ஞாயிறு, 18 மே, 2014

காந்தியின் விருப்பப்படி காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள்...!

       
                                                                                                                                                           
           ''இந்திய தேசிய காங்கிரஸ்'' - இந்திய தேசம் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது தேச விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு போராட்டங்களையும், சிறை தண்டனைகளையும், தியாகங்களையும் செய்து இந்திய விடுதலைக்கு பங்காற்றிய தேசபக்த இயக்கங்களில் ஒன்று. ஆனால் இந்தியா சுதந்திரம் பெற்றவுடன், காங்கிரஸ் பேரியக்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவரும், ''தேசத்தந்தை'' என்று காங்கிரஸ் கட்சியினரால் மதிக்கப்பட்டவருமான மகாத்மா காந்தி, ''இந்திய தேசிய காங்கிரஸ் என்ற இயக்கம் நாட்டின் விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்டது. நாட்டின் விடுதலையும் கிடைத்தாகிவிட்டது. இனி இந்த இயக்கம் தேவையில்லை. காங்கிரஸ் இயக்கத்தை கலைத்துவிடுங்கள்'' என்று ஆணை இட்டார். ஆனால் அன்றைய காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அவ்வாறு செய்ய மறுத்தனர்.
           சுதந்திர இந்திய வரலாறும், காங்கிரஸ் கட்சி வரலாறும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது. இந்தியா விடுதலை அடைந்து இதுவரை 67 ஆகின்றன. இந்த 67 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி மட்டுமே சுமார் 55 ஆண்டுகள் இந்த தேசத்தை ஆண்டிருக்கும். இவர்கள் மட்டுமே இந்த தேசத்தை ஆளப்பிறந்தவர்கள் போலவும், இவர்களால மட்டுமே நாட்டில் நிலையான, சிறந்த, நேர்மையான ஆட்சியைக் கொடுக்கமுடியும் என்பது போன்ற எண்ணங்களை மக்களின் மனதில் பதிய வைத்துவிட்டனர் என்பது தான் அதற்கு காரணமாகும். காங்கிரஸ் கட்சி மட்டுமே அதிக ஆண்டுகள் ஆட்சி செய்ததால்,   முதல் பிரதமர் நேரு மற்றும் அவரது குடும்பத்தின் வாரிசுகளின் கட்டுப்பாட்டில் ''இந்திய தேசிய காங்கிரஸ்'' சிக்கிக்கொண்டது. நேருவிற்கு பின் பரம்பரைப் பரம்பரையாக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என இவர்கள் கைக்குள் கட்சியும் நாடும் போனது. இடையில்  நரசிம்மராவ் மட்டும் நேரு பரம்பரை அல்லாதவர். வாரிசு அரசியலும், நேரு வாரிசுகளின் போக்கும் கட்சியில் உள்ளவர்களுக்கே பிடிக்காமல் போக,  கட்சி அவ்வப்போது ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ், காங்கிரஸ்(ஐ), காங்கிரஸ்(எஸ்), மாநிலத்திற்கு ஒரு காங்கிரஸ் என பல்வேறு துண்டுகளாக உடைந்து, பின் பதவி, ஆட்சி, அதிகாரம் என்ற காலத்தின் கட்டாயத்தால் ஒன்றிணைந்து மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆனது.  
                 ஆனால் ராஜீவ் காந்தி மறைவிற்கு பிறகு கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளாக இந்த காங்கிரஸ் கட்சியானது தாராள மய - தனியார் மய - உலக மய சுழலில் சிக்கி கரைந்து போனது. தேசம், தேசபக்தி, மக்கள் நலன் எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டது. கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளில் பிரதமர்களாக இருந்த நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் மட்டுமல்லாது, இவர்களுடன் இவர்களின் மந்திரிகளும் அவர்களை போலவே தேசபக்தி இல்லாதவர்களாகவும், தேசத்தின் மீது அக்கறை இல்லாதவர்களாகவும் தான் இருந்தார்கள்.  நேருவின் காலத்தில் ''பொதுத்துறை நிறுவனங்களே இந்த நாட்டின் கோயில்கள்'' என்று மத்திய அரசால் தொடங்கப்பட்ட  பொதுத்துறைகளை  தனியார்க்கு தாரைவார்ப்பதும், பொதுத்துறையின்  பங்குகளை  விற்பனை செய்வதுமான அழிவு வேலைகளை எந்தவித பயமும் கூச்சமும் இல்லாமல் கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளில் செய்து வந்தனர். இடையில் ஒரு ஆறு ஆண்டுகால பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியில் கூட இதே அழிவுக்கொள்கைகளுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டு ஆதரவளித்தனர். 
                 இந்திய - அந்நிய பெருமுதலாளிகளுக்கு தேசத்தின் வளங்களை கொள்ளையடிக்க அனுமதித்தது, அவர்களுக்கு வரிச் சலுகை மற்றும் மானியம் போன்றவற்றை தாராளமாக அளித்தது, அதன் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருமானத்தை இழக்கச் செய்தது, ஆனால் அதே சமயத்தில் அரசின் வருமானத்திற்காக சாதாரண - எளிய மக்கள் மீது பல்வேறு வரிகளை விதித்தது, எல்லா துறைகளிலும் கொள்ளை மற்றும் ஊழல்களை கண்டுகொள்ளாமல் இருந்தது, ஊழல் செய்தவர்களை தண்டனைகளிலிருந்து காப்பாற்றியது போன்ற தேச விரோதச் செயல்களையும், மக்கள் விரோதச்செயல்களையும் மட்டுமே இந்த கால் நூற்றாண்டு கால காங்கிரஸ் கட்சி செய்து வந்தது என்றால் அதை யாராலும் மறுக்கமுடியாது. இந்த 16வது மக்களவைத் தேர்தல் முடிவே அதற்கு சாட்சி சொல்கிறது. தேர்தல் தோல்வி பயத்தில் பலத் தலைவர்கள் தேர்தலில் நிற்க பயந்து ஓடி ஒளிந்தார்கள என்றால்,  தேர்தல் முடிவிலும் முன்னேபோதும் இல்லாத அளவிற்கு வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது என்றால் இந்திய மக்களின் கோபம் எந்த அளவிற்கு இருந்திருக்கிறது என்பதை  நம்மால் உணரமுடிகிறது. அந்த அளவிற்கு நாட்டு  மக்கள் வதைப்பட்டிருக்கிறார்கள்.
             அதனால் தான் நமக்கு அன்றே காந்தி சொன்ன வார்த்தைகள் நினைவிற்கு வருகின்றது. தேசபக்தி இல்லாத, தேசத்தையே அன்னியர்க்கு விலைபேசி விற்ற, நாட்டையே கொள்ளையடிப்பதற்கு - சுரண்டுவதற்கு அனுமதியளித்த, ஊழல்களை கண்டுகொள்ளாமல் ஊக்குவித்த காங்கிரஸ் கட்சி - இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இனியும் இருந்து பயனென்ன...? இல்லாமல் போகட்டோமே. காந்தியின் ஆணைப்படி காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள். அது தான் நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது.

கருத்துகள் இல்லை: