செவ்வாய், 12 ஜூலை, 2011

ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு பலியானது சூடான் - தெற்கு சூடான் விடுதலை

                   சென்ற  ஜனவரி 2011 - இல் ஐ. நா.வின்  மேற்பார்வையில் நடந்த கருத்துக் கேட்கும்  தேர்தலில்  99 சதவீத மக்களின் ஆதரவு பெற்று, ஒன்றுபட்ட சூடானிலிருந்து பிரிந்து தெற்கு சூடான் என்ற தனி நாடு  உருவாகி இருக்கிறது.  சென்ற ஜூலை 9ஆம் தேதியன்று ஜூபா நகரைத் தலைநகராகக் கொண்ட தெற்கு சூடான் அதிகாரபூர்வமாகத் தனி நாடாக அறிவித்துக்கொண்டு  உலக நாடுகளை அழைத்து விடுதலை நாள் கொண்டாட்டத்தை நடத்தியது.ஐ. நா. வின் அங்கிகாரம் பெற்ற 193 - வது புதிய நாடு என்றெல்லாம் ஊடகங்களும் கொண்டாடின.  
 
            தெற்கு சூடானைத் தனிநாடாக்குவதற்கான கருத்துக் கேட்கும் தேர்தல் நடந்ததற்கு அமெரிக்காவே காரணம்.ஒன்றுபட்ட சூடானின் பலநூறு ஆண்டுகால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் பலவாறு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து சூடான் ௧௯௫௬-ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து தென் பகுதி மக்களுக்கு அடிப்படை உரிமைகளான கல்வி மற்றும் சுகாதாரம் மறுக்கப்பட்டன. தென் பகுதியில் பொருளாதார வளர்ச்சி இல்லாமை மட்டுமில்லாமல் அரசு மற்றும் நீதித் துறைகளில் தென் பகுதி மக்கள் நிராகரிக்கப்பட்டனர். வட பகுதியில்  வாழும் அரேபிய மொழி பேசும் முஸ்லிம்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டது. தென் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் அல்லாத கருப்பின ஆப்பிரிக்க இனத்தவர்கள் இரண்டாம் தர மக்களாக கருதப்பட்டனர். இவைகளெல்லாம் தனி நாடு என்ற கோரிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் காரணமாக கருதப்பட்டாலும், தெற்கு சூடானில் உள்ள எண்ணெய் வளத்தின் மீது அமெரிக்காவிற்கு ஏற்பட்ட வெறித்  தான்  சூடான் உடைவதற்கு முக்கியமான காரணமாகும்.  அந்த எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதற்காகவே  தனி நாடு கோரிக்கையை அமெரிக்கா உருவாக்கி வெற்றி கண்டுள்ளது. அது மட்டுமல்ல, அமெரிக்காவின் கூட்டாளியான இஸ்ரேலும் இப்போது புதிய நாடான தெற்கு சூடானுடன் கொஞ்சி விளையாடுகிறது.   
         மொத்தத்தில் ஒன்றுபட்ட ஒருநாட்டில் உருவாகியுள்ள பிரச்சனைகளுக்கு அமைதியான தீர்வு காண முயற்சி செய்யாமல் ஏகாதிபத்தியம் தன்னுடைய லாப வெறிக்கு  அந்த நாட்டையே துண்டாடிவிட்டது  என்பது தான் உண்மை. இந்த வேதனையான நிகழ்வு என்பது உலகில் வேறெங்கும் மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பது தான் நமது எண்ணம்..புதிய நாடான தெற்கு சூடானை போலவே நாளை ஈழம் மலரும் என்று பல தமிழினவாதிகள் அறிவித்திருப்பது என்பது வேடிக்கையானது. அதுமட்டுமல்ல ஆபத்தானதும் கூட.

1 கருத்து:

Suresh Kumar சொன்னது…

புதிய நாடான தெற்கு சூடானை போலவே நாளை ஈழம் மலரும் என்று பல தமிழினவாதிகள் அறிவித்திருப்பது என்பது வேடிக்கையானது. அதுமட்டுமல்ல ஆபத்தானதும் கூட./////////

நீங்க மார்க்சிஸ்ட் தோழரா? உங்களுக்கு ஏகாதிபத்தியம், முதலாளிதுவத்தை தவிர வேறு எதுவும் தெரியாதா? தோழரே. ஒவ்வெரு நாடுகளும் சுதந்திரம் அடையும் போது சைனாவும் திபத்திற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டியது வரும் என நினைக்கிறீர்களா?

சரி அது இருக்கட்டும் இனியும் தமிழர்கள் சிங்களர்களோடு ஒத்து போக வேண்டும் என நினைக்கிறீர்களா?

மனிதாபிமானம் இழந்து போன உங்களுக்கு வேறு என்ன தெரியும்.