிறுவனத்தின் முதலாளியான  திலிப் சாங்வி. என்பவர் தான். இவரது தற்போதைய சொத்து மதிப்பு என்பது 2,150 கோடி டாலர் என்று சொல்லப்படுகிறது. ரூபாய் மதிப்பில் சொல்லவேண்டுமென்றால், ரூ.1,29,000 கோடியாகும். இப்படி ரூபாய் மதிப்பில் சொன்னால் மக்கள் புரிந்துகொண்டுவிடுவார்கள் என்பதால், டாலர் மதிப்பில் சொல்கிறார்கள். இவரென்ன உழைத்து இந்த அளவிற்கு சொத்து சேர்த்திருக்கிறாரா...? உலகமயம் மற்றும் தாராளமயக் கொள்கைகளும், ஆட்சியாளர்களின் தாராளமான கருணையும் தான் இவரை இந்த அளவிற்கு உயர்த்தி இருக்கிறது. அதிலும் நரேந்திரமோடி பிரதமர் ஆனவுடன் இவருக்குத் தந்த திரைமறைவு ஆதரவினால் தான் திலிப் சாங்வி, கடந்த எட்டு ஆண்டுகாலமாக இந்திய பெரும்பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்திலிருந்த முகேஷ் அம்பானியையே  மிஞ்சமுடிந்தது.
                  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய மருந்தாலையாக தொடங்கப்பட்ட சன் பார்மாசுட்டிக்கல்ஸ் என்ற திலிப் சாங்வியின் நிறுவனம், இன்று  இந்தியா மற்றும் அமெரிக்காவில் மொத்தம் 18 இடங்களில் பறந்து விரிந்து மருந்தாலைகளை நிறுவி,  உலக அளவில் முக்கிய நோய்களை குணப்படுத்தும் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தயாரிக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. அவரது 18 மருந்தாலைகளில் ஒவ்வொரு ஆலையிலும் சுமார் 20 அல்லது 30 வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அண்மையில் சென்ற ஆண்டு ரேன்பாக்சி லேபாரேட்டரீஸ் லிமிடெட் என்ற மிகப்பெரிய மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது என்பது இவரது பொருளாதார வளர்ச்சியில் இன்னொரு மைல்கல் என்று தான் சொல்லவேண்டும். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அந்த ஒரு அளவிற்கு அபார வளர்ச்சி.
                புற்றுநோய், இருதய நோய், நுரையீரல் மற்றும் சுவாச நோய், எலும்புறுக்கி நோய், சர்க்கரை நோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய், வயிறு மற்றும் குடல் நோய், மன நோய், பாலியல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளிட்ட  ''இந்திய தேசிய வியாதிகள்'' அனைத்திற்கும் திலிப் சாங்வி நோய் தீர்க்கும் மருந்துகளை உற்பத்தி செய்கிறார். அதுமட்டுமல்ல அவைகள் அனைத்திற்கும் காப்புரிமையும் வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் இந்திய பணக்காரர் வரிசைக்கோ அல்லது உலகப்பணக்காரர் வரிசைக்கோ போட்டியில் இல்லாமல் ஏதோ ஒரு இடத்தில் இருந்த இவரை முதல் 50 - உலகப்பணக்காரர் வரிசையில் 37-ஆவது இடத்திற்கு முன்னேறி இருப்பதற்கும், முதல் இந்திய பெரும் பணக்காரராக முன்னுக்கு வந்ததற்கும் இன்றைய பிரதமர் மோடியே மிகமுக்கிய காரணம்.  மோடி பதவியேற்றவுடன் மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தின் போது, இந்திய - அமெரிக்க மருந்து உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து பேசியதும், அந்த கூட்டத்தில் தான் மோடி 108 வகையான நோய் தீர்க்கும் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் விலையை உற்பத்தி விலையை விட பலமடங்கு கூட்டி விற்பனை செய்து கொள்ளலாம் என்று  அனுமதி அளித்து, உயிர்காக்கும் மருந்துகளின் விலைகளை பலமடங்கு உயர்த்திவிட்டு இந்திய மக்களின் உயிருக்கு உலைவைத்து விட்டு வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த கூட்டத்தில் பங்குகொண்டவர்களில் இந்த திலிப் சாங்வியும் ஒருவர் என்பது மட்டுமல்ல,  விலைகள் உயர்த்தப்பட்ட அந்த 108  வகையான மருந்துகளில்  அதிகப்படியானது ( நான்கில் மூன்று பங்கு ) திலிப் சாங்வி தயாரிக்கும் மருந்துகள் என்பதும் நாம் மனதில் வைக்கத்தக்கது.  
            அதுமட்டுமல்ல, திலிப் சாங்வி உள்ளிட்ட மருந்து உறபத்தி செய்யும் முதலாளிகள் மருந்தின் விலையை தாறுமாறாக உயர்த்தி கொள்ளை இலாபம் அடிக்க, அவர்களுக்கு வசதியாக பிரதமர் மோடி நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த  ''மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையை'' ஒழித்துக்கட்டினார். இதன் மூலம், மருந்து உறபத்தி செய்யும் முதலாளிகள் தங்கள் இஷ்டப்படி மருந்தின் விலையை பலமடங்குக்கு உயர்த்தி விற்கிறார்கள். இந்த புதிய நெம்பர் ஒன் பணக்காரரான திலிப் சாங்வி மட்டுமே, தான் உற்பத்தி செய்யும் மருந்துகளுக்கு, உற்பத்தி விலையை விட மனசாட்சியே இல்லாமல் 2,000% அளவிற்கு உயர்த்தி மருந்தின் விலையை நிர்ணயம் செய்து மக்களிடம் விற்பனை செய்கிறார். இதன் காரணமாக பத்து ரூபாய்க்கு விற்கவேண்டிய மருந்துகளெல்லாம் இன்றைக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்கிறது. அவைகள் அனைத்தும் உயிர்காக்கும் மருந்துகள் என்பதால் மக்கள் எப்படியாவது வாங்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்திய மக்களே... சன் பார்மாசுட்டிக்கல் நிறுவன முதலாளி எப்படி இந்தியாவின் முதல் பணக்காரராக முன்னுக்கு வந்தார் என்பது இப்போது புரிகிறதா...?
                 டாட்டா, பிர்லா, கோயங்கா, திருபாய் அம்பானி, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி வரிசையில்  திலிப் சாங்வி என்ற புதிய பெரும் பணக்காரராக  நரேந்திரமோடி தான் முன்னிலைக்கு கொண்டுவந்தார் என்பதே இந்திய பொருளாதார வளர்ச்சியின் வரலாறு.       

கருத்துகள் இல்லை: