வியாழன், 15 மே, 2014

இந்திய ஊடகங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை...!

                   அடடடா...  இந்திய ஊடகங்களை என்னவென்று பாராட்டுவது என்றே தெரியவில்லை. என்னா நேர்மை...! என்னா நியாயம்...! வாங்கின காசுக்கு கடைசி வரையில் ஊதுராங்கப்பா...! மோடியே நேர்ல வந்து வேணா... போதும்.... நிப்பாட்டுங்கன்னு சொன்னாக்கூட  நிப்பாட்டமாட்டாங்க போலிருக்கே...! நாடு முழுதும் தேர்தல் முடிந்து கடந்த மூன்று நாட்களாக ஊடகங்கள் போடுகிற கூப்பாடு இருக்கே... தாங்க முடியல... வெட்கமே இல்லாம  மோடிக்கு ஆதரவாக இவர்கள் போடுகிற கூச்சலும், கூப்பாடும் இருக்கே அடேங்கப்பா நம்மால தாங்க முடியலடா சாமி. 
              தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என மோடியிடம் காசை வாங்கிக்கொண்டு தேர்தல் வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஊடகங்கள் மக்கள் மத்தியில் மோடி தான் அடுத்த பிரதமர் என்ற கருத்தை திணிக்க ஆரம்பித்துவிட்டன. என்ன ஒரு வெட்கக்கேடு என்றால், இன்னும் தேர்தல் முடிவே வரவில்லை. ஓட்டுகளையே நாளை தான் எண்ணப்போகிறார்கள். யார் வெற்றி பெறுவார்கள் என்பது பெட்டியை திறந்தால் தான் தெரியும். ஆனால் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பை வைத்துக்கொண்டே நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவி ஏற்க தயாராகி விட்டார். பாரதீய ஜனதாக் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் கூடி ''மந்திராலோசனை'' செய்கிறார்கள். எப்போது பதவி ஏற்பது...? யார் யாரெல்லாம் மத்திய மந்திரிகளாக பதவி ஏற்பார்கள்...? அத்வானிக்கு மந்திரிசபையில் இடம் உண்டா இல்லையா...? நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றப்பின் குஜராத் மாநிலத்தின் முதல்வராக யாரை நியமிப்பது...?  இப்படியெல்லாம் பாஜக தலைவர்கள் மத்தியில் ஆலோசனை நடப்பதாக செய்திகள் வெளியே கசிந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் பங்குச் சந்தையில் பங்குச் சந்தைக் குறியீடுகளை முன்பு இல்லாத அளவிற்கு உயர்த்தி, மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைவதற்கான தங்களது விருப்பத்தையும், ஆர்வத்தையும் இந்திய பெருமுதலாளிகள் ''குறிப்பாக'' காட்டியிருக்கிறார்கள்.
                 இந்த ''கருத்துத்திணிப்பை'' பார்த்து தேர்தல் முடிவுகள்  வருவதற்கு முன்பே ''காங்கிரஸ் கூடாரம்'' காலியாகிக்கொண்டே இருக்கிறது. மன்மோகன் சிங் தனது அரசு வீட்டையும் பிரதமர் சீட்டையும் காலி செய்துவிட்டு  சென்றுவிட்டார். தனக்கு நெருக்கமான அண்டை நாடுகளின் தலைவர்களிடமும், தன்  அலுவலக ஊழியர்களிடமும் ''டாடா'' காண்பித்துவிட்டு பிரிய மனசில்லாமல் பிரியாவிடை பெற்று சென்று விட்டார். இப்படியெல்லாம் ''கருத்துத்திணிப்பு'' செய்கிற பாட்டை பாருங்கள். ஊடகங்கள்  ஒரு புறம் ஒருவரை நன்றாக சந்தோஷப்படுத்துவதும், மறுபுறம் வேறு ஒருவரை  துரத்தி அடிப்பதுமான வேலைகளைத் தான் செய்கின்றன. மக்கள் தான் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஏதோ.... இந்த பாராளுமன்றத்தேர்தலில் நரேந்திர மோடியிடம் ஊடகங்கள் வாங்கின காசுக்கு இறுதிவரையில் ரொம்ப நல்லாத்தான் ஊதுகின்றன...!
             இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஒரு நல்ல யோசனை.... இனிமேல் நாட்டுல பாராளுமன்றத் தேர்தலையே நடத்தவேண்டாம். காசுக்கு கூவுற ஊடகங்களிடம் ''கருத்துக்கணிப்பை'' வாங்கியே பிரதமர் மற்றும் மந்திரிகளையும், எம்.பி-க்களையும் தேர்ந்தெடுத்துக்கலாம். தேர்தல் ஆணையம் எதுக்கு பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து தேர்தலை நடத்தி கஷ்டப்படனும். கருத்துக்கணிப்புத் தேர்தலே சுலபமானது. அதுமட்டுமல்ல,  பண பலம், பெருமுதலாளிகள் பலம் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தான் செலவு. தேர்தல் ஆணையத்திற்கு ஒரு பைசா செலவும் இல்லை.  வேலையும் இல்லை. எல்லாவற்றையும் ஊடகங்களே பார்த்து புதிய ஆட்சியாளர்களை உட்கார வைத்துவிடுவார்கள். அப்புறம் தேர்தல் ஆணையம் என்று ஒன்று எதற்கு...? அதுவும் வேண்டாம். இதைஎல்லாம்  தேர்தல் ஆணையம் யோசித்துப்பார்க்கட்டும். ஜனநாயகமாவது... மக்களாவது... தேர்தலாவது....?           

கருத்துகள் இல்லை: