வெள்ளி, 16 நவம்பர், 2012

அயர்லாந்து நாட்டின் மூடநம்பிக்கையும் முட்டாள்தனமும் செய்த கொலை...!

           அயர்லாந்து நாட்டின் கால்வே நகரில் பூஸ்டன் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிற  இந்தியாவை சேர்ந்த பிரவீன் ஹலப்பான்னாவர்(வயது 36) அவர்களின்  மனைவி சவீதா ஹலப்பான்னாவர்(வயது 31) என்பவர் அதே நாட்டில் பல் மருத்துவராக பணியாற்றி வந்தார்.  4 மாத கர்ப்பிணியான சவீதா, இரத்தத்தில் பாக்டீரியா அதிகம் உள்ள செப்டிகேமியா என்ற நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் திடீரென அவரது வயிற்றிலிருந்த  கரு இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் உடனடியாக தனது கருவை கலைக்க வேண்டி பலமுறை ஹால்வேயில் உள்ள யுனிவர்சிட்டி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
         ஆனால், கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான அயர்லாந்து நாட்டில் மத நம்பிக்கை அடிப்படையில் ''கருக்கலைப்பு'' என்பது பாவச்செயலாகும் என்பதும், கருக்கலைப்பு என்பது குற்றமாகும் என்பதும் ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருக்கும் சட்டமாகும். கருக்கலைப்பு என்பது மதத்திற்கும், சட்டத்திற்கும் எதிரானது என்பதால்,  உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த பெண்ணிற்கு  கருக்கலைப்பு செய்ய முடியாது என்று கூறி மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.
இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இறந்த கருவால் சவீதாவின் வயிற்றில் தொற்று ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
          மூடநம்பிக்கையாலும் முட்டாள்தனத்தாலும் ஒரு பெண்ணின் கொன்றிருக்கிறது. இறந்துவிட்ட கருவை அகற்றிவிட்டு ஒரு தாயின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற குறைந்தபட்ச அறிவைக்கூட மதம் மழுங்கடித்துவிட்டதா...? அல்லது அதை சட்டம் தான் அனுமதிக்காதா...? என்பது தான் நமது கேள்வியாக இருக்கிறது. அது மட்டுமல்ல மதத்தின் பெயரிலான அந்த சட்டம் என்பது அந்த மதத்தை சேர்ந்தவர்களையும், அந்த நாட்டை சேர்ந்தவர்களையும் மட்டுமே கட்டுப்படுத்துமே அன்றி மற்ற நாட்டவர்கள் மீதோ அல்லது மற்ற மதத்தினர்கள் மீதோ அதே சட்டத்தை திணிப்பது என்பது எப்படி முறையாகும்....?
          மிக வேகமான அறிவியல் வளர்ச்சியை காணும் இந்த காலக்கட்டத்தில், அறிவுப்பூர்வமான - அறிவியல்பூர்வமான சிந்தனையில்லாமல், இதுபோன்ற மதத்தின் பெயரிலான மூடநம்பிக்கைகளையும், முட்டாள்தனமான சட்டங்களையும்
பார்த்து மனிதகுலமே வெட்கப்படவேண்டும். இனியேனும் காலமாற்றத்திற்கு தகுந்தாற்போல் - அறிவியல் வளர்ச்சிகளுக்கு ஏற்றாற்போல் ஆட்சியாளர்கள் தங்கள் சிந்தனைகளையும் மாற்றிக்கொள்ளவேண்டும். பகுத்தறிவோடு சட்டங்கள் இயற்றப்படவேண்டும். இதுபோன்ற முட்டாள்தனமான சட்டங்கள் நீக்கவேண்டும். இது இந்தியா உட்பட எல்லா நாட்டிற்கும் எல்லா மதத்திற்கும் பொருந்தும்.

கருத்துகள் இல்லை: