வியாழன், 16 ஜனவரி, 2014

இன்று மாட்டுப்பொங்கல் - ஆனால் மாடுகளை காணமுடியவில்லை....!

            
           ஆண்டாண்டு காலமாக தை முதல் இரண்டு நாட்களை தமிழகத்தில் ''அருவடைத்திருநாளாக'' கொண்டாடி வருகிறோம். முதல் நாள் பூமியில் வாழும் உயிர்களுக்கெல்லாம் உணவளிக்கும் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் நாள் உழவர் திருநாளாகவும்,  இரண்டாம் நாள் அந்த உழவுக்கு உழவர்களின் பக்கத்திலிருந்தே உதவி செய்யும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நாள் மாட்டுப் பொங்கலாகவும் கொண்டாடிவருகிறோம். இது மூடப்பழக்கம் இல்லாமல் பொருள் பொதிந்த திருவிழா.
               ஆனால் இன்றோ இந்த விழாவிற்கு பொருளில்லாமல் போய்  கொண்டிருக்கிறது. அதுவும் நகர்ப்புறங்களில் பொங்கல் விழா என்பது மகிழ்ச்சியை விட வேதனையாகத் தான் செல்கிறது.
            உழவர் திருநாளில் விவசாய நிலங்களை தேடவேண்டியிருக்கிறது. ஏர் பிடித்துச் செல்லும் உழவர்களை காண முடியவில்லை. உலகமயம் - தாராளமயம் என்கிற சூறைக்காற்று நம் கண் முன்னாலேயே விவசாயத்தை அழிதொழித்துவிட்டது. மக்களாகிய நாமும் உலகமய மாயையில் மாட்டிக்கொண்டு சிற்றின்பத்தில் உழன்றுகொண்டு, நம்  முன்னாலேயே நம் விவசாயம் அழிவதையும், விவசாயிகள் அழிவதையும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டோம். இப்படித்தான் கடந்த 1991 - ஆம் ஆண்டில் இந்தியாவிற்குள் நுழைந்த ஏகாதிபத்தியத்தின் செல்லக்குழந்தைகள் உலகமயமும் தாராளமயமும்  கொஞ்சம் கொஞ்சமாக விவசாயத்தையும், விவசாயிகளையும் விழுங்கி, இன்று நம் நாட்டில் விவசாயத்தையும், விவசாயிகளையும் இல்லாமல் செய்துவிட்டது. ஆனால்  இன்றைக்கு உழவர்களே இல்லாமல் உழவர் திருநாள் கொண்டாடுகிறோம்.
              அதேப்போல் விவசாயத்திற்கு பயன்பட்ட மாடுகளையும் நாம் கடந்த நூற்றாண்டுகளிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம் என்பதே உண்மை. இந்திய விவசாயத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாய் இருந்தவைகள் ஒன்று மாடுகள். இன்னொன்று மண்புழுக்கள். இவை இரண்டையும் அழித்தொழிக்கும் வேலைகளை நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அன்றைய நாளில் தொடங்கிவைத்தது. இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகமயம் - தாராளமயம் என்ற பெயரில் மாடுகளையும், மண் புழுக்களையும் சுத்தமாக இல்லாமல் செய்துவிட்டது.   அதனால் தான் ஏகாதிபத்தியத்தினால் நம் நாட்டு விவசாயத்தை இன்றைக்கு மிக சுலபமாக ஒழிக்க முடிந்தது.
               இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம். ஆனால் கொம்பில் வண்ணங்கள் பூசப்பட்ட மாடுகளை காணமுடியவில்லை. சிறுவர்களை ஏற்றிக்கொண்டு சாலைகளில் உற்சாகமாய் ஓடும் மாட்டு வண்டிகளை காணமுடியவில்லை. மாடுகளின் கழுத்திலும் கால்களிலும் மாட்டப்பட்டிருக்கும் சலங்கை ஒலியை கேட்கமுடியவில்லை. நாம் தினம் குடிக்க பசும்பால் நமக்கு கிடைக்கவில்லை. நாம் தினமும் குடிப்பது பசும்பால் இல்லை. இரசாயன கலவைகளால் ஆன செயற்கை பால் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். மாடுகளே இல்லை எங்கே பால் கிடைக்கும். ''பால் பொங்குச்சா...?'' என்று எப்படி கேட்பீர்கள். அனால் எதிர்காலத்தில் அபரிதமான பாலை உற்பத்தி செய்யும் டென்மார்க் நாட்டிலிருந்து பாலை இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது. இது தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி.
              இப்படி தான் இனி வரும் காலங்களிலும் மாட்டுப்பொங்கல் என்பது மாடுகளே இல்லாமல் கொண்டாடப்படும். நினைக்கவே வேதனையாய் இருக்கிறது.
              ஏகாதிபத்தியத்திற்கு இந்தியாவை அழிக்க அணுகுண்டுகள்  தேவை இல்லை. உலகமயமும், தாராளமயமும் மட்டுமே போதும், இந்த தேசத்தையும், மக்களையும் அணுஅணுவாக  அழித்துவிடுவார்கள். அணுகுண்டுகளை விட உலகமயமும், தாராளமயமும் மிக மோசமானது. அபாயகரமானது.          

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

வருந்தத்தக்க விடயம் இது மாடு இல்லை ஆனால் மாட்டு பொங்கல் கொண்டாடுகின்றோம் விவசாயம் இல்லை பொங்கல் வைக்கிறோம் மழை இல்லை அனால் மழைக்கு வந்தனம் கூறுகின்றோம் இந்தியாவின் ஊழல் பிரச்சினைக்கு அடுத்து நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் இயற்கை வளங்களின் சீரழிவு தான் என்பதை என் நாம் உணர்வதில்லை