புதன், 4 ஜூலை, 2012

அண்ணா நூலகத்துல லாட்ஜ் - பார் எல்லாம் நடத்துவாங்க போலிருக்கே....?

               "ஒரு நூலகம் திறக்கப்படும்போது, ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது" என்றார்  பேரறிஞர் விக்டர் ஹியுகோ. அந்த அளவிற்கு நூலகம் என்பது ஒரு மனிதனை ஒரு சரியான மனிதனாக வளர்க்கும் சக்தி கொண்டது. மாமேதை காரல் மார்க்ஸ் மற்றும் சீனத்தலைவர் மாவோ போன்ற உலகத்தலைவர்கள் எல்லோரும் தங்கள் நேரத்தை நூலகத்தில் புத்தகம் படித்ததன் மூலம்  தான் அவர்கள் மனித  சமூகத்தின் மீது நேசம் கொண்ட மனிதர்களாக - உலகத்தலைவர்களாக உயர முடிந்தது. இப்படித்தான் பல நூலகங்கள் பல உலகத்தலைவர்களை உருவாக்கியுள்ளது என்று  நம்மால் சொல்ல முடியும்.                                 
          அப்படிப்பட்ட  நூலகம் தான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைவர் எம்ஜிஆரின் தலைவரான அண்ணா ஒரு சாதாரணக் குடும்பத்திலிருந்து காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு கல்லூரிப் படிப்புக்காக சென்றவர், அங்குள்ள கன்னிமரா நூலகத்தில் உள்ள அனைத்துப் புத்தகத்தையும் படித்ததனால் தான் அவர் தமிழகத்தின் முதல்வராக உயர்ந்தது மட்டுமல்ல, தமிழகத்தில் அவர் தொடங்கி வைத்த திராவிடக்கட்சியின் ஆட்சி இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு நூலகத்தின் மகத்துவம் இது தான்.
                      சென்னையில் கன்னிமரா நூலகம் போன்ற நூலகங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட நூலகங்கள் பல நாட்டில் இன்றும் இருக்கின்றனவே. அந்த நூலகங்கள் எல்லாம் பிரிட்டிஷ்காரார்களால் ஆரம்பிக்கப்பட்டது என்று சுதந்திரம் கிடைத்தவுடன் நம் முன்னோர்கள் அந்த நூலகங்களை எரித்தாவிட்டார்கள்..? அல்லது அந்த நூலகங்களுக்கு வைக்கப்பட்ட பிரிட்டிஷ்காரர்களின் பெயர்களை நீக்கிவிட்டர்களா..? இல்லையே..! அவர்களை சிறுமைப்படுத்தக் கூட இல்லையே..! 
                னால் தமிழக முதலைச்சருக்கு மட்டும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் மீது மட்டும் ஏனிந்த காழ்ப்புணர்ச்சியும், வெறுப்பும். அந்த நூலகம் எதிர்காலத்தில் இந்த நாட்டிற்கு எத்தனையோ அறிஞர்களையும், அறிவியலாளர்களையும், தலைவர்களையும் கொடுக்கப்போகிறது என்பதை முதலமைச்சர் ஏன் உணரவில்லை....? முன்னாள் முதலமைச்சர் மீதானக் கோபத்தை அவர் ஆரம்பித்தார் என்பதற்காக நூலகத்தின் காட்டுவது என்பது சிறுபிள்ளைத்தனமாக தோன்றுவது செல்வி ஜெயலலிதாவிற்கு புரியவில்லையா...? ஒரு நூலகத்தையே அழிக்கும்  செயல் என்பது எதிர்கால தலைமுறையினரையே அழிக்கும் செயல் அல்லவா....?  
              முன்னாள் முதல்வரை, முன்னாளிலிருந்த ஆட்சியாளர்களை சிறுமைப்படுத்துவற்கு  நூலகத்தை சிறுமைப்படுத்துவது என்பது அறிவுடைமை ஆகாது. இன்றைக்கு அந்த நூலகத்தில் திருமண  நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளித்த தமிழக அரசு, இதை கண்டுகொள்ளாமல் இருந்தால், நாளை லாட்ஜி நடத்துவதற்கும், பார் நடத்துவதற்கும், பீடா கடை போடுவதற்கும் அனுமதியளிக்கும் நிலைக்கு தமிழக அரசு போகும் என்கிற அச்சம் மக்களுக்கு இருக்கிறது என்பதை தமிழக முதலமைச்சர் புரிந்துகொள்ளவேண்டும். புத்தகங்கள் குவிந்திருக்கும் இடத்தில் சமையல் போன்ற தீயோடு சம்பந்தப்பட்ட வேலைகளை அனுமதிக்கக்கூடாது என்ற குறைந்தபட்ச அறிவு கூட தமிழக அதிகாரிகளுக்கு இல்லை என்பதும் இந்த ஆட்சியின் கோளாறு. 

கருத்துகள் இல்லை: