புதுவை அறிவியல் இயக்கத்தின் 14 - ஆவது மாநாடு இன்று புதுவையில் மிக சிறப்பாக நடைபெற்றது. அறிவியல் அறிஞர்களும், விஞ்ஞானிகளும், முற்போக்கு சிந்தனையாளர்களும் பங்கேற்ற அறிவியல் மாநாடு இது.
கணித மேதை ஸ்ரீனிவாச இராமானுஜத்தின் 125 - ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடப்பு ஆண்டு ''கணித ஆண்டாக'' மத்திய அரசால் அறிவிக்கப்பட்டதால் ''வரலாற்றில் கணிதமும் கணிதத்தின் வரலாறும்'' என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராஜன் ஆற்றிய உரைவீச்சு மாநாட்டு அரங்கத்தையே சூடாக்கியது. ஊடகங்களும், கட்டுரையாளர்களும் இராமானுஜத்தின் திறமைகளையும், கண்டுபிடிப்புகளையும் மதத்தோடும், சாதியோடும், கடவுளோடும் சம்பந்தப்படுத்தி எழுதுவதை உரக்க சாடினார். அதுமட்டுமல்ல, ''சிந்தனை சிற்பி'' சிங்கரவேலரோடு இராமானுஜத்திற்கு இருந்த தொடர்பையும், நட்பையும் எடுத்துரைக்கும் போது மெய் சிலிர்த்தது.
அதேப்போல், இயற்பியல் விஞ்ஞானி டாக்டர். இந்துமதி அவர்களின் சிறப்புரையில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ''ஹிக்ஸ் போஸான்'' என்ற புதிய அணுத் துகள் பற்றிய உரை மதிய உணவையே மறக்க செய்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு அறிவியல் பாடம் கேட்டது போல் இருந்தது.
அறிவியலோடு வாழ புதுவை அறிவியல் இயக்கம் புதுவை மக்களை மீண்டும் அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையில் மாநாடு முடிந்து விடைபெற்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக