சனி, 18 ஆகஸ்ட், 2012

மன்மோகன் சிங்கின் புதிய ஊழல் சாதனை - 2ஜி - யை மிஞ்சியது...!


                      ஒரு கிலோ அரிசி ரூ. 2 /- வீதம் ஒரு குடும்ப அட்டைக்கு மாதம் 35 கிலோ அரசி கொடுக்க ஏற்பாடு செய்வதன் மூலம் நாட்டிளுள்ள அனைத்து மக்களுக்கும் உணவு பாதுகாப்பை ஏற்படுத்து என்று மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் போராடி வருவதுடன் அதற்கான கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து மனு ஒன்றையும் கொடுத்திருக்கிறார்கள். வெறும் 1.50 இலட்சம் கோடி ரூபாய்களே தேவைப்படும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மன்மோகன் சிங் யோசிக்கிறார். அதற்கு நிதி இல்லை என்று நழுவுகிறார். மக்களுக்கென்று ஒரு திட்டம் நிறைவேற்றவேண்டுமென்றால் மத்திய அரசு தயங்குகிறது. ஆனால் இதே மத்திய அரசு இந்திய பெருமுதலாளிகளுக்கு 5 இலட்சம் கோடி வரை மானியமும், வரிச்சலுகைகளையும் தாராளமாக வாரி வழங்குகிறது. 
              ஆனால் ''பொருளாதார வளர்ச்சி'' என்ற பேரில் சாதாரண மக்களுக்கு மட்டும் கூடுதல் வரி, புதிய வரி, மானியம் வெட்டு என பல்வேறு கோணங்களில் மக்களை நசுக்குகிற வேலைகளை மத்திய அரசு மனசார செய்கிறது. 
            அண்மையில் சுதந்திரதினத்தன்று கொடியினை ஏற்றிவைத்து விட்டு சந்தோஷமாக நாலு வார்த்தைகளை பேசாமல், மன்மோகன் சிங் ஒப்பாரிவைத்து அழுதே விட்டார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கிறதாம். அதற்கு காரணம்  அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்தொற்றுமை இல்லையாம். மக்களை திசைத் திருப்புவதற்கு எதிர் கட்சியின் மீது இப்படியொரு குற்றச்சாட்டு. 
            மன்மோகன் சிங் செய்கிற ஏகாதிபத்திய ஆதரவு கொள்கைகளுக்கும், முதலாளித்துவ ஆதரவு கொள்கைகளுக்கும் இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால் அவருக்கு எரிச்சல் வருகிறது.  அரசியல் கட்சிகள் அனைத்தும் அறிவுப்பூர்வமாக சிந்தனை செய்யாமல், மக்களைப் பற்றி யோசிக்காமல், கண்மூடித்தனமாக இவரையும், இவர்  கொண்டுவரும் அறிவிலித்தனமான  திட்டங்களையும் ஆதரிக்கவேண்டும் என்று கூசாமல் எதிர்ப்பார்க்கிறார். 
              இப்படியாக மண்ணுமோகன் ஆட்சி என்பது திக்குத் தெரியாமல் திக்குமுக்காடி கொண்டிருக்கும் வேளையில் - ஏற்கனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலும், காமன்வெல்த் விளையாட்டு ஊழலும், ஆதர்ஷ் வீட்டு ஊழலும் கொடிகட்டிப் பறக்கும் இந்த சூழ்நிலையில் தான்,  இந்த ஊழல்கள்   எல்லாம் தோற்கும் விதமாக 3.86 இலட்சம் கோடி அளவில் புதிய ஊழல்களை புரிந்து மண்ணு மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி புதிய சாதனையை புரிந்திருக்கிறது. மிகப்பெரிய சாதனை - பெருமையாக இருக்கிறது. இத்தனைக்கும் மன்மோகன் சிங்கிற்கு நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு  தனியாருக்கு அனுமதியளித்ததில் 1.86 இலட்சம் கோடி ரூபாயை, மக்களுக்கு திட்டங்களை தருவதில் நிதியை காரணம் காட்டுகிற மத்திய அரசு இழந்திருக்கிறது என்பது காரித்துப்புகிற அளவிற்கு கேவலமானது.
             அதில் மன்மோகன் சிங்கின்  காங்கிரஸ் கட்சிக்கு  தேர்தல் செலவை கவனிக்கின்ற - பாராளுமன்றத்தில் சோதனையான காலங்களில் மன்மோகனை காப்பாற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதிகளை கொட்டி இறைக்கின்ற  ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகை அளித்ததில், 29 ஆயிரத்து 33 கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு  இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை சொன்னது வேறு யாரும் அல்ல. மத்திய கணக்கு தணிக்கை  குழு நேற்று  பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த விவரங்களில் மிகவும் முக்கியமானது. 
             ''பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ; நாங்கள் சாகவோ'' என்று  பாரதியை போல் ஆட்சியாளர்களுக்கு  எதிராக ஒரு நாள் மக்கள் கொதித்தெழுவார்கள்.

கருத்துகள் இல்லை: