சனி, 1 நவம்பர், 2014

தொழிலாளர்களைக் கைவிட்டது நோக்கியாவா... இந்தியாவா...?


கட்டுரையாளர் : எஸ். கண்ணன்   
                   மாநிலக்குழு உறுப்பினர்,        
                   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி             

 உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் தன் மக்களை இப்படியா கைவிடுவது?            

        நோக்கியன் விர்டா என்ற நதி, பின்லாந்து மக்களின் பேச்சு வழக்கில் நோக்கியா எனச் சுருங்கிவிட்டது. அந்த நதியின் கரையில் 1868-ம் ஆண்டு அமைந்த காகிதக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு, ஐடெஸ்டெம் என்கிற உரிமையாளர் நோக்கியா எனப் பெயரிட்டுள்ளார். அடுத்தடுத்து வளர்ந்த நோக்கியா நிறுவனம், 1980-களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட செல்பேசிக்கும் அந்தப் பெயரையே சூட்டி, செல்பேசி உலகில் ஏக சக்ரவர்த்தியாக வளர்ச்சியும் பெற்றது. உலகில் 10 தொழிற்சாலைகள் மூலம் செய்யப்படும் உற்பத்தியைக் கொண்டு, சந்தையில் பெரும் பகுதியைத் தன் கையில் வைத்திருந்த நிறுவனம்தான் நோக்கியா.
         2010-ல் இந்திய செல்பேசிச் சந்தையில் 50% தக்கவைத்திருந்த நோக்கியா நிறுவனம், 2014-ன் ஆரம்பத்தில் 21% ஆகக் குறைந்தது. தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் தனது பங்குகளை ஒப்படைத்துவிட்டு, இந்திய நிறுவனத்தை மட்டும் விற்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. நவம்பர் 1 முதல் உற்பத்தி நிறுத்தம்குறித்த அறிவிப்பும், அது ஏற்படுத்தியுள்ள மற்றும் ஏற்படுத்தப்போகும் வேலை இழப்பும், இளம் தொழிலாளர் மத்தியில் பெரும் பதற்றத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள் மீதான கேள்விகளையும் உருவாக்கியுள்ளது.

 விற்பது - இணைப்பது புதிதல்ல                    

       நோக்கியாவைப் பொறுத்த அளவில் தனது நிறுவனத்தை வேறொரு நிறுவனத்துடன் இணைப்பது புதிதல்ல. ஏற்கெனவே, செல்பேசித் தயாரிப்புக்குள் வருவதற்கு முன், ஃபின்னிஷ் ரப்பர் ஒர்க்ஸ் மற்றும் ஃபின்னிஷ் கேபிள் ஒர்க்ஸ் ஆகிய இரண்டு நிறு வனங்களுடன் இணைந்த வரலாறு 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இருந்திருக்கிறது. காகிதம், ரப்பர், கேபிள், மின்சாரம், மின்னணுச் சாதனங்கள் என ஐந்து தொழில்களில் ஈடுபட்டுவந்த நோக்கியா, பல்வேறு இணைப்புகளையும் விற்பனைகளையும் சந்தித்துதான் வளர்ந்திருக்கிறது. செல்பேசி தயாரிப்புக்குப் பின்னரே, குறிப்பாக 1994-க்குப் பின், உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனமாக நோக்கியா மாறியது.
        ஜி.எஸ்.எம். என்ற இரண்டாம் தலைமுறை செல்பேசிக்கான ஒழுங்குமுறையையும், சி.டி.எம்.ஏ. என்ற மூன்றாம் தலைமுறை ஒழுங்குமுறையையும் மிக சாமர்த்தியமாகக் கையாண்டு, சந்தையில் தங்கள் செல்பேசி விற்பனையை மேம்படுத்திக்கொண்ட அனுபவம், மற்ற செல்பேசி நிறுவனங்களைவிடவும், நோக்கியாவுக்குத்தான் அதிகம். சி.டி.எம்.ஏ. ஒழுங்கு முறை என்ற 3ஜி, இந்தியாவில் அறிமுகம் செய்யப் படுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே, அமெரிக் காவிலும் ஐரோப்பாவிலும் நோக்கியா அறிமுகப்படுத்தி, தனது செல்வாக்கை நிலைநாட்டியிருந்தது.
        ஒரு செல்பேசியைத் தயாரிப்பதற்கு, 300-க்கும் மேற்பட்ட உதிரி பாகங்கள் தேவை. இவை சரியான நேரத்தில் கிடைப்பதும், அதற்கான உற்பத்தித் திறன் கொண்ட நிறுவனங்களுடன் உடன்பாடு கொண்டு செயல்படுவதும் தவறில்லை என்று நோக்கியா தலைமை முடிவெடுத்து, வேலைகளைப் பிரித்தது. இதன் காரணமாகவே இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஃபாக்ஸ்கான், சால்காம்ப், லைட் ஆன் மொபைல் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. பி.ஒய்.டி, ஃபிலெக்ஸ்ட்ரானிக்ஸ், ஆர்.ஆர்.டோனல்லி ஆகியவை அருகில் உள்ள சிப்காட்டில் செயல்பட்டுவருகின்றன.
       நோக்கியா பல உதிரி பாகங்களை வேறு நிறுவனங்களிடம் ஒப்படைத்து, பிரதான வடிவமைப்பைத் தன் கைவசம் வைத்துக்கொண்டு, பாகங்களை ஒன்று சேர்க்கும் வேலையில் தீவிரமாகக் கவனம் செலுத் தியது. நோக்கியாவின் சந்தை விரிவாக்கம் பரந்ததாக இருந்த நிலையில், தனது தயாரிப்புப் பெயரைத் தக்க வைத்துக்கொள்வதற்காகவும், சிக்கனத்தைக் கையாளவும், மேற்குறிப்பிட்ட உற்பத்தி முறையில் தீவிரமாகச் செயல்பட்டது. இது மிகப் பெரிய பலனையும் நோக்கியாவுக்கு அளித்தது.

 இந்தியாவில் முதலீடும் வருவாயும்          

          செல்பேசி விற்பனையில், இந்தியச் சந்தையைக் கைப்பற்ற எடுத்த முயற்சியிலும் வெற்றி பெற்றது. இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கும் முன்னரே இந்தியச் சந்தையில் நோக்கியா செல்பேசிகள் விற் பனை செய்யப்பட்டாலும், இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கிய 2006-ல் மட்டும் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
            கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு நோக்கியா செல்பேசிகள் ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் நோக்கியா நிறுவனம் 2005, ஏப்ரல் மாதம் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தொடக்கத்தில் ரூ. 675 கோடியும், பின்னர் அடுத்த கட்டத்தில், சில நூறு கோடி ரூபாயும் முதலீடு செய்யப்படும் என்று உறுதிப்படுத்தியது. தமிழ்நாடு அரசு தொழில்துறை அரசாணை எண்-59 இந்த விவரத்தை அளித்திருக்கிறது. இதற்காக சிப்காட் மூலம், ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கரையில், 200 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம்செய்து, ஏக்கர் ஒன்றுக்கு 4.5 லட்சம் ரூபாய்க்கு 99 வருடக் குத்தகைக்குக் கொடுக்கப்படும், பத்திரப் பதிவுக் கட்டணம் 0% என்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கிறது என அரசாணை தெரிவிக்கிறது. இதற்கு மேல், வணிக வரி, விற்பனை வரி ஆகியவற்றை 10 ஆண்டுகளுக்குச் செலுத்த வேண்டியதில்லை. வேலை ஒப்பந்த வரி, குத்தகை வரி, நுழைவு வரி ஆகியவற்றிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இத்தனை சலுகைகளும், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகவே என அரசுகள் அன்றைக்கு அறிவிப்பு செய்தன.
          மென்பொருள் இறக்குமதி, அதற்காகப் பணத்தைத் திருப்பிச் செலுத்தியது போன்றவை மத்திய வருமான வரித் துறையால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, தற்போது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கி என்று குறிப் பிடப்பட்டுள்ளது. மாநில அரசு, வாட் வரியைத் தள்ளுபடி செய்தது. உள்நாட்டு விற்பனைக்குக் கொடுத்த சலுகையை, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ததற்கெல்லாம் அளிக்க முடியாது என்று 2,400 கோடி ரூபாய் வரி கோரி வழக்குத் தொடுத்து, முடிவாகாமல் உள்ளது.
               இந்தப் பின்னணியில்தான் மைக்ரோசாஃப்ட், நோக்கியாவை விலைக்கு வாங்கியது. இந்திய ஆலையை வாங்க முடியாது என்று மறுத்துவிட்டதால், நோக்கியா பெயரில் செல்பேசி விற்கப்பட்டாலும் இந்தியாவில் உள்ள நோக்கியாவின் உரிமை, ஒப்பந்த தாரர் என்ற பெயரில் சுருங்கியது. ஒரு திரைப் படத்தில், “மாப்பிள்ளை இவர்தான். ஆனால், இவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” என்று வரும் நகைச்சுவையைப் போல், நோக்கியா செல்பேசி விற்பனையாகும்; ஆனால், நோக்கியாவுக்குச் சொந்த மில்லை என்கின்றனர்.

கனெக்டிங் பீப்பிள் - டிஸ்கனெக்டிங் எம்ப்ளாயீஸ்     

             இந்தியாவில் உள்ள நோக்கியா ஆலையை, மைக்ரோ சாஃப்ட் வாங்க மறுத்ததால், குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே ஆர்டர் என்று ஒப்பந்தம் செய்துகொண்டதாகக் கூறுகிறார்கள். எனவே, முதலில் ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சித் தொழிலாளர்கள் என்று 5,000 தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர், 4,500 நிரந்தரத் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தில் வெளியேற்றப்பட்டார்கள். உதிரி பாக உற்பத்தி நிறுவனங்களிலும் இது பிரதிபலித்தது. அங்கும் விருப்ப ஓய்வு, ஆலை மூடல் காரணமாக சுமார் 5,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
           மேலும், பல்லாயிரம் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. இளம் தொழிலாளர்கள் தங்கள் வேலையைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கிறார்கள். அரசுகளும் 8 மாத காலமாக எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் மவுனம் சாதிக்கின்றன. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டது, அவர்களின் எதிர்காலம், குடும்ப நிலை போன்றவை குறித்து அரசுகளிடம் எந்தப் பதிலும் இல்லை. உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்று தன்னைப் பெருமையுடன் கூறிக்கொள்ளும் ஒரு நாடு, தன் மக்களை இப்படியா கைவிடுவது?    

நன்றி : தி இந்து - தமிழ்                                      

கருத்துகள் இல்லை: