ஞாயிறு, 23 ஜூன், 2013

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் மத்திய அரசின் கையாலாகாத்தனமும்....!

        
                                                                                                                                                   
கட்டுரையாளர் : பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா 

         கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய நாணயமான ரூபாயின் தொடரும் மதிப்பு வீழ்ச்சி ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. நடப்பது என்ன? ஏன் நடக்கிறது? செய்ய வேண்டியது என்ன? திவால் கொள்கைகள் 1991 - இல் தாராளமயக்கொள்கைகள் சிறுபான்மை காங்கிரஸ் அரசால் தீவிரமாக அமல் செய்யப்பட்ட பொழுது அன்று சந்தித்துக் கொண்டிருந்த பெரும் அன்னியச் செலாவணி பற்றாக்குறையையும் அரசின் வரவு - செலவு பற்றாக்குறையையும் சரி செய்ய தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கைகளே வழி என்றார்கள் ஆட்சியாளர்கள். ஆனால், இக்கொள்கைகள் 22 ஆண்டுகள் தீவிரமாக அமல் செய்யப்பட்ட பின்பு இன்று இதே இரண்டு பிரச்சினைகள் மிகவும் கடுமையாகிவிட்டன என்று ஆளும் அரசின் கனவான்கள் ஓலம் இடுவதை நாம் காண்கிறோம்.
          இக்கொள்கைகள் திவாலாகிவிட்டன என்பதற்கான இத்தகைய ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுத்துக்கொண்டே, இதே கொள்கைகளை மேலும் தீவிரமாக கடைப்பிடிப்பதே பிரச்சினைக்குத் தீர்வு என்றும் கூறும் அரசை கையாலாகாத அரசு என்று தானே சொல்ல முடியும்? 2012-13 நிதி ஆண்டில் நமது சரக்கு ஏற்றுமதியை விட இறக்குமதி மிகவும் அதிகமாக இருந்தது. இது தான் 1991 - இலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. ஆனால் இந்த இடைவெளி மிகவும் அதிகமாக, நமது தேச உற்பத்தி மதிப்பில் - ஜீ.டீ.பீ.யில் - 10.8 சதவீதம் ஆகிவிட்டது இந்த ஆண்டில் தான். மென்பொருள் உள்ளிட்ட சேவைதுறை ஏற்றுமதி மூலமும் வெளிநாடுகளில் இருந்து நமது உழைப்பாளி மக்கள் தமது குடும்பங்களுக்கு அனுப்பும் பணத்தினாலும் இந்த இடைவெளி ஓரளவு குறைக்கப்பட்டு தேச உற்பத்தியில்  4.3 சதவீதம் என்ற அளவில் அன்னியச் செலாவணி நடப்பு கணக்கு பற்றாக்குறை உள்ளது. இதை ஈடு கட்ட வெளிநாட்டு மூலதனம் இந்தியாவிற்கு வருவது தான் ஒரே வழி என்று கருதும் அரசு, அன்னிய நிறுவன முதலீட்டாளர்களுக்கும் பொதுவாக அன்னிய மூலதனத்திற்கும் சலுகை மேல் சலுகை வழங்கி வருகிறது. சரிந்துவரும் ரூபாய் மதிப்பு ஆனால் நிலைமை சரியாகவில்லை. தொடர்ந்து அன்னிய மூலதனம் இங்கு வர தயங்குகிறது. ஏற்கெனவே உள்ள மூலதனமும் வெளியேறும் நிகழ்வுகள் வலுப்பெற்றுள்ளன. இதற்கிடையில் அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி தலைவர் பெர்னாங்கே அமெரிக்கா பணப்புழக்கத்தை விரைவில் கட்டுப்படுத்தும் என்று கூறியுள்ளது அன்னிய நிதி முதலீட்டாளர்களை அமெரிக்கா நோக்கி இழுக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
            எனவே இந்தியா உள்ளிட்ட பல வளரும் நாடுகளில் இருந்து அன்னிய நிதி மூலதனம் வெளியேறும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் நடப்பு பற்றாக்குறை அதிகரித்து வருவது இந்திய ரூபாய் மதிப்பு சரியும் என்ற அனுமானிப்பை நிதி முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எனவே அதனால் ஏற்படும் அன்னியச் செலாவணி இழப்பைத் தவிர்ப்பதற்காக அன்னிய நிதி மூலதனம் இந்தியாவை விட்டு வெளியேறி வருகிறது. பெர்னாங்கே அறிவிப்புக்குப் பிறகு இதன் வேகம் கூடியுள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. மேலைநாடுகளில் தொடரும் பொருளாதார மந்த நிலையாலும் வேறு காரணங்களாலும் நமது சரக்கு ஏற்றுமதியும் சரிந்துள்ளது. மறுபுறம் தொடர்ந்து பின்பற்றப்பட்டுவரும் தாராளமயக் கொள்கைகளால் இறக்குமதி அவ்வாறு சரியவில்லை. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி இறக்குமதி சுமையை அதிகப்படுத்தியுள்ளது.
         உதாரணத்திற்கு, ஒரு டாலர் 45 ரூபாய் என்ற நிலையில் இருந்து 60 ரூபாய் என்று உயர்ந்தால், இறக்குமதி செலவு கணிசமாகக்கூடும் அல்லவா? அன்னிய மூலதனம் வெளியேறுவதால் அன்னிய செலாவணி பற்றாக்குறை மேலும் கூடும் என்பதால் ரூபாய் தொடர்ந்து சரியும் என்ற அச்சமும் உள்ளது.கடும் விளைவுகள்மேற்கூறிய போக்குகள் மக்களை கடுமையாக பாதிக்கின்றன. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி இறக்குமதியாகும் பொருட்களின் விலைகளை ரூபாய் கணக்கில் கடுமையாக உயர்த்துகிறது. பெட்ரோலியம் கச்சா எண்ணை விலை உயரும் பொழுது எல்லாவிலைகளும் ஏறுகின்றன. தாராளமயக்கொள்கைகளின் பகுதியாக மைய அரசு மானியங்களை குறைத்து வருவதால் விலைவாசி உயர்வு மேலும் கடுமையாகிறது. இதுவே ரசாயன உரம் உள்ளிட்ட வேறுபல பொருட்களுக்கும் பொருந்தும். அன்னியச் செலாவணி பிரச்சனையை எதிர்கொள்ள எப்படியாவது அன்னிய நிதி மூலதனத்தை பலவகையான ஊக்குவிப்புகள் அளித்து, கெஞ்சிக் கூத்தாடி இந்தியாவிற்கு ஈர்க்க வேண்டும் என்ற அரசு கொள்கையால் பிரச்சினை மேலும் தீவிரம் ஆகிறது. வரும் வெளிநாட்டு நிதி மூலதனம் வெளியே சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள அரசு நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தவேண்டும் என்கிறது. அதை செல்வந்தர்கள், கொள்ளை லாபம் ஈட்டும் பெரும் பகாசுரக் கம்பெனிகள் மீது வரி போட்டோ, அவர்கள் தர வேண்டிய வரியைக் கறாறாக வசூல் செய்தோ சாதிப்பதற்குப் பதிலாக மக்களுக்கு அவசியமான மானியங்களை வெட்டுவதன் மூலமே செய்ய முயற்சிக்கிறது அரசு. இது விலைவாசிகள் மேலும் உயர வழி செய்கிறது
.        ஏற்கெனவே கடுமையான உணவுப் பொருள் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தவித்து வரும் மக்களுக்கு இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது. தீர்வு என்ன? எப்படியாவது, அன்னிய நிதி மூலதனத்தின் காலில் விழுந்தாவது அவற்றை இந்தியாவிற்குள் ஈர்க்க வேண்டும் என்ற அரசின் கொள்கை பயன் அளிக்காது. பிரச்சினை தீவிரம் அடைந்துள்ளதற்கு முக்கிய காரணம் தாராளமய தனியார்மய உலகமயக் கொள்கைகள் தான். கடந்த இருபது ஆண்டுகளாக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, சுங்க வரிகள் குறைக்கப்பட்டு, இறக்குமதி தாறுமாறாக அதிகரித்துள்ளது. தனியார்மயம் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிக்கப்பட்டு, பொதுத்துறை முதலீடுகள் வெட்டப்பட்டு, உரம், பெட்ரோலியம் எண்ணய் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் நுகர்வில் பெரும் பகுதி இறக்குமதி மூலம் பெறப்படும் நிலை உருவாகியுள்ளது. பன்னாட்டுச்சந்தையில் நாம் இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகள் தாறுமாறாக ஏறுகின்றன. நிதித்துறை உலகமயமாக்கல் கொள்கைகள் நமது தனியார் கம்பெனிகளை வெளிநாடுகளில் சகட்டு மேனிக்கு கடன் வாங்க அனுமதித்துள்ளது அன்னியச்செலாவணி பிரச்சனையை தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்றுமதி கொள்கைகள் நமது சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களை பாதுகாக்கவில்லை. போதுமான தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான உதவிகள் செய்யப்படவில்லை. நமது அண்டை நாடான சீனம் ஏற்றுமதி அதிகரிப்பில் மகத்தான சாதனைகளை செய்துள்ளது.
        நிதித்துறை தாராளமயமாக்கல் நடவடிக்கைகளை பெரிதும் கட்டுப்படுத்தியுள்ளது. இன்று சீன நாணயம் டாலருக்கு எதிராக வீழ்ச்சி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்னிய நிதி மூலதனங்கள் நாட்டை விட்டு வெளியேறினால் பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும் என்ற நிலை, கட்டுப்பாடுகள் இன்றி அன்னிய நிதி மூலதனம் நாட்டுக்குள்ளே வரலாம், வெளியேறலாம் என்பதில் இருந்து வருகிறது. அன்னியச்செலாவணி மூலதன கணக்கில் வலுவான கட்டுப்பாடுகள் தேவை. அப்பொழுது தான் அன்னிய மூலதனங்கள் வெளியேறி விடுமோ என்ற அச்சத்தில் கொள்கைகள் உருவாக்கப்படுவதை தவிர்க்க முடியும். சுருங்கச் சொன்னால், உள்நாட்டு உற்பத்தி சக்திகளை வளர்ப்பதும் உள்நாட்டு சந்தையை மையப்படுத்திய வளர்ச்சிப்பாதையில் செல்வதும், ஏற்றுமதியை இயன்ற அளவிற்கு அதிகரிப்பதும், இறக்குமதியை கட்டுப்படுத்துவதும், அன்னிய நிதி மூலதனத்தை தீவிர நெறிமுறைகளுக்கு உள்ளாக்குவதும், தற்சார்பை ஊக்குவிப்பதும் தான் சரியான பாதை.

நன்றி : 
 

கருத்துகள் இல்லை: