அண்மையில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாக்கட்சி எதிர்பாராதவிதமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாகவும், ஹரியானா மாநிலத்தில் பெரும்பான்மை பெற்றக் கட்சியாகவும் வெற்றிபெற்றிருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்குப்பின் நடைபெற்ற இந்தியாவில் நடைபெற்ற மூன்று இடைத்தேர்தல்களிலும் பலத்த தோல்விகளையே சந்தித்து வந்த பாரதீய ஜனதாக்கட்சி இப்போது மட்டும் வெற்றிபெற்றது எப்படி...? மக்களுக்கு எப்படி திடீரென்று பா.ஜ.க மீது நல்லெண்ணம் வந்தது....? நரேந்திரமோடி - அமித்ஷா இரட்டையர்கள் திட்டமிட்டு செய்த தந்திரம் தான் இந்த வெற்றிகளுக்கு கை கொடுத்தது.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நூறே நாட்களில் நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும் என்று மக்களை நம்பவைத்து ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதாக்கட்சியானது அமெரிக்க ஆதரவு மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் ஆதரவு கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் முந்தைய காங்கிரஸ் கட்சியை விட அதிவேகமாக முன்னெடுத்து செல்வதும், அத்தியாவசிய பொருட்களின் தொடர்ச்சியான விலை உயர்வு, உயிர்காக்கும் மருந்துகள் விலையேற்றம், பெட்ரோல் - டீசல் விலையேற்றம், இரயில் கட்டண உயர்வு, இன்சூரன்ஸ் மற்றும் இரயில்வே ஆகிய துறைகளில் அந்நியநேரடி முதலீடு உயர்வு, பாதுகாப்புத்துறையில் அந்நியநேரடி முதலீடு அனுமதி போன்ற மக்கள் விரோத - தேச விரோத செயல்களை முன்னெடுத்து செல்வதுமான வேலைகளை மட்டுமே செய்துகொண்டிருப்பதால் பாரதீய ஜனதாகட்சியின் மீதும், பிரதமர் நரேந்திரமோடியின் மீதும் இந்திய மக்கள் அதிருப்தியிலும், ஏமாற்றத்திலும் இருப்பதால் தான் பாரதீய ஜனதாக்கட்சி கடந்த இடைத்தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்தது என்பதை நாடு நன்கு அறியும்.
அப்படியிருக்க இந்த இரு வடமாநிலங்களின் சட்டமன்றத்தேர்தல்கள் நடைபெற்ற தற்சமயமும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் போக்கில் மாற்றமும் வந்துவிடவில்லை என்பது மட்டுமல்ல. முன்னை விட வேகம் அதிகமாக உள்ள சூழ்நிலையில் தான் இந்த சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போதும் அந்த இரு மாநில மக்களிடையே பா.ஜ.க-வின் மீது அதே அதிருப்தியும், ஏமாற்றமும் இருந்தன என்பதை யாராலும் மறுக்கமுடியாது. என்றாலும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாரதீய ஜனதாக்கட்சி எப்படி வெற்றிப்பெற்றது...? இந்த வெற்றியையும் ''மோடி அலை'' என்றும் ''மோடி சுனாமி'' என்றும் அமித்ஷாவும் பா.ஜ.க-வினரும் கொண்டாடி வருவது வேடிக்கையாய் இருக்கிறது.
ஆனால் மோடியின் ''தந்திரம்'' மோடிக்கு எதிரான அலையை வீழ்த்தி பா.ஜ.க-வுக்கு வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறது என்பது தான் உண்மை. பாகிஸ்தானாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும் இவர்களின் தேர்தல் நேரங்களில் இருநாடுகளுக்கும் இடையே ''வேண்டுமென்றே'' உருவாக்கப்படும் இராணுவ மோதல்களையும் எல்லைப் பிரச்சனைகளையும் இந்த இரு நாட்டு ஆளுங்கட்சியினரும் தங்கள் வெற்றிக்கு சாதகமாகவே மாற்றிக்கொள்வார்கள் என்பது தான் கடந்தகால வரலாறு. இது போன்ற இராணுவ மோதல்கள் அல்லது தீவிரவாதசெயல்கள் போன்ற அச்சுறுத்தல்களை அதிருப்தியில் இருக்கும் மக்களை திசைத்திருப்பி ஆட்சியாளர்கள் அல்லது ஆளுங்கட்சியினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்கள். அதிருப்தியிலிருக்கும் மக்களின் கவனத்தை திசைத்திருப்பி தங்களுக்கு சாதகமான ஓட்டுகளாக மாற்றி வெற்றிபெற்று விடுவர் என்பதும் உண்மையிலும் உண்மை. இந்த தந்திரத்தை தான் அந்தக்கால நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய் முதல் இந்தக்கால மோடி வரை செய்திருக்கிறார்கள். இந்த இரு மாநில தேர்தல்களிலும் படுதோல்வியை தவிர்ப்பதற்காக ''அதே தந்திரத்தை'' பயன்படுத்தி தான் இன்றைய அரசியல் புத்திசாலியான நரேந்திரமோடியும் வழக்கம்போல் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளை உதவிக்கு வைத்துக்கொண்டு மிக திறமையாக தேர்தலில் வெற்றிபெற்றார் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
நீங்கள் இந்த இரு மாநிலத் தேர்தலுக்கு முந்தைய நிகழ்வுகளை பின்னோக்கிப் பார்த்தால் புரியும். இந்த தேர்தலுக்கு முந்தைய பதினைந்து நாட்களாக இந்திய - பாகிஸ்தான் எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இந்திய எல்லையில் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்துவதாகவும், பதட்டமாக இருப்பதாகவும் இந்திய தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் அலறி துடித்தன. இந்த நிகழ்வுகளை பிரதமர் மோடியும், பா.ஜ.க தலைவர் அமித்ஷாவும் தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்திக்கொண்டு மக்களுக்கு தங்கள் மீதிருந்த அதிருப்தியை மறக்கச்செய்து திசைத்திருப்பினர். இது தான் இவர்களுக்கு இந்த வெற்றியை தேடித்தந்த இரகசியம்.
ஆனால் இவர்களின் நல்லாட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்றெல்லாம் வார்த்தை ஜாலத்தை உதிர்க்கிறார்கள். அனால் உண்மை அதுவன்று என்பதும், எதுவென்று என்பதும் மக்கள் நன்கு அறிவார்கள். இப்போது தேர்தலும், இந்திய-பாகிஸ்தான் பிரச்சனையும் ஓய்ந்துவிட்டது. ஊடகங்களும் தங்கள் திருப்பணி முடிந்து வேறு வேலையை பார்க்க சென்றுவிட்டன.
2 கருத்துகள்:
No.people against the corruption govt.
Bloody Commie Joker :-)
கருத்துரையிடுக