வியாழன், 15 மே, 2014

எங்கள் தந்தையாரின் 80-வது பிறந்தநாள் விழா...!

         
 
 
 



 


 


           சென்ற மே 8-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று எங்கள் அன்புக்குரிய தந்தையார் திருமிகு.ஆர்.இராதாகிருஷ்ணன் அவர்களின் 80-வது பிறந்தநாளை எங்கள் பெற்றோர்கள் மகிழும்படியாகவும், அனைவரின் நினைவில் நிற்கும் படியாகவும் மிகவும் சிறப்பான விழாவாக குடும்ப உறவுகளோடும், நண்பர்களோடும், தோழர்களோடும் கொண்டாடினோம்.
            எங்கள் தந்தையாரின் பிறந்தநாளை இப்படித்தான் கொண்டாடவேண்டும் என்று ஓராண்டிற்கு முன்னரே நான் என் மனதில் முடிவு செய்து வைத்திருந்தேன். அதை அப்படியே சிறப்பாக நடைமுறைப்படுத்தினேன். எங்கள் பெற்றோர்கள் மீதான எங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்கு இதை விட ஒரு பெரிய வாய்ப்பு வேறு கிடைக்காது. எங்களை கருவாக்கி, உருவாக்கி, ஆளாக்கி, சமூகத்தில் மதிக்கத்தக்க மனிதர்களாக நடமாடச் செய்த எங்கள் பெற்றோர்களுக்கு நாங்கள் காட்டும் நன்றி தான் இது. 
            அதுமட்டுமல்லாமல், இந்த அரிய பிறந்தநாள் விழாவை வெறும் விழாவாகக் கொண்டாடாமல், எதிர்காலத்தில் வசதியற்ற எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவம் ஆகிய உதவி செய்கின்ற அறக்கட்டளை ஒன்றை அப்பா - அம்மா பெயரில் ''மானுடம்'' - VASANTHA & RADHAKRISHNAN FOUNDATION -ஐ தொடங்கிவைத்தோம். தொடங்கியதும் முதல் மானுட சேவையாக புதுச்சேரி அரசால் நடத்தப்படும் ''ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கினோம்.
                மாலையில் அப்பா-அம்மா இருவருக்கும் மாலைகளையும் பொன்னாடைகளையும் அணிவித்து, பூங்கொத்துகளையும் கொடுத்து மரியாதை செய்தோம். உறவுகளையும், நண்பர்களையும், தோழர்களையும் அழைத்திருந்தோம். அழைத்த அனைவரும் வந்திருந்தார்கள். சிறப்பு அழைப்பாளராக தீக்கதிர் - நாளிதழின்  பொறுப்பாசிரியர் தோழர்.அ.குமரேசன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்திப்பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் தோழர்.வி.பெருமாள், மூத்தத் தோழர் தா.முருகன் உட்பட கட்சித் தோழர்களும், தோழர்கள் இராச.செயராமன், எஸ்.ராம்கோபால், மற்றும் டி.ஆனந்த் உள்ளிட்ட தொழிற்சங்கத் தோழர்களும், அலுவலக நண்பர்களும், முகவத்  தோழர்களும் மற்றும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தது நெஞ்சிலிருந்து நீங்காத நிகழ்வுகளாகும்.
           நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள்பயன்படுத்தக்கூடிய சக்கரநாற்காலி ஒன்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைத்தோம். தீக்கதிர் நாளிதழுக்கு வளர்ச்சி நிதியாக ரூ.5000/- ஐ தோழர்.அ.குமரேசன் அவர்களிடம் அளித்தோம். என்னுடைய ''முதல் ஆசிரியர்'' திருமிகு. வீ.மதுரகவி அவர்களையும் விழாவிற்கு அழைத்திருந்தேன். அவரும்  வந்திருந்து விழாவை சிறப்பித்தார். அவருக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தேன். வந்திருந்த அனைவருக்கும் அப்பா-அம்மா இருவருக்கும் பொன்னாடைகளை போர்த்தியும், பரிசுப் பொருட்கள் கொடுத்தும் மரியாதை செலுத்தினார்கள்.
              விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் இரவு உணவு அளித்து, பாரதி புத்தகாலய பதிப்பான ''மே தின வரலாறு'' என்ற புத்தகத்தை பரிசாக அளித்தோம். எங்கள் பெற்றோர்களுக்கு மரியாதை செய்ய எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது எண்ணி எண்ணி  இப்போதும் மகிழ்ந்து போகிறேன்.

1 கருத்து:

கவியாழி சொன்னது…

தங்களின் சமுகப் பணி சிறக்க வாழ்த்துக்கள்