ஞாயிறு, 15 ஜூலை, 2012

பொருந்தா விவசாய முறையால் வளம் இழந்த மண்ணானது தேசம் - இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்

ஏன் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் ?

                   பரிணாம வளர்ச்சி பெற்ற ஆதி மனிதன் காடுகளில் அலைந்து திரிந்து உணவு சேகரித்தான். தீயின் பயன்பாட்டை கண்டுபிடித்த பின்னர்,அவன் பக்குவப்படுத்தப்பட்ட உணவை உண்ண தொடங்கினான். தனக்கு வேண்டிய உணவை தானே பயிரிட்டு கொள்ள, குழுவாக இனைந்து செழுமையான நதியோரங்களை தனக்குரியதாக ஆக்கி கொண்டான். இப்படிதான் நாகரீகம் மேம்பட்டது. விவசாயம் மனிதனின் முதல் தொழில் ஆனது. ஆதியிலிருந்த மனிதன் இயற்கையோடு இணைந்து பயிர் செய்தான். இயற்கை தனக்களித்ததை பயன்படுத்தி கொண்டு அதற்கே திருப்பி அளித்தான்.
              

இந்தியாவில் விவசாயம் :        
             
           என்ன இல்லை இந்த திருநாட்டில் ? என்று எல்லோரும் புகழும் பெருமையை பெற்றது நம் இந்திய வள நாடு.சரித்திரத்தின் பெரும் தேடல்கள் எல்லாம் இந்தியாவின் செல்வத்தை நோக்கியே தொடங்கப்பட்டுள்ளது. பண்டைய தமிழக மக்கள் நிலத்தின் பயன்பாடு கருதி அவற்றை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரித்துள்ளனர். வயலும் வயல் சார்ந்த பகுதிகளையும் உடையது மருத நிலம். மாடு செல்வமாக கருதப்பட்டுள்ளது. ஆவும் மாந்தரும் இணைந்தே வாழ்தனர். மனிதன் கால்நடை கழிவுகளில் இருந்து பயிர் செழித்து வளர்வதை கண்டுகொண்டான். எனவே கால்நடையின் கழிவுகளை நிலத்திற்கும் அதன் ஏனைய பயன்பாடுகளை தனக்கும் உபயோகித்து கொண்டான்.இயன்றவரை இயற்கை அன்னையின் கட்டுப்பாடுக்குள் தன் செயல்களை வரையறுத்து கொண்டான்.
                 
பசுமை புரட்சியும் அதன் விளைவுகளும் :  

              காலங்கள் மாறின.  நம் நாடு அன்னியருக்கு அடிமைபட்டது.     இந்தியாவின் அபரிதமான செல்வத்தை அபகரித்தனர் அன்னியர்.1829 இல் தஞ்சையை பார்வையிட்ட ஒரு ஆங்கிலேயன் சொன்னான் "எனது அனுபவத்தில் நான் தஞ்சையின் சிறந்த வண்டல் மண் சமமாக எதையும் பார்த்ததில்லை. அது, மற்ற நிலங்களிலும் இரண்டு பெரிய நன்மைகளை கொண்டுள்ளது. அதற்கு அவர்கள் உரமிடுதல் தேவையில்லை மற்றும் அந்த நிலம் எக்காலமும் பாழ்படமுடியாது.
                 நெடிய போராட்டத்தின் இறுதியில் நாம் சுதந்திரம் அடைந்தோம்.உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்காக 1960 - களில் "பசுமை புரட்சி " கொண்டு வரப்பட்டது. இதை சாக்கிட்டு கொண்டு மற்ற நாடுகளின் கழிவுகளை நம் தலையில் கட்ட தொடங்கினார்கள்.  இரண்டாம் உலக யுத்தத்தில் மிஞ்சிய அமிலங்களை உரம் என்ற பெயரில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்தார்கள்.அதிக விளைச்சலுக்கு செயற்கை உரத்தை மண்ணில் கொட்டினோம். பயிர் விளைந்தது.அபரீதமாக தேவைக்கதிகமாக விளைந்தது. ஆனால் விஷமாக விளைந்தது.விவசாயி காலம் காலமாக சேர்த்து வைத்த விதைநெல் அவன் கையிலிருந்து ஒரு அயல் நாடு கம்பேனிக்கு கைமாறியது. அந்நியன் நம் நாட்டின் சூழலுக்கு சற்றும் பொருந்தாத மரபணு மாற்றப்பட்ட விதைகளை எல்லாம் நம்மிடம் கொடுத்து சோதித்தான்.விளைவு, பொருந்தா விவசாய முறையால் நிலம் பாழ் ஆனது.விளைச்சல் குறைய தொடங்கியது. மண்ணை நம்பி வாழ்ந்த விவசாயி தோல்வி அடைந்தான். வளம் இழந்த மண்ணோடும், மண்ணுக்கு பொருந்தாத விதைகளோடும் போரிட்டு தன்னுயிரை இழந்தான்.
 
             நம் நாட்டு சுழலுக்கு ஏற்ப வளரும் மரபு பயிர் வகைகளை நாம் இழந்து வருகிறோம். மண்ணுக்கும், மனிதருக்கும் தீங்கு விளைவிக்காத இயற்கை விவசாய முறைகளை நாம் மறந்து வருகிறோம். ஆனாலும் காலம் கடக்க வில்லை. மனிதரின் பெரும் பிழைகளை இயற்கை அன்னை மன்னிப்பதற்கு, எஞ்சி இருக்கும் நிலங்களை காக்க தொடங்குவோம். பாழ் நிலத்தையும் பசுமையாக்கும் இயற்கை விவசாயத்திற்கு மாறுவோம். பெரும் விளைவுகள் சிறு மாற்றங்களில் தான் தொடங்குகிறது.

 நன்றி : இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்
 

1 கருத்து:

kumaresan சொன்னது…

வேளாண் நிலப்பரப்பு சுருங்கிப்போய், வயல்களில் கட்டடங்கள் முளைத்து எங்கும் கான்கிரீட் காடாக வளர்ந்திருக்கிறது. பாரம்பரிய முறையில் விவசாயம் செய்து, பூமியில் பெருகியிருக்கிற மக்கள் தொகைக்கு உணவிடத் தேவையான விளை நிலம் இல்லை.

ஆகவே குறுகிய நிலப்பரப்பில் கூடுதல் விளைச்சல் தருகிற புதிய வழிமுறைகள் தேவை. ஆதியில் மனிதர்கள் கண்டறிந்தது மட்டுமே போதுமென கடந்த காலத்திற்கு செல்ல இயலாது.

அதே வேளையில், எந்த அறிவியல் வேதிப்பொருள் உரங்களைக் கண்டுபிடித்ததோ அதே அறிவியல்தான் அவற்றின் தீங்குகளையும் கண்டுபிடித்து நமக்குச் சொன்னது. மாற்று வழிகளையும் ஆராய்கிறது. பல அடுக்குகளாக பயிருக்கான தரைகளை அமைத்து விளைவிக்கிற நவீன தொழிற்சாலை வடிவ விவசாயம் உள்ளிட்ட நவீன முறைகளை ஒரே வார்த்தையில் வேண்டாம் என்று சொல்லிவிட முடியுமா?

விவசாயத்தையும் தெர்ழிற்சாலைகளையும் சந்தையையும் தங்களது ஆக்கிரமிப்பில் வைத்துக்கொண்டு, தங்களது கொளளைக்குத் தடையாக வரக்கூடிய மாற்றுக் கண்டுபிடிப்புகளை முடக்கிக்கொண்டிருக்கிற உலகளாவிய சுரண்டல் கூட்டத்டமிருந்து அவற்றை மீட்டு மக்களின் உடைமையாக்குவதே உத்தரவாதமான வழி. அதை நோக்கி மக்களைத் திரட்டுகிற கடமையை நிறைவேற்றுவோம்.