செவ்வாய், 7 ஜனவரி, 2014

மோடியின் தோல்வி துவங்கிவிட்டது - அது தடுக்கமுடியாதது...!

 கட்டுரையாளர் : சு .பொ. அகத்தியலிங்கம், பத்திரிக்கையாளர்  
          ஐயையோ ..ஐயையோ ..காங்கிரசோ பாஜகவோ ஆட்சியைப் பிடிக்க முடியாது போய்விடுமோ... அது தங்களுக்கு பேராபத்து ஆச்சே...! என பெருமுதலாளிகள் சங்கம் அலறி இருக்கிறது .
         அவர்கள் காதில் அது தேளாகக் கொட்டினாலும்  நம் காதில் தேனாகப் பாய்கிறது. மோடியை கார்ப்பரேட் எனப்படும் பெருமுதலாளிகளும் அவர்களின் ஊதுகுழல் ஊடகங்களும் விழுந்து விழுந்து ஆதரிப்பதன் ரகசியம் என்ன? காங்கிரஸ் , பாஜக அல்லாத மாநிலக்கட்சிகள் இடதுசாரிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்குமானால் இன்றைக்கு தறிகெட்டோடும் தாராளமயத்திற்கு ஒரு சிறிய தடையை உருவாக்க முடியும். இடதுசாரிகள்  இதனைத்தான் திரும்பத் திரும்ப சொல்லி வந்துள்ளனர்.
             இத்தகைய '' மாற்றை'' பெருமுதலாளிகள் விரும்பவில்லை. தங்களுக்கு சேவை செய்ய ஒரு ''முரட்டு அடிமையாக'' மோடி கிடைப்பார் என்கிற பகல் கனவோடு காய்களை நகர்த்தின. விளம்பரத்திற்கென்று  கோடிகோடியாய் அள்ளிக்கொட்டின. டில்லி தேர்தல் முடிவும் தேசத்தின் போக்கும் எதிர்திசையில் நகர்வது கண்டு அவர்கள் கலங்கி போய்  இருக்கிறார்கள். ''அசோசம் (ASSOCHAM)''  எனப்படுகிற பெருமுதலாளிகள் அமைப்பு ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியதாம். அதில் யாருக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிந்து விட்டதாம் .
              ஒரு வலுவான நிலையான ஆட்சி அமையாதாம் . பாப்புலிசம் வெகுமக்கள் நல மற்றும் இடதுசாரி அரசியல் மைய அரசியலில் இடம் பெறுமாம் என ஆய்வின் முடிவு குறித்து பெருமுதலாளிகள் கலங்கிப்போய்  உள்ளனர் . அது மட்டுமல்ல இன்றைக்கு தேவைப்படும் வளர்ச்சி அதாவது முதலாளித்துவ வளர்ச்சி திசை திரும்பிவிடும் எனக் கூப்பாடு போடுகின்றனர். (ஆதாரம் தி இந்து ஆங்கில நாளேடு 6-1-14 பக்கம் 10)
           சமூக நலத்திட்டங்களில் பெரும் முதலீடு அதிகரித்துவிடுமே என அச்சம் தெரிவிக்கின்றனர். ஆம் மூன்று லட்சம் கோடி முதலாளிகளுக்கு மானியமாகவும் வரிச்சலுகையாகவும் மன்மோகன் கொடுத்தது போதாது. மேலும் அள்ளிதருவார் மோடி. அதுதான் குஜராத் மாடல். ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள  நானோ காரொன்றுக்கு சராசரி எழுபதாயிரம் ரூபாய். ஆம், விலையில் எழுபது விழுக்காடு மானியமாகவும் பல்வேறு சலுகைகளாகவும் அள்ளிக் கொடுத்தவர் மோடி. கனிம வளங்களையும் நிலத்தையும் மக்கள் ரத்தத்தையும் வியர்வையையும் முதாலாளிகள் உறிஞ்சிக் கொழுக்க குஜராத் களமாக்கப்பட்டது .
             அதே வளர்ச்சிப் போக்கில் தேசத்தை மோடி தயவில் சூறையாடலாம் என்கிற முதலாளிகளின்  பேராசை தகர்கிறது . சில ஆயிரம் கோடி மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கு செலவு செய்ய நேர்ந்தால் அது பெரும் விரயமாம் கண்ணீர் விடுகிறது அசோசம். தில்லியில் ஆம் ஆத்மி மின் கட்டணத்தை குறைத்ததும் , தண்ணீரை இலவசமாக வழங்குவதும் முதலாளிகளுக்கு குளிர் ஜூரத்தை ஏற்படுத்திவிட்டது.
             இலவசங்கள் என கேலி பேசினாலும் மக்களைக் கவர சில நலத்திட்டங்களை அறிவிப்பதும் அமல்படுத்துவதும் மாநில கட்சிகளின் அரசியல் கட்டாயம் என்பதை அனுபவம் சுட்டுகிறது . இடதுசாரிகள் ஆதரவோடு மத்தியில் ஆட்சி அமையும் போதெல்லாம் பொதுத்துறையை இஷ்டம் போல் முதலாளிகளால் பிய்த்து சாப்பிட முடிவதில்லை. பன்னாட்டு உள்நாட்டு திமிங்கலங்களின் இராட்சச பசிக்கு உழைக்கும் மக்களை தீனியாக்க முடிவதில்லை . இந்நிலையில் மோடியை எதிர்காலப் பிரதமராக முன்னிறுத்தி தங்கள் சுரண்டல் கோட்டையைப் பாதுகாக்க வகுத்த முதலாளிகளின் வியூகம் தகர்வது கண்டு அசோசம் பெருமுதலாளிகள் கலக்கம் அடைந்துள்ளனர் .
          அது ஆய்வு முடிவில் வெளிப்பட்டு விட்டது. கல்வியை, வேலையை, மருத்துவத்தை, குடிதண்ணீரை, மின்சாரத்தை, சமூகப் பாதுகாப்பை தருவதே இனிவரும் அரசுகளின் கட்டாயக் கடமையாகும். விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதே அரசுகளின் பணியாகும். அப்படியானால் முதலாளிகளின் லாபவெறிக்கு கடிவாளம் போடும் அரசையே மக்கள் விரும்புகிறார்கள்.  மோடியையோ ராகுலையோ அல்ல. காங்கிரஸின் தோல்வி எழுதப்பட்டுவிட்ட தீர்ப்பு . மோடியின் தோல்வியும் துவங்கிவிட்டது - அது தடுக்கமுடியாதது.
         ராம்தேவ் போன்ற மோசடிப் பேர்வழிகளைச் சந்தித்து அவர்களின் ரகசிய கோரிக்கைகளை எல்லாம் ஏற்று அடிபணிந்து மோடி முக்கி முனகத் தொடங்கிவிட்டார். ''மாற்றுக்கொள்கை'' எதுவென மக்கள் யோசிக்கத் துவங்கிவிட்டனர். அசோசமின் அலறல் சொல்லும் நற்செய்தி இதுவே.....!!!
நன்றி:

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

மோடியின்
தோல்வி துவங்கிவிட்டது என்றால்? இவ்வளவு நாள் வெற்றி பெற்றிருந்தார் என்பதை தாமதமாகவாவது ஒப்பு கொண்டதற்கு மகிழ்ச்சி.