கட்டுரையாளர் : தோழர்.ஜி.ராமகிருஷ்ணன்,
மாநிலச்செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் சிறைத் தண்டனை பெற்று, உச்சநீதிமன்றத்தில் பெற்ற நிபந்தனை ஜாமீன் அடிப்படையில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் “சோதனைகளைக் கண்டு கவலை இல்லை, தமிழக மக்களுக்காக எந்த தியாகமும் செய்வேன்“ என்றுகூறியுள்ளார். “பொது நலனுக்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வது எத்தகைய இடர்பாடுகளை உடையதாக இருக்கும் என்பதை அரசியல் வாழ்வில் நுழைந்த நாளிலிருந்து உணர்ந்திருக்கிறேன்“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கு 18 ஆண்டுகளாக நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பில் பல்வேறு விபரங்கள் இடம்பெற்றுள்ளன.3 ஆயிரம் ஏக்கர் நிலம் உட்பட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஜெயலலிதா முதல்வராக இருந்தகாலத்தில் குவிக்கப்பட்டுள்ளன. நிலத்தை வாங்குபவரின் பெயர்களை பூர்த்தி செய்யாமலே பதிவாளரை வீட்டிற்கு அழைத்து சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நால்வரின் பெயரிலும் சொத்துக்கள் இருந்தாலும் அது முதல்வர் பதவியை பயன்படுத்தி சேர்த்த சொத்துக்கள்தான் என்று தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்போது தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை. வெறும் காகிதத்தில் மட்டுமே அந்த நிறுவனங்கள் இருந்துள்ளன என்பதும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த வழக்கில் சட்டப்பூர்வமாக மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட உரிமைகள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உண்டு.
ஆனால் அவர் தண்டனை பெற்றதும், சிறையில் அடைக்கப்பட்டதும் மிகப்பெரிய அநீதிஎன்று அதிமுகவினர் போஸ்டர் அடித்தனர். தெய்வத்திற்கு மனிதன் தண்டனை வழங்குவதா? என்று கேட்கும் அளவிற்கு சென்றனர். ஆனால், ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையிலும் கூட அதே தோனி இடம்பெற்றுள்ளது விசித்திரமாக உள்ளது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி எந்த தியாகமும் செய்வேன் என்று கூறுவதுபொருத்தமற்றது.விடுதலைப்போராட்டக் காலத்திலும் அதன்பின்பும் மக்களுக்காக சிறை சென்ற தலைவர்கள் இப்போதும்கூட நம்முடன் உள்ளனர். குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா விடுதலைப்போராட்ட காலத்தில் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு சிறைத்தண்டனை பெற்றவர். நாடு விடுதலை அடைவதற்கு முதல்நாளான ஆகஸ்ட் 14-ம் தேதி மாலை தான் அவர் மதுரை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். நாடு விடுதலை அடைந்த பின்பும் கூட அவர் பலமுறை சிறை சென்றுள்ளார்.
ஆனால், இந்த வழக்குகள், தண்டனை அனைத்தும் அவருடைய சொந்த விவகாரத்திற்கானவை அல்ல. அனைத்தும் நாட்டு மக்களின் விடுதலைக்காக, நல்வாழ்விற்காக அவர் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டவை.அதேபோன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு விடுதலைப்போராட்ட காலத்திலும் அதன் பின்பும் பலமுறை சிறை சென்றவர். இதிலும் தனிப்பட்ட வழக்கு ஏதும் இல்லை. அனைத்தும் மக்களுக்காக நாட்டுக்காக நடத்திய போராட்டங்களுக்காக தொடுக்கப்பட்டவையே. இந்த இருபெரும் தலைவர்களும் சென்னையில் பங்கேற்க இருந்த ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கிற்கு கூட அதிமுக தலைமையிலான மாநில அரசு அனுமதி மறுக்கிறது. ஆனால், மாநிலம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு (!) எந்தத் தடையும் இல்லை.“நான் என்றும் மக்கள் ஊழியனே” என்று முழக்கமிட்ட தோழர் ஏ.கே.கோபாலன் மக்களின் விடுதலைக்காக போராடியவர்.
அவரும் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையில் கழித்தவர். தமிழகம் தந்த மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் பி.ராமமூர்த்தி மாணவப் பருவத்திலேயே விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டவர். சிறை சென்றவர். ஆனால், அவர் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டு எதுவும் இல்லை. அவர், மதுரை சிறையில் இருந்துகொண்டே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.விடுதலைப்போராட்ட வீரர்களாக திகழ்ந்து, சிறை சென்று அதன்பின் மக்கள் பணியின் ஒரு பகுதியாக முதல்வர் பொறுப்பை ஏற்ற தோழர்கள் இஎம்எஸ் நம்பூதிரிபாட், ஜோதிபாசு, நிருபன் சக்கரவர்த்தி, தசரத் தேவ், சி.அச்சுதமேனன், இ.கே.நாயனார் போன்ற தலைவர்கள் பொதுவாழ்வில் எதிரிகளால் கூட குற்றம்சாட்ட முடியாத தூய நிர்வாகத்தை தந்தவர்கள்.
கேரள முதல்வராக இருந்த தோழர். வி.எஸ்.அச்சுதானந்தனும் அப்படியே.திரிபுரா மாநில முதல்வராக தொடர்ந்து நான்காவது முறையாக பதவிவகிக்கும் தோழர் மாணிக் சர்க்கார் இந்தியாவின் ஏழை முதல்வர் என்றும், அவருக்கு சொந்தமாக வீடும் இல்லை. காரும் இல்லை என்று பத்திரிகைகள் எழுதின. இதுதான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பாரம்பரியம். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதையே ஒரு மகத்தான தியாகமாக கூறிக்கொள்வதையும், அது தொடரும் என்று கூறுவதையும் மக்கள் புரிந்துகொள்வார்கள்.
நன்றி : தீக்கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக