ஹரிஷ் தாமோதரன்
குஜராத் முதல்வர் மோடியை பிரதமர் வேட்பாளர் என முன்னிறுத்துவது
நாட்டிற்கும் நல்லதல்ல, பி.ஜே.பிக்கும் நல்லதல்ல. அதே போன்று பாபர் மசூதி
இடிக்கப்பட்ட 1992 டிசம்பர் 6-ம் நாள் தான், தனது வாழ்க்கையிலேயே சோகமான
நாள் என அத்வானி கூறியதையும் நான் என்றும் நம்பியதில்லை. அத்வானி ஒரு
‘ஹிந்துத்வா மிதவாதி என்று சொல்வதையும் நான் ஏற்பதில்லை. அது என்ன
‘ஹிந்துத்வா மிதவாதி? ‘நல்ல தாலிபான்கள்’ என்று சொல்லி அமெரிக்கர்கள்
தங்கள் தேவைக்காக தாலிபான்களின் ஒரு பகுதியினரைப் பயன்படுத்தி வருகிறார்களே அது போன்றது தான் இந்த மிதவாதி வர்ணனையும். ‘ஹிந்துத்வா என்பது மக்களை
பிளவுபடுத்தும் சித்தாந்தம். மகாத்மா காந்தி, பண்டித நேரு, பாபா சாகேப்
அம்பேத்கர் போன்ற தலைவர்கள் பிரதிபலித்த உயர்ந்த கருத்தோட்டங்களுக்கு
எவ்வகையிலும் பொருந்தாத சித்தாந்தம் அது. அத்வானியிடம் நாம் ஒரு
விஷயத்தினை மட்டும் சந்தேகிக்க முடியாது. அது கட்சியின் மீது அவருக்கு
இருக்கும் விசுவாசம். குப்பையாய்க் கிடந்ததை பெரும் அமைப்பாக மாற்றியவர்.
இதுதான் அவரை 2014 மக்களவைத் தேர்தல்களில் மோடியை பிரதமர் வேட்பாளராக
முன்னிறுத்துவதை எதிர்க்க வைத்தது. 86 வயதில் அவர் பிரதமராக ஆசைப்படுவதாக
கூட எடுத்துக் கொள்ள முடியாது. குஜராத்திற்கு வெளியேயுள்ள இந்திய
வாக்காளர்களின் நாடித் துடிப்பை அறிந்தவர் என்பதால் தான் அவர் மோடியை
எதிர்க்கிறார்.
சரிந்த காவி !:
1999ல் மக்களவைத் தேர்தல்களில் 182
இடங்களைப் பெற்ற பி.ஜே.பி 2004ல் 138, அதைத் தொடர்ந்து 2009ல் 116 எனத்
தேய்ந்து கொண்டே வந்திருக்கிறது. இடங்கள் மட்டுமல்லாது, இதே காலத்தில்
தேசிய அளவில் அதனுடைய வாக்கு விகிதங்களும் 23.75 சதவீதத்திலிருந்து 18.88
சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இந்த செல்வாக்குச் சரிவிற்கு யாராவது ஒரு
குறிப்பிட்ட நபரைக் குற்றம் சாட்டலாம் என்றால் அது மோடியாக மட்டுமே இருக்க
முடியும். 2002ம் ஆண்டில் குஜராத்தில் மோடியின் ஆட்சியில் நடைபெற்ற அந்தப்
படுகொலைகள், முதன் முதலாக தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில்
வெளிப்படுத்தப்பட்ட முஸ்லிம் மக்களின் கோபம், இவை அனைத்தும் தேர்தல்களில்
வெளிப்பட்டன. சிறுபான்மை மக்கள் மத்தியில் அது ஒரு புதுவிதமான எதிர்ப்பு
வடிவத்தினை உருவாக்கியது. பி.ஜே.பிக்கு வாக்களிப்பது இல்லை என்பதைத்
தாண்டி, அக்கட்சியினைத் தோற்கடிக்கும் வாய்ப்புள்ள கட்சிக்கு வாக்களிப்பது
என்ற புதிய வாக்களிப்பு உத்தியும் தோன்றியது. 2004 தேர்தல்களில் இது
தெளிவாக வெளிப்பட்டது. மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு இருக்கும்
உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பி.ஜே.பி கடுமையான
தோல்வியினைச் சந்தித்தது. அது மட்டுமல்லாமல், அக்கட்சியுடன் கூட்டணியில்
இருந்த தெலுங்கு தேசம், திரிணாமூல், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளும்
தத்தம் மாநிலங்களில் மண்ணைக் கவ்வின. முஸ்லிம்களின் இந்த வாக்களிப்பு
உத்தியின் காரணமாக, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், லாலு பிரசாத்தின்
ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை பயனடைந்தன.
கூட்டாளிகளை இழந்து
தனிமையில் ... :
15 முதல் 20 சதவிதம் வரையிலான சிறுபான்மை மக்கள் இவ்விதம்
வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர் என்றவுடனேயே, கூட்டாளிகள் பி.ஜே.பியைக்
கைகழுவிவிட்டனர். சிவசேனா, அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள்
மட்டுமே பி.ஜே.பியுடன் சேர்ந்து நின்றன. ஆனால் ஐக்கிய ஜனதா தளமும் கூட,
மோடியை பீகாரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதிக்க மறுத்து விட்டது.
2009 தேர்தல்களும் ஏறக்குறைய 2004 முடிவுகளை மீண்டும் உறுதி செய்யும் வகையில் தான் இருந்தன. இந்தத் தேர்தல்களில் மோடியை விட வருண் காந்தியின்
மதவெறிப் பேச்சுக்கள் குறைந்த பட்சம் உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பியின்
தோல்விக்கு பெரும் காரணமாக அமைந்தன. இந்தியாவின் கிழக்குப் பிராந்தியத்தில்
பி.ஜே.பி அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். நேற்று வரை தெற்கில்
ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவில், அது தூக்கி
வீசப்பட்டுவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் இப்போது மூன்றாவது இடத்திற்காக
காங்கிரசுடன் போட்டியில் இருக்கிறது. மோடி பிரதமர் வேட்பாளர் என்ற
பிரச்சனையில் பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்துடன் உறவு முறியும் நிலையில்
உள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் அது பல இடங்களில் தோல்வியைத் தழுவும்.
2009 தேர்தல்களில் கூட, பி.ஜே.பி வெற்றி பெற்ற இடங்களில் பாதி எண்ணிக்கை
முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இல்லாத மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் இருந்து தான் என்பது குறிப்பிடத்தக்கது. விவரங்களை கீழ்வரும்
பட்டியலில் காணலாம்.
குஜராத்துக்கு வெளியே பிஜேபிக்கு சுமை யாக
இருப்பவர் மோடிதான். பிஜேபி கட்சிக் குள் இருப்பவர்களில் இந்த உண்மையினை
அறிந்த ஒரே நபர் அத்வானிதான். பிஜேபி கட் சிக்கு தனது கூட்டணியின் தளத்தை
விரிவு படுத்திட அனைவராலும் பெருமளவில் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு நபரை
முன்னிறுத்த வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில் கடந்த காலத்தில் அத்தகைய ஒரு
நபரை முன் னிறுத்தியதால்தான் தமிழகம், ஒடிசா, ஆந்திரா போன்ற மாநிலங்களில்
வெற்றி பெற முடிந்தது. பல தேர்தல் களங்களை சந்தித்த அனுபவத்தின்
பின்னணியில்தான் அத்வானி இவ்வாறு கருதுகிறார். மோடியின் ஆட்சியில் கடந்த
பத்தாண்டுகளில் குஜராத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, 2002 படுகொலைகள் என்ற
பிசாசினை விரட்டி அடித்துவிடுமென பிஜேபியின் தத்து வார்த்த ஆசானான
ஆர்எஸ்எஸ் நம்புகிறது. அதனால்தான் அத்வானியின் அறிவார்ந்த ஆலோசனையை
ஏற்காததோடு, அவரை அவமானப்படுத்தியும் உள்ளது. “வளர்ச்சியின் சிற்பி” என்ற
மிகைத் தோற்றம் மோடிக்கு இருப்பதன் காரணமாக பிஜேபிக்கு இந்தியா
முழுவதும் 175லிருந்து 200 வரையிலான இடங்கள் அக்கட்சிக்கு மட்டுமே கிடைக்குமென நம்புகிறார்கள். மேலும், கூட்டணியில் முன்பிருந்த கட்சிகள் மீண்டும்
பிஜேபியை நோக்கி வருவதற்கான நிர்பந்தத்தை இது ஏற்படுத்தும் எனவும்
நம்புகிறார்கள்.
வளர்ச்சி குறித்த மாயை! :
குஜராத்தின் வளர்ச்சி
குறித்து பேசும் போது இரண்டு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
மோடி குறித்து சரடு விடுபவர்கள் அவரது ஆட்சிக் காலத்தில்தான் குஜராத்
வளர்ச்சியடைந்தது என்றும் பி.டி. பருத்தியின் வெற்றி குஜராத்துக்கு மட்டுமே
சொந்தமானது என்றும் மிகைப்படுத்துகின்றனர். ஆனால் ராஜ்கோட் மெசின்
டூல்ஸ், டீசல் என்ஜின் தொழில் மற்றும் சூரத், பாவ்நகரிலுள்ள செயற்கை வைரத்தொழிற்சாலைகள் மட்டுமின்றி அமுல், அம்பானி, அதானி, நிர்மா, டோரெண்ட்,
ஜைடஸ் கேடிலா, ஐபிசிஎல், ஜிஎஸ்எப்சி அல்லது ஜிஎன்எப்சி போன்ற
தொழிற்சாலைகள், மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அம்மாநிலத்தில் இருந்தன
என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தங்களது ஆட்சிக் காலத்தில் மாநிலத்தில்
படிப்படியான வளர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக எவரேனும் உரிமை கொண்டாட
முடியுமென்றால் அது ஏற்கனவே பின்தங்கிய மாநிலங்களாக உள்ள
மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரின் முதலமைச்சர்களாக மட்டுமே இருக்க
முடியும். சிவராஜ் சிங் சௌகான் முதல்வராக பதவி ஏற்பதற்கு முன்பு
மத்தியப்பிரதேசத்தில் வெறும் 5 இலட்சம் டன்னாக இருந்த கோதுமை கொள்முதல், அவரது ஆட்சிக் காலத்தில் 85 இலட்சம் டன்னாக அதிகரித்தது. அது மட்டுமின்றி
மத்திய அரசு அளிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காட்டிலும்
கூடுதலாக குவிண்டாலுக்கு நூறு ரூபாயை விவசாயிகளுக்கு அவரது அரசு
அளிக்கிறது. இதே போன்று, சத்திஸ்கரில் அரிசி கொள்முதலில்
முன்னேற்றத்தை ராமன் சிங் அரசு சாதித்துள்ளது. மேலும் ரேசன் கடைகளே
இல்லாதிருந்த அந்த மாநிலத்தில் செயல்படுகின்ற பொது விநியோக அமைப்பினை
அவர் உருவாக்கியுள்ளார்.
குஜராத் ஒன்றும் பீகார்,
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம் போன்று பின்தங்கிய மாநிலம்
அல்ல. குஜராத் வளர்ச்சி குறித்த மோடியின் படாடோபமான பேச்சுகளுக்கு
அத்வானி இதனையே எதிர்வாதமாக வைத்தார். இரண்டாவதாக, பழைய கால பாவங்கள் அதைச்
செய்தவர்களை பழி தீர்க்காமல் விடுவதில்லை என்பது வரலாறு உணர்த்தும்
செய்தி. இதுவும் அத்வானிக்குத் தெரியும். பாபர் மசூதி இடிப்பிற்கு இட்டுச்
சென்ற அத்வானியின் 1990 ரதயாத்திரை அவப்பெயரிலிருந்து அவர் இன்னும் மீள
முடியவில்லை என்பதை அவர் நன்கு அறிந்தவர் தானே? அதைத் துடைத்தெறியும்
முயற்சியில் அவர் முகமது அலி ஜின்னாவைப் பாராட்டப் போக, ஆர். எஸ்.எஸ்
கோபத்தை சம்பாதித்துக் கொண்டதும் அதன் காரணமாக அதன் கட்டளைக்குப் பணிந்து
அவர் பிஜேபி தலைவர் பதவியினை ராஜினாமா செய்ததும் தானே மிச்சம்?
வரலாற்றினை மறுபடைப்பு செய்வதே அல்லது அதன் போக்கை மாற்றுவதே மோடியினால்
கண்டிப்பாக இயலாது. அவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும்
பட்சத்தில் அது கண்டிப்பாக பிஜேபிக்கு பாதகமாகவும், மூழ்கும் கப்பலான
காங்கிரசுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாகவும் மாறும் என்பதில் ஐயமில்லை.
தமிழில் : எம். கிரிஜா நன்றி - பிசினஸ் லைன் 12-06-2013
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக