திங்கள், 16 ஜூலை, 2012

இந்திய சந்தையை கொள்ளையடிக்கத் துடிக்கிறது அமெரிக்க கழுகு....!

             கடந்த பத்து நாட்களாக அமெரிக்கா இந்தியா மேல ஒரே எரிச்சலா இருக்கு. அங்கிருந்து கடுமையான வார்த்தைகளாகத் தான் வந்து விழுகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு தான் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ''டைம்'' பத்திரிகை தனது இதழில் நமது பிரதமர் மண்ணு மோகன்சிங்கைப் பற்றி ''செயல்படாத மங்குனி பிரதமர்'' என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்ததை நாடே பார்த்தது. ஆனால்  இவ்வளவு கடுமையான விமர்சனத்தைப் பார்த்தும் அதைப் பற்றி எதையுமே சொல்லாமல் நமது பிரதமர் வழக்கம் போல் ''மௌன சாமியாராகவே'' இருந்தார். 
          இன்னும்  அமெரிக்கா இந்தியாவை விடுவதாக இல்லை. இந்தியா அமெரிக்காவிற்கு வேண்டிய மிகப்பெரிய சந்தை. ''அந்நிய நேரடி முதலீடு'' என்ற பெயரில் இந்தியாவில் அமெரிக்கா மிகக் குறைவான முதலீட்டை செலுத்தி மிகப்பெரிய இலாபத்தை கொள்ளையடித்துச் செல்லத் துடிக்கும் அமெரிக்காவிற்கு, தங்களின் பேராசை நிறைவேறாமல் தடுக்கும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் பெரும் சிம்மசொப்பனமாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்த சூழல் என்பது அமெரிக்காவை மேலும் மேலும் எரிச்சலூட்டுகிறது 
         அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அடிமை ஆட்சிக்காலத்திலேயே  ''பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ., நாங்கள் சாகவோ'' என்று இந்திய  மக்களை தட்டி எழுப்பிய  பாரதியின் எழுச்சிக்குரலைப் போல், இன்று இந்த தேசத்தை கொள்ளை கொண்டு போக துடிக்கும் அமெரிக்காவின் ''தாராளமயம், தனியார்மயம், உலகமயம்'' என்ற சுரண்டல் கொள்கைகளை ஆரம்பக் காலத்திலிருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற இடதுசாரி கட்சிகளும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் எதிர்த்து குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டிருப்பதால்,  அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்படும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் தங்கள் இஷ்டப்படி   அமெரிக்காவிற்கு சாதகமான சட்டங்களை அவர்கள் கேட்கிற மாதிரி நிறைவேற்றி தந்து தங்களின் எஜமான விசுவாசத்தை காட்டமுடியாமல் தவிக்கிறார்கள் என்பது நாம் நேரடியாக பார்த்துக்கொண்டிருக்கும் உண்மை.
              கடந்த முதலாவது ஐக்கிய முற்போக்கு முன்னணியின் ஆட்சி என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவில் நடைபெற்ற ஆட்சி என்பதால் குறைந்தபட்ச செயல் திட்டம் அடிப்படையில் அந்த ஆட்சியை மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் சரியான பாதையில் வழிநடத்தி சென்றதால் அமெரிக்கா எதிர்ப்பார்த்த சாதகமான சூழ்நிலை இல்லாமல் போனது. அமெரிக்காவிற்கு ஆதரவான சட்டங்களை இயற்றி, அவர்கள் இந்த தேசத்தை சூரையாடுவதற்கு ஏற்பாடு செய்து எங்கள் எஜமான விசுவாசத்தை காட்டமுடியாமல் ''இடதுசாரிகள் எங்கள் கைகளை கட்டிப்போட்டு விட்டார்கள்'' என்று அன்றே மண்ணு மோகன்சிங் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். அந்த ஐந்து ஆண்டுகளில் தங்களால் இந்த தேசத்தில் இருந்து ஒரு சிறு துளியைக் கூட கொத்திச் செல்ல முடியவில்லையே என்று அமெரிக்காவிற்கு ஏமாற்றமாய் இருந்தது. எரிச்சலூட்டியது. 2009 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு அமெரிக்காவும் சேர்ந்து தானே தேர்தல் களம் இறங்கியது. இடதுசாரி கட்சிகள் மீண்டும் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றாலும், அவர்கள் ஆதரவோடு மத்தியில் ஆட்சியமைந்தாலும் தங்கள் ஆசை நிறைவேறாமல் போய்விடும் என்பதால் இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்க உளவுத்துறை சி. ஐ. ஏ - வும், அமெரிக்க தூதரகமும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக - குறிப்பாக மண்ணு மோகன்சிங்கிற்கு ஆதரவாக தேர்தல் வேலைகளை செய்தது என்பதை இந்த நாடு மறந்திருக்க முடியாது.  
              ஆனால்  இன்றும்  இரண்டாவது ஐக்கிய முற்போக்கு முன்னணியின் நடப்பு ஆட்சியிலும் அதே நிலைமை தான். அவர்கள் நினைத்து போல் இடதுசாரி  கட்சிகளின் தயவு இல்லாமல் ஆட்சி செய்யலாம் என்ற கனவோடு 2009 - ஆம் ஆண்டு இரண்டாவது கட்ட ஆட்சியை தொடங்கிய  மண்ணு மோகன்சிங்கிற்கு அமெரிக்கா விரும்புவது போன்ற - அவர்கள் எதிர்ப்பார்ப்பது போன்ற அமெரிக்க சாதக சட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்பது தான் உண்மை. காரணம் ''கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது'' என்பது போல் வெறும் இருபத்து நான்கே பாராளுமன்ற உறுப்பினர்களையே பெற்றிருந்தாலும், நாட்டின் பாதக விஷயங்களை - அமெரிக்காவின் சாதக விஷயங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் இடதுசாரிகள் குறுக்கே நிற்பதால், அமெரிக்க சாதக சட்டங்களான இன்சுரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தும் சட்டம், சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கும் சட்டம், இந்திய உழைப்பாளி மக்களின் பென்ஷன் நிதியை தனியாரிடம் கொடுத்து பங்குசந்தையில் சூதாட வகை செய்யும் பென்ஷன் சட்டம், விலைப்போகாத அமெரிக்க பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பது, அமெரிக்காவில் மருத்துவம், சட்டம், மேலாண்மை, தணிக்கை, பொறியியல், கட்டடக்கலை போன்ற தொழில் சார்ந்த கல்விப்பயின்றவர்களையும், அமெரிக்க ஆசிரியர்கள்  மற்றும் பேராசிரியர்களையும் இந்தியாவில்  அனுமதிக்கும் அந்நிய பல்கலைக்கழக சட்டம், இந்திய கடல் செல்வங்களை - வளங்களை அமெரிக்கா கொள்ளையடிக்க வகை செய்யும் கடற்கரை மேலாண்மை சட்டம் போன்ற பல்வேறு சட்டங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் போராட்டங்களின் காரணமாக இன்றைக்கு பாராளுமன்றத்தில் அறிமுகக்கட்டத்திலேயே ஊசலாடிக்கொண்டிருக்கின்றன. மண்ணு மோகன்சிங்கால் அந்த சட்டங்களை  எல்லாம் நிறைவேற்ற முடியவில்லை.
               இந்த சூழ்நிலையில் தான், இந்திய வளங்களை சூறையாடத்துடிக்கும் அமெரிக்காவிற்கு கோபத்தை ஊட்டுகிறது. இந்திய நாட்டின் சொத்துக்களான நிலம், நீர், ஆகாயம், கடல் ஆகிய இடங்களில் கிடைக்கும் செல்வங்களை எல்லாம் கொள்ளை கொண்டு போக துடிக்கும் அமெரிக்காவிற்கு தங்களுக்கு சாதகமான சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போவது கண்டு எரிச்சலூட்டுகிறது. அதனால் தான் கடுமையான கோபத்திலிருக்கும் அமெரிக்கா, இந்திய  பிரதமர் மண்ணு மோகன்சிங்கை ''எதற்கும் லாயக்கில்லாத பிரதமர்'' என்று ''டைம்'' பத்திரிகை மூலம் திட்டுவதும், ''மண்ணு மோகன்சிங் எனது இனிய நண்பர்'' என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரதமர் மண்ணு மோகன்சிங்கை தூக்கிவைத்து கொஞ்சுவதுமாக கடந்த வாரங்களில் அமெரிக்கா நடந்துகொள்கிறது. 
           நேற்று கூட ஒபாமா, தனது இனிய நண்பர் மண்ணு மோகன்சிங் இந்தியாவில் கடுமையான ''பொருளாதார சீர்த்திருத்தங்களை'' கொண்டு வரவேண்டும் என்று அறியுரை கூறியிருக்கிறார். இது அறியுரையா...? ஆலோசனையா...? கட்டளையா...? சர்வாதிகாரமா..? என்பது மண்ணு மோகன்சிங்கிற்கு தான் வெளிச்சம்.

கருத்துகள் இல்லை: