சென்ற ஏப்ரல் 2011 - னில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிலும் அதிமுக அறுதிபெரும்பான்மையோடு ஆட்சிலமர்ந்தது அனைவருக்கும் தெரியும். திமுகழகமோ இரண்டாவது இடம் கூட கிடைக்காமல் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் ஒரு பெரிய மாற்றத்தை தமிழகத்தில் அரங்கேற்றினார்கள்.
அதிமுகவின் மாபெரும் வெற்றிக்கு என்ன காரணம்..? முதல் காரணமே.. கருணாநிதியின் குடும்ப அரசியல்.. குடும்ப ஆதிக்கம்.. 2 - ஜி ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல்..இதனால் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு தான் என்பதை தமிழக மக்கள் மறுக்கமாட்டார்கள்..அதேப்போல், மிகப்பெரிய பலம் வாய்ந்த மாபெரும் கூட்டணி என்பது இரண்டாவது காரணம்.. இதையும் யாராலும் மறுக்க முடியாது. இவைகளால் தான் ஜெயலலிதா கூட முதலமைச்சராக அமர முடிந்தது.
மனசாட்சி என்று ஒன்றிருந்தால், ஜெயலலிதாவிற்கும் இந்த வெற்றியின் பின்னணி தெரியும். ஆட்சியில் இல்லாத காலத்தில் மக்களையே சந்திக்காமல், வீட்டிலேயே முடங்கி, ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தவரை கூட்டணி கட்சிகள் தான் முதலமைச்சர் பதவியில் அமரச் செய்தார்கள் என்பதை ஜெயலலிதா நல்ல மனசாட்சியோடு ஒப்புக்கொள்ளவேண்டும்.
ஆனால் இன்றைக்கு ஆட்சிக்கு வந்தவுடன், கூட்டணி இல்லையென்றாலும் நாங்கள் தான் வெற்றிபெற்றிருப்போம் என்று சொல்வதும், எங்களுடன் கூட்டணி வைத்ததால் தான் மற்றக் கூட்டணி கட்சிகள் வெற்றிப் பெற்றார்கள் என்று சொல்வதும் ஆணவத்தின் போக்கைத் தான் குறிக்கிறது. இது அழிவுக்கான அறிகுறி என்பதை அதிமுக மறந்துவிடக்கூடாது.
தன் கட்சியின் பலத்தின் மீதுள்ள அலாதியான - அதீதமான நம்பிக்கையின் காரணமாக, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக்கட்சிகளை கலந்தாலோசிக்காமலேயே கழட்டி விட்டது மட்டுமல்லாமல், தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது என்பது, ஜெயலலிதாவின் ஆணவமும், திமிர்பிடித்தத் தனமும் இன்னும் குறையவே இல்லை என்பதைத் தான் காட்டுகிறது.
எப்போதுமே கருணாநிதி செய்ததை அப்படியே எதிர்மறையாக செய்யக்கூடிய ஜெயலலிதா, கூட்டணி கட்சிகளை கழட்டிவிடும் செயலில் மட்டும் கருணாநிதியோடு எப்படி ஒத்துப்போகிறார் என்பது தான் நமக்குப் புரியவில்லை. ''வேதாளம்'' எப்படி சரியா போயிட்டிருக்குன்னு மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்த வேளையில், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது. எல்லாம் ''சோ'' - வுக்கு தான் வெளிச்சம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக