கட்டுரையாளர் : தோழர். சீத்தாராம் யெச்சூரி, எம்.பி.,
தலைமைக்குழு உறுப்பினர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மாபெரும்
அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெற்று சாதனை படைத்த நவம்பர் 7 ஆம் தேதியன்றுதான்
1964 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமான முறையில் தன் அமைப்பை அதனுடைய
7ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட புரட்சி திட்டத்துடன் அறிவித்தது.
1920 இல் தாஸ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
அமைக்கப்பட்டது. அதனையே கட்சி தொடங்கிய நாளாக
எடுத்துக் கொண்டுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தன் பயணத்தைத் தொடர்கிறது. அதனால்தான் 1964 இல் இந்திய புரட்சி இயக்கத்தின்
உண்மையான வாரிசு என்ற முறையிலும், புரட்சியின் முன்னணிப் படை என்ற முறையிலும், மார்க்
சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய அமைப்பு அகில இந்திய மாநாட்டையே 7ஆவது அகில இந்திய
மாநாடு என்று எண்ணிட்டது. இவ்வாறு, 2014 ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட
94 ஆம் ஆண்டு தினமாகும்.
1982
ஜனவரி, 11 ஆவது அகில இந்திய மாநாட்டின் அரசியல் - ஸ்தாபன அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
''ஒரு சரியான அரசியல் தத்துவார்த்த நிலைப்பாட்டிற்காக,
1955-62 ஆம் ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்ற உள்கட்சிப் போராட்டம்,
கட்சி பிளவுபடுவதிலும் 1963-64இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்படுவதிலும்
முடிந்தது. அரசியல் நிலைப்பாடு, தத்துவார்த்த
நிலைபாடு, தேசிய நிலை மற்றும் சர்வதேசிய நிலை எனப் பல்வேறு பிரச்சனைகளிலும் வித்தியாசங்கள்
கூர்மையாக முன்வந்து, இரு தரப்பினரையும் பிரித்தது.''
மேலும்,
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
“இந்திய அரசு குறித்தும் இந்திய அரசாங்கம் குறித்தும் முற்றிலும்
வெவ்வேறான இரு மதிப்பீடுகள் இரு வெவ்வேறான திட்டங்கள் மற்றும் அரசியல் நடைமுறை உத்திகளைப் பின்பற்ற வேண்டியதற்கு இட்டுச்
சென்றன. அவை பிந்தைய ஆண்டுகளில் வெளிப்படுத்தப்பட்டன.’’
மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் 7 ஆவது அகில இந்திய மாநாட்டின் 20 ஆம் ஆண்டு தினத்தைக் கொண்டாடிய
சமயத்தில், பி.டி.ரணதிவே, பீப்பிள்ஸ் டெமாக்ரசி (நவம்பர் 7, 1984) இதழுக்காக எழுதிய
சிறப்புக் கட்டுரையில் கூறியிருந்ததாவது:
“புதிய இந்திய அரசு மற்றும் அரசாங்கத்தின் வர்க்கக் குணாம்சம் என்ன என்பது குறித்தும், புரட்சியில் உழைக்கும் வர்க்கத்திற்காக ஆற்ற வேண்டிய
பணிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும்
உள்ளார்ந்த மதிப்பீடு சம்பந்தமாக கேந்திரமான கேள்வி எழுந்தது. மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி, அரசானது, பெருமுதலாளிகளால் தலைமை தாங்கப்படக்கூடிய, அந்நிய நிதி
மூலதனத்துக்கு உடந்தையாக இருந்து ஒத்து செயல்படுகிற முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசு என்றே அரசின்
வர்க்கக் குணாம்சம் குறித்து வரையறுத்தது.”
இதன்
பொருள், மக்கள் ஜனநாயக அரசைக் கட்டுவதற்காக, அதிகாரத்திற்கான போராட்டத்தில், அரசு மற்றும்
அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித சமரசத்திற்கும் இடமில்லாத வகையில் போராட வேண்டும் என்பதாகும்.
எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் மேற்கு
வங்கத்தில் அரைப் பாசிசத் தாக்குதல், கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் கொடூரமான
பிரச்சாரம் ஆகியவற்றையும் துணிவுடன் எதிர்த்து நின்று அரசாங்கத்திற்கு எதிராக உறுதியான
போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடிந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடதுசாரி மற்றும் வெகுஜன இயக்கத்திற்கு எதிராக
ஏவப்பட்ட ஒடுக்குமுறையைத் தாங்கிக் கொண்டு, இத்தனை ஆண்டு காலமும் எதிர்ப்புத் தீப்பந்தத்தை,
சில சமயங்களில் அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் கைவிட்ட சமயங்களிலும் கூட, தனியாகவும், உயர்த்திப் பிடித்து வந்திருக்கிறது.
“இந்திய அரசின் குணம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
எப்படி புரிந்து கொண்டது? அது ஒட்டுமொத்தத்தில் பெரிய மற்றும் பெரிதல்லாத முதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிற அரசு என்று அதனைப் புரிந்து
கொண்டது. எதார்த்தத்தில் அரசும் அரசாங்கமும் பெரிதல்லாத முதலாளிகளால் தலைமை தாங்கப்பட்டது
என்றே பொருளாகும்.’’
புரட்சியின்
ஜனநாயகக் கட்டம் சம்பந்தமாக வித்தியாசம் இல்லை என்ற போதிலும், அரசின் வர்க்க குணம்,
இந்திய முதலாளிகளின் இரட்டைத் தன்மை கொண்ட குணம் மற்றும் அதன் விளைவாக நாம் மிகச்சரியான
முறையில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை உத்தி குறித்த பிரச்சனைகளிலும், கூர்மையான அளவில்
வித்தியாசங்கள் இருந்தன.
இந்த
ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகளை வைத்தே, இப்பிரச்சனைகள் பலவற்றைக் குறித்து ஏராளமாக எழுத
முடியும். ஏற்கனவே பலவற்றைக் குறித்து எழுதி இருக்கிறோம். கடந்த ஐம்பதாண்டுகளில் இப்பிரச்சனைகள்
குறித்து நிறையவே எழுதி இருக்கிறோம். இன்றைய
சூழ்நிலையிலும் மிகவும் முக்கியமாகத் தொடரும் சில தத்துவார்த்த அடித்தளங்கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதற்கான
வரையறை மற்றும் அதனைத் தொடர்ந்து அது நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் சக்திகளில் எழுச்சியுடன்
முன்னேறிச் சென்றது குறித்தும் கவனம் செலுத்திட
விரும்புகிறேன்.
ஆயினும்,
இந்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்வதற்கு முன்பு, கட்சி ஆதரவாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்
இயக்கத்தின் மீது பரிவு காட்டுவோர் அடிக்கடி எழுப்பும் சிலவற்றைக் குறித்து கருத்துக்
கூறுவது அவசியமாகும். கம்யூனிஸ்ட் கட்சி பிரியாமலும் உடைபடாமலும் தவிர்க்கப்பட்டிருப்பின்,
கம்யூனிஸ்ட் இயக்கம் பதிவு செய்துள்ள முன்னேற்றம் இப்போதிருப்பதை விட மேலும் பன்மடங்கு
கூடுதலாக இருந்திருக்கக் கூடும் என்பதே அவர்கள் மத்தியில் காணப்படும் உணர்வாகும்.
மேலே
நாம் குறிப்பிட்ட பி.டி.ரணதிவேயின் கட்டுரையில் இதுகுறித்தும் முப்பது ஆண்டுகளுக்கு
முன்பே கூறியிருப்பதாவது:
“கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முட்டாள்தனமான முறையில் ஏதேனும்
உடைப்பு ஏற்பட்டிருப்பின் அது கிரிமினல்தனமான ஒன்றேயாகும். சரியானதொரு நிலைப்பாட்டிற்கு எதிராக இவ்வாறு கட்சியை
உடைப்பதில் ஈடுபடுவோர், மக்களிடமிருந்து தனிமைப்படுவார்கள். அவர்கள் தங்கள் தவறான போக்கைத்
திருத்திக் கொள்ளவில்லை என்றால் ஓர் அரசியல் சக்தியாக இருப்பதிலிருந்து துடைத்தெறியப்பட்டு
விடுவார்கள். அதே சமயத்தில், கட்சியில் ஆதிக்கம் செலுத்தும் தலைமை தவறான நிலைப்பாட்டைத்
தொடரும்போது, தன்னுடைய தவறான நிலைப்பாட்டைத் திருத்திக் கொள்ள மறுக்கும்போது, வர்க்க
சமரசப் பாதையிலேயே கட்சி முழுவதையும் கொண்டு செல்வதற்கான உறுதியைக் காட்டுகிறபோது,
கட்சிக்குள் மோதல்களும் பிளவுகளும் அடிக்கடி நிகழும். அத்தகைய நிலைப்பாட்டின் காரணமாக எழும் தீய விளைவுகளை
நடைமுறையில் பார்க்கலாம்.’’
பின்னர்
நடைபெற்ற நிகழ்வுகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடே மிகவும் சரியான
நிலைப்பாடு என்று உறுதி செய்ததுடன், நாட்டில்
இடதுசாரி சக்திகளில் தலைமை தாங்கும் பாத்திரத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு
அளித்தது.
மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி தன் 50 ஆம் ஆண்டு தினத்தை அனுசரிக்கக்கூடிய தருணத்தில் சமீபத்திய
தேர்தல்களில் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் ஆளும் வர்க்கங்களும்
ஊடகங்களும் அதன்மீது தொடுத்திடும் தாக்குதல்கள் குறித்தும் கையாள்வது அவசியமாகும்.
1964 ஏப்ரல் 11 இல் அன்றைக்கு இருந்த ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்
கவுன்சில் கூட்டத்திலிருந்து 32 உறுப்பினர்கள்
வெளிநடப்பு செய்து, அதன் பின்னர் சில நாட்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தது
தொடர்பாக, இப்போது சில ஏடுகள் கிண்டலாகக் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. இது குறித்துக்
கையாள்வதும் அவசியம்.
ஒரு
முன்னணி மலையாள நாளிதழ், இது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறது. “கொள்கைகளும்
தோல்விகளும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 50 ஆண்டுகளை வீணடித்துவிட்டது.’’
(2014 ஏப்ரல் 12) என்று தலைப்பிட்டு மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக மிகவும் விரிவான
முறையில் கதை புனைந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சிக்கான
காரணங்கள் குறித்து பல்வேறு கதைகளை அது அளந்துவிட்டு, கடைசியாக அது மார்க்சிஸ்ட் கட்சி
வர்க்கங்களின் இயற்கை குணம் மாற்றங்கள் அடைந்திருப்பதை கணக்கில் கொள்ளாததால் அதனால்
முன்னேறிச் செல்ல முடியாமல் இருக்கிறது, என்று குறிப்பிட்டிருக்கிறது.
இந்தியாவில்
பொருளாதாரம் சம்பந்தமாக வெளியாகும் `இளஞ்சிவப்பு முன்னணி செய்தித் தாள்களில் ஒன்று
தன்னுடைய தலையங்கத்தில், “வரலாற்றை எதிர் கொள்ளல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தன்னுடைய 50 ஆம் ஆண்டு விழாவைத் தொடங்குகையில் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது’’ என்று
குறிப்பிட்டிருக்கிறது. சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்வது வரவேற்கத்தக்க
ஒன்றுதான். உண்மையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதைத்தான் துல்லியமாகக் கோருகிறது.
புதிய சவால்களை அடையாளம் கண்டு அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் விழைவு. ஆயினும் அந்நாளேடு தன் தலையங்கத்தில் மேலும் அடிக்கோடிட்டுக்
கூறியிருப்பது என்ன தெரியுமா? “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனுடைய வரலாற்றில்
மாபெரும் சவாலை எதிர்நோக்கி இருக்கிறது. அதாவது, இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமற்ற
ஒன்று என்கிற அச்சுறுத்தலை அது எதிர்கொண்டிருக்கிறது. ஏன்?... ஏனெனில், அதன் தலைமை
இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பம் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் குணாம்சங்களில்
ஏற்பட்டுள்ள மாற்றங்களை அது கண்டுகொள்ளவில்லை.’’
இவ்வாறு
நம்மீது விமர்சனம் செய்துள்ளவர்கள் எழுப்பியுள்ள பிரச்சனைகளின் சாராம்சத்தை எடுத்துக்
கொள்வதற்கு முன்பு, ஒன்றை அடிக்கோடிட்டுச் சொல்வது அவசியமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது எப்போதுமே
காலந்தோறும் மாறி வரும் ஒவ்வொரு அம்சத்தையும் உன்னிப்பாகக் கவனித்து அதற்கேற்ற விதத்தில்
தன் கொள்கைகளை கோட்பாடுகளை அமைத்து, அதன் அடிப்படையில்தான் கொள்கைகளை நடைமுறையில் பின்பற்றி
வந்திருக்கிறது. மார்க்சிய லெனினியத்தின் உயிரோட்டமான சாராம்சம் என்பதே துல்லியமான
நிலைமைகளின் துல்லியமான ஆய்வுதான். அதன் அடிப்படையில்தான் அது செயல்பட்டுக் கொண்டு
வந்திருக்கிறது.
நிலைமைகள் தொடர்ச்சியாக மாறுவதால், அதற்கேற்ற விதத்தில் மார்க்சிய
நுண்ணாய்வையும் மாற்ற வேண்டியிருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறுமேயானால், உண்மையில்,
நாம் மார்க்சியத்தையே - அதன் புரட்சிகர உள்ளடக்கத்தையும், அதனுடைய விஞ்ஞானப்பூர்வமான
ஆய்வுக் கோட்பாட்டையுமே - மறுதலித்தவர்களாகிறோம். மார்க்சியம் மிகவும் விஞ்ஞானப்பூர்வமானது
என்பதையும், எனவே, ஓர் ஆக்கப்பூர்வமான விஞ்ஞானம் எப்போதுமே வறட்டுத்தனமின்றி இயல்பானதாகவும்,
இயற்கையானதாகவும், மெய்யானதாகவும் இருந்திடும் என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி எப்போதும் உயர்த்திப் பிடித்தே வந்திருக்கிறது.
ஆம்.
இந்த அடிப்படையில், நம்முடைய சமூகக் கட்டமைப்பில்
பல்வேறு வர்க்கங்களின் இயக்கத்தில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களை அறிவியல் ரீதியாக
ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, முதலாளித்துவத்தின் வளர்ச்சியானது,
முழுமையாக முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் இன்னமும் மாறாத பல்வேறு சமூக அடுக்குகளைக்
கொண்ட நம்முடைய அமைப்பின் மீது - அதாவது சாதிய அடுக்குகளும் மற்றும் அதன் தொடர்ச்சியாக
சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்குமுறையை ஏவி, அதீதமான அளவில் ஆதிக்கம்
செலுத்த முன்வருகையில், இது மிகவும் அவசியமாகிறது. ஆனால் இந்த விமர்சகர்கள் முன்வைக்கும்
விஷயம் அப்படியானதல்ல. அவர்கள் கூறும் விமர்சனங்கள் வேறானவைகளாகும்.
நவீன
தாராளமயக் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் மேதைகள் இப்போது சொல்வது என்ன? காரல்
மார்க்ஸ் காலத்தில் இருந்த முதலாளித்துவத்தின் கீழ் இருந்த தொழிலாளி வர்க்கத்தின் குணாம்சம்
இன்றுள்ள தொழிலாளி வர்க்கத்துக்குக் கிடையாதாம். அன்றைக்கு இருந்ததுபோல் கரத்தால் உழைக்கும்
தொழிலாளர்கள் (manual
labour) அளவிலும் மற்றும் பல்வேறு வகையினர் கலந்து
பணியாற்றுவதிலும் இன்றைக்குக் குறைந்துவிட்டார்களாம். எனவே, காரல் மார்க்சும் ஏங்கெல்சும்
உலகை மாற்றிட, முதலாளித்துவத்தை புரட்சிகரமான முறையில் தூக்கி எறிய, தங்களுடைய கம்யூனிஸ்ட்
கட்சி அறிக்கையில் முன்வைத்த, “உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள், நீங்கள் இழப்பதற்கு
எதுவுமில்லை, உங்கள் அடிமைச் சங்கிலியைத் தவிர,’’ என்கிற முழக்கம் இனிப் பொருந்தாதாம்.
ஏனெனில் தொழிலாளர் வர்க்கத்தில் பெரும்பகுதியினர் முதலாளித்துவ அமைப்பின் ஓர் அங்கமாகவே
மாறிவிட்டார்களாம், முதலாளித்துவச் சுரண்டலின் அடிமைத்தளையிலிருந்து வெளியேறி அவர்கள்
செய்ய வேண்டியது நிறையவே இருக்கிறதாம்.
சுருக்கமாகச்
சொல்வதென்றால், இவ்வாறு விமர்சிப்பவர்கள் கூறவரும் கருத்து இதுதான்: “மார்க்ஸ் காலத்திலிருந்த
தொழிலாளி வர்க்கத்தின் குணம் இன்றையதினம் மாறிவிட்டதால், நவீன தாராளமய உலகமயக் கொள்கைகள்
கடைப்பிடிக்கப்படும் இன்றைய சூழ்நிலைக்கு மார்க்சியம் பொருந்தாது. இந்த `எதார்த்தத்தை’
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க மறுப்பதால், அக்கட்சியும் இன்றைய காலகட்டத்திற்கு
பொருந்தாத ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. எனவே, இதுதான் அக்கட்சி இன்றைய தினம் எதிர்கொள்ளும்
மாபெரும் சவாலாகும்.’’
ஆனால்
உண்மை நிலைமை என்ன? உலக முதலாளித்துவம் கடந்த ஆறு ஆண்டு காலமாக தொடர்ந்து நெருக்கடிக்குள்
சிக்கி வெளிவர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மார்க்சியம்
இன்றைக்கும் பொருத்தமுடையதே என்று உரத்தகுரலில் பிரகடனம் செய்கிறது. உலகப் பொருளாதாரத்தையே
சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும் தற்போதைய நெருக்கடியைப் புரிந்து கொள்ளவும் ஆய்வு
செய்யவும் காரல் மார்க்சின் மூலதனத்தின் பிரதிகள் வேண்டும் என்று வாடிகனிலிருந்து தகைசான்ற
போப் ஆணை பிறப்பித்தாரே, அது ஒன்றும் தற்செயலாக ஏற்பட்ட விபத்தல்ல.
ஆயினும்,
இன்றைய நெருக்கடிக்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டுமானால் மார்க்சியத்தை நன்கு கற்ற
ஒருவராலேயே அதனைச் செய்திட முடியும். தொடர்ந்து இருந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடியும்,
உண்மையில் அத்தகைய நெருக்கடிக்கான ஆணிவேர் எது என்பதையும், சர்வதேச நிதி மூலதனத்தின்
உயர்வையும், இன்றைய உலக நாடுகள் பலவற்றிலும் நவீன தாராளமயப் பொருளாதார ஒழுங்கை நிலைநிறுத்துவதில்
அது மேற்கொள்ளும் மேலாதிக்கப் பங்களிப்பினையும் மார்க்சியத்தால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டு
விளக்கப்பட முடியும். அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்
இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று அல்ல. எனினும் தன்னெழுச்சியாக
நடைபெற்ற இந்த இயக்கத்தின் இறுதியில் சுயேச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என்ன? இந்தக்
கிளர்ச்சிகள் `அமைப்புக்குள் உள்ள கோளாறுக்கு எதிராக அல்ல, மாறாக இந்த அமைப்பே கோளாறானது
அதாவது முதலாளித்துவ அமைப்பே கோளாறானது என்றும் அதற்கு எதிராகவே இது நடைபெற்றுள்ளது
என்றும் முடிவுக்கு வந்தது. இதே மாதிரி புரட்சிகரமான முடிவுக்குத்தான் மார்க்சியமும்
வருகிறது. இந்தக் கோளாறான அமைப்புமுறை தூக்கி எறியப்படும்போது மட்டுமே மனித சமூகம்
ஒட்டுமொத்தமாக விடுதலை அடைய முடியும். ஆனால் நவீன தாராளமயக் கொள்கையை பூஜிப்போருக்கு
இது வெறும் தெய்வ நிந்தனையாகவே தோன்றும். எனவேதான் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியை இன்றைய தினம் `பொருந்தாத, `பொருத்தமற்றதான கட்சியாக இகழ்ந்துரைக்கிறார்கள்.
மேலும்,
தொழிலாளர் வர்க்கத்தின் சேர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த போதிலும், கரத்தால்
உழைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து, அந்த இடத்தை கருத்தால் உழைப்பவர்கள் நிரப்பியிருந்த
போதிலும், (மனிதகுல நாகரிகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுகையில் இது சாத்தியமே)
முதலாளித் துவத்தின் இயல்பான குணம் - அதாவது மனிதனை மனிதன் சுரண்டும் குணம் - அதன்
முதுகெலும்பாகத் தொடர்ந்து இருந்து வருவது இன்றைக்கும் மாறாததோர் உண்மை அல்லவா? ஏனெனில்,
சுரண்டல் என்பது முதலாளித்துவ உற்பத்தியுடன் இணைபிரியா ஒன்றல்லவா? இது ஏன்? ஏனெனில்,
முதலாளித்துவ உற்பத்தி நடைமுறையின் அடிப்படையே சுரண்டல்தான்.
உற்பத்தி
செய்யப்படும் பொருளின் மதிப்பில், அந்தப் பொருளை உற்பத்தி செய்த தொழிலாளியின் பங்களிப்பு
எப்போதுமே அவருக்குக் கொடுக்கப்படும் ஊதியத்தின் மதிப்பைவிட அதிகமாகத்தான் இருக்கும்.
இந்த வித்தியாசம்தான் முதலாளித்துவ உற்பத்தி முறையில், தொடர்ந்து உபரி மதிப்பை உற்பத்தி
செய்கிறது. இந்த உபரிமதிப்பைத்தான் முதலாளிகள் லாபம் என்ற பெயரில் தமதாக்கிக் கொள்கிறார்கள்.
எனவே, தொழிலாளி, `கருத்தால் உழைப்பவரா’ அல்லது `கரத்தால் உழைப்பவரா’ என்பதே இங்கே பிரச்சனை
இல்லை. எவராயிருந்தாலும் அவரைச் சுரண்டுவது என்பதே முதலாளித்துவத்தின் குணம். எனவே,
இந்த முதலாளித்துவ அமைப்பு முறையை முற்றிலுமாகத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, இத்தகைய
சுரண்டலிலிருந்து, மனிதகுலத்திற்கு விடுதலை யைக் கொண்டு வர முடியும். இத்தகைய அறிவியல்பூர்வமான
உண்மையை நவீன தாராள மயத்திற்கு வக்காலத்து வாங்கும் `மேதைகள்’ ஒப்புக் கொள்ள மனம் வராது,
வெறுப்பார்கள். எனவேதான் அதனை மறைப்பதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்றைய
தினம் பொருத்தமற்றதாக மாறிவிட்டது என்று நம்மீது பாய்கிறார்கள்.
இத்தகைய விமர்சகர்களின் மற்றொரு வகையான செயல்பாடு என்பது,
முதலாளித்துவ சுரண்டல் அமைப்பின் அடித்தளங்களைப் பாதிக்காத விதத்தில் பல்வேறு அரசு
சாரா அமைப்புகள் நடத்தக்கூடிய இயக்கங்களை ஊக்குவிப்பதும் மற்றும் ஆதரிப்பதுமாகும்.
அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் அல்லது ஆம் ஆத்மி கட்சிக்கு கார்ப்பரேட் ஊடகங்கள்
அளித்த அளவுக்கு மீறிய விளம்பரம், ஆகியவற்றிலிருந்தே இதனை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
அன்னா
ஹசாரேயின் உண்ணாவிரதம் நடைபெற்ற அதே சமயத்தில் தான் இடதுசாரிக் கட்சிகள் அவர் முன்வைத்த
அதே கோரிக்கைகளுக்காக பிரம்மாண்டமான முறையில் மக்கள் இயக்கங்களை நடத்தின. ஆனால் அவை
குறித்து அநேகமாக எதையுமே அவை கூறவில்லை. அல்லது பெயரளவில் ஒரு சில நொடிகள் கூறும்.
காரணம் என்ன? ஏனெனில், இடதுசாரிக் கட்சிகளைப்போல அல்லாமல், முதலாளித்துவ அமைப்பின்
அடித்தளங்களான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றின் மீது அவை கை வைப்பதில்லை.
முதலாளித்துவத்திற்கு, அதனுடைய அடித்தளத்தின் மீது கைவைக்காமல் இயங்கும் அனைவருமே உன்னதமான
வர்கள் தான், அவர்களை தூக்கி வைத்து அது கொண்டாடும். எனவேதான், அது, `ஊழலை ஒழிப்போம்’,
`நேர்மையான அரசியல்’ போன்று இயக்கம் நடத்தும் அனைத்து அமைப்புகளையுமே அவை வரவேற்கும்.
ஆனால், அதே சமயத்தில், இடதுசாரிகளைத் தனிமைப்படுத்திட வேண்டும் என்பதில் அவை குறியாக
இருக்கும். ஏனெனில், இடதுசாரிகள் இந்த அமைப்பையே கேள்விக்குறியாக்குவது தொடர்வதும்,
இந்த அமைப்புக்கு மாற்று ஏதும் இல்லை என்று கூறுவதை இடதுசாரிகள் ஏற்க மறுப்பதும்தான்
காரணங்களாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை, இந்த முதலாளித்துவ
அமைப்புக்கு மாற்று உண்டு என்றும், சோசலிச அமைப்பே அதற்கு மாற்று என்றும் பிரகடனம்
செய்கிறது.
நம்
வளர்ச்சியில் அக்கறையுடன் நம் கொள்கைகளையும் நம் செயல்பாடுகளையும் நடுநிலையுடன் விமர்சிப்பவர்களை
நாம் வரவேற்கிறோம். ஆனால் அதே சமயத்தில், குழந்தை அழுக்காகிவிட்டதே என்று தண்ணீர் தொட்டிக்குள்ளே
குழந்தையைத் தூக்கி எறிவது போன்று விமர்சிப்பவர்களுக்கு நாம் கூறும் பதில், அத்தகைய
விமர்சனங்களை ஏற்க முடியாது என்பதும் அவற்றிற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்பதுமேயாகும்.
உலக
முதலாளித்துவ அமைப்பைத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையோரைத்
துன்பத்திலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ள வறுமையின் கோரப்பிடியிலிருந்து விடுவித்திட
முடியும் என்கிற சித்தாந்தம் மற்றும் தத்துவார்த்த அடித்தளங்களையும் அதேபோன்று அதன்
நடைமுறைகளையும்தான் மார்க்சியமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து கூறி
வருகிறது. எனவே, முதலாளித்துவத்தைத் தூக்கி
எறிவது என்பது ஓர் அறநெறி சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. ஒரு விதத்தில் இது அறநெறி சார்ந்த
விஷயமே என்ற போதிலும், முக்கியமாக அதனைத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, ஒட்டுமொத்த
மனித குலத்திற்கும் விடுதலையை அளித்திட முடியும் என்கிற அறிவியல் உண்மையுமாகும்.
ஆயினும்
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் இத்தகைய குறிக்கோளை எய்தக் கூடிய விதத்தில் புரட்சிகர
சக்திகள் மற்றும் இயக்கங்கள் வலுப்பெற்று வெற்றி பெறுவதன் மூலம் மட்டுமே இதனை எய்திட
முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட
‘சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானத்தில்’,
இத்தகைய முயற்சிகளை வலுப்படுத்திடுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய துல்லியமான பிரச்சனைகள்
என்ன வென்று குறிப்பிட்டிக்கிறது. “இந்திய
நிலை மைகள்: சில துல்லியமான பிரச்சனைகள்’’ என்ற பிரிவில் கூறப்பட்டிருப்பதாவது:
“இந்திய நிலைமைகளில், நம் பணி இந்த இடைப் பரிவர்த்தனை (transition) காலத்தில், நம்முடைய புரட்சிகர முன்னேற்றத்தை வலுப்படுத்திட நம் பணி, ஏகாதிபத்
தியத்திற்கு ஆதரவாக சில சக்திகள் மாறியிருக்கக்கூடிய சூழ்நிலையில், நம்முடைய லட்சியக் குறிக்கோளை முன்னெடுத்துச் சென்றிட,
இந்திய மக்கள் மத்தியில் வர்க்க சக்திகளின் சேர்மானத்தில் மாற்றத்திற்காக வேலை செய்வதில்
துல்லியமான முயற்சிகள் தேவை. இதற்கு, நாம்
நம் சமூகத்தில் இன்றுள்ள துல்லியமான நிலைமைகளில் வர்க்கப் போராட்டத்தைக் கூர் மைப்படுத்தி
வலுமிக்க மற்றும் வெகுஜன போராட்டங்களைக் கட்டவிழ்த்துவிட வேண்டியது அவசியமாகும்.’’
நாடாளுமன்ற
மற்றும் நாடாளுமன்றத்திற்கு அப்பால் உள்ள வடிவங்கள்: இந்தப் பணியை எய்திட, மேம்படுத்தப்பட்ட
கட்சித் திட்டம் குறிப்பிடுவதாவது:
''மக்கள் ஜனநாயகம் மற்றும் சோசலிச சமூக மாற்றத்தை அமைதியான
வழியில் அடையவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விழைகிறது. வலிமையான வெகுஜன புரட்சிகர
இயக்கத்தை வளர்த்தெடுப்பதன் மூலமும், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடைபெறுகிற
போராட்டங்களை இணைப்பதன் மூலமும் பிற்போக்கு சக்திகளின் எதிர்ப்பை முறியடிக்க தொழிலாளி
வர்க்கமும், அதன் கூட்டாளிகளும் முயல்வதோடு, அமைதியான வழிமுறையில் இத்தகைய மாற்றங்களை
கொண்டுவர பாடுபடுவர். எனினும், ஆளும் வர்க்கங்கள் தங்களது அதிகாரத்தை ஒருபோதும் தாமாக
விட்டுத்தர மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் மக்களின் விருப்பத்திற்கு
மாறாக, சட்டத்திற்கு புறம்பாகவும், வன்முறை மூலமாகவும் இதைப் பின்னுக்குத் தள்ள முயல்வார்கள்.
எனவே, நாட்டின் அரசியல் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய திருப்பங்கள், திருகல்களையும் கவனத்தில்
கொண்டு அனைத்து சூழ்நிலைகளையும் சந்திக்கின்ற வகையில் விழிப்புடன் இருந்து பணியாற்ற
வேண்டும்.''
இவ்வாறு
நாடாளுமன்றப் பணியையும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயான பணியையும் நடைமுறையில் முறையாக
இணைப்பது நடப்பு சூழ்நிலையில் கட்சிக்கு முன் உள்ள முக்கியமான பணியாகும். நம் கட்சித் திட்டம் கூறுவதாவது:
“இந்தியாவில் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை முதலாளித்துவ வர்க்க
ஆட்சியின் வடிவமாக இருந்தாலும், மக்களின் முன்னேற்றத்திற்கான ஓர் அங்கமாக உள்ளது. மக்கள்
தங்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், அரசு விவகாரங்களில் ஓரளவு தலையிடுவதற்கும்,
ஜனநாயக மற்றும் சமூக வளர்ச்சிக்கான போராட்டங்களை நடத்துவதற் கும் தற்போதுள்ள நாடாளுமன்ற
முறை சில வாய்ப்புகளை வழங்குகிறது.’’ (பத்தி 5.22)
ஆனாலும்
பெரும் மூலதனத்தின் அதிகாரம் அதிகரித்திருப்பதும், அரசியலில் பெருமளவில் பணம் நுழைந்திருப்பதும்,
அரசியலில் கிரிமினல்மயம் அதிகரித்திருப்பதும் ஜனநாயக நடைமுறைகளைத் திரித்து, கீழறுத்து,
வீழ்த்திக் கொண்டிருக்கிறது.
“(2010
ஆகஸ்ட் 7-10 தேதிகளில்) விஜயவாடாவில் நடைபெற்ற விரிவடைந்த மத்தியக்குழுக் கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில் சுட்டிக்காட்டி இருப்பதாவது:
“நாடாளுமன்ற ஜனநாயகமே நவீன தாராளமயத்தாலும், உலக நிதி மூலதனத்தின்
தாக்கத்தாலும் அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அரசியலில் பணம் மற்றும் கிரிமினல்மயம் மூலம் ஜனநாயகம் களங்கப்படுத் தப்படுவதுடன்
ஜனநாயக உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிப்பதும் இணைந்து கொண்டுள்ளன. ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் வேலை
நிறுத்தங்கள் செய்வதற்கான உரிமைகள் நிர்வாக நடவடிக் கைகள் மூலமும், நீதித்துறை தலையீடுகள்
மூலமும் கட்டுப்படுத்தப்படுகின்றன. கார்ப்பரேட் ஊடகங்களோ இவ்வாறு மக்களின் உரிமைகள்
கட்டுப்படுத்தப்படுவது நியாயம்தான் என்கிற முறையில் கருத்துக்களைப் பரப்பிட, பயன்படுத்திக்
கொள்ளப்படுகின்றன”. (பத்தி 2.35)
“ஜனநாயக
அமைப்பு மற்றும் பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து விரிவாக்குவதற்கான போராட்டம்
முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அரசுக்கெதிரான உழைக்கும் மக்கள் போராட்டத்தின் ஒரு
பகுதியாகும். இதனை மக்கள் ஜனநாயகத்தின் கீழ் ஜனநாயகத்தின் உயர் வடிவத்திற்குக் கொண்டு
செல்ல வேண்டும். நம் கட்சித் திட்டத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
“மக்கள் நலனைப் பாதுகாக்க நாடாளுமன்ற ஜனநாயக முறை மற்றும்
ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக விடப்பட்டுள்ள இத்தகைய மிரட்டல்களை முறியடிக்க வேண்டியது
ஆகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தகைய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளை நாடாளுமன்றத்திற்கு
வெளியிலான நடவடிக்கைகளோடு இணைத்து, கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.’’ (பத்தி 5.23)
“இத்தகைய
தொலைநோக்குப் பார்வையுடன், நாடாளுமன்ற அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை, வெகுஜன
இயக்கங்களை வலுப்படுத்திடப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய முதலாளித்துவ
- நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு மாற்றாக ஒரு வலுவான இயக்கத்தைக் கட்டக்கூடிய விதத்தில்,
நாடாளுமன்றப் பணி, நாடாளுமன்றத்திற்கு அப்பால் உள்ள நடவடிக்கைகளோடும், போராட்டங்களோடும்
இணைக்கப்பட வேண்டும்.
“ஆயினும், நாடாளுமன்றப் பணியில் ஈடுபடும் சமயத்தில் கம்யூனிஸ்ட்
நெறிமுறையிலிருந்து விலகிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமான அளவில் வரலாம். அப்போதெல்லாம்
அத்தகைய கம்யூனிஸ்ட் நெறிபிறழ்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடாது எச்சரிக்கையாக நம்மை நாம்
காத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இத்தகைய போக்குகள் பல வடிவங்களில் வர முடியும்.
நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பே பல மாயைகளை உருவாக்கிடும். போராடவே வேண்டியதில்லை, அரசாங்கத்தின்
ஆதரவுடன் அனைத்தையும் சாதித்துக் கொள்ளலாம் என்கிற உணர்வு சர்வசாதாரணமாக மக்கள் மத்தியில்
ஏற்பட்டுவிடும். குறிப்பாக அரசு நம் ஆதரவில் இயங்கும்போது இப்போக்கு மக்கள் மத்தியில்
அதிகமாகக் காணப்படும். இத்தகைய மாயைகளை போராடி முறியடித்திட வேண்டும். தங்கள் வர்க்க
ஆட்சிக்கு மக்கள் பணிந்து செல்ல வேண்டும் என்பதுபோன்ற மாயைகளைப் பயன்படுத்தி ஆளும்
வர்க்கங்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை தோலுரித்துக் காட்டிட வேண்டும். சுரண்டப்படும்
மக்களை சரியான நடைமுறை உத்திகள் மூலம் தட்டி எழுப்பி, புரட்சி நடவடிக்கைக்குத் தயார்படுத்த
வேண்டியது அவசியமாகும்.
“மேலும்,
அமைதியாகவே இடைப் பரிவர்த்தனை ஏற்படும் என்கிற மாயைகளும் வலுப்படும். இதனை நம் மேம்படுத்தப்பட்ட
திட்டத்தில் சரி செய்திருக்கிறோம். கட்சியில் அவ்வப்போது முறையாக நாம் மேற்கொள்ளும்
நெறிப்படுத்தும் இயக்கங்களில் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக தொடர்ந்து போராட
வேண்டியதை வலியுறுத்தி வருகிறோம்.
“இன்றைய
நடப்பு சூழ்நிலையில், இடது அதிதீவிரவாதத் திரிபை வெளிப்படுத்தும் மாவோயிசம் இந்திய
மக்களின் புரட்சிகர வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு தத்துவார்த்த
சவால்களாக தொடர்ந்து இருந்து வருகிறது. அதன் புரிதல் தவறானது என்று மெய்ப்பிக்கப்பட்ட
போதிலும், இந்திய ஆளும் வர்க்கங்களை தரகு முதலாளிகள்/அதிகாரவர்க்கத்தினர் என்று முத்திரை
குத்துவதும், அரசுக்கு எதிராக உடனடி ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்த வேண்டும் என்கிற
தந்திரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுவதும் தொடர்கிறது. குறிப்பாக அது மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியை குறி வைக்கிறது. அது முதலாளித்துவ பிற்போக்கு அரசியல் கட்சிகளுடனும்,
சக்திகளுடனும் சேர்ந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு
எதிராக கொலை பாதகத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய இடது அதிதீவிரப் போக்கிற்கு
எதிராகத் தத்துவார்த்தப் போராட்டங்களை வலுப்படுத்தி, அதனை அரசியல் ரீதியாகவும், ஸ்தாபன
ரீதியாகவும் முறியடிக்க வேண்டியதும் அவசியம்.
சோசலிசத்திற்காக இந்திய மக்களின் போராட்டத்தை அறிவியல் பூர்வமாகவும் புரட்சி
அடித்தளங்களின் கீழ் நின்று முன்னெடுத்துச் செல்வதற்கு இது மிகவும் முக்கியமாகும்.
“இத்தகைய
திரிபுகளில் ஏதேனும் ஒன்றிற்கு இரையாவது, மக்களைத் திரட்டி வர்க்கப் போராட்டங்களை நடத்துவதை
உதாசீனப்படுத்தி, நாடாளுமன்ற நடவடிக்கைகளை மட்டுமே சார்ந்திருக்கக்கூடிய திருத்தல்வாத
வலைக்குள் சிக்கிக் கொள்ளக்கூடிய ஆபத்து ஏற்படும். மற்றொன்று,
நாடாளுமன்ற ஜனநாயகத்தையே மறுதலிக்கும் இடது அதிதீவிர திரிபு என்னும் சிறுபருவக்
கோளாறு வலைக்குள் நம்மைத் தள்ளிவிடக் கூடிய ஆபத்தினை ஏற்படுத்திடும். `அனைத்து நடைமுறை
உத்திகளும் மற்றும் போர்த் தந்திரம் இல்லாமையும்’ (All tactics and no strategy) திருத்தல் வாதத்திற்கு இட்டுச்செல்லும்.
`அனைத்து போர்த் தந்திரங்கள் மற்றும் நடைமுறை உத்திகள் இல்லாமை’ அதிதீவிரவாதத்திற்கு
இட்டுச் செல்லும். இவ்விரண்டிற்கும் எதிராக
நாம் உறுதியுடன் போராடி நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.
“மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி, அது துவக்கப்பட்ட காலத்திலிருந்தே, இந்திய புரட்சியை சரியான அரசியல்
நிலைப்பாட்டில் முன்னெடுத்துச் செல்வதற்காக, மற்ற பல்வேறு பிரச்சனைகளுடன் இவ்விரு திரிபுகளுக்கு
எதிராகவும் வலுவுடனும், உறுதியுடனும் போராடி வந்திருக்கிறது. இந்தப் போராட்டம் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி உதயமானதுடன் முடிந்துவிடவில்லை மற்றும் இந்திய புரட்சி வெற்றிபெற்ற
பின்னரும் முடிந்திடாது.
“மார்க்சிய
லெனினியத்தின் புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்து விடுபட்டு அனைத்துத் திரிபுகளுக்கும்
பலியாவதற்கு எதிராக மிகுந்த விழிப்புடனிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது
அவசியம் என்பதை சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின்
அனுபவம் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. அவ்வாறு செய்யத் தவறியமைதான் சோவியத் யூனியனில்
சோசலிசம் விழுங்கப்பட்டு, அதன் வடிவமும் உள்ளடக்கமும் 21 ஆவது நூற்றாண்டில் கூட மீளவும்
நிறுவமுடியாத நிலை உருவாகி இருக்கிறது.
“தொழிலாளர் - விவசாயிகள் கூட்டணி: இந்தியாவின்
நிலைமைகளில் `அகக்காரணிகளை’ (‘subjective factor’) வலுப்படுத்துவது என்பது
முக்கியமாக நம் போர்த்தந்திர லட்சியத்தை முன்னெடுத்துச் சென்றிட தொழிலாளர் - விவசாயிகள்
வர்க்கக் கூட்டணியை வலுப்படுத்துவதையே பெரிதும் சார்ந்திருக்கிறது. தற்போதைய நிலைமைகளில்,
வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்துவதற்காக, இந்தக் கூட்டணியை எய்துவதில் உள்ள பலவீனங்களைக்
களைவது அவசரத் தேவையாகும். நம்முடைய நாட்டில்
புறச்சூழ்நிலை (objective
situation) இத்தகைய முயற்சிக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது. அக பலவீனங்கள் (subjective weaknesses) சமாளித்து கடந்து செல்ல வேண்டியதாக இருக்கிறது. இதில் மிகவும் முக்கியமான மூலக்கூறு
மிகவும் சுரண்டப்படும் பகுதியினராகவும், நம் விவசாயிகள் வர்க்கத்தில் புரட்சிகரமான
பிரிவினராகவும் விளங்கும் விவசாயத் தொழிலாளர்கள் - ஏழை விவசா யிகள் ஒற்றுமையை உருவாக்குவதாகும்.
“தொழிலாளர் வர்க்க ஒற்றுமை: தொழிலாளர் வர்க்கத்தின்
தலைமையின் கீழ் இந்திய மக்களின் விடுதலையை எய்திட தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள
ஒரு கட்சி என்ற முறையில், வர்க்க ஒற்றுமையும், புரட்சிகர உணர்வும் மற்றும் தொழிலாளர்
வர்க்கத்தை, இந்தியாவில் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக தாக்குதலைத் தொடுக்கக்கூடிய
விதத்தில் இதர சுரண்டப்படும் வர்க்கப் பிரிவினரை இணைத்துக் கொண்டு வர்க்கத் தாக்குதலுக்குத்
தலைமை தாங்கக்கூடிய அளவிற்கு, வலுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.
“ஆயினும்
இந்தப் பணி ஏகாதிபத்திய உலகமயத்தின் தற்போதைய நிலைமைகளில் மிகவும் சிக்கலான ஒன்றாக
மாறி இருக்கிறது. நவீன தாராளமய சீர்திருத்தங்கள் காரணமாக தொழிலாளர் வர்க்கத்தினரில்
அதிகமான அளவில் அணிதிரட்டப்படாத பிரிவினராக மாறிக் கொண்டிருக்கின்றனர். முதலாளிகளுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தரக்கூடிய
விதத்தில் நிரந்தர வேலைகளே கேசுவல் வேலையாகவும், ஒப்பந்த வேலையாகவும் மாறிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு ஆளும் வர்க்கங்கள் ஈட்டக்கூடிய அதே சமயத்தில் தொழிலாளர்கள் ஒற்றுமையையும் உடைத்து,
சீர்குலைக்கும் வேலைகளில் இறங்கி இருக்கிறது.
கேசுவல், தற்காலிக மற்றும் சுயவேலைவாய்ப்பு தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு
நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சவால்களை சமாளித்து முன்னேறவும், பெரும்
திரளாக மாறியிருக்கும் முறைசாராத் தொழிலாளர்களை புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக்கூடிய
வகையில் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்திடவும், பொருத்தமான நடைமுறை உத்திகள் வகுக்கப்பட வேண்டும்.
“தொழிற்சங்க
நடவடிக்கைகளின்போது பொருளாதாரவாதத்தை (economism) முறியடிக்கும் பணியையும் எப்போதும் புரட்சி
இயக்கங்கள் மேற்கொண்டு வந்திருக்கின்றன. இது தொடர்பாக, சோசலிசத்திற்கான இருபதாம் நூற்றாண்டு
போராட்டங்களின் அனுபவங்கள் கற்றுணரப்பட்டு, இன்றைய நிலைமைகளில் முன்னெடுத்துச் செல்லப்பட
வேண்டியது அவசியம்.
“அடையாள அரசியல்: முதலாளித்துவம் தோன்றுவதற்கு
முன்னரேயே ஆளும் வர்க்கங்கள் அடையாள அரசியலைப் பயன்படுத்தி வந்திருக்கின்றன. இன உணர்வு
போன்ற பல்வேறு அடையாளங்களை தங்கள் வர்க்க ஆட்சியைத் தூக்கி நிறுத்துவதற்காகப் பயன்படுத்திக்
கொள்ளப்பட்டிருக்கின்றன. பல்வேறு விதமான தேசியவாதங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
உதாரணமாக, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
எழுச்சி பெற்ற யூத இனம், சமீப காலங்களில், இஸ்ரேல் அமைவதற்கு இட்டுச் சென்றுள்ளமை,
இதுபோன்றவற்றுள் ஒன்று. சோவியத் யூனியன் தகர்ந்து கொண்டிருந்த சமயத்தில் அதனுடன் இணைந்திருந்த
முந்தைய குடியரசுகள் பலவற்றில் இருந்த பிற்போக்கு சக்திகள் தங்கள் ஆட்சியை ஒருமுகப்படுத்துவதற்காக
அடையாளங்களைப் பயன்படுத்திக் கொண்டன. முந்தைய யுகோஸ்லேவியா இன்று இந்த அடிப்படையில்தான்
சிதறுண்டு போயிருக்கிறது. இந்திய துணைக் கண்டத்தைப் பிளவுபடுத்திட, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தாலும்,
நம் நாட்டிலிருந்த ஆளும் வர்க்கங்களாலும் மத அடையாளங்கள் மிகவும் வலுவான முறையில் பயன்படுத்திக்
கொள்ளப்பட்டன. இன்றும் கூட சுரண்டப்படும் பிரிவினர் மத்தியில் உள்ள வர்க்க ஒருமைப்பாட்டைச்
சீர்குலைக்கும் விதத்தில் மதரீதியாகவும், சாதிய ரீதியாகவும் மக்கள் திரட்டப்படுவது தொடர்கிறது. இன்றைய நிலைமைகளில்,
முதலாளித்துவம் ஒரு பக்கத்தில் அடையாள அரசியலைப் பயன்படுத்திக் கொண்டு, வர்க்க ஒருமைப்பாட்டை
சீர்குலைக்கிறது, மறுபக்கத்தில் அத்தகைய அடையாள அரசியலை மேம்படுத்தி, மக்களை அரசியலற்றவர்களாகவும்
மாற்றுகிறது.
“மார்க்சிய
எதிர்ப்பு சித்தாந்தப் புனைவான, பின்நவீனத்துவம், அரசியலுக்கு பெரிய அளவுக்கு முக்கியத்துவம்
கொடுக்கக்கூடாது, அது மிகவும் “நுண்ணிய’’ ஒன்று அல்லது வட்டாரம் சார்ந்தது என்றும்,
அரசியல் என்பதை “வித்தியாசங்கள்’’ மற்றும் “அடையாளங்கள்’’ ஆகியவற்றின் அடிப்படையில்தான்
இருக்க முடியும் என்றும் விவாதிக்கிறது. இவ்வாறு, இது நடப்பு சூழ்நிலையில் ஒரு புதிய
அடிப்படையை அடையாள அரசியலுக்கு அளிக்கிறது.
“அடையாள
அரசியலில், பின் நவீனத்துவ ஆதரவாளர்கள் நடைமுறைப்படுத்துவது போன்று, இன்றைய சூழ்நிலைமைகளில்
இனம், மதம், சாதி, பழங்குடி அல்லது பாலினம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படும்
அடையாளங்கள் அரசியலுக்கும் அரசியல் ரீதியாக ஒன்றுதிரட்டுவதற்கும் அடிப்படைகளாக மிகவும்
அதிகமான அளவில் மாறிக் கொண்டிருக்கிறது. வர்க்கம் என்பது அடையாளத்தின் ஒரு சிதறிய துண்டு
என்றே கருதப்படுகிறது. இவ்வாறு அடையாள அரசியல் தொழிலாளர் வர்க்கத்தின் கருத்தாக்கத்தையே
மறுதலிக்கிறது. இதன் இயற்கைத் தன்மையே, அடையாள அரசியல் ஒரு அடையாளத்தினரை பிறிதொரு
அடையாளத்தினரிடமிருந்து ஒதுக்கி வைக்கிறது மற்றும் எல்லையை வரையறுக்கிறது. எங்கெல்லாம்
அடையாள அரசியல் பிடிப்புடன் காணப்படுகிறதோ அங்கெல்லாம் அது மக்களை தனித்தனிக் குழுக்களாகப்
பிரித்து, குழுக்களுக்கிடையே மோதலையும் போட்டியையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
“அடையாள
அரசியல் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு கருத்தியல் ரீதியாகப் பொருத்தமான ஒன்று.
அடையாளம் சிதறுண்டு போவதை சந்தையால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. உண்மையில், முன்னேறிய
முதலாளித்துவ நாடுகளில், பல்வேறு வாழ்க்கைப் பாணிகள் கொண்டாடப்படுகின்றன, நுகர்வோர்
சமூகத்தின் ஓர் அங்கம் என்ற முறையில் அவர்களைக் கவரக்கூடிய விதத்தில், நாகரிகங்களும்,
நாகரிக வடிவங்களும் உருவாக்கப்படுகின்றன. முன்னேற்றம் குறைவாகவுள்ள முதலாளித்துவ நாடுகளில்
அடையாள அரசியல் உலக நிதி மூலதனம் ஊடுருவவும், சந்தையை அது கைப்பற்றித் தன் கட்டுப்பாட்டில்
வைத்துக் கொள்ளவும் வசதிசெய்து தருகிறது. அடையாளக் குழுக்களுக்கிடையேயான “வித்தியாசம்’’,
சந்தையின் ஒரே சீரான தன்மையையும் அதன் நடைமுறைகளையும் பாதிப்பதில்லை. அடையாள அரசியல்
வர்க்க ஒற்றுமையை மறுதலிப்பதில் தலையிட்டு, மக்களின் ஒன்றுபட்ட இயக்கங்களைக் கட்டுவதில்
தடையாகச் செயல்படுகிறது. அடையாள அரசியல் சிவில் சமூகம் என்று அழைக்கப்படுகின்ற அரசு
சாரா நிறுவனங்கள் மூலமும், தன்னார்வத் தொண்டு
நிறுவனங்கள் மூலமும் மிகவும் சாதுரியமாக மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய அரசு சாரா நிறுவனங்களும், தன்னார்வத் தொண்டு
நிறுவனங்களும் தனித் தனியே துண்டு துண்டான பிரிவுகளாகச் செயல்பட்டு தனித்தனி அடையாளக்
கருத்துக்களை சுமந்து செல்லும் கருத்தியல் வாகனங்களாக செயல்படுகின்றன.
“சமூக ஒடுக்குமுறைக்கான போராட்டமும், சாதிய ரீதியில்
திரட்டப்படுவதற்கு இருக்கின்ற பிரதிபலிப்பும்: சாதி, பழங்குடி போன்ற முறைகளில்
அரசியல் ரீதியாகத் திரட்டப்படும் அடையாள அரசியல் சமூகத்தின் அனைத்து சுரண்டப்பட்ட மற்றும்
ஒடுக்கப்பட்ட பிரிவினரின் ஒற்றுமையைக் கட்டி எழுப்பிட முயல்வோருக்கு மிகவும் ஆழமான
சவாலாக முன்வந்துள்ளது. தொழிலாளர் வர்க்கத்தின்
கட்சி சமூக ஒடுக்குமுறை மற்றும் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக இயக்கங்களில் ஈடுபடும்
அதேசமயத்தில், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஆகியோருக்கு நிலம், ஊதியம் மற்றும்
வாழ்வாதாரங்களுக்கான பிரச்சனைகளைத் துல்லியமாகக் கையிலெடுத்துப் போராட வேண்டும். வர்க்கப்
பிரச்சனைகளையும், சமூகப் பிரச்சனைகளையும் ஒருசேர எடுத்துக் கொள்வதன் மூலம், பெருங்கேட்டினை
உருவாக்கும் அடையாள அரசியலையும், சாதிய ரீதியிலாக மக்கள் திரட்டப்படுதலையும் வெற்றிகரமான
முறையில் முறியடித்திட முடியும். எப்படி வர்க்கச் சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறை
பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை மார்க்சியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஆராய்ந்தால் இதனை வெற்றிகரமாகச் செய்திட முடியும்.
“மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு, சமூகத்தில் வர்க்க சுரண்டலும், சமூக ஒடுக்குமுறையும்
இருக்கிறது என்பதை அங்கீகரிப்பதன் அடிப்படையில் அமைந்திருக்கிறது. நம் நாட்டின் சமூகப்
பொருளாதார அமைப்பில், முதலாளித்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ வர்க்கச் சுரண்டல்
நடைபெறுவதுடன், சாதி, பழங்குடியினம், பாலினம் அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறையில் பல்வேறு
வடிவங்களும் நடைமுறையில் இருந்து வருகின்றன. ஆளும் வர்க்கங்கள் வர்க்கச் சுரண்டலின்
மூலம் உபரியை உறிஞ்சி எடுத்துக் கொள்வதுடன்,
தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அவர்கள் சமூக ஒடுக்குமுறையின்
பல்வேறு வடிவங்களையும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
“பாலினப் பிரச்சனை: சாதிய அமைப்பின் சமூக ஒடுக்குமுறையுடன்
என்றென்றும் நிலவவரும் நிலப்பிரபுத்துவ சிந்தனை செல்வாக்கும் சேர்ந்து கொண்டு ஆணாதிக்க
சித்தாந்தத்தின் குணக்கேடுகளை வலுவான முறையில் ஊட்டி வளர்க்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகள்
இதனை மேலும் ஊக்குவிக்கிறது. பாலின அடிப்படையிலான
பாகுபாடு நிலப்பிரபுத்துவத்தின் பழமை சிந்தனை மட்டுமல்ல, வர்க்க அடிப்படையிலான சமூகத்தில்
புரையோடியிருக்கிற சமூகக்கேடுமாகும். சமத்துவமற்ற முறையில் வேலைப் பிரிவினையும், குடும்பப்
பொருளாதாரத்தில் பெண்கள் மீதான தாங்க முடியாத சுமைகளும் நவீன தாராளமயக் கொள்கைகளினால்
மேலும் உக்கிரப்படுத்தப்பட்டிருப்பது டன், அரசு
தான் அளித்து வந்த சமூகப் பொறுப்புக்களிலிருந்து கழண்டு கொள்வதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
பாலின சமத்துவமின்மைக்கு எதிராகவும் மற்றும் அதனையொட்டி எழும் அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கு
எதிராகவும் போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தின் கட்சி என்ற
முறையில் வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாக பாலின ஒடுக்குமுறைக்கு
எதிராகவும் மக்கள் மத்தியில் தேவையான அளவிற்கு சமூக உணர்வினை வளர்த்தெடுக்க, தொடர்ந்து செயலாற்றிட வேண்டும்.
“வகுப்புவாதம்: இந்தப் பின்னணியில் பெரும்பான்மை
வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டமும், சிறுபான்மை மத அடிப்படைவாதத்தின் அனைத்து விதமான
வெளிப்பாடுகளும் பார்க்கப்பட வேண்டும். வகுப்புவாத
சக்திகள், (ஆர்எஸ்எஸ் கொள்கையான ஒரு வெறிபிடித்த சகிப்புத் தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து
ராஷ்ட்ரம்’ போன்று) நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்கள் சீர்குலைக்கப்படுவது
மற்றும் பலவீனப்படுத்தப்படுவதல்லாமல், நம் வர்க்க சேர்மானத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு
ஒரு முக்கியமான முன்நிபந்தனையாக விளங்கும்
ஜனநாயக உரிமைகளை செயல்படுத்துவதற்கு வசதி செய்து தரும் அடித்தளங்களையும், வர்க்க
ஒற்றுமையை முன்னெடுத்துச் செல்வதற்கான நிலைமைகளையும் மக்கள் மத்தியில் மதவெறியூட்டி,
அவர்களின் மதவுணர்வுகளை வெறித்தனமாக ஏற்றி, சிதைக்கின்றன. எனவே, வகுப்புவாதத்தை முறியடித்திட
ஓர் உறுதியான போராட்டம் இல்லாமல், நம் நாட்டில் புரட்சியை முன்னெடுத்துச் செல்வது சாத்தியமில்லை.
“தேசியவாதம்: நவீன தேசியவாதம் முதலாளித்துவ
வர்க்கத்தின் வளர்ச்சியுடனும் அது நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக தேசிய உணர்வினைப்
பயன்படுத்துவதுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது.
இருபதாம்
நூற்றாண்டில், தேசியவாதம், காலனியாதிக்க மற்றும் அரைக் காலனியாதிக்க நாடுகளில், காலனிய
மற்றும் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் எழுச்சி பெற்றது. ஏகாதிபத்தியத்தின்
ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கம் இக்காலனியாதிக்க நாடுகளில் ஆளும் வர்க்கங்கள் ஆட்சியைக்
கைப்பற்றிய பின்பு நீர்த்துப்போயின. இன்றைய
ஏகாதிபத்திய உலகமயச் சூழலில், தேசிய இறையாண்மைக்கு எதிராக மிகவும் திட்டமிட்ட முறையில்
தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. ஏகாதிபத்திய நிதி மூலதனம் அனைத்து நாடுகளில் உள்ள
அரசுகளிடமும் தங்களுடைய கட்டளைக்கு தேசிய இறையாண்மை இணங்கிட வேண்டும் என்று கோருகிறது.
“எண்ணற்ற
பிராந்திய மற்றும் இன அடையாளங்களின் அடிப்படையில் மக்கள் அணிதிரட்டப்படுவதன் மூலமாக
புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
தெலுங்கானா, டார்ஜிலிங் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் தனி மாநிலங்களுக்கான
இயக்கங்கள் இன்றைய தினம் உருவாகி இந்திய அரசின் மொழிவாரி மாநிலங்களின் அடித்தளங்களையே
சீர்குலைப்பது மட்டுமல்ல, சுரண்டப்படும் வர்க்கங்களின் ஒற்றுமையையும் சீர்குலைத்துக்
கொண்டிருக்கின்றன.
“சர்வதேச
நிதிமூலதனம், நாடுகளின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பலவீனப்படுத்துவதற்காக,
இன தேசியவாதத்தையும் ((ethnic nationalism), பிரிவினைவாதத்தையும் ஊக்குவிக்கிறது.
மக்களை குறுகிய குழுவாத அடிப்படையில் பிரிப்பதற்கு வகை செய்யும் இத்தகைய பிற்போக்குத்தனமான
இன தேசியவாதம் எதிர்த்து முறியடிக்கப் பட்டாக வேண்டும். மாறாக அம்மக்களின் ஜனநாயக அபிலாசைகளை அவர்கள் வென்றெடுத்திட
முன்னின்று போராட வேண்டும். அவர்களுக்கு எதிரான
ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
அதேசமயத்தில், தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பது மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாதம் ஆகியவை சுரண்டப்படும் வர்க்கங்களை ஒன்று
திரட்டிடவும், ஏகாதிபத்திய உலகமயத்திற்கு எதிரான போராட்டத்தில் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்திடவும்
ஒரு முக்கியமான அம்சமாகும்.
“இந்தியா
போன்ற பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாட்டில், உலகில் வேறெந்த நாடுகளுடனும் ஒப்பிடமுடியாத
அளவிற்கு, சமூக-கலாச்சாரப் பன்முகத்தன்மை கொண்டு நம் நாட்டில், இத்தகைய போக்குகளில்
ஈடுபடுவதற்கான நாட்டம் எண்ணிலடங்காத வகையில் தொடர்கிறது. அவை சுரண்டும் வர்க்கங்களின்
ஒற்றுமையை சீர்குலைப்பதுடன், நம் இறுதி லட்சியத்தை எய்துவதற்காக நாம் நம் போராட்டங்களை
முன்னெடுத்துச் செல்வதையும் பலவீனப்படுத்துகின்றன. வர்க்கப் பிரச்சனைகளின் மீது வெகுஜனப் போராட்டங்களை
வலுவான முறையில் கட்டி எழுப்புவதன் மூலமும் அனைத்து சுரண்டப்பட்ட பிரிவினரின் வர்க்க
ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலமும் மட்டுமே இதனை எதிர்த்து முறியடித்திட முடியும். ஏற்கனவே மொழிவாரி மாநிலங்களாகப் பிரிந்திருக்கக்கூடிய
இந்திய மாநிலங்களை மாற்றி அமைப்பதற்காக நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு எதிராக
இத்தகைய புரிந்துணர்வின் அடிப்படையில்தான் நாம் நம் நடைமுறை உத்திகளை வகுத்திருக்கிறோம்.’’
எனவே,
இன்றைய சூழ்நிலையின் கீழ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட ஐம்பதாம் ஆண்டு தினத்தைக் கொண்டாடக்கூடிய இந்த சமயத்தில், இந்திய புரட்சிக்கான “அகக் காரணிகளை’’ (“subjective factor”) வலுப்படுத்திட, அதாவது, தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர தத்துவார்த்தப்
போராட்டத்தை வலுப்படுத்திட, மார்க்சிய லெனினியத்தைக் கடைப்பிடிக்கும் கட்சியின் தலைமையின்
கீழ் தொழிலாளர் வர்க்கத்தின் தீர்மானகரமான தலையீட்டை ஏற்படுத்திட, வர்க்க சக்திகளின்
தற்போதைய சேர்மானங்களில் மாற்றத்தைக் கொண்டுவந்து, நாட்டு மக்களின் அனைத்து சுரண்டப்படும்
பிரிவினரையும் தொழிலாளர் வர்க்கத்தின் கீழ் ஒன்றுபடுத்திட, மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதற்கான
புரட்சிகரமான தாக்குதலைத் தொடுத்திடவும், அதன் மூலம் சோசலிசத்திற்கான அடித்தளங்களை
அமைத்திட, நம் உறுதியை இரட்டிப்பாக்கிக் கொள்ள
வேண்டும்.
சோசலிசத்தின்
எதிர்காலம் என்ன? என்ற கேள்விக்குப் பதில் இதுதான்:
“சோசலிசம்
மட்டுமே எதிர்காலம்.’’ இல்லையேல், மனித நாகரிக முன்னேற்றம் என்னும் காலக் கடிகாரத்தில்
எதிர்காலம் என்னும் முள் மீளவும் காட்டுமிராண்டித்தனம்
என்னும் இருண்ட காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்.
தமிழில் :
தோழர். ச. வீரமணி
நன்றி : மார்க்சிஸ்ட் - தமிழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக