தமிழகத்தில் நெடுந்தூரம் - நெடுந்நேரம் பயணம் செய்யும் பேருந்துகள் காலை, மதியம், மாலை மற்றும் இரவு என்று பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளும், பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களும் பசியாற்றிக்கொள்ள வழியில் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியில் தந்தனியாக இருக்கும் ''குறிப்பிட்ட'' உணவகத்தில் மட்டுமே நிறுத்தப்படுகிறது. வேறு வழியே இல்லை அந்த உணவகத்தில் தான் கண்டிப்பாக சாப்பிடவேண்டிய கட்டாயம். அங்கு அப்போதைக்கு என்ன கிடைக்கிறதோ அதைத்தான் சாப்பிடவேண்டிய கட்டாயம். இதிலே என்னென்னா நல்ல உணவகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையும், எதை சாப்பிட வேண்டும் என்ற உரிமையும் நமக்கு கிடையாது. ஏனென்றால் அந்த குறிப்பிட்ட உணவகத்தில் மட்டும் தான் பேருந்துகளை கட்டாயம் நிறுத்தவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். ''வேறு நல்ல ஓட்டலில் நிறுத்தப்படாதா...?'' என்று பயணிகள் ஓட்டுனரையோ அல்லது நடத்துனரையொ கேட்டுவிட்டால், பாவம் அவர்களோ ஒப்பாரி வைக்காத குறையா புலம்பித் தள்ளிடுவாங்க. ஏன்னா... தாங்கள் கொண்டுவரும் பேருந்தை அந்த குறிப்பிட்ட உணவகத்தில் தான் கண்டிப்பாக நிறுத்தவெண்டுமாம். சாப்பிட்டு முடித்து வண்டியில் ஏறுமுன், அவர்களது ''ட்ரிப் ஷீட்டில்'' அந்த உணவகத்தின் முத்திரையை பதித்து, அதில் அந்த உணவகத்தின் உரிமையாளர் கையொப்பமிட்டு தரவேண்டுமாம். அப்படி முத்திரையையும், கையெழுத்தையும் வாங்க மறந்துவிட்டாளோ அல்லது அந்த பேருந்து உணவகத்தில் நில்லாமல் சென்று விட்டாலோ அந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு அவர்கள் சம்பளத்தில் ஒரு இன்க்ரிமெண்ட் கட் செய்யப்படுமாம். இப்படிப்பட்ட கெடுபிடி ஏன் என்றால் அந்த அளவிற்கு அந்த உணவக உரிமையாளர்களுக்கும், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கும் ''புரிந்துணர்வு ஒப்பந்தம்'' ஏற்பட்டு, உரிமையாளர்களும் ''மாவு அரைத்தாயா...? தோசை சுட்டாயா...? பாத்திரம் கழுவினாயா...?'' என்றெல்லாம் அதிகாரிகளை கேள்விக்கேட்காமல், காலம் தவறாமல் அவர்களுக்கு ''கப்பம்'' கட்டுகிறார்கள் என்பது தான் வெட்கக்கேடான விஷயமாகும்.
அந்த உணவகத்தின் உள்ளேயும், வெளியேயும் பார்த்தால் நம்மால் சகித்துக்கொள்ளவே முடியாது. உணவகத்தை சுற்றி சிறுநீர் கழித்து சுகாதார சீர்கேடுகளாக இருக்கும். ஈ மற்றும் கொசுக்களுக்கு பஞ்சமிருக்காது. அங்கு விற்கப்படும் உணவு பண்டங்கள் அனைத்தும், டீ மற்றும் காபியும் தரமானதாக இருக்காது. அங்கு கொடுக்கப்படும் குடிநீர் சுத்தமாக இருக்காது. அங்கு சாப்பிடுவதால் வயிறு கெட்டுவிடும்.உடல்நலத்திற்கு கேடு தான். இது ஒரு பக்கமிருந்தாலும், இன்னொரு பக்கம் அந்த உணவகங்களில் விற்கப்படும் பண்டங்களின் விலையோ இன்னும் பயங்கரம். சுகாதாரமற்ற பண்டங்கள் என்பதாலும், கூடுதல் விலை கொடுக்கவேண்டியிருக்கிறது என்பதாலும் பேருந்துகளில் வருகின்ற பெரும்பாலான பயணிகள் இந்த உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள் என்பது தான் உண்மை. ''ஒப்பந்தப்படி'' அந்த உணவகங்களில் பேருந்தை நிறுத்தியாக வேண்டும், அங்கே தான் சாப்பிட்டாகவேண்டும் என்ற கட்டாயத்தினால், பாவம் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் இதிலிருந்து தப்பிக்கமுடிவதில்லை. இதிலிருந்து பயணிகளுக்கும், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கும் விமோசனம் கிடைக்குமா என்று ஏங்கித் தவிக்கிறார்கள்.
தமிழக முதலமைச்சர் தான் இந்த விஷயத்திலும் கவனம் செலுத்தவேண்டும். சென்னை உட்பட பெரும்பாலான மாநகராட்சிகளிலும், அரசு மருத்துவமனைகளிலும், புதுடெல்லியில் இருக்கக்கூடிய தமிழ்நாடு இல்லத்திலும் முதலமைச்சரின் தனிப்பட்ட சிறப்புத் திட்டமாக, சுகாதார முறையிலும், மிகக் குறைந்த விலையிலும் கிடைக்கக்கூடிய வகையில் ''அம்மா உணவகம்'' அனைவராலும் பாராட்டும் விதமாக இயங்குவது போல், அனைத்துப் பேருந்து வழித்தடங்களிலும் கழிப்பறை வசதியுடன் கூடிய ''அம்மா உணவகத்தை'' அமைத்து இயங்கச்செய்தால் நன்றாக இருக்கும். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைக்காமல், ஆங்காங்கே இருக்கும் ''டோல் கேட்'' அருகில் அமைத்தால் பாதுகாப்பாக இருக்கும்.
நெடுந்தூரம் பயணம் செய்யும் பயணிகள், ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் நலன் கருதி, தமிழக முதலமைச்சரும், தமிழக அரசும் இந்த வேண்டுகோளை ஏற்று நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்.
1 கருத்து:
//ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைக்காமல், ஆங்காங்கே இருக்கும் ''டோல் கேட்'' அருகில் அமைத்தால் பாதுகாப்பாக இருக்கும். //
அருமையான ஆலோசனை ஆனால் இதனால் பயணிகள் மாத்திரமே பயனடைவார்கள், என்பதால் நடைமுறைப்படுத்த விடுவார்கள் போல் தெரியவில்லை.
2 தடவை தமிழகம் வந்த போதும் மலசலகூடமின்றிக் குறிப்பாகப் பெண்கள் மிகச் சிரமப்பட்டனர்.
கருத்துரையிடுக