திங்கள், 18 மார்ச், 2013

புதிய போப் ஆண்டவர் -வாடிகனின் அரசியல்...!

           
கட்டுரையாளர் : எஸ்.பி.ராஜேந்திரன்

           ''டிரிபிள் ஏ'' (AAA) என்று அழைக்கப்பட்ட ஒரு பயங்கரக் கூட்டணி 1970களில் துவங்கி 1983 வரை, அர்ஜெண்டினாவில் நரவேட்டை ஆடிக்கொண்டிருந்தது. ''அர்ஜெண்டைன் கம்யூனிஸ்ட் எதிர்ப்புக் கூட்டணி'' ( Argentine Anti-Communist Alliance ) என்ற பெயரில் இயங்கிய மரணத் தூதர்கள் 1976ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரை இந்நாட்டில் நடைபெற்ற ராணுவக் கொடுங்கோல் ஆட்சியின் போது இடதுசாரிகளையும், இடதுசாரி ஆதரவாளர்களையும், இடதுசாரி ஆதரவாளர்களாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்டவர்களையும் ஈவிரக்கமின்றி கொன்றொழித்தார்கள். 
        1970களில் அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஜூவாண் பெரோனின் ஆட்சிக்காலத்தில் துவங்கி, 1974ல் அவர் இறந்த பிறகு ஜனாதிபதியான அவரது மனைவி இசபெல்லின் ஆட்சியில் தீவிரமடைந்த இந்தக் கும்பலின் வெறியாட்டம், இசபெல்லின் ஆட்சியை கலகத்தின் மூலம் தூக்கியெறிந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவ சர்வாதிகார ஆட்சியின் கீழ் உச்சத்தை எட்டியது. கண்ணில் பட்ட கம்யூனிஸ்டுகளையெல்லாம் ஈவிரக்கமின்றி கொலை செய்யவும், கடத்திச் செல்லவும், சிறைக்கொட்டடியில் அடைத்துச் சித்ரவதை செய்யவும், மொத்தமாக விமானத்தில் கொண்டு சென்று நடுக்கடலில் உயிரோடு வீசியெறியச்செய்யவுமாக ஏராளமான கொடுங்கோல் உத்தரவுகளை பிறப்பித்தான் ராணுவ சர்வாதிகாரியாக சுமார் 7 ஆண்டு காலம் ஆட்சிபுரிந்த ஜோர்ஜ் ரபேல் விடேலா. 3 லட்சம் பேர் இப்படிக் கொல்லப்பட்டார்கள்; காணாமல் போனார்கள்; கடலில் மூழ்கடிக்கப்பட்டார்கள்; சித்ரவதைக் கொடுமைகளை அனுபவித்தார்கள்.
        இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் - குறிப்பாக ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், மாணவர்கள், சிந்தனையாளர்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் அழித்தொழிக்கப்பட்ட வரலாறுகளில் முக்கியமானது அர்ஜெண்டினாவில் நிகழ்ந்த இந்தப்படுகொலைகள். அர்ஜெண்டினாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் இடதுசாரிச் சிந்தனையையும் அடியோடு ஒழித்துக்கட்ட நடத்தப்பட்ட இந்தக்கொடுமையின் பின்னணியில், தலைநகர் பியூனஸ் அயர்ஸின் தலைமை தேவாலயத்தில் அமர்ந்து கொண்டு அந்நாட்டு மக்களை மதரீதியாகக் கோலோச்சிய தலைமைப் பாதிரியார் ஜோர்ஜ் பெர்கோக்ளியோவின் முழுமையான ஆசிர்வாதம் இருந்தது. 1983ல் பால்க்லேண்ட் எனும் பகுதியை தன் வசப்படுத்திக்கொள்ள அர்ஜெண்டின ராணுவம் முயற்சி மேற்கொண்டபோது, அப்பகுதியை தன்வசம் எடுத்துக்கொள்ள முயன்ற பிரிட்டன் ராணுவம், அர்ஜெண்டினாவுடன் மோதியது. இருவருக்கும் இடையிலான மோதலில் பிரிட்டன் வெற்றிபெற்றது. அர்ஜெண்டின ராணுவ சர்வாதிகாரியின் ஆட்சி வீழத்துவங்கியது. ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பெரும்பான்மை மக்களின் மதமாகக் கோலோச்சுகிறது கத்தோலிக்க கிறிஸ்தவம். கத்தோலிக்கப் பாதிரியார்களில், புனித பைபிளின் சிந்தனைகளை இரண்டு விதமாக புரிந்துகொள்பவர்களும் கையாள்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு தரப்பு, ஆளும் வர்க்க-வலதுசாரிக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஆயுதமாக இந்தச் சிந்தனைகளையும் அவற்றின் பீடமாக அமைந்துள்ள கத்தோலிக்கத் தேவாலயங்களையும் பயன்படுத்துகிறது. இந்தத்தரப்பே உலகெங்கிலும் வலுவாக இருக்கிறது.
             மற்றொரு தரப்பு, பைபிளின் சிந்தனைகளுக்குள் ஏழைகளின் ரொட்டியைப் பார்க்கிறது. தேவதூதர் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை, ஏழை மக்களின் வேதனைகளைத் தீர்க்கும் மந்திரச் சொற்களாகப் பார்க்கிறது. குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் மார்க்சியச் சிந்தனையும் பைபிள் சிந்தனையும் பல தேவாலயங்களில் ஒன்றிணைந்து செயல்படுகிறது. அப்படித்தான் அர்ஜெண்டின தேவாலயங்களிலும் கையில் பைபிளோடு, இடதுசாரிச் சிந்தனையாளர்கள் பாதிரியார்களாகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர். 
           இந்தக் காலகட்டத்தில்தான் பியூனஸ் அயர்ஸ் ஆர்ச் பிஷப்பாக பொறுப்பேற்றார் ஜோர்ஜ் பெர்கோக்ளியோ. ஆளும் வர்க்க-வலதுசாரி அரசியலின் உறுதிமிக்க ஆதரவாளராக, ராணுவ ஆட்சிக்கு ஆசி வழங்குபவராக தன்னை வரித்துக்கொண்டார். அர்ஜெண்டினா முழுவதுமிருந்த தேவாலயங்களில் இடதுசாரிச் சிந்தனையாளர்களை ஒழித்துக்கட்ட, ராணுவ ஆட்சியாளர்களுக்கு உதவி புரிந்தார். ஜோர்ஜ் பெர்கோக்ளியோவின் வரலாறு இதுதான் என்பதை அவரது கட்டுப்பாட்டின் கீழ் பணி செய்து கொண்டே இடதுசாரிச் சிந்தனையாளராக வலம் வந்த பிரதான பாதிரியார்களில் ஒருவரான ஆர்லாண்டோ யோரியோ, தனது எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார். பெர்கோக்ளியோவால் காட்டிக்கொடுக்கப்பட்டு, ராணுவ ஆட்சியாளர்களால் சித்ரவதை முகாமில் அடைக்கப்பட்டு, இடதுசாரி கொரில்லா போராளிகளின் தலைவன் என முத்திரை குத்தப்பட்டு, கொல்லப்பட்டவர் இந்த யோரியோ. இன்றைக்கு உலகெங்கிலும் ஆளும் வர்க்க-வலதுசாரி ஆட்சியாளர்கள் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் உழைக்கும் மக்களுக்கு எதிராக பெரும் யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
        இதற்கு எதிராக உலகெங்கிலும் உழைக்கும் வர்க்கம் இடதுசாரிச் சிந்தனையை உயர்த்திப்பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இடதுசாரிச் சிந்தனை பரவும் ‘அபாயத்தை’ மதம் கொண்டு தடுக்கவும், பொருளாதார யுத்தம் தொடுத்துள்ள ஆட்சியாளர்களுக்கு மத ரீதியாக துணை நிற்கவும் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் தலைமைப் பீடத்தில் சாலப்பொருத்தமான நபர் தேவைப்படுகிறார். கடந்த 1200 ஆண்டு வரலாற்றில் ஐரோப்பியரைத் தவிர வேறு எவரையும் போப் ஆண்டவராக நியமிக்கத் துணியாத வலதுசாரி ஆளும் வர்க்கம், முதல்முறையாக ஐரோப்பாவிற்கு வெளியே அர்ஜெண்டினாவிலிருந்து ஒருவரை வாடிகனின் தலைவராகத் தேர்வு செய்திருக்கிறது. கார்டினல் ஜோர்ஜ் பெர்கோக்ளியோ, போப் பிரான்சிஸாக உருமாற்றம் பெற்றிருக்கிறார்.
நன்றி :
    

கருத்துகள் இல்லை: