சனி, 31 மே, 2014

என்றும் என் நினைவில் வாழும் தோழர்.ஆர்.உமாநாத்...!

                      அண்மைக்காலமாக உலகில் குறிப்பாக இந்தியாவில் பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சித்  தலைவர்களின் மறைவது என்பது மனதை வாட்டுகிற இழப்பாக இருக்கிறது. இல்லாமை இல்லாத உலகத்தை உருவாக்க - சமத்துவ சமூக மாற்றத்தை உருவாக்க பல்வேறு போராட்டங்களையும், தியாகங்களையும் செய்து விட்டு அந்த மாற்றங்களை பார்க்காமலேயே வயதின் காரணமாகவும், நோயின் காரணமாகவும் மறைந்து போவதைப் பார்க்கும் போது  உண்மையிலேயே நமது நெஞ்சம் விசும்பி அழுகிறது. எந்தவிதமான சமரசமும் இல்லாமல் - எந்தவிதமான எதிர்ப்பார்ப்புகளும் இல்லாமல் மக்களுக்காக எத்தனைப் போராட்டங்கள், எத்தனை இழப்புகள், எத்தனை தியாகங்கள் - இதையெல்லாம் நம்மால் மறக்கமுடியுமா...?
         அப்படி மறக்கமுடியாத ஒரு உன்னதத் தலைவரின் மரணம் என் மனதை வாட்டியது. என் நெஞ்சம் அமைதியாய் அழுதது.
          சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர்.ஆர்.உமாநாத் அவர்களின் மறைவு என்னை பெரிதும் வாட்டியது. குடும்பத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட வடஇந்திய சுற்றுப்பயணத்தை என்னால்  ரத்து செய்யமுடியாமல் அவர் இறந்த செய்தியை கேட்டுவிட்டு மவுனமாய் அன்று புறப்பட்டு சென்றுவிட்டேன். என் சகத் தோழர்களெல்லாம் மறைந்த தோழருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கு திருச்சி நோக்கிப் புறப்பட்டுவிட்டார்கள். என் மனம் மட்டும் தோழரின் முகத்தைக்கூடப் பார்க்கமுடியாமல் தவித்து இரயிலில் பயணமானது. .
       தோழர்.ஆர்.உமாநாத் அவர்களை தொழிலாளர்களின் தலைவராய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவராய் அவர் இயங்கி வந்ததை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். எங்கள் எல்.ஐ.சி தென்மண்டல ஊழியர் சம்மேளனத்தின் துணைத்தலைவராக இருந்து நாங்கள் நடத்திய போராட்டங்களுக்கு வழி காட்டியவர். அன்றைய காலக்கட்டத்தில் - சுயநலமான தலைவர்களை மட்டுமே நம் கவனத்தில் பட்ட காலத்தில் , எல்.ஐ.சி-க்குள் புதிதாய் நுழைந்த போது  அவரை ஒரு அரிதான தலைவராக - அற்புதமான மனிதராக பார்த்து பிரம்மித்துப் போயிருக்கிறேன். இவரோடு அருகிலிருந்து பேச முடியுமா...? இவரது பக்கத்தில் உட்காரமுடியுமா...? அல்லது நிற்க முடியுமா....? என்றெல்லாம் ஏங்கியிருக்கிறேன். அதற்கு எனக்கு இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தது.
          1998 - 2003 ஆண்டுகளில் நான் திண்டிவனம் எல்.ஐ.சி கிளை அலுவலக்கத்தில் பணியாற்றிய போது, நான் தான் எங்கள் ஊழியர் சங்கத்தின் கிளைத்தலைவர்.  அப்போது  2000-ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒரு நிதியளிப்புக் கூட்டத்தை திண்டிவனத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றுவதற்கு அப்போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக பணியாற்றிய தோழர்.ஆர்.உமாநாத் அவர்களை அழைத்திருந்தார்கள். இதை அறிந்த நாங்கள் கட்சியின் அன்றைய விழுப்புரம் மாவட்டச்  செயலாளர் தோழர்.ஜி.ஆனந்தன் அவர்களையும், மாநிலக்குழு உறுப்பினர் தோழர்.ஆர்.ராமமூர்த்தி அவர்களை அணுகி கட்சியின் கூட்டத்திற்கு திண்டிவனம் வருகைதரும் தோழரை எங்கள் ஊழியர் சங்கத்திலும் முன்னாள் பொறுப்பாளர் என்ற முறையில் சிறிது நேரம் எங்கள் தோழர்களின் மத்தியில் உரையாற்றுவதற்கு தோழர் உமாநாத் அவர்களிடம் அனுமதிபெற்றுத் தரவேண்டும் என்றுக் கேட்டுக்கொண்டோம். அதேப்போல் அனுமதியும் பெற்றுக்கொடுக்க மகிழ்ந்து போனோம்... நெகிழ்ந்து போனோம்.
             எங்கள் அலுவலகத்தின் இரண்டாவது மாடியை நூறு பேர் உட்காரு அளவிற்கு ஒரு அரங்காக மாற்றினோம். மாலை 5 மணிக்கு கூட்டம். 4.30 மணிக்கு எங்கள் கிளை மேலாளர் என்னை அழைக்கிறார். அவர் அரசியல் பற்றி துளியும் அறியாதவர். அதனால் அவரிடம் அலுவலகத்தில் கூட்டம் நடத்துகிறோம் என்று அனுமதி கேட்டபோது தோழர்.உமாநாத் அவர்கள் எங்கள் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர். அந்த அடிப்படையில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கேட்டபோது அனுமதி கொடுத்த எங்கள் கிளை மேலாளர், கிளையில் வேலை செய்த யாரோ சில விஷமிகள் அவரிடம் சொல்லிவிட்டு சென்றதை கேட்டுவிட்டு எங்களை அழைத்து ''வருகிற தோழர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராமே. இப்போது இவரை அனுமதித்தால் நாளை மற்றவர்கள் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை அலுவலகத்திற்குள் அழைத்து வருவார்கள். அதனால் இந்தக் கூட்டத்தை இங்கே அலுவலகத்தில் நடத்தக்கூடாது. எதிரே இருக்கும் கல்யாண மண்டபத்தில் நடத்துங்கள்'' என்று எங்களை  அவசரப்படுத்தினார். இருப்பதோ இன்னும் அரை மணிநேரம் தான். அதனால் இடத்தை மாற்ற முடியாது. நீங்க என்னவேண்டுமானாலும் பண்ணிக்கொள்ளுங்கள் என்று சொல்லி வந்துவிட்டோம்.
           ஆனாலும் இந்த விஷயம் வெளியே தெரியாமல் தோழரின் கூட்டத்தை இனிதாக நடத்தி முடித்தோம். தோழர்.உமாநாத் அவர்கள் 5 மணி கூட்டத்திற்கு சரியாக 5 மணிக்கே வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். கூட்டமோ இரண்டாவது மாடி. அவருக்கு வயதோ 78 இருக்கும். அதனால் அவருக்கு களைப்பு தெரியாமல் இருக்க அவரை சூழ்ந்துகொண்டு கூட்டமாக வாழ்த்து கோஷங்கள் முழங்க அவரை மாடிக்கு நடத்தியே அழைத்துவந்தோம். கூட்டத்தின் தலைமை நான் தான். அவரின் பக்கத்தில் நான். அது கனவா...? இல்லை நிஜமா...? மனதிற்குள் எதோ ஒரு உணர்வு... பிரம்மிப்பு...கூட்டம் முடிந்தவுடன் பி.எஸ்.என்.எல் தோழர்கள் அவரை நேரில் சந்தித்தார்கள். அவர்களிடம் எல்.ஐ.சி தோழர்களிடம் போராடக் கற்றுக்கொள்ளுங்கள். அவர்களின் போராட்டம் தான் எல்.ஐ.சி-யை இந்த அளவிற்கு காப்பாற்றியது என்று அவர் சொன்ன அந்த வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு தந்தை எங்கள்  முதுகை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தியது போல் உணர்ந்தேன்.
          மீண்டும் அவரை சென்னையில் நடைபெற்ற எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொன்விழா மாநாட்டில் கலந்துகொண்ட போது மாநாட்டை வாழ்த்திப் பேசுவதற்காக வருகை புரிந்த போது, அவரை சந்தித்து நலம் விசாரித்த போது  திண்டிவனத்தோழர்கள் எப்படியிருக்கிறார்கள் என்று திருப்பிக்கேட்டபோது ஒரு தாயின் அன்பை உணர்ந்தேன். அன்று அவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்றும் எனது பொக்கிஷங்களுடன் பொக்கிஷமாய்....!
         இன்று தோழர்.ஆர்.உமாநாத் மறைந்தாலும் அவரது நினைவுகள் என்றும் மறையாது.
என்றும் எங்கள் நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருப்பார். 

8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
நினைவலைகள் சுமந்த பதிவு மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Meenu சொன்னது…

திண்டிவனம் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதன் பின் அவரை திருச்சியில் இரு முறை கலந்து கொண்டேன். அவர் கூட்டத்தில் பேசும் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று. வாழ்க தோழர் உமாநாத். !

Meenu சொன்னது…

திண்டிவனம் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதன் பின் அவரை திருச்சியில் இரு முறை கலந்து கொண்டேன். அவர் கூட்டத்தில் பேசும் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று. வாழ்க தோழர் உமாநாத். !

palani சொன்னது…