சனி, 21 ஜூலை, 2012

திருநங்கையர் - மதிக்கப்படவேண்டியவர்கள்...!

                சென்ற மாதம் சென்னையிலிருந்து வானவில் பௌண்டேஷனைச் சேர்ந்த திருநங்கையர்  ஏழு பேர் எழுத்தாளர் பிரியா பாபு தலைமையில்  புதுச்சேரி வந்திருந்தனர். அவர்களை புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தோழர்கள் வரவேற்று உபசரித்தனர். அந்த சமயத்தில் அவர்களோடு கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நானும் அந்த உரையாடலில் கலந்துகொண்டேன். 
           அது ஒரு வித்தியாசமான அனுபவமாகத்தான் இருந்தது. யாரைக் கண்டால் இந்த சமூகம் கிண்டலும் கேலியுமாக பார்க்குமோ... ஒரு சக உயிரினமாகக் கூட யாரை இந்த சமூகம் மதிக்காதோ.... அவர்கள் அருகில் அமர்ந்து அவர்களோடு பேசியதில் எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் தான். 
           அவர்கள் சமூகத்தில் பட்ட கஷ்டங்களையும் போலீஸ்காரர்களால் கிடைத்த அவமானங்களையும் எங்களோடு உணர்ச்சிப்பூர்வமாக பகிர்ந்து கொண்டது என்பது  எங்களை அறியாமலேயே  எங்கள் மனதை கணக்கச்செய்தது. அப்பப்பா... இந்த கஷ்டங்களுக்கும் அவமானங்களுக்கும்  இடையில் தான் எத்தனை எத்தனை போராட்டங்கள். தாங்கள் நிம்மதியாக வாழ்வது மட்டுமல்லாது, சமூதாயத்தில் தாங்கள் கவுரவமாகவும் அனைவராலும் மதிக்கப்படுபவர்களாகவும் வாழ்வதற்கு அவர்கள் போராடிவருவதை கேட்கும் போது நமக்கே மெய்சிலிர்க்கிறது. 
             நாமும் அவர்கள் இதுவரை செய்தப் போராட்டங்களை பாராட்டினோம்.  சமூகத்தில் ஒதுக்கப்படாமல் எல்லாரோடும் சேர்ந்து வாழ்வதற்கும், தேர்தல்களில் வாக்களிப்பதற்கும், தங்கள் மீது இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கும் என அவர்கள் செய்த பல்வேறு போராட்டங்களை நெஞ்சாரப் பாராட்டினோம்.
            அவர்கள் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி ஒரு அற்புதமான கோரிக்கையை வைத்து போராடி வருவதாக சொன்னார்கள். அதைக் கேட்டதும் உண்மையிலேயே மெய்சிலிர்த்து தான்  போனேன். அது என்னவென்று கடைசியில் சொல்கிறேன்.
             அவர்கள் சொன்ன அந்த கோரிக்கையை கேட்டதும் அவர்கள் பற்றிய வரலாற்று ரீதியான தகவல்களை திரட்ட தொடங்கினேன். அதில் கிடைத்த சிலத் தகவல்களை இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
           கிறித்துப் பிறப்பதற்கு முன்பே சுமேரிய நாகரிகத்தில் திருநங்கைகள் இருந்ததாக வரலாறு சொல்கிறது. அந்த மக்களின் வீட்டு விழாக்களில் இவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த காலக்கட்டத்தில் திருநங்கைகள் பல உயர்பதவிகளை வகித்திருப்பதகவும் இராஜாங்க ஆலோசகர்கள், இராணுவ அதிகாரிகள், பெண்களை பாதுகாக்கும் அந்தப்புர அதிகாரிகள், நீதிமன்றப் பணியாளர்கள், மதப் பூசாரிகள் அரசவைப் பாடகர்கள் என பல்வேறு வகையான மதிக்கத்தக்க உயர்பதவிகளில் இருந்திருக்கிறார்கள்.
          அது மட்டுமல்ல, ரோம் சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தியான கான்ஸ்டான்டினைச் சுற்றி எப்போதும் திருநங்கைகளின் ஆலோசனைக் கூட்டமே நடந்துகொண்டிருந்ததாக   பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 
           அதுமட்டுமல்ல, அசிரியப் பேரரசு, கிளியோபாட்ராவின் டாலமிப் பேரரசு போன்ற பேரரசுகளில் கூட திருநங்கைகள் மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் சீனாவில் மிங் வம்ச அரசு முடிவுக்கு வந்த போது, அங்குள்ள  இம்பீரியல் அரண்மனையில் சுமார் 70,000 திருநங்கைகள் பணியில் இருந்ததாகவும்,  செங் ஹி என்கிற சீன நாட்டின்  புகழ்பெற்ற கப்பற்படைத் தளபதி ஒரு திருநங்கை என்றும் வரலாறு கூறுகின்றது. வியட்நாம் நாட்டின் இராஜ குடும்பங்களிலும் திருநங்கைகள் செல்வாக்குடன் இருந்திருக்கிறார்கள். 
                இவை எல்லாவற்றுக்கும் மேலாக முதன்முதலில் காகிதத்தை கண்டுப்பிடித்த சீன நாட்டைச் சேர்ந்த காய் லுன் என்பவர் ஒரு  திருநங்கையாவார். லங் கியட் வியட்நாம் நாட்டின்  முதல் சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்ட தேசிய ஹீரோ. அவரும் ஒரு திருநங்கையே என்பதும்,  1794ம் வருடம் பெர்ஷியாவின் மன்னராகி காஜர் வம்சத்தயே தோற்றுவித்த முகம்மது கான் காஜர் என்பவரும் ஒரு  திருநங்கை தான்என்பதும்   குறிப்பிடத்தக்கது.
                இப்படியாக திருநங்கைகள் சரித்திரத்தில் மறக்கப்பட்டவர்களாகவும் மறைக்கப்பட்டவர்களாகவும் வாழ்ந்திருந்தாலும் மதிக்கப்பட்டவர்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது யாராலும் மறுக்க முடியாத வரலாற்று உண்மை.
         இந்தியாவில் பல ஆண்டுகளாக அவர்கள் கண்டுகொள்ளப்படாதவர்களாகவும், கேலிக்குரியவர்களாகவுமே அறியப்பட்டனர். ஆனால் அண்மைக்காலங்களில் முற்போக்கு சிந்தனையாளர்களும், சமூக அக்கறையுள்ளவர்களும் திருநங்கையர் மீது தங்கள் பார்வையை திருப்பியுள்ளனர். அதனால், இன்றைக்கு சமூகம் அவர்களையும் தங்களின் சகமனிதர்களாக பார்க்கத் தொடங்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாது, திருநங்கையர்களும் சமூகமும் தங்களை மதிக்கும்படி தாங்கள் வாழவேண்டும் என்ற நோக்கில் தங்களுக்கென்று சங்கமும், சுயவுதவிக் குழுவும் அமைத்து சமுதாயத்தோடு கலந்து வாழ்கிறார்கள். எழுத்தாளர்களாகவும் வளர்ந்திருக்கிறார்கள் என்பதும், தங்களின் உரிமைககளுக்காக போராடுகிறார்கள் என்பதும் அவர்களிடையே உள்ள வரவேற்கத்தக்க மாற்றங்களாகும். 
              இந்தியாவில் உள்ள அனைத்து திருநங்கையர்களும் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை அளித்துள்ளனர். அவைகளில் முக்கியமானது, ஒன்று : திருநங்கையர்களுக்கென்று ''தனி கமிஷன் '' அமைக்கப்படவேண்டும் என்றும்,  மற்றொன்று : பாராளுமன்றத்தில் ஆங்கிலோ-இந்தியர்களுக்கும், திரைப்படக் கலைஞர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் ''நியமன உறுப்பினர் அந்தஸ்து'' வழங்குவது போல், திருநங்கையர்களுக்கும் அவர்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசுவதற்கு ''நியமன உறுப்பினர் அந்தஸ்து'' வழங்கப்படவேண்டும் என்றும் இரண்டு அருமையான யோசனைகளை கோரிக்கைகளாக வைத்துள்ளனர். 
     இவர்களின் இந்த கோரிக்கைகளை மத்திய அரசு கவனிக்குமா...?                                                
.

2 கருத்துகள்:

மின் வாசகம் சொன்னது…

யாவரும் மனிதர்களே ! அவர்கள் அப்படி இருப்பது இயற்கையின் விளைவால் தான் என்பதை நாம் உணர்தல் வேண்டும் . மனிதம் காப்போம் !

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு. திருநங்கையர் சமூகத்தில் ஏனையோர் போல வாழ வழி செய்ய வேண்டும் !