புதன், 5 ஜூன், 2013

இலங்கை : தேசிய இனப்பிரச்சனையும் மாறியுள்ள உலகச் சூழலும்....!

        

 கட்டுரையாளர் : தோழர்.டி.கே.ரங்கராஜன், எம்.பி.,        
                             மத்தியக்குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி         
         இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டை விமர்சித்து ‘ஜூனியர் விகடன்’ ஏட்டில் கழுகார் பதில்கள் பகுதியில் எழுதப்பட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி எழுதிய விளக்கத்தை அந்த ஏடு வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட்டுகளின் சிந்தனைக்கு என்ற தலைப்பில் பத்திரிகையாளர் ப.திருமாவேலன் தொடர்ந்து 10 இதழ்கள் நீண்ட நெடிய கட்டுரைகளை எழுதித்தள்ளியுள்ளார். அந்தக் கட்டுரையில் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்ற தலைவர்களின் மேற்கோள்கள் பொருத்த மற்ற வகையில் எடுத்தாளப்பட்டிருந்தன.
         இவற்றைப் படித்தபோது, மாவோ கூறிய வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தன. 1948-ல் மக்கள் சீனத்தில் மாவோ தலைமையில் ஆட்சியமைத்த கம்யூனிஸ்ட்டுகள் சுயநிர்ணய உரிமை குறித்த முந்தைய நிலைபாடுகளை பின்பற்றவில்லை. திபெத்தியர்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற தலாய்லாமாவின் கோரிக்கையை சீன கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. தலாய்லாமாவின் மடத்தைச் சேர்ந்த பஞ்சன்லாமா சீனாவுடன் திபெத் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற நிலைபாட்டை ஏற்று சீனாவிலேயே தங்கிவிட்டார். இந்தப் பின்னணியில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சில தோழர்கள் மார்க்ஸ், லெனின் உரைகளிலிருந்து மேற்கோள்காட்டி சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த மாவோ இப்படிக்கூறினார்... “இப்போதும் கூட சிலர் மார்க்சிய லெனினிய அறிஞர்கள் உரையிலிருந்து சில மேற்கோள்களை எடுத்துச் சொல்லி அவைகளே அனைத்துத் தீங்குகளையும் எளிதாக தீர்க்க வல்லது என்று கருதுகின்றனர். அறியாமையில் உழலும் அத்தகையோர் தான் மார்க்சியம்-லெனியத்தை ஒரு வகையான சமயக்கோட்பாடாக கருதுகின்றனர். அவர்களிடம் மழுப்பல் எதுவுமில்லாமல் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும். உங்கள் கோட்பாடு எந்தப் பயனும் அற்றது. நம்முடைய கொள்கை வறட்டு சித்தாந்தமல்ல. செயலுக்கான வழிகாட்டி என மார்க்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளனர். அத்தகைய சிறப்புமிக்க மிக மிக முக்கியமான வழிகாட்டுதலை இந்த மனிதர்கள் மறந்துவிடுகிறார்கள்” சுய நிர்ணய உரிமை குறித்து மாமேதைகள் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரை மேற்கோள் காட்டும் அறிவு ஜீவிகள் மாவோ கூறியதை மறந்தும் கூறுவதில்லை. ஏனெனில் அவரது அணுகுமுறை தங்களது வாதத்திற்கு உதவாது என்பதை அவர்கள் நன்கறிவார்கள். நீங்கள் எந்தப்பக்கம் நிற்கிறீர்கள் என்ற கேள்வியோடு திருமாவேலனின் கட்டுரை நிறைவு பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை இலங்கையில் தொடர்ந்து இன்னலுக்கு உள்ளாகியுள்ள தமிழர்களின் பக்கம் நிற்கிறோம் என்று எங்களால் தைரியமாகச் சொல்ல முடியும். இலங்கையில் இனப்பிரச்சனை துவங்கியதிலிருந்து அந்த மக்களின் பக்கமே நின்று வந்துள்ளோம் என்று எங்களால் கூறமுடியும். ஆனால் தமிழீழம் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிப்பவர்கள் மட்டுமே இலங்கைத் தமிழர்கள் பக்கம் நிற்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் இலங்கை அரசின் ஆதரவாளர்கள், கைக்கூலிகள் என்று முத்திரை குத்துவது இங்கு சிலருக்கு பழக்கமாகிவிட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் எல்டிடிஇ இயக்கத்தின் அணுகுமுறை, சமரசமான தீர்வு ஏற்பட தடையாக இருந்ததை பல இயக்கங்கள் அப்போதும் விமர்சித்துள்ளன. இப்போதும் விமர்சிக்கின்றன.     
       எல்டிடிஇ வலுவாக இருந்த காலத்தில் அத்தகைய விமர்சனங்களை முன்வைத்த இலங்கையைச் சேர்ந்த தமிழர் தலைவர்கள், சகபோராளிக் குழுக்களை எவ்வாறு அணுகியது, எவ்வாறு கணக்குத் தீர்த்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவிலும் தமிழகத்திலும் தியாகத்தால் புடம்போட்டு வளர்க்கப்பட்ட இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு உபதேசம் செய்பவர்கள் அல்ல. விடுதலைப் போராட்ட காலம் துவங்கி இன்று வரை மக்களுக்காக தொடர்ந்து போராடி சித்ரவதைகளை, சிறைக்கூடங்களை இன்முகத்தோடு ஏற்றவர்கள் மார்க்சிஸ்ட்டுகள். இந்த நீண்ட நெடிய போராட்டத்தில் பலரை களப்பலியாக தந்த இயக்கம் இது. குன்னியூர் சாம்பசிவ அய்யர் எனும் நிலப்பிரபுவை எதிர்த்துப் போராடிய களப்பால் குப்பு எனும் மாவீரன் 31 வயதில் சிறையில் விஷம் கொடுத்து கொல்லப் பட்டார். வாட்டாகுடி இரணியன், சிவராமன், ஆறுமுகம், மலேயா தோழர்கள் எஸ்.ஏ. கணபதி, வீரசேனன் என நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து போராடியதால் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகிகளைக் கொண்ட இயக்கம் இது. வெண்மணியின் கண்மணிகள், பொன்மலையின் தியாகதீபங்கள் பூந்தாலங்குடி பக்கிரி, தியாகி வெங்கடாச்சலம், அன்னை லெட்சுமி, திண்டுக்கல் அக்னீஸ்மேரி, தூக்குமேடை தியாகி பாலு, மாரி, மணவாளன், தில்லைவனம், மதுரை ஐ.வி.சுப்பையா, பூந்தோட்டம் சுப்பையா, ராமசாமி இவர்களது வழியில் தியாகி லீலாவதி, சின்னியம்பாளையம் தியாகிகள், கோவை ஸ்டேன்ஸ் மில் தியாகிகள், ஆஷர்மில் பழனிச்சாமி, திருப்பூர் பழனிச்சாமி, இடுவாய் ரத்தினசாமி, நன்னிலம் நாவலன், பள்ளிப்பாளையம் வேலுச்சாமி என பல தோழர்கள் மக்கள் போராட்டங்களில் மரணத்தை பரிசாகப் பெற்றவர்கள். இந்தியாவிலும் தமிழகத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்திய, வழி நடத்துகிற தலைவர்கள் பலரும் சிறையையும் அடக்குமுறையையும் தங்களது வாழ்வின் ஒரு பகுதியாக கொண்டவர்கள். இலங்கைப் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய கொள்கை வழி நின்று ஒரு முடிவை எடுத்துள்ளதால் கட்சி இன்றைக்கல்ல, தமிழகத்தில் கடுமையான இனவெறி அடிப்படையிலான முழக்கங்கள் எழுப்பப்பட்ட காலத்திலேயே அவதூறுகளை சந்தித்துள்ளது. ஆனால், இத்தகைய அவதூறுகளை பின்னுக்குத்தள்ளி இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வுகாண வேண்டும். அங்குள்ள தமிழ் மக்கள் தங்களது பாரம்பரிய வாழ்விடத்தில் அனைத்து உரிமைகளுடன் வாழவேண்டும் என்பதை தொடர்ந்து கூறி வந்துள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றம், மக்கள் மன்றங்களில் தனது கருத்தை அழுத்தமாக எடுத்து வைத்துவந்துள்ளது. இலங்கையில் இறுதிப்போர் முடிவடைந்த நிலையில் தொடர்ச்சியாக பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகிறது. ஆனால், தனி ஈழம் என்ற யோசனையை மட்டுமே முன்வைக்கும் அறிவு ஜீவிகள் மற்றும் இயக்கங்கள் மார்க்சிஸ்ட் கட்சியை விமர்சிக்கின்றன. அதற்காக அவர்கள் மார்க்சியத்தையும் துணைக்கு அழைத்துக்கொள்கின்றன. அவர்களது மார்க்சிய ஈடுபாடு நம்மை புல்லரிக்க வைக்கிறது. இந்தியப் பிரச்சனையில் இவர்களில் பலர் மார்க்சீயத்தை நடைமுறைப்படுத்த முன்வருவதில்லை என்பதையும் இவர்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பதையும் நாம் தெரிந்தே வைத்திருக்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சனை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய துயரம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
             அரசியல் அதிகாரம், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் சிங்கள மேலாதிக்க ஆட்சியாளர்களால் தமிழ் மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது என்பதிலோ, 30 ஆண்டுகளுக்கும் மேல் அமைதியான வழியில் போராடியவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு சிங்கள மேலாதிக்கம்தான் காரணம் என்பதும் மறுக்கமுடியாத ஒன்று. ஆனால் நெடிய போராட்டத்தில் நிலைமைக்கேற்ப உத்திகளை வகுக்க வேண்டும் என்பது உலக போராட்ட அனுபவமாகும். சமரசம் என்ற சொல்லை கெட்ட சொல்லாக கருதக்கூடாது என்று மாவீரன் பகத்சிங் ஒரு முறை குறிப்பிட்டார். பல்வேறு நிர்பந்தங்கள் மற்றும் யதார்த்த நிலை காரணமாக சமரசத் தீர்வுக்கு இலங்கை ஆட்சியாளர்கள் நெருங்கி வந்த சமயங்களில் அது தட்டிவிடப்பட்டது யாரால் என்பதை மறைக்க முடியாது. 
         நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்தினர். மறுபுறத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராடின. மாவோயிஸ்ட்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பங்காற்றியது. உலகளவிலும் நேபாளத்திலும் ஏற்பட்ட மாற்றங்களை கருத்தில் கொண்ட மாவோயிஸ்ட்டுகள் ஜனநாயக பாதைக்கு திரும்பினர். இதன்மூலம் நேபாளத்தில் மன்னராட்சி முறை தூக்கியெறியப்பட்டு ஜனநாயக அரசியல் துவங்கியது. இந்தியாவின் அண்டை நாடான மியான்மரிலும் ராணுவ ஆட்சியை எதிர்த்து தொடர்ச்சியாக இயக்கம் நடந்து வருகிறது. மியான்மரின் வரலாற்றை, இப்போதைய போராட்டத்தை உற்றுக் கவனிப்பவர்கள் நிலைமைக்கேற்ப சமரசம் மற்றும் தொய்வற்ற ஜனநாயகப் பூர்வ போராட்டம் என்ற பாதையில் அந்நாட்டின் ஜனநாயக இயக்கம் பயனித்து வருவதை புரிந்துகொள்ள முடியும்.தமிழ் ஈழ வரலாறு, பண்டைய மன்னர்கள் பெருமை, சிங்களத்தை வென்ற பெருமைகள் என்று இப்போதும் பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகிறது. ஆனால் பிரச்சனைக்குத் தீர்வு காண கடந்த காலம் குறித்த பெருமிதம் மட்டும் போதாது. மாறாக, அந்தநாட்டின் யதார்த்த, இப்போதைய பூகோள நிலைமையை மட்டுமல்ல, உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அதன் பலாபலன்களையும் புரிந்துகொள்வது அவசியமாகும். குறிப்பாக ஏகாதிபத்தியத்தின் தன்மையையும் வளர்முக நாடுகளின் நிலைமையையும் கருத்தில் கொள்ளவேண்டும். அரசியல் போராட்டங்களில் வரலாறு ஒரு ஆயுதமாக பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து பிரபல வரலாற்று அறிஞர் பேராசிரியர் எரிக்ஹோப்ஸ்பாம் தெரிவித்துள்ள கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. “ஹெராயின் என்ற போதைப் பொருளுக்கு பொப்பி மலர் மூலப்பொருள்.
         அது போல தேசியவாத கருத்துக்கள், இனக் குழு சார்ந்த கருத்துக்கள் மற்றும் அடிப்படைவாதங்கள் ஆகியவற்றிற்கு வரலாறு ஒரு மூலப்பொருளாக அமைகிறது. இப்படிப்பட்ட கருத்துக்கு கடந்தகாலம் என்பது ஒரு அத்தியாவசியமான கூறு. இக்கருத்துக்கு பொருத்தமான கடந்தகாலம் இல்லையென்றால் அதனை வேண்டிய வகையில் ஆக்கிக்கொள்ள முடியும். எதையும் நியாயப்படுத்த கடந்த காலம் உதவுகிறது. மகிழ்ச்சியுடன் கொண்டாடு வதற்கு அதிகம் இல்லாத நிகழ்காலத்திற்கு ஒரு புகழ் பூத்த பின்னணியை கடந்தகாலம் வழங்குகிறது. ”அவர் மேலும் கூறுகிறார்,” வரலாறு எழுதும் தொழிலானது, அணு ஆய்வு பௌதீக இயல் போல அல்லாது யாருக்கும் தீங்கு விளைவிக்காத ஒரு தொழில் என நான் எண்ணிப்பார்த்தேன். ஆனால் இத் தொழில் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதை இப்போது உணர்கிறேன். பிரித் தானியாவில் ஐரிஷ் குடியரசுப் படையினர் ரசாயன உரத்தை வெடிகுண்டாக மாற்றுவதற்குப் பயன்படுத்திய தொழிற்சாலைகள் போல் எங்கள் படிப்பறைகள் வெடிகுண்டு தொழிற்சாலைகளாக மாறக் கூடியவை. இது எங்களைப்போன்ற வரலாறு எழுதுவோரை இருவகையில் பாதிக்கிறது. ஒன்று வரலாற்று உண்மை களை எடுத்துரைக்கும் பொறுப்பு எமக்கு இருப்பதை பொதுவாக உணர்ந்துகொள் வது, இரண்டாவதாக அரசியல் தத்துவ நோக்கங்களுக்காக வரலாற்றை தவறாக பயன்படுத்தப்படுவதை கண்டிக்கும் பொறுப்பு எமக்கு இருப்பதை உணர்ந்து கொள்வது ”இலங்கையில் துவங்கிய தமிழர் உரிமை போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியை புரிந்துகொள்ளும் அதே நேரத்தில் கடந்தகால வரலாற்றின் வழியில் நின்று மட்டும் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். தற்போதுள்ள உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மனித உரிமைகளின் அடிப்படையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இரண்டாவது உலகப்போருக்குப் பின்பு விடுதலையடைந்த பல நாடுகளிலும் தீர்க்கப்படாத மொழிப்பிரச்சனை, இனப்பிரச்சனை, மதப்பிரச்சனைகள் உண்டு. இப்பிரச்சனைகள் தொடர வேண்டும் என் பதில் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் குறியாக உள்ளன.தன்னுடைய நோக்கத்திற்காக இலங்கை அரசை அமெரிக்க ஏகாதிபத்தியம் பயன் படுத்திக் கொண்டது, பயன்படுத்திக் கொள்கிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு உண்மை எல்டிடிஇ இயக்கத்தையும் அமெரிக்கா தன்னுடைய நோக்கத்திற்கு சில சமயங் களில் பயன்படுத்திக் கொண்டது என் பதும் பல்வேறு நாடுகளில் இத்தகைய அரசியல் விளையாட்டை ஏகாதிபத்தியம் நடத்தி வருகிறது என்பதும் உண்மை. சுதந்திர இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள்தான் இந்திய ஒருமைப் பாட்டை பாதுகாக்க உதவும் என்ற கருத்தை கம்யூனிஸ்ட்டுகள் அழுத்தமாக முன்வைத்தார்கள்.
           அப்போது இதற்கு மாற்றாக திராவிட நாடு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இன்றைக்கு தேசிய இனப்பிரச்சனைக்கு சுய நிர்ணய உரிமை ஒன்றே தீர்வு என்று சிலர் முன்வைப்பதைவிட பல மடங்கு வாதங்களை திராவிட இயக்கம் முன்வைத்தது. இதற்கு எதிரான கருத்துப்போராட்டத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்தியது. ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஏடான ‘ஜன சக்தி’யில் வந்த கட்டுரைகளே இதற்கு சான்று. எதார்த்ததிற்கு பொருந்தாத இந்தக் கோரிக்கை என்ன ஆனது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. சோவியத் ஒன்றியம் உருவான போது இதர சிறுபான்மை தேசிய இனங்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டிய தேவை ரஷ்யக் கம்யூனிஸ்டுகளுக்கு இருந்தது. பல்வேறு தேசிய இனங்கள் ஜார் ஆட் சியில் ஒடுக்கப்பட்டு வந்தன. ஆகவே தான் தோழர் லெனின் சோவியத் அர சியல் சட்டத்தின் பிரிவு 17ல் தேசிய குடியரசுகளுக்கு பிரிந்துபோகும் உரிமையை சேர்த்தார். சோவியத் ஒன்றியம் ஒன்றாக இருந்தவரை தேசிய இனங்கள் பிரிந்து போகவில்லை. ஆனால் சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்ட பின்னணியில் பல்வேறு நாடுகள் மீண்டும் பிரிந்து போயின. மார்க்சியம் என்பது வறட்டு சூத்திரம் அல்ல. அது ஒரு வளரும் விஞ்ஞானம். திட்டவட்டமான நிலைமைக்கேற்ப, திட்டமிட்ட பகுப்பாய்வை கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் மார்க்சியத்தின் அடிப்படைகளில் ஒன்று. இன்றைக்கு மாறியுள்ள உலக சூழ்நிலை மற்றும் ஒரு துருவ உலகை உருவாக்க முயற்சிக்கும் ஏகாதிபத்தியத்தின் திட்டம் ஆகிய வற்றை கருத்தில் கொண்டே மார்க்சிய இயக்கங்கள் தங்களது நிலைபாட்டை உருவாக்க முடியும். உலக வரலாற்றில் இயற்கையை புரிந்து கொள்ள நிக்கோலஸ், கோபர் நிக்கர்ஸ், கலிலியோ போன்றவர்கள் எடுத்த முயற் சிக்கு மேல் புதிய கண்டுபிடிப்புகளை ஐசக் நியூட்டன் கண்டுபிடித்தார். ஆனால் முன்னோர்களின் கண்டுபிடிப்பு களை நியூட்டன் நிராகரிக்கவில்லை. மாறாக 1678ல் ஐசக் நியூட்டன், ராபர்ட், ஹூக்குக் எழுதிய கடிதத்தில் எனக்கு முன்னோடியாக இருந்த பேரறிவாளர் களின் தோள்களின் மீது நின்றுதான் என் னால் முன்னோக்கி பார்க்க முடிகிறது’ என்று கூறியிருந்தார். மார்க்சியத்தின் அடிப்படை நிர்ணயிப் பின் நிலையில் நின்று மாறிவரும் உலக நிலைமையை பகுப்பாய்வு செய்து அதற் கேற்ப தீர்வு சொல்வதே மார்க்சியத்தை பொருத்தும் சரியான வழியாகும். தேசிய சுயநிர்ணய உரிமை குறித்து லெனினது வார்த்தைகளை வரிந்து வரிந்து மேற்கோள் காட்டும் நண்பர்கள் ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சி மற்றும் அபாயம் குறித்து அவர் எழுதிக்குவித் துள்ள கட்டுரைகளையும் படிப்பது நல்லது. தமிழகத்தில் உள்ள தமிழ்மக்களின் பிரச்சனைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக போராடி வருகிறது. உத்தப்புர தீண்டாமை சுவர் இடிப்பு துவங்கி அருந்ததிய மக்களின் உள் ஒதுக்கீடு வரை, வாச்சாத்தி மலை வாழ் மக்களின் பிரச்சனை துவங்கி, ஆதி வாசி மக்கள் வனத்திலிருந்து வெளியேற் றப்படுவதை எதிர்ப்பது வரை, ஆலைத் தொழிலாளர் முதல் முறைசாராத் தொழிலாளர் பிரச்சனை வரை போராடுகிறது மார்க்சிஸ்ட் கட்சி. ஈழத்திற்கு குறைவான எந்தத் தீர்வையும் ஏற்க முடியாது என்று கூறும் சில கட்சிகள் தமிழகத்தில் நிலச் சீர்திருத்தத்தை சீர்குலைக்க மேற் கொண்ட முயற்சிகளை தமிழகம் அறியும். விவசாயத் தொழிலாளர்களின் மனைப்பட்டா துவங்கி, விவசாயத்தை பாதுகாப்பது வரை போராடுகிறது மார்க்சிஸ்ட் கட்சி. இலங்கைத் தமிழர்களுக்காக தாங்கள் மட்டுமே குரல் கொடுப்பதாக கூறும் சில கட்சிகள் தமிழகத்தில் பிரச்சனைகளே இல்லாததுபோல கண்டு கொள்ளாமல் இருப்பது அவர்களது வர்க்கப் பார்வையின் அடிப்படையிலேயே ஆகும்.
         இலங்கை பிரச்சனையில் இந்தியாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்கள் அகில இந்திய அளவில் ஒரே மாதிரி நிலையையே எடுத்துள்ளன. ஆனால் ஜூனியர் விகடன் கட்டுரையாளர் உட்பட சிலர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் குறிவைத்து விமர்சனம் செய்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிப்பவர்களுக்கு ஒரு அரசியல் நோக்கம் உள்ளது. ஆனால் அவர்களது அந்த நோக்கம் நிறைவேறாது.

1 கருத்து:

இறைகற்பனைஇலான் சொன்னது…

சில காலமாகவே சீட்டு அரசியல் மட்டுமே செய்து தமிழகத்தில் க்ம்யூ கட்சியே இல்லை என்ற நிலையை ஏற்படுத்திவிட்ட இரு கட்சிகளும் தமிழர்களிடம் அன்னியப்பட்டுவிட்டன.பிரிவினைவாதம் என்ற அடாவடி வார்த்தையைக் கொண்டும் மத்திய அரசின் நாடாளு மன்றத்தில் ஓரிரு இடங்கள் கிட்டுவதைத் தடுத்துக் கொள்ள மனமின்றி தடுமாறுகிறார்கள். அதிலும் சீனா கோவித்துக் கொள்ளக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் இலங்கை அரசு ஒரு நாடு, ஒரு மதம் ஒருமொழி என்பதை அரசியல் சட்டமாக வைத்துக்கொண்டு,ராணுவம் போலீசில் தமிழர் கூடாது என்ற நிலையைப் பார்த்தும் ஒன்று பட்ட இலங்கை என்று கூறுவது மக்கள் விரோதகொள்கையேயாகும். கம்யூனிச அகிலத்தில் பிரதிநிதியாகக் கலந்துகொள்ள ஜே.வி.பி பொறுப்பாளருக்கு அழைப்பு கிடைக்கிறது.ஆனால் அந்த அமைப்பு சிங்கள இன வாதம் பேசுகிறது, நடைமுறயிலும் நடக்கிறது. தமிழ் கம்யூக்கள் மட்டும் உலக தேசியம் பேசவேண்டும். பேசுகிறார்கள். பிரிவினை என்பது நாட்டை வெட்டி எடுத்துப் போவது அல்ல,மாறாக குறிப்பிட்டப் பகுதியை யார் ஆளுவது, எந்த சட்டம் இயற்றி ஆள்வது என்பது மட்டுமே. சித்தாந்த ஜெபிப்பிகளான கம்யூத் தலைவர்களுக்கு இது ஒவ்வாது.அகில இந்தியம் என்றாலே அது பார்ப்பன ஆளுமை அல்லது அவர்களது வால்பிடித்தாவது கட்சியில் நீடிக்கவேண்டும் எனும் தமிழரின் தேவையும் போதையுமேயாகும்.