ஞாயிறு, 1 ஜூலை, 2012

அப்துல் கலாமின் ''திருப்பு முனை''யும் எழுதப்படாத உண்மைகளும்...!

           முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ''அக்னி சிறகு'' என்ற தன்னுடைய சுயசரிதைக்குப் பிறகு ''TURNING POINT'' - ''திருப்பு முனை'' என்ற பெயரில்,  இந்தியாவின் குடியரசுத்தலைவராக ''மொகல் தோட்டத்தில்''  பணியாற்றிய போது தான் சந்தித்த நிகழ்வுகளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். ஆனால் அது இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் அந்த புத்தகத்தில் உள்ள ஒரு சில அம்சங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. புத்தகம் வெளிவருவதற்கு முன்பே விமர்சனம் செய்வது என்பதும் முறையாகாது என்றாலும், வெளிவந்த சிலத் தகவல்களை வைத்தே இங்கே எழுதப்படுகிறது. 
               தற்போது குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் - அதுவும் அந்த பழம் மீண்டும் தன் மடியில் வந்து விழுமா என்று எதிர்ப்பார்த்திருந்த சூழ்நிலையில் - காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் ஆதரவு கலாமுக்கு துளிக்கூட கிடைக்காத சூழ்நிலையில் சோனியா காந்தியைப் பற்றி கலாம் எழுதியதாக ஒரு தகவல் வெளிவந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
             ''2004 பாராளுமன்றத்தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியே  பிரதமராக பதவியேற்பார் என்கிற எதிர்ப்பார்ப்பில் அவரை ஆட்சியமைக்க வரும்படி அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றை ஜனாதிபதி மாளிகை தாயாராக தான் வைத்திருந்தது. ஆனால் இதற்கிடையில் பல்வேறு தனி நபர்களும், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், பல்வேறு இயக்கங்களும் என்னை நேரில் சந்தித்தும், கடிதங்கள் மூலமும், ஈ-மெயில் மூலமும் இத்தாலி நாட்டை சேர்ந்த சோனியாவை நாட்டின் பிரதமராக நியமிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். அப்போது தான் மன்மோகன் சிங்கை பிரதமராக்க முடிவு  செய்துள்ளதாக சோனியா காந்தி என்னிடம் தெரிவித்தார். சோனியாவின் இந்த முடிவு என்னை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. பிரதமர் பதவியை ஏற்க சோனியா காந்தி தயாராக இருந்திருந்தால் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்திருப்பேன்.''
              இந்த புத்தகத்தின் மூலம்  சோனியா காந்திக்கு பிரதமர் பதவி அளிக்காததற்கு அப்துல் கலாம்  ஏதோ பாவமன்னிப்பு கேட்பது போல் இருக்கிறது. அல்லது தன்னால் பிரதமர் பதவி கிடைக்காமல் போனதற்காக கோபத்தில் இருக்கும் சோனியா காந்தியை சமாதானம் செய்வதற்காக  எழுதப்பட்டது போலவும் இருக்கிறது. அது மட்டுமல்ல  தன் நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் எதுவுமே தெரியாமல் அரண்மனையிலிருக்கும் மகாராஜா ''மாதம் மும்மாரி பொழிந்ததா..?'' என்று கேட்பது போல், ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே  நடப்பவையெல்லாம்  - மொகல் தோட்டத்திற்கு வெளியே நடப்பவையெல்லாம் தனக்கு தெரியாதது போலவும் எழுதியிருப்பது என்பது விந்தையாக இருக்கிறது. 
             இவ்வளவு எழுதிய அப்துல் கலாம் 2004 -ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலுக்கு பிறகு நாட்டில் - குறிப்பாக தலைநகர் புதுடெல்லியில் நடந்தேறிய - உலகமே பார்த்த  பல்வேறு நிகழ்வுகளை பற்றிய உண்மைகளையும், அதன் பிறகு  அமைந்த ஆட்சியை பற்றிய தகவல்களையும்   மறைத்திருக்கிறாரா அல்லது மறந்திருக்கிறாரா என்று தெரியவில்லை.                     (1) சோனியா காந்திவுக்கு  பிரதமர் பதவியை அளிக்கக்கூடாது என்று அப்துல் கலாமை நேரிலும், கடிதம் மூலமும், ஈ-மெயில் மூலமும்  அறிவுறுத்திய அந்த நபர்கள் யார்..யார்..? எந்தெந்த கட்சியும் இயக்கங்களும் இவருக்கு அறிவுரை வழங்கின என்பதை ஏன் இவர் வெளியிடவில்லை? இவருக்கு குடியரசுத்தலைவர் பதவியை அளித்ததற்கு நன்றிக்கடனா...? 
 ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பாரதீய ஜனதா கட்சியும்,  சிவசேனா கட்சியும், அதன் கூட்டணிக்கட்சிகளும் தான் தன்னை அவ்வாறு தடுத்தன என்ற உண்மையை ஏன் சொல்லவில்லை...? வாஜ்பாய், அத்வானி, சுப்பிரமணியசாமி போன்றவர்கள் தான் தன்னை செயல்படாமல் தடுத்த அந்த பெரிய மனிதர்கள் என்ற உண்மையை ஏன் அவர் மறைத்தார்...? 
       (2) அதுமட்டுமல்ல... 2004 - பாராளுமன்றத்தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் கட்சி 218 இடங்களிலும், பாரதீய ஜனதா கட்சி 181 இடங்களிலும் வெற்றிபெற்றது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. 
        பாராளுமன்றத்தேர்தலுக்கு முந்தைய பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில், பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலைவுயர்வு, பொதுத்துறை பங்குகளை விற்றது, பொதுத்துறை நிறுவனங்களை விற்றது, பெருமுதலாளிகளுக்கு சலுகை போன்ற சிறப்பம்சங்களை பார்த்து வேதனையடைந்த மக்கள் 2004 பாராளுமன்றத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிக்கு வெற்றியையோ... மீண்டும் ஆளும் வாய்ப்பையோ தரவில்லை. பசுத்தோல் போர்த்திய வாஜ்பாயையும், ''இந்தியா ஒளிர்கிறது'' ''இந்துத்துவா'' போன்ற  கோஷங்களையும் அன்று  மக்கள் நம்பவில்லை.  
         இப்படி தனிப்பெரும்பான்மையே கிடைக்காத சூழ்நிலையிலும் வாஜ்பாய் கூட்டாளிகள் மீண்டும் ஆட்சியமைப்பதற்கு முயற்சி செய்து,  அதற்காக அன்றைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை இவர்கள் சந்தித்ததை நாம் யாரும் மறக்கவில்லை. ஆனால் அப்துல் கலாம் புத்தகம் எழுதும் போது மட்டும் எப்படி மறந்தார்...? 
        (3) இப்படியாக பாரதீய ஜனதா கட்சி முயற்சி செய்துகொண்டிருக்கும் போது, மீண்டும் இப்படிப்பட்ட நாசகர ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில், பா. ஜ. க அல்லாத ஆட்சி அமையவும், புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கவும் இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக 62 இடங்களில் வெற்றிபெற்ற இடதுசாரிகள் களமிறங்கினார்கள் என்பதை நாடே அறியும். அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், இந்திய நாட்டின் மாபெரும் தலைவருமாகிய தோழர். ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஒரு ''கிங் மேக்கராக'' செயல்பட்டதை இந்த நாடே பார்த்தது. ஆனால் அது மட்டும் எப்படி அப்துல் கலாம் கண்ணுக்கு மட்டும் தெரியாமல் போய்விட்டது..? 
     குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் இடதுசாரிகளின் ஆதரவுடன்  காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு தோழர். சுர்ஜித் தலைமையில் மே 16, 2004  அன்று சோனியா காந்தி வீட்டில் கூட்டணிக் கட்சித் தலைவர்களெல்லாம் ஒன்று கூடி சோனியா காந்தியை பிரதமராக தேர்ந்தெடுத்தார்கள் என்பதை நாம் மறந்திருக்க முடியாது. அப்துல் கலாம் மட்டும் இதை எப்படி மறந்தார்...? 
          சோனியா காந்தி வேண்டாம் என்று சொன்னவர்களை மட்டும் நினைவில் வைத்திருக்கிறார். வேண்டும் என்று சொன்னவர்களை மட்டும் தனக்கு வசதியாக மறந்துவிட்டாரா...? 
           2004 - ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலுக்கு பிறகு பா. ஜ. க. அல்லாத ஆட்சி அமைவதிலும், புதிய பிரதமர் தேர்ந்தேடுக்கப்படுவதிலும் தோழர். ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஆற்றிய பங்கு மிகப்பெரியது. யாராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாதது. 
             இவைகளெல்லாம் சொல்லப்படாமல் எழுதப்படும் அந்த புத்தகம் முழுமை பெறாது.

1 கருத்து:

Unknown சொன்னது…

யார்மூலம் பதவி கிடைத்தாலும் அதை இருகைநீட்டி வரவேற்கக் காத்திருக்கும் அந்த மனிதரிடம் சிறப்பாக என்ன எதிர்பார்த்துவிடமுடியும்?