பொங்கல் வெளியீடாக வந்த இரண்டு பெரிய நடிகர்களின் திரைப்படங்களை நாங்கள் குடும்பத்துடன் பார்த்தோம். அவை இரண்டில் என் மனதை கவர்ந்த - என் மனதைத் தொட்ட திரைப்படம் அஜித் நடித்த ''வீரம்''
இந்த திரைப்படத்தில் வழக்கமான கதை, வீச்சரிவாள், அடிதடி இப்படி எல்லாம் இருந்தாலும், கிராமிய சூழல், நிலம், டிராக்டர், கிராமிய பாட்டு, கலை, தப்பாட்டம், மாட்டு வண்டி, குத்து டான்ஸ் போன்ற மனதை வருடும் காட்சிகள் ஆங்காங்கே தெளிக்கப்பட்டிருப்பது பாராட்டுதற்குரியது.
அதுமட்டுமல்ல, திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில், உழைக்கும் மக்களின் உரிமைக்குரலையும் உரக்க ஒலிக்கச்செய்திருக்கும் படக்குழுவினர்களை கட்டாயம் பாராட்டவேண்டும்.
ஒரு இடத்தில் கதாநாயகன் அஜித் வில்லனிடம் பேசும் போது,''இனி விதைச்சவன் தான் விலைய சொல்லுவான்'' என்று உரக்க அழுத்திச் சொல்வதன் மூலம் உழைப்பாளி மக்களின் உரிமைக்காக போராடும் செங்கொடி இயக்கத்தின் முழக்கத்தை எதிரொலிக்கும் போதும், இன்னொரு இடத்தில் '' நீ என்ன ஜாதி'' என்று வில்லன் கேட்க ''நான் உழைக்கிற ஜாதி'' என்று சொல்லுமிடத்திலும் கதாநாயகன் அஜித் உயர்ந்து நிற்கிறார்.
இன்னொரு காட்சியில், தன்னிடம் வேலை செய்யும் பையனின் திருமணத்திற்கு செல்லும் அஜித், தன்னுடைய கடை ஒன்றை திருமண பரிசாக அந்த பையனிடம் கொடுப்பார். அப்போது அந்த பையன் உருகி அழுவான். அப்போது அஜித் அந்த பையனை கட்டித்தழுவிக்கொள்வார். அப்போது அருகிலிருந்த தன் தம்பிகளிடம், ''நம்ப கூட இருக்கிறவன நாம்ப பார்த்துகிட்டா... நமக்கு மேல இருக்கிறவன் நம்பல பார்த்துப்பான்'' என்று அஜித் சொல்லுவது, தன்னுடைய வேலை ஆட்களை சுரண்டி ஏய்க்கும் இன்றைய சமூகத்திற்கு ஒரு சரியான அடி.
அதேப்போல், கதாநாயகியின் அப்பாவாக நடிக்கும் நாசர், அவரது கிராமத்தின் மதிப்புமிக்க பெரிய மனிதராக வரும் அவருடைய பெயர் ''நல்லசிவன்'' - அந்த பெயர் தமிழகத்தில் செங்கொடி இயக்கத்தை வழிநடத்திய உழைப்பாளி மக்களின் உரிமைப்போராளி தோழர்.நல்லசிவன் அவர்களை நினைவுப்படுத்துகிறது.
இப்படியாக ''வீரம்'' திரைப்படம் மனதைத் தொடுகிறது. அதற்காக வீரம் திரைப்படக் கதாநாயகன் அஜித்குமார் மற்றும் இயக்குனர் சிவா இருவருக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.
இரண்டு டூயட் பாடல் காட்சிகள் மட்டும் கிராமிய அழகை விட்டுவிட்டு வெளிநாட்டில் காட்சி ஆக்கியிருப்பது படத்தோடும், கதையோடும், நம் எண்ணத்தோடும் ஒட்டவில்லை. இது ஒன்று தான் குறையாக தெரிகிறது.
1 கருத்து:
வணக்கம் சகோதரர்
வீரம் படம் பற்றிய சிறப்பான விமர்சனம். நன்கு ரசித்து இருக்கிறீர்கள் வாழ்த்துகள்..
-----
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
கருத்துரையிடுக