திங்கள், 6 அக்டோபர், 2014

நியாயமற்ற ஒருவர் நமது பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட யார் காரணம்...?

 

  வழக்கறிஞர் ஆர்.வைகை                      
           மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவ இதழான ‘மார்க்சிஸ்ட்’ மாத இதழின் வெள்ளி விழா சிறப்பு கருத்தரங்கத்தில்  பேசியது:-
         ஊழல் செய்த நபர் ஒருவர் முதல்வராகக் கூடிய அளவிற்கு வாய்ப்பு எதனால் கிடைக்கிறது. நியாய மற்ற நபர் ஒருவர் நமது பிரதிநிதியாக, ஒரு முதல்வராக பதவியேற்கும் நமது தேர்தல் முறையில் பெரிய குறைபாடு உள்ளது  என்பதை அது காட்டுகிறது.
              தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லாது என்று கூறி அதிமுகவினர் வாதம் செய்து வருகின்றனர். மக்கள் சேவையாற்றக் கூடியவர்கள் திடீரென சொத்துக்குவித்தால், முறையான ஊதியத்தைக் கொண்டு சொத்துக்கள் வாங்க முடியுமா என்ற அளவுகோல்கள் உள்ளன. வங்கிக்கடன் மூலம் சொத் துக்கள் வாங்க ஆதாரங்களைக் காட்ட வேண்டும். ஆனால், ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது ஒரு ரூபாய் தான் சம்பளமாகப் பெற்றார். 1992ம் ஆண்டு வரை அவர் திரையுலகில் சம்பாதித்த பணம் என்பதைத் தவிர வேறு வகையில் அவருக்கு வருமானம் இல்லை. இப்பணத்தைக் கொண்டு 66 கோடி ரூபாய்க்கு எப்படி சொத்துக்களை வாங்கினீர்கள் என்பது சாதாரண கேள்வியாகும். இவ்வழக்கில் தான்  குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டப்பட்டவரின் பொறுப்பாகும்.


           நீதிபதி விளக்கம் கேட்ட போது, “இவை என் சொத்துக்கள் அல்ல; சசிகலா, நடராசனின் சொத்துக்கள்” என்று ஜெயலலிதா கூறியுள்ளார். ஒரே நாளில் 18 கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் போயஸ் தோட்டத்தில் வைத்து பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பலவற்றில் பெயர்களே இல்லையென்றும் போலியானது  என்றும் சப்-ரிஜிஸ்தார் கூறியுள்ளார். ஆனால், இந்தக் கம்பெனிகளின் சொத்துக்கள் சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயரில் இருப்பதாகவும் தன்னைச் சார்ந்ததாக இல்லையென்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால், ஜெயலலிதாவின் வங்கிக்கணக்கிலிருந்து தான் இதற்குப் பணம் வந்துள்ளதாக சப்-ரிஜிஸ்தார் கூறியுள்ளார். ஆகவே, ஜெயலலிதா குற்றவாளியென நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து தான் அதிமுகவினர் தற்போது உண்ணாவிரதம் இருக்கின்றனர். 
               இந்தத் தீர்ப்பில் இருந்து எழும் ஆழமான கருத்தை அவர்கள் ஆலோசிக்கவில்லை. ஊழல் செய்த நபர் ஒருவர் முதல்வராக ஆகக்கூடிய அளவிற்கு வாய்ப்பு எதனால் கிடைக்கிறது...? எப்படி சாத்தியமானது...? தேர்தல் மூலம் வெற்றிபெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தலைவராக்கப்பட்டு அதன் மூலம் முதல்வராக தேர்வு செய்யும் ஜனநாயகம் தான்  நடைமுறையில் உள்ளது. எனவே இந்த பிரதிநிதித்துவம் சரியா... தவறா...? என்ற கேள்வி தான் தற்போது எழுகிறது. நியாயமற்ற நபர் ஒருவர் நமது பிரதிநிதியாக, ஒரு முதல்வராக பதவியேற்கும் தேர்தல் முறையில் மிகப்பெரிய குறைபாடுகள்  உள்ளன. அதனால்தான் அரசியலில் கிரிமினல்கள் அதிகமாகியுள்ளதை எப்படி தடுப்பது என உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டக்கமிஷன் ஆராய்ந்து இது குறித்து ஒரு அறிக்கைத்தாக்கல் செய்யஉள்ளது.
                 தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 162 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 76 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் குற்றவாளிகள். கடந்த 2004ம் ஆண்டு 24 சதவீதமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்ற எண்ணிக்கை என்பது  2009 ஆம் ஆண்டு 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 47 சதவீத சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கொலை வழக்குகள் உள்ளன. கிரிமினல் வழக்கு உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் 23 சதவீதம் பேர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களாகி உள்ளனர். இதை எப்படித் தடுப்பது? 
              கடந்த தேர்தலில் நரேந்திரமோடிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இப்பணம் எங்கிருந்து வந்தது? இப்பணத்தை சாதாரண மக்களால் செலவிட முடியுமா? மாபியா, கருப்பு பணம், பதுக்கல்காரர்கள் தேர்தலில் அதிக பணங்களைச் செலவிடுகிறார்கள். தேர்தலில் உச்சவரம்பு செலவு என்பது வேட்பாளர்களுக்கு மட்டும்  தான் உள்ளது. கட்சிகளுக்கு இல்லை. 1985-ஆம் ஆண்டு சட்டத்திருத்தம் இப்படி பணம் தருவதை நியாயப்படுத்துகிறது. 2013-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. பெரிய முதலாளிகள் பணம் தர ஒரு அறக்கட்டளை உருவாக்கியதுடன், பணம் தருபவர்களுக்கு வருமானவரி விலக்கும் அளிக்க உத்தரவிட் டது.
                  2003-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதித்யா பிர்லா 36 கோடி ரூபாய் வழங்கினார். அதே போல பாஜகவிற்கு 26 கோடி ரூபாய் வழங்கினார். பாரதி டெலிகாம் நிறுவனம் 2010 - 2011-ஆம் ஆண்டில் காங்கிரசுக்கு 11 கோடி ரூபாய் வழங்கியது. இந்த நிறுவனம் தான் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் பயனடைந்த கம்பெனியாகும். அலைக்கற்றை என்பது மக்கள் சொத்து. அப்பணத்தை வசூல் செய்யாமல் தள்ளுபடி விலையில் வழங்கியது தான் வழக்காகியுள்ளது. 
              யார் அமைச்சராக வேண்டும்...?  என்று நீரா ராடியாவும், ரத்தன் டாட்டாவும் பேசிய பேச்சுகளின் டேப்புகள் வெளியானது. அமைச்சர் யார்...?  என்பதை முடிவு செய்வது மக்கள் அல்ல. இவ்வாறாக  தேர்வு செய்யப்படுபவர்கள் எப்படி உண்மையான மக்கள் பிரதிநிதியாக இருப்பார்கள்?               
நன்றி :  
                    

கருத்துகள் இல்லை: