நான் அண்ணாந்து பார்த்த தேசத்தின் உயர்ந்த மனிதர்...!
சென்ற 2007 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கான்பூரில் நான் சார்ந்திருக்கக்கூடிய அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 14 - வது மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பிரதிநிதியாக பங்குகொள்ளும் பெருமைமிகு வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. மாநாட்டிற்காக புறப்படும் போதே கான்பூரில் வசிக்கும் கேப்டன் லட்சுமி அவர்களை சந்திக்கவேண்டும் என்கிற திட்டத்தோடு தான் கிளம்பினேன். வாரணாசி எல். ஐ. சி. அலுவலகத்தில் பணிபுரியும் எனது நண்பர் தோழர். ராம்ஜி அவர்களிடம் கேப்டன் லட்சுமி அவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யும்படி புதுவையில் இருக்கும் போதே கேட்டிருந்தேன். மாநாட்டில் அவரைப் பார்த்ததிலிருந்தே அரிக்கத் தொடங்கிவிட்டேன். அவரும் முதல் நாளிலிருந்தே முயற்சி செய்து கொண்டிருந்தார். மாநாட்டிற்கு வந்த தோழர்கள் நிறைய பேர் அவரை தினமும் சந்திப்பதால், எனக்கு டிசம்பர் 10 - ஆம் தேதி தான் கேப்டன் லட்சுமி அவர்களை பார்ப்பதற்கு அனுமதி கிடைத்தது. அந்த சமயம் கடுமையான குளிர்காலம் என்பதாலும், வயது முதிர்ந்தவர் என்பதாலும் ( அன்று அவருக்கு வயது 92 ) நிறையத் தோழர்களை அனுமதிக்க முடியாது என்றும், எனவே என்னோடு சேர்த்து வெறும் ஐந்து தோழர்கள் மட்டுமே வாருங்கள் என்றும் சொல்லி எங்களுக்காக தனி வாகனத்தையும் அமர்த்தியிருந்தார்கள்.
அதன் படி அன்று மாலை 4 மணிக்கு, வேலூர் கோட்டத்திலிருந்து மாநாட்டிற்கு வந்தவர்களில் நானும், தோழர்கள் இராமர், பார்த்தீபன், வேலாயுதம், வேல்முருகன் ஆகியோரும் கேப்டன் லட்சுமி அவர்களின் வீட்டிற்கு சென்றோம். வீட்டிலிருந்தவர்கள் எங்களை வரவேற்று உட்காரச் சொன்னார்கள். கேப்டன் அவர்கள் அவரது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் நாங்கள் வந்திருக்கும் தகவலை சொன்னவுடன் எழுந்து வந்து விட்டார். எங்களை வணக்கம் சொல்லி வரவேற்றார். நான் அவரை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தேன். கடவுள் மீது நம்பிக்கையுள்ளவன் உண்மையிலேயே கடவுளைப் பார்த்தால் என்ன உணர்வு ஏற்படுமோ... அதே உணர்வு எனக்குள் ஏற்பட்டது. இந்த தேசத்தின் விடுதலைக்காக தியாகம் செய்த தலைவர்களான ஜான்சி ராணி, பாரதி, பகத்சிங், நேதாஜி, வ.உ.சி., போன்றவர்களையெல்லாம் நாம் பார்க்கவில்லையே. அவர்களெல்லோரும் வாழ்த்த காலத்தில் நாம் வாழவில்லையே என்று சிறு வயதிலிருந்தே பலமுறை நான் ஆதங்கப்பட்டிருக்கிறேன். ஆனால் கேப்டன் லட்சுமி அவர்களைப் பார்த்ததும் அந்த தலைவர்கள் அத்துணை பேரையும் ஒருசேரப் பார்த்தது போல் ஒரு விதமான உணர்வு ஏற்பட்டது.
நாங்கள் மாநாட்டிற்காக தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறோம் என்று நாங்கள் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்த போது அவர் அழகிய தமிழில் ''தமிழ்நாட்டிலிருந்து வரீங்களா'' என்று பேசியதை கேட்டதும் எங்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது. வந்திருந்த எங்கள் ஐவரிடமும் தனித்தனியாக எந்தெந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டார். நான் பாண்டிச்சேரியிலிருந்து வருகிறேன் என்று சொன்னதும், ''புதுச்சேரி என்று சொல்லுங்கள்'' என்று திருத்தினார். வியந்து போய்விட்டேன். பிறகு அவரிடம் அவர் கலந்துகொண்ட விடுதலைப்போராட்டங்கள் பற்றியும், மாவீரன் நேதாஜி பற்றியும், காந்தி இவர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை பற்றியும் எங்களோடு நினைவு கூர்ந்தார். அந்த வயதிலும் பழைய நினைவுகளை மறக்காமல் அவர் சொன்னது என்பது எங்களை ஆச்சரியப்படச் செய்தது.
பேசிக்கொண்டு இருக்கும் போது இடையில் தேநீர் வரவழைத்து எங்களை உபசரித்தார். எங்களுக்கு பெருமையாய் இருந்தது. இன்றைய ஆட்சியாளர்களைப் பற்றியும், இந்த நாடு போகும் போக்கைப்பற்றியும் கவலையோடு பேசினார். ஏறக்குறைய ஒருமணி நேரம் அவரோடுப் பேசிக்கொண்டிருந்தோம். விடைபெறுவதற்கே எங்களுக்கு மனமில்லை. அவரது ஓய்வு கருதி அவரிடம் மனமில்லாமல் பிரியாவிடைபெற்றோம். கிளம்புவதற்கு முன்பு நாங்கள் தனித்தனியாக அவரோடு சேர்ந்து - அவரது பக்கத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இறுதியாக புறப்படுவதற்கு முன்பு எங்களுக்கு உங்களது செய்தி என்ன என்று கேட்டபோது அவர் சொன்னது இப்போதும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
''இந்த நாட்டிற்கு அரசியல் விடுதலை கிடைத்துவிட்டது.... பொருளாதார விடுதலைக்கூட கிடைத்துவிட்டது..... ஆனால், சமூக விடுதலை என்பதும், பெண் விடுதலை என்பதும் இன்னும் இந்த நாட்டில் கிடைக்கவில்லை. தீண்டாமை என்பது இன்னும் ஒழியவில்லை. நீங்கள் அதற்காக போராடுங்கள்'' என்று செய்தியாகவும், அறிவுரையாகவும் அவர் கூறியதும் மெய்சிலிர்த்தது. புல்லரித்துப்போனது.
வணக்கம் சொல்லி அவரை விட்டு கிளம்பியப்பின்னரும், அந்த மாமனிதரை மீண்டும் நாம் எப்போது பார்க்கப்போகிறோம் என்கிற உணர்வோடு அவர் என் பார்வையிலிருந்து விலகும் வரையில் அவரைப் பார்த்துக்கொண்டே பின்னாலேயே நகர்ந்தே அவர் வீட்டின் படியிறங்கினேன்.
அவரோடு இருந்த அந்த மணித்துளிகள் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத மணித்துளிகள். என் பிறப்பின் பலன் கிடைத்த மணித்துளிகள்.
அவர் இறந்துவிட்ட இந்த நேரத்தில், கடந்த இரண்டு நாட்களாகவே என் மனசு சரியில்லை. என்றாலும், அவர் நமக்கு கொடுத்த வார்த்தைகளை - போராட்டக்குணங்களை மேலும் செம்மைப்படுத்தி, அவர் விட்டுச் சென்ற போராட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வோம் என்று என் மனம் என்னை ஆறுதல் படுத்தியது. ஆம்... அது தான் நாம் அவருக்கு செய்யும் இதே அஞ்சலியாகும்.
வாழ்க கேப்டன் லட்சுமி புகழ்...!
1943 - இல் சிங்கப்பூரில் கேப்டன் லட்சுமி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக