செவ்வாய், 24 ஜூலை, 2012

தீரமும், கருணையும் நிரம்பிய கம்யூனிஸ்ட் தலைவர் கேப்டன் லட்சுமி - சிபிஎம் அரசியல் தலைமைக்குழு புகழஞ்சலி

         















 
       

        உத்வேகமூட்டக்கூடிய, தீரமிக்க விடுதலைப்போராட்ட வீரரும் அர்ப்பணிப்பு உணர்வோடும், கருணை உள்ளத்தோடும் எளிய மக்களுக்கு மருத்துவம் செய்து வந்த மருத்துவரும் பெண் உரிமைப்போராளியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உன்னதமான மதிப்புமிக்க உறுப்பினருமான கேப்டன் லட்சுமி செகால் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தனது இதயப்பூர்வமான ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை உருவாக்க உறுதுணையாக இருந்த தலைவர்களில் ஒருவரான அவர் மறையும்போது அந்த அமைப்பின் புரவலராக இருந்தார்.              கேப்டன் லட்சுமி கேரளத்தில் புகழ்மிக்க குடும்பம் ஒன்றில் பிறந்தார். சென்னையில் கல்வி பயின்ற அவர், மதி நுட்பம் மிகுந்த மாணவியாகத் திகழ்ந்தார். அவரது பெற்றோர் தங்களது வாழ்வை நாட்டிற்கு அர்ப்பணித்துக் கொண்ட விடுதலைப்போராட்ட வீரர்கள் ஆவர். அவரது தந்தையார் மிகச்சிறந்த வழக்கறிஞர், அவரது தாயார் சமூக ஊழியர் மற்றும் பெண்ணுரிமை பிரச்சாரகராகத் திகழ்ந்தவர் ஆவார்.
                கேப்டன் லட்சுமி தனது இளமைக்காலத்திலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவராக வளர்ந்தார். இந்த அர்ப்பணிப்பு உணர்வு அவரது வாழ்நாள் முழுவதும் அவரிடம் இருந்து வந்தது. அவரது பெற்றோர் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். இதனால் இளம்வயதிலிருந்தே லட்சுமி சாதிய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவராக வளர்ந்தார். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களிலேயே மாணவர்களிடையே சாதி, மத வித்தியாசம் கூடாது என்று போராடியவர் அவர்.
             1938ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்த அவர், 1940ல் சிங்கப்பூர் செல்ல முடிவு செய்தார். அங்கு மருத்துவராக பணியாற்றிய அவர் இந்திய விடுதலைக்கு பெருமளவு துணை நின்ற இந்திய சுதந்திர லீக் அமைப்பில் தம்மை இணைத்துக் கொண்டு தீவிரமாகப் பணியாற்றினார்.
                 1943ம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸின் நேரடி அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. இந்திய தேசிய ராணுவத்தில் பெண்கள் படைப்பிரிவை ஜான்சிராணி ரெஜிமெண்ட் என்ற பெயரில் அமைக்க சுபாஷ் சந்திர போஸ், லட்சுமிக்கு அழைப்பு விடுத்தார். கேப்டன் லட்சுமியின் முழு தலைமையின் கீழ் அந்த அமைப்பு அமைக்கப்பட்டது. அந்த அமைப்பின் கம்பீரமானத் தலைவராக விளங்கிய அவர் சிங்கப்பூரில் அமைக்கப்பட்ட ஆசாத் ஹிந்த் பிரதேச அமைச்சரவையில் ஒரே பெண் உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்பட்டார். இந்திய தேசிய ராணுவத்தின் தீரமிக்க தலைவராக விளங்கிய அவர், தனது வீரத்தினால் ஏராளமான உயிர்களை காப்பாற்றியுள்ளார். பிரிட்டிஷ் படையினரால் பிடிக்கப்பட்டு 1946ல் இந்தியா கொண்டுவரப்பட்ட போது அவருக்கு மிகச்சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
            சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து செயல்பட்ட பிரேம் செகாலை கேப்டன் லட்சுமி மணந்துகொண்டார்.
                 நாடு விடுதலைப் பெற்ற பிறகு கான்பூரில் தனது மருத்துவசேவையை கேப்டன் லட்சுமி துவக்கினார். கான்பூரில் லட்சக்கணக்கான ஏழை-எளிய பெண்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டார். அந்த மக்களின் நேசிப்புமிகுந்தவராக திகழ்ந்தார். எளிய மக்களுக்கு எந்தவிதமான கட்டணமும் பெறாமல் அவர் சேவை செய்தார். முன்னுதாரணமாகத் திகழ்ந்த தனது மருத்துவமனையில், எளிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அவர் நாள் முழுவதும் அயராமல் பாடுபட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முதல்நாள் கூட மருத்துவமனைக்கு சென்ற அவர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். இதுதான் அவரது அர்ப்பணிப்பு உணர்வு.
               1971ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான அகதிகள் இந்தியாவுக்கு வந்தனர். மேற்குவங்கத்தில் மக்கள் நிவாரணக்குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கு சேவையாற்ற மருத்துவர்கள் முன் வர வேண்டுமென்று தோழர் ஜோதிபாசு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பின்பேரில் மேற்குவங்கம் சென்ற கேப்டன் லட்சுமி, பல மாதங்கள் அங்கு தங்கியிருந்து நிர்க்கதியாக இருந்த அகதிகளுக்கு மருத்துவ சேவை அளித்தார்.
              இத்தகைய அனுபவத்திற்கு பிறகு கேப்டன் லட்சுமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய முடிவு செய்தார். கான்பூரில் கட்சி உறுப்பினராக இணைந்த அவர் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக உயர்ந்தார். பெண்ணுரிமை போராட்டத்தில் முன்னின்ற அவர், தாம் ஏற்றுக்கொண்ட கடமைகளோடு, பெண்களை அவர்களது உரிமைகளுக்காக அணிதிரட்டிய மிகச்சிறந்த கம்யூனிஸ்ட் பெண் தலைவராகவும் விளங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான அவர் அந்த அமைப்பை உருவாக்கி வளர்த்திட நாடு முழுவதும் அயர்வின்றி பயணம் செய்துள்ளார். அந்த அமைப்பின் துணைத் தலைவராகவும் செயல்பட்டார்.
               சோசலிசப் புரட்சித் தேவை என்ற கருத்தில் அவர் அழுத்தமான பிடிப்புக் கொண்டிருந்தார். அந்த லட்சியங்களுக்காகவே அவர் வாழ்ந்தார். பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான அவர், இளம்தலைமுறையினர் தலைமைப்பொறுப்புக்கு வரவேண்டும் என்று அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். நாடு முழுவதும் உள்ள ஏராளமான இளைஞர்களுக்கு நேசிப்புமிகுந்த தலைவராக அவர் விளங்கினார்.
                   விடுதலைப் போராட்ட வீரரும், தீரமும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட கம்யூனிஸ்ட் தலைவருமான கேப்டன் லட்சுமியின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்கொடி தாழ்த்தி தனது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறது. அவரது வாழ்வும் பணியும் இளம் தலைமுறையினருக்கு என்றென்றும் உத்வேகமூட்டக்கூடியதாக அமையும்.
            கேப்டன் லட்சுமியின் மகள்கள் சுபாஷினி அலி மற்றும் அனுசியா பூரி மற்றும் அவரது பேரக்குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கட்சி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

                                          கேப்டன் லட்சுமியின் புகழ் நீடுழி வாழ்க!

கருத்துகள் இல்லை: