புதன், 29 ஜனவரி, 2014

தந்தை பெரியார் மீது எச். இராஜாவுக்கு ஏனிந்த எரிச்சல்...?

             
          கடந்த காலங்களில் பல்வேறு சமயங்களில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அநேகமாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும்,  குறிப்பாக வட மாநிலங்கள் பலவற்றிலும், மக்கள் ஒற்றுமை, தேச ஒருமைப்பாடு குலைக்கப்பட்டு,  மனித உயிர்களை பலிகொடுத்து மதவெறிக் கூட்டத்தினரால் நடத்தப்பட்ட மதக்கலவரங்களை இந்த நாட்டு மக்கள் நன்கறிவார்கள். மறந்திருக்கவும் மாட்டார்கள். மக்களிடையே மதவெறியை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் பெறுவதற்கு மதக்கலவரங்களை கொழுந்துவிட்டு எரியச் செய்பவர்கள் பாரதீய ஜனதாக் கட்சியும், அதன் அங்கங்களாக துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் மதவெறி அமைப்புகளும் தான் அந்த மதவெறிக் கூட்டத்தினர் என்பதையும் இந்திய மக்கள் நன்றாக அறிவார்கள்.
            நாடே மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு இரையாகி ஒற்றுமைக் குலைந்து எரிந்துகொண்டிருந்தாலும், மதவெறி சக்திகளுக்கு செவி சாய்க்காமலும், மதக்கலவரங்களுக்கு இடமளிக்காமலும் இன்றுவரை அமைதியான மாநிலமாக பெருமைப்பெற்று திகழ்ந்து வருவது நிச்சயமாக தமிழகமாகத் தான் இருக்கமுடியும்.
               அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த, ஒழுக்கம் மிகுந்த, அமைதி தழைத்த மாநிலமாக தமிழகம் இன்று வரை திகழ்கிறது என்றால் அதற்கு முழு முதற்காரணமாக திகழ்பவர் தந்தை பெரியாரே என்பதை யாராலும் மறுக்க முடியாது. பெரியார் பகுத்தறிவையும், ஒழுக்கத்தையும், மானத்தையும் ஊட்டி, கைப்பிடித்து, வழிகாட்டி  வளர்த்த குழந்தை தான் நமது தமிழகம். அதனால் தான் பெரியார் தமிழகத்தின் தந்தையாக இன்றுவரை போற்றப்படுகிறார். அப்படி வளர்ந்ததால் மதவெறி சக்திகளால் தூண்டப்படும் மதக்கலவரங்களை தமிழகம் இன்றுவரை கண்டதில்லை.
               மதவெறியை தூண்டி மதக்கலவரங்களை அரங்கேற்றி, அரசியல் ஆதாயம் தேடும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு தமிழகம் ஒரு ஏமாற்றமே. மதக்கலவரங்களை தூண்டி மதவெறி அரசியல் மூலம் தமிழகத்தில் காலூன்ற பாரதீய ஜனதா கட்சிக்கு முடியாமல் போனதால் தான் தந்தை பெரியாரின் மீது எச். இராஜாக்கு   இவ்வளவு எரிச்சல் என்பதனையும், பெரியார் காட்டிய வழியில் தமிழகம் பயணம் செய்வதால் ஏற்பட்ட ஏமாற்றத்தால் தான் எச்.இராஜா பெரியாரின் மீது விஷத்தை கக்கியிருக்கிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
தந்தை பெரியார் கைப்பிடித்து வளர்ந்த உயர் தமிழ்நாடு...!

கருத்துகள் இல்லை: