ஞாயிறு, 17 ஜூலை, 2011

அமெரிக்கா : நடுத்தெருவில் 75 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர்

அமெரிக்காவில் முன்னாள் இராணுவத்தினரின் அவலநிலை..
          அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் பல்வேறு நாடுகளில் பணியாற்றிய முன்னாள் அமெரிக்க ராணுவத்தினரில் சுமார் 75 ஆயிரம் பேர் குடியிருக்க வீடில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். 
              முன்னாள் ராணுவத்தினருக்கான அமெரிக்க அரசுத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களே இதைக் காட்டுகின்றன. ஏற்கெனவே மனரீதியாகப் பாதிக்கப்படும் இவர்கள் நாடு திரும்பியவுடன் தங்குவதற்கு குடியிருப்பு இல்லாத நிலையில் கூடுதல் பாதிப்புக்குள்ளாகிறார்கள். ஜூன் மாதத்தில் எடுத்த புள்ளிவிபரத்தின்படி 75 ஆயிரத்து 700 பேர் இரவு நேரங்களில் தங்குவதற்கு சொந்த வீடு இல்லாமல் இருந்திருக்கிறார்கள்.
                “இதற்கு முன்பும் இத்தகைய நெருக்கடிகளை முன்னாள் ராணுவத்தினர் சந்தித்துள்ளார்கள். ஆனால் தற்போது இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து திரும்பிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு குடியிருப்புகள் இல்லை. எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வீடுகள் இன்றி முன்னாள் ராணுவத்தினர் இருக்கிறார்கள்” என்கிறார் வீட்டுவசதித்துறை இயக்குநரான அன்னே ஒலிவா.
       ஆக்கிரமிப்புப் பணியிலிருந்து சொந்த நாட்டிற்குத் திரும்பிய பிறகு வேலை கிடைப்பதிலும் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் இருக்கும் வேலைகளையே பலரும் இழந்து கொண்டிருக்கும் நேரத்தில் புதிதாக முன்னாள் ராணுவத்தினருக்கு வேலைகிடைப்பது இல்லை. இதனால் அவர்களின் வருமானத்தில் திடீரென்று பெரும் சரிவும் ஏற்படுகிறது. இளம் வயதிலேயே வெளிநாடுகளுக்கு அமெரிக்கப் படைப் பணிக்காக சென்று திரும்பியுள்ளவர்களில் 21 விழுக்காட்டினருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.
        முன்னாள் ராணுவத்தினரின் நிலைமைகள் குறித்து அதிகமாக எழுதியுள்ள எட்வர்டு ஸ்பான்னஸ், இளம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இக்காலத்தில் கிடைக்கும் ஒரே வேலையே ராணுவத்தில் பணியாற்றுவதுதான். அமெரிக்கா எத்தகைய பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளது என்பதையே இது காட்டுகிறது. பட்ஜெட்டில் ஏராளமான நிதி வெட்டு வரப்போகிறது. அதற்குப் பிறகு நிலைமை மேலும் மோசமாகும் என்கிறார்.
               
ஆக்கிரமிப்புப் பணிகளுக்குச் சென்று விட்டு அமெரிக்கா திரும்பியுள்ள ராணுவத்தினரில் சுமார் 3 லட்சம் பேர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை: