வியாழன், 16 ஆகஸ்ட், 2012

ஆப்பிரிக்காவின் 'சே' - தாமஸ் சங்கரா (Burkina Faso Film)

         மனித இனம் இன்று பல இனங்களாகவும், நாடுகளாகவும் மற்றும் இன்னபிற குழுக்களாகவும் பிரிந்து கிடக்கிறது... இப்படி பல தேசங்களை உருவாக்கி எல்லைக் கோடுகளுக்குள் புகுந்துகொண்டிருக்கும் மனித இனம், முதன்முதலில் தோன்றி வளர்ந்த பூர்வீக பூமியாக இன்றளவும் கருதப்படுவது ஆப்பிரிக்க மண்ணைத்தான்...
அந்த ஆப்பிரிக்க மண்ணின் தேசங்கள், பல நூற்றாண்டுகளாக காலனிய நாடுகளாக அடிமைப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றன... பிரெஞ்சு, பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், போர்ச்சுகல், ஜெர்மனி என ஆப்பிரிக்காவை ஆண்டு அடிமைப்படுத்தி சுரண்டிக்கொழுத்த மேற்குலக நாடுகளின் எண்ணிக்கை அதிகம்... இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான காலகட்டத்தில், ஒவ்வொரு ஆப்பிரிக்க நாடாக விடுதலை பெற்றுவந்தன. ஆனால் அவையெல்லாம் உண்மையான விடுதலையல்ல. ஆப்பிரிக்க நாடுகளுக்கு விடுதலை கொடுத்துவிட்டோம் என்று உலகிற்கு அறிவித்துவிட்டு, அங்கே போலியாக ஒரு பொம்மை ஆட்சியை/ஆட்சியாளர்களை அமர்த்தி, தன்னுடைய காலனிய ஆட்சியினை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திவந்தன ஆதிக்க நாடுகள்... தப்பித்தவறி தங்களின் கட்டளைகளை ஏதேனும் ஒரு ஆப்பிரிக்க பொம்மை ஆட்சியாளர் மீறினால், அங்கே உடனடியாக ஆட்சிக்கவிழ்ப்பு நடைபெறும்... இப்படித்தான் கடந்த 50 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பெரும்பாலான ஆப்பிரிக்க கண்டத்தினை தொடர்ந்து மறைமுகமாக ஆட்சி நடத்திவருகின்றன ஆதிக்க நாடுகள்.
             இதனை எதிர்த்து ஓரிருவர் ஆங்காங்கே குரல் கொடுத்திருக்கிறார்கள்... அவர்களில் மிக முக்கியமான ஒருவர், மேற்குல ஆதிக்க நாட்டினை தூக்கி எறிந்ததோடு மட்டுமல்லால், மக்களுக்கான ஒரு மாற்று அரசையும் அமைத்தார்... உலகின் ஏழ்மையான நாடாக சோற்றுக்கே வழியின்றி இருந்த அவரது நாட்டினை, மிகச்சிறிய காலத்தில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றி, உலகையே திரும்பிப்பார்க்க வைத்தார். அவரது பெயர் தாமஸ் சங்கரா. அந்நாட்டின் பெயர் புர்கினா பாசோ. தாமஸ் சங்கராவின் வாழ்க்கையினை 'The Upright Man' என்கிற பெயரில் ஆவணப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் 'Robin Shuffield'.
  
புர்கினா பாசோ - ஒரு வரலாற்றுப் பார்வை

         "அப்பர் வோல்டா" என்கிற நாடு மேற்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் ஒரு சிறிய நாடு. அந்நாட்டின் மேற்கே மாலியும் தெற்கே ஐவரி கோஸ்டும் சூழ்ந்திருக்கிற, கடலில்லா நாடுதான் "அப்பர் வோல்டா". 1896 இல் அப்பர் வோல்டாவினை ஆக்கிரமித்து, காலனிய நாடாக அடிமைப்படுத்தியது பிரெஞ்சு அரசு. அன்றிலிருந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பர் வோல்டாவினை தொடர்ந்து ஆண்டுவந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான அழுத்தத்தில், மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே 1960 இல் பிரெஞ்சு அரசிடமிருந்து அப்பர் வோல்டா நாடும் விடுதலை பெற்றது. ஆனாலும் பிரெஞ்சு அரசிற்கு தலையசைக்கும் பொம்மை இராணுவ ஆட்சிகள்தான் மாறிமாறி அப்பர் வோல்டாவினை ஆண்டுவந்தன. நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரெஞ்சு காலனியாக இருந்துவந்த அப்பர் வோல்டாவில் சொல்லிக்கொள்ளும்படி கனிவளங்களோ கடலோ இல்லாமையால், அப்பர் வோல்டா மக்களை அண்டைய நாடுகளில் கூலி வேலை பார்ப்பதற்கு பயன்படுத்திவந்தன பிரெஞ்சு அரசும், பொம்மை இராணுவ அரசுகளும்.
           அவ்வப்போது ஆட்சிக்கவிழ்ப்புகளும், சதிப்புரட்சிகளும் நடந்துகொண்டே இருந்தன. 1983 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சியினை கவிழ்த்து, மக்கள் புரட்சியின் மூலம் ஆப்பிரிக்க கண்டத்தின் இளம் அதிபராக ஆட்சிக்கு வருகிறார் தாமஸ் சங்கரா. பிரெஞ்சு காலனிய நாடாக இருந்தபோது வைக்கப்பட்ட "அப்பர் வோல்டா" என்கிற பெயரினை 
"புர்கினா பாசோ" என்று பெயர்மாற்றம் செய்கிறார். தன்னுடைய சுய இலாபத்திற்காகவும் மேற்குலக நாடுகளின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டும் தன்னுடைய சொந்த நாட்டுமக்களையே சுரண்டும் ஆப்பிரிக்காவின் மற்ற பெரும்பான்மையான ஆட்சியாளர்களைப்போல அல்லாமல், நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினார் தாமஸ் சங்கரா.
                       
புரட்சியின் பாதையில் மக்கள் நலத் திட்டங்கள்...

                புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில், ஒரு இராணுவ வீரனாக இருந்தபோது, மார்க்ஸ் மற்றும் லெனின் ஆகியோரின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார் தாமஸ் சங்கரா. ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே நடக்கும் போர்களினால் மக்களுக்கு எவ்விதப் பயனுமில்லை என்பதையும் மக்கள்நலத்திட்டங்களை செயல்படுத்தும் ஒரு புரட்சிகர அரசுதான் எல்லாவற்றையும் புரட்டிப்போடமுடியும் என்றும் புரிந்துகொண்டார்.
              அப்பாடங்களை அதிபரானபோது, ஒவ்வொன்றாக செயல்படுத்தினார் தாமஸ் சங்கரா. நாட்டின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் மிக அதிகமான ஊதியத்தினை குறைத்ததோடல்லாமல் தன்னுடைய ஊதியத்தையும் குறைத்து சட்டமியற்றினார் சங்கரா. அமைச்சர்களும், உயரதிகாரிகளும் வளம் வந்துகொண்டிருந்த அரசுக்கு சொந்தமான மெர்சிடிஸ் கார்களை விற்றுவிட்டு, புர்கினா பாசோவின் மிக மலிவான கார்களையே பயன்படத்தவேண்டுமெனவும் உத்தரவிட்டார். அதனை தன்னிலிருந்தே துவங்கினார்.
தாமஸ் சங்கரா: "அரசு அலுவல் காரணமாக விமானத்தில் பயணிக்கும் அதிகாரிகளும் அமைச்சர்களும் முதல்வகுப்பில் செல்லாமல் சாதாரண வகுப்பில்தான் பயணிக்க வேண்டும். நீங்கள் முதல் வகுப்பில் சென்றாலும், சாதாரண வகுப்பில் சென்றாலும் விமானம் தரையிறங்குகிறபோது ஒன்றாகத்தானே இறங்கப்போகிறீர்கள்? விமானம் கிளம்பும்போதும் ஒன்றாகத்தானே பயணிக்கப் போகிறீர்கள்? பிறகு எதற்கு முதல் வகுப்பு? அதனால் சொகுசாக பயணம் செய்வதற்காக, மக்களின் வரிப்பணத்தை இனி விரயம் செய்யக்கூடாது."
              விவசாயிகளுக்கு சுமையாக காலனியாட்சிக்காலத்திலிருந்து வசூலிக்கப்பட்டுவந்த விவசாயவரி இரத்து செய்யப்பட்டது. விவசாயத்தினை உற்சாகமாக தொடர்ந்த நடத்த, இச்சட்டம் ஊக்கமாக அமைந்தது. பன்னிரண்டு வயதுக்கு கீழுள்ள சிறுவர்களுக்கு மக்களுக்கான அரசியலைக் கற்றுக்கொடுக்கிற திட்டமும் உருவாக்கப்பட்டது. எதிர்காலத்தில் புர்கினா பாசோ நாட்டினை ஆளப்போவதே அவர்கள்தான். எனவே அவர்ளுக்கு நாட்டின்மீதும், மக்களின்மீதும் பற்றினை உருவாக்குவதும், தன்னலமற்ற குடிமக்களாக வளர்க்கவேண்டியதும் ஒரு அரசின் கடமையென தாமஸ் சங்கரா நினைத்தார்.
தாமஸ் சங்கரா: "தேசியக்கொடியின் கீழ்நின்றுகொண்டு, மனிதவுயிர்களைக் கொல்லும் ஆயுதங்களைக் கையில் ஏந்திக்கொண்டு, தமக்குப் பிறப்பிக்கப்படுகிற உத்தரவுகளை அப்படியே பின்பற்றி அவ்வாயுதங்களை பயன்படுத்துவதால் யார் பயனடைவார்கள் என்றுகூட அறியாத நிலையில் இருக்கிற இராணுவ வீரனும் தீவிரவாதிதான்."
 
பெண்ணுரிமைக்காக...
 
          ஆட்சியின் முதலாண்டில் பல்வேறு பொருளாதார மாற்றங்களைக்கொண்டு வந்த தாமஸ் சங்கரா, மக்களிடையே மாற்றுக் கலாச்சாரத்தையும் முன்னெடுத்துச் செல்லவேண்டுமென எண்ணினார். ஆப்பிரிக்க சமூகத்தில் பெண்களை எப்போதும் ஆண்களே மேலாதிக்கம் செலுத்திவந்தனர். இதனை மாற்றவேண்டுமென்று மக்களிடையே வலியுறுத்தினார்.
தாமஸ் சங்கரா: "நம் நாட்டிலிருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் வேலை கிடைக்க நாம் உதவவேண்டும். சுயமாக சம்பாதித்து நல்லதொரு வாழ்க்கையினை அமைத்துக்கொள்வதற்கான வழிவகைகளை நம் நாட்டுப் பெண்களுக்கு நாம் அமைத்துத்தரவேண்டும்."
           அன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு சமவுரிமை வழங்கப்படவேண்டுமென்று பேசி ஆப்பிரிக்க கண்டத்தில் அதிர்வலைகளை உண்டாக்கினார்.
               பள்ளிகளில் பெண்களுக்கான சமவுரிமையும் சுதந்திரமும் எந்த அளவில் சாத்தியமென்று நினைக்கிறீர்கள்? என்கிற கேள்விக்கு பதிலளிக்கையில்,
தாமஸ் சங்கரா: ''பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு கீழ்தான்' என்று காலம் காலமாக நமக்கு சொல்லித்தரப்பட்டு வருகிறது. அந்த எண்ணத்திலிருந்து நாம் வெளியே வர வேண்டும். குறிப்பாக, பள்ளிகளில் ஒரு பெண் கருவுற்றுவிட்டால், உடனே அப்பெண்ணை பள்ளியிலிருந்து நீக்கிவிடுகிற பழக்கமிருக்கிறது. ஆனால் அதற்கு காரணமான ஆண் அதே பள்ளியில் அதே வகுப்பில் இருந்தாலும், அவனுடைய படிப்பு பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறோம். ஆக, எத்தனை பெண்கள் கருவுறக் காரணமாக ஒரு ஆண் இருந்தாலும், அவனுக்கு எவ்வித இழப்புமில்லை. ஆனால், பெண்ணோ கல்வியை இழந்து, சமூகத்திலிருந்து விடுபட்டு, வாழ்க்கையைத் தொலைக்கிறநிலைதான் தொடர்கிறது. இந்நிலையினை மாற்ற வேண்டும்."
            புரட்சிக்கு பின்னான காலகட்டத்தில், நாட்டின் அரசியல் நடவடிக்கைகளில் பெண்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். ஆண்களுக்கு நிகராக, பெண்களும் தேச வளர்ச்சிக்கு உதவ பெண்கள் வருவதைக் காணமுடிந்தது. பல பெண்கள் தேசிய இராணுவத்தில் சேர்ந்தனர். ஆயுதங்களைக் கையாள்வது, இராணுவ சீருடை அணிவது, அணிவகுப்பு நடத்துவது போன்ற ஆண்கள் செய்கிற இராணுவ வேலைகள் அனைத்தையும் பெண்களும் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பெண்களை அமைச்சர் பதவிக்கு நியமித்த முதல் ஆப்பிரிக்க அதிபர் தாமஸ் சங்கராவாகத்தான் இருக்கமுடியும்.
லிடியா டிரவோரே (பள்ளி ஆசிரியை): "உலக பெண்கள் தினமான மார்ச் 8 இல், பெண்கள் அனைவரும் வீட்டில் இருக்கவேண்டுமென்றும், ஆண்கள்தான் அன்றையதினம் வீடு வேலைகளையும் வெளியே சென்று காய்கறிகள் வாங்குவதையும் செய்யவேண்டுமென்று வேண்டுகோள்விடுத்தார். அன்றைய தினம், ஆண்களே கடைக்கு சென்று தக்காளி வாங்குவதும், வீட்டிற்குவந்து சமைப்பதையும் பார்க்க அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது."

பொருளாதார மாற்றங்கள்...
 
        புர்கினா பாசோ மக்களனைவருக்கும் உணவு, வீடு, மருத்துவ வசதி ஆகியவையே கிடைக்கச் செய்யவேண்டுமென்பதே தாமஸ் சங்கரா அரசின் தலையாய கடமையாக இருந்தது. 
                பல்வேறுவிதமான நோய்கள் ஆப்பிரிக்க கண்டம் முழுக்க பரவிக்கொண்டிருந்த சமயத்தில், புர்கினா பாசோவில் ஒரே வாரத்தில் 25 லட்சம் மக்கள் போலியோ உட்பட பல நோய்களுக்கான தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. இந்நடவடிக்கை, உலக சுகாதார அமைப்பின் பாராட்டுதலையும் பெற்றது.
              விளையாட்டுத் துறையிலும் நாட்டினை முன்னேற்ற வேண்டுமென்று முன்னுதாரண நடவடிக்கையாக, சங்கராவும் அவரது அமைச்சர்களுமே நேரம் கிடைக்கிறபோதெல்லாம் கிராம மக்களோடு இணைந்து விளையாடி வந்தனர்.
           ஆப்பிரிக்க நிலங்கள் பாலைவனமாக மாறுவதனை தடுக்க, நாடுமுழுக்க விரவிக்கிடந்த தரிசு நிலங்களில் மரக்கன்றுகளை நாடும் திட்டத்தினையும் துவங்கிவைத்தது சங்கராவின் அரசு. கிராமத்து இளைஞர்களை வைத்து, ஆங்காங்கே தோப்புகளை உருவாக்கினர்.
                 நகரங்களில் வீடில்லாமல் வாழ்ந்த மக்களுக்கு, அரசு செலவிலேயே ஆங்காங்கே வீடுகளமைத்து கொடுக்கப்பட்டன. நகரங்களோடு கிராமங்களை இணைக்க பெரும்பாலும் சாலைகளே இல்லாதகாரணத்தால், அதே திட்டத்தினை கிராமங்களுக்கும் கொண்டுசெல்ல முடியாமற்போயிற்று. கிராமங்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்குமுன், சாலைகளையும் இரயில் தண்டவாளங்களையுமே முதலில் அமைக்கவேண்டுமென்று முடிவெடுக்கிறது சங்கராவின் அரசு. ஆதாயமின்றி உதவ உலகவங்கியோ மேற்குலக நாடுகளோ முன்வராது என்பதனை நன்குணர்ந்த சங்கரா, நாட்டு மக்களையே உதவிக்கு அழைக்கிறார். அதன்படி, புர்கினா பாசோவின் தென்கோடியையும் வடகோடியையும் இணைக்கும் இரயில் பாதையினை எந்தவொரு நாட்டின் உதவுமின்றி சொந்த மண்ணின் மக்களுடைய உழைப்பிலேயே சாத்தியமாக்கிக்காட்டினர்.

வேளாண்துறையில் தன்னிறைவு பெற்ற நாடாக...
 
         புர்கினா பாசோவினை ஒரு தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றவேண்டுமென்பதே தன்னுடைய அடுத்த குறிக்கோளாக இருந்தது புரட்சி அரசிற்கு. தங்களுடைய நாட்டில் தயாரித்த பொருட்களையே வாங்கிப் பயன்படுத்துமாறு, நாட்டுமக்களுக்கு அறிவுறுத்தினார் சங்கரா.
தாமஸ் சங்கரா: "தற்போது நம்மால் நமக்கு தேவையான அளவிற்கு உணவு உற்பத்தி செய்யமுடிகிறது. நம்முடைய தேவைக்கு அதிகமாகவும், நம்மால் உற்பத்தி செய்ய முடியும். முறையான ஒருங்கிணைப்பு இல்லாமையால், இன்றும் நாம் அயல்நாடுகளிடம் கையேந்த வேண்டியிருக்கிறது. ஆனால் அவ்வுதவிகள் யாவும், எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி, உதவிக்காக பிச்சையெடுக்கிற நிலையில்தான் இருக்கிறோம் என்கிற எண்ணத்தினை நம்முடைய மனதில் ஆழமாக பதியவும் வைத்துவிட்டன. ஏகாதிபத்தியம் எங்கிருக்கிறது என்று என்னிடத்தில் சிலர் கேட்கிறார்கள். நீங்கள் சாப்பிடுகிற தட்டினை பார்த்தாலே அதற்கான பதில் கிடைக்கும். நாம் சாப்பிடுகிற அரிசி, சோளம், தினை என அனைத்துமே இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்தான். அக்கேள்விக்கான பதிலினை இதற்கு மேலும் வேறெங்கும் தேடவேண்டிய அவசியமில்லை"
            இதனை மனதில் வைத்துக்கொண்டு காலம்காலமாக நிலத்தின்மீது ஒட்டுமொத்தமாக உரிமைகொண்டாடிவந்த நிலக்கிழார்களிடமிருந்து விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டு உழுபவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. நிலச்சீர்திருத்தம், விவசாயவரி நீக்கம் உட்பட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டமையால், இரண்டு ஆண்டிற்குள் வேளாண் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றநாடாக புர்கினா பாசோ மாறியது. சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 1700 கிலோ கோதுமை பயிர்செய்யும் மற்ற ஆப்பிரிக்க நாடுகளை ஒப்பிடுகையில், ஒரு ஹெக்டேருக்கு 3800 கிலோ கோதுமையினை உற்பத்தி செய்யும் திறன்வாய்ந்த நாடாக உருவெடுத்தது புர்கினா பாசோ. பசி, பஞ்சம் போன்ற வார்த்தைகளை நாட்டேவிட்டே விரட்டிவிட்டனர்.
           உள்நாட்டு நெசவுத்தொழில் நசிந்துகிடக்கிற நிலையினை மாற்ற, மிகப்பெரிய சமூக இயக்கம் துவங்கப்பட்டது. அரசு ஊழியர்கள் அனைவரும், சொந்த நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆடைகளையே அணியவேண்டுமென்று உத்தரவு போடப்பட்டது. உள்ளூர் தொழிலாளர்கள் தயாரித்த ஆடைகளையே அணியுமாறு நாட்டு மக்களிடையே கோரிக்கை வைக்கப்பட்டது. தாமஸ் சங்கராவும் உள்ளூர் நெசவாளர்கள் தயாரித்த ஆடையினையே எப்போதும் அணிந்தார்.
                  தாமஸ் சங்கராவின் திட்டங்கள் அனைத்தும், கானா போன்ற அண்டைய ஆப்பிரிக்க நாடுகளையும் ஈர்த்தன. இதனைக் கண்டு அஞ்சிய பிரெஞ்சு அரசு, தன்னுடைய முன்னாள் காலனிய நாடுகளனைத்தையும் அழைத்து மாநாடொன்று நடத்தியது. ஆப்பிரிக்க நாடுகளனைத்தும் மேற்குலகிற்கு அடிபணிந்துதான் நடக்கவேண்டுமென்று அம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரெஞ்சு அதிபர் மறைமுகமாக எச்சரிக்கையும் விடுக்கிறார். தாமஸ் சங்கரா அதனை நேரடியாகவே மறுக்கிறார்.
              
ஆப்பிரிக்க நாடுகளின் கடனை இரத்து செய்யும் கோரிக்கை...
                       ஆப்பிரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தாமஸ் சங்கரா,"இன்றைக்கு நமக்கு யாரெல்லாம் கடன் கொடுக்கிறார்களோ, அவர்கள்தான் நம்முடைய நாடுகளை முன்பு அடிமைப்படுத்தி ஆண்டுவந்தார்கள். கடன்பெற்று வாழ்கிற நிலைமைக்கு நம்முடைய நாடுகள் சென்றதற்கு, அவர்களின் சுரண்டலே காரணம். இங்கிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டே இருந்தார்கள், ஆனால் எதையும் செய்யவில்லை நமக்கு. நம்மை ஆண்டுவந்த அவர்கள்தான் கடன்வாங்குவதை துவக்கியும் வைத்தார்கள். நமக்கு இந்த கடனுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. அதனால் நம்மால் இந்தக்கடன்களையெல்லாம் திருப்பிச்செலுத்தமுடியாது. கடன் என்பதே மறு காலனியாதிக்கத்தின் ஒரு பகுதிதான். நம்மை அவர்களது காலனிகளாகவே தொடர்ந்து வைத்திருப்பதே கடனின் நோக்கம். கடனை வாங்கிவிட்டு, அடுத்த 50-60 ஆண்டுகள் அவர்களது பேச்சினை கேட்டுக்கொண்டே, நம்முடைய மக்களின் தேவைகளை புறக்கணிக்க வேண்டுமென்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. கடனின் தற்போதைய வடிவமானது, ஆப்பிரிக்க கண்டத்தினை திட்டமிட்டு கைப்பற்றுவதற்குதான் வழிவகுக்கும். அதன்மூலம் நாம் அவர்களுடைய பொருளாதார அடிமைகளாக மாறிவிடுவோம்.
              கடனை நம்மிடமிருந்து வசூலிக்கமுடியாமற்போனால், நம்மை ஆண்ட ஐரோப்பிய நாடுகள் உயிரிழந்துவிடமாட்டார்கள். ஆனால், நம்மீது சுமத்தப்பட்டிருக்கிற அளவுக்கதிகமான கடனை திருப்பிக்கொடுக்க நாம் முற்பட்டால், நம்முடைய மக்கள் உயிர்வாழ்வதே கடினமான ஒன்றாகிவிடும். நம்மைவைத்து பொருளாதார சூதாட்டம் விளையாடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இந்தக்கடனுக்கு நாம் பொறுப்பல்ல என்பதோடுமட்டுமல்லாமல், திருப்பிச் செலுத்தும் நிலையிலும் நாம் இல்லை. நம்முடைய நிலத்தையும் மக்களையும் இத்தனை ஆண்டுகளாக் சுரண்டியதற்கான கடனை அவர்கள்தானே திருப்பிச்செலுத்தவேண்டும்? 
            இம்மாநாட்டின் மிகமுக்கியமான தீர்மானமாக இது இருக்க வேண்டும். எங்களது நாடான புர்கினா பாசோ மட்டுமே இக்கோரிக்கையினை வைக்கிறதென்றால், அடுத்த மாநாட்டில் நாங்கள் கலந்துகொள்ளமாட்டோம். ஆனால் இதுவே எல்லோருடைய கோரிக்கையாக மாறினால், நாம் ஒன்றுகூடி போராடி வெல்லலாம்.
 
  வீழ்ச்சியை நோக்கி...
 
             புர்கினா பாசோ வளர்ச்சிப் பாதையினை நோக்கி சென்றுகொண்டிருந்தாலும், ஏற்கனவே இருக்கிற அரசு நிர்வாகமானது ஊழல்மலிந்த ஒன்றாகத்தான் இருந்தது. காலம் காலமாக தன்னால் இயன்றவரை மக்களை சுரண்டியே கொழுத்து வாழ்ந்து கொண்டிருந்த உயர் அரசு நிர்வாகம், திடீரென தாமஸ் சங்கராவின் மக்கள்சார்ந்த திட்டங்களால் எரிச்சலடையத்தான் செய்தன. இதனால், ஆங்காங்கே அவர்கள் கிளர்ச்சிகள் செய்யத்துவங்கினர். ஒரு கட்டத்தில், அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசிற்கு எதிராக குரல் கொடுக்கத்துவங்கினர். அவர்களையெல்லாம் பணியினைவிட்டு வெளியேற்றுவதைவிட வேறுவழியில்லாமல் போயிற்று தாமஸ் சங்கராவிற்கு.
          இதனையே ஒரு காரணமாகக்காட்டி, புரட்சிக்கு எதிரானவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசு ஊழியர்களிடம் சங்கராவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யத்துவங்கினர். ஒரு கட்டத்தில் ஆசிரியர்களின் போராட்டத்தினை பேசித்தீர்க்கமுடியாமல், போராடிய ஆசிரியர்கள் அனைவரையும் வேலையைவிட்டு அனுப்பப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக வேறுவழியின்றி அதிக அனுபவமில்லாத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
             இது ஒருபுறமிருக்க, புர்கினா பாசோ மக்களுக்கு சிறந்த வாழ்க்கையினை அமைத்துக்கொடுக்கவேண்டுமென்கிற தாமஸ் சங்கராவின் கனவினை அவருடன் இருந்த பலராலும் சரியாக புரிந்துகொள்ளமுடியவில்லை. புதிதாக இராணுவத்தில் சேர்ந்த இளைஞர்களும், புரட்சி அரசினை கவிழ்க்க நடக்கிற சதிகளை முறியடிக்க அமைக்கப்பட்ட புரட்சிக்குழுக்களின் உறுப்பினர்கள் சிலரும், தாமஸ் சங்கராவையும் மக்கள் நலன் சார்ந்த அரசியலையும் விளங்கிக்கொள்ளவில்லை. அவர்களால் இங்கொன்றும் அங்கொன்றுமாக மக்களுக்கு பிரச்சனைகள் வரத்துவங்கின. இதனை தாமஸ் சங்கராவும் அறிந்து வைத்திருந்தார். தன்னால் இயன்றவரை எல்லோரிடமும் இதுகுறித்து பேசியும் வந்தார்.
                    1986 இல் பிரான்சில் நடந்த தேர்தலில், தீவிர வலதுசாரிக்கொள்கையுடைய கட்சியான 'ரேலி பார் தி ரிபப்ளிக்' நிறைய இடங்களில் வெற்றிபெற்று கூட்டணியாட்சி அமைத்தது. அக்கட்சியைச் சேர்ந்த ஜேக் சிராக் பிரெஞ்சு பிரதமராக பொறுப்பேற்றார். தீவிர வலதுசாரி ஆட்சியமைந்ததும், பிரெஞ்சு அரசு ஆப்பிரிக்காவில் தனக்கான ஆதரவு நாடுகளைவைத்து எதிர்ப்பு நாடுகளையும் முன்னெப்போதையும்விட துரிதமாக செயல்பட்டு தன்வலையில் விழவைக்க முயற்சியெடுத்தது. பிரெஞ்சு அரசிற்கு மிகவும் விசுவாசமாக இருந்துவந்த ஐவரி கொஸ்டின் அதிபர் பெளிக்சின் உதவியுடன், புர்கினா பாசோவிலிருக்கும் தாமஸ் சங்கராவின் ஆட்சியினை கவிழ்க்க திட்டம் தீட்டப்பட்டன. தாமஸ் சங்கராவின் மிக நெருங்கிய நண்பரும் புர்கினா பாசோ அரசில் அதிபருக்கு அடுத்தபடியான பொறுப்பிலிருந்தவருமான ப்ளேயிஸ் கம்பேரோவை தங்களது சதித்திட்டத்தில் விழவைத்தனர்.
                  தாமஸ் சங்கராவின் கட்டளைக்கிணங்க எளிமையான வாழ்க்கைக்கு திரும்பிய அமைச்சர்கள் சிலர், மீண்டும் பழைய வசதியான வாழ்க்கை கிடைக்கவேண்டுமென்பதற்காக ப்ளேயிஸ் கம்பேரோவிற்கு உதவிசெய்ய முன்வந்தனர்.
             என்ன நடக்குமோ! ஏது நடக்குமோ! என்று நாட்டில் குழப்பமான சூழல் உருவாகியது. சே குவேராவின் இருபதாவது ஆண்டு நினைவுநாள் விழாவில் கலந்துகொண்டபிறகு, "சே குவேரா 39 வயதில் உயிரிழந்தார். நான் அந்த வயது வரைகூட இருப்பேனா எனத்தெரியவில்லை" என்றும்  "புரட்சியாளர்களை படுகொலைசெய்தாலும், அவர்களது இலட்சியங்களை அழிக்கமுடியாது" என்றும் சுவிசர்லாந்து சோசலிஸ்டான ஜீன் சீக்லரிடம் சொல்லியிருக்கிறார்.
                 1987 அக்டோபர் 17 இல், அமெரிக்க மற்றும் பிரெஞ்சு அரசின் ஆதரவுடன் ப்ளேயிஸ் கம்பேரோ தன்னுடைய குழுவினருடன், தாமஸ் சங்கரா மற்றும் 12 உயரதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர். தாமஸ் சங்கராவின் உடலை பல துண்டுகளாக வெட்டி யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டனர். சங்கராவின் மரண செய்தி நாடுமுழுக்க பரவியது. புர்கினா பாசோவின் மக்கள் தெருவெங்கும் நின்றுகொண்டு அழுதனர். அவர் இறந்தபோது, அவரது வீட்டினில் ஒரு கிதாரும், மோட்டார் சைக்கிளும் தான் அவரது சொத்துக்களாக இருந்தன.
 
புர்கினா பாசோ - இன்றைய நிலை...
  
          தாமஸ் சங்காராவை கொன்றுவிட்டு, மறுநாளே அதிபராக பதவியேற்றுக்கொண்டார் ப்ளேயிஸ் கம்பேரோ. தாமஸ் சந்காரவின் ஆட்சியில் தேசியமயமாக்கப்பட்ட அனைத்தும் அரசிடமிருந்து விடுவிக்கப்பட்டன. ஐ.எம்.எப்.உடனும் உலக வங்கியுடனும் மீண்டும் நட்புறவை புதுப்பித்துக்கொண்டது ப்ளேயிஸ் கம்பேரோவின் அரசு. மிகச்சிறந்த அதிபராகத் திகழ்கிறார் என்று பிரெஞ்சு அரசாங்கத்தின் பாராட்டையும் பெற்றுவிட்டார் ப்ளேயிஸ் கம்பேரோ. அதற்குப் பின்னால் நடைபெற்ற தேர்தலை, புர்கினா பாசோவின் 75 % மக்கள் ஒட்டுபோடாமல் புறக்கணித்தும், தன்னையே அதிபராக அறிவித்துக்கொண்டு ஆட்சியினைத் தொடர்ந்தார் ப்ளேயிஸ் கம்பேரோ. இன்றுவரை அவரே புர்கினா பாசோவின் அதிபராக இருக்கிறார்.
           தாமஸ் சங்கராவின் ஆட்சியில், இரண்டே ஆண்டுகளில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றநாடாக மாறியிருந்த புர்கினா பாசோ, கடந்த 25 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய கடனாளி நாடுகளின் பட்டியலிலும், மிக மோசமான வறுமையிலிருக்கும் நாடுகளின் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறது. ஆப்பிரிக்க கண்டத்தின் வளங்களையும், மனித உழைப்பினையும் சுரண்டுவதற்கு ஏதுவாக, இப்படியொரு பொம்மை ஆட்சியும் ஊழல்மிகுந்த ஆட்சியாளர்களும் ஆப்பிரிக்காவினை ஆளவேண்டுமென்பதுதான் ஆதிக்க நாடுகளின் விருப்பம்.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல், உலகளவில் உரக்க ஒலிக்கவேண்டியதன் அவசியத்தை புர்கினா பாசோ போன்ற நாடுகளின் வரலாறு நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றன...
தகவல் : இ.பா.சிந்தன்
நன்றி : சிந்தன் - வலைப்பூ 

1 கருத்து:

இ.பா.சிந்தன் சொன்னது…

பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்
-இ.பா.சிந்தன்