வெள்ளி, 21 நவம்பர், 2014

திருமலை - திருப்பதி கோவிலின் மறுபக்கம்...!


 கட்டுரையாளர் : தோழர். பிருந்தா காரத்             
                                      தலைமைக்குழு உறுப்பினர்,                  
                                      மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                        
             
              திருப்பதிக்கு நீங்கள் சென்றிருந்தால், முடிவில்லாத நீண்ட வரிசையில் வந்து செல்லும் யாத்திரிகர்களை அக்கோவிலின் தேவஸ்தான நிர்வாகம் சிறப்பான முறையில் நிர்வகிப்பதனைப் பார்த்துவியப்படைந்திருப்பீர்கள். இக்கோவிலுக்கு நாள்தோறும் 40,000 பக்தர்கள் வந்து செல்கின்றனர். விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை 1 லட்சம் அல்லது அதற்கும் கூடுதலாக இருக்கிறது. இங்கு வரும் பக்த கோடிகளுக்கு அளிக்கப்படும் சேவைகள் மிகவும் பிரத்யேகமானவை ஆகும். அங்குள்ள எட்டு பெரிய உணவு அருந்தும் அறைகளில் ஒவ்வொரு நாளும் 40,000 பேருக்கு இலவசமாக உணவு பரிமாறப்படுகிறது. திருப்பதி வெங்கடாசலபதிக்கு தங்களது முடியை காணிக்கையாக அளிப்பதாக செய்து கொண்ட வேண்டுதலை பக்த கோடிகள் நிறைவேற்றிட உதவிடும் வகையில், கிட்டத்தட்ட 600 முடிதிருத்துபவர்கள் தங்களது சேவையை அளித்து வருகின்றனர்.
          அதுமட்டுமின்றி, ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு முடி வெட்டும் பிளேடையும் முடிவெட்டுவதையும் நிர்வாகம் இலவசமாக அளிக்கிறது. இக்கோவிலில் அளிக்கப்படும் இத்தகைய சேவைகளை நாள்தோறும் கிட்டத் தட்ட 20,000 பேர் பயன்படுத்துகின்றனர். கட்டணம் செலுத்தி பயன்படுத்திட 7000 தங்கும் அறைகள் இங்கு உள்ளன. உலகிலேயே இக்கோவிலின் பிரசாதம் இந்த ஊரின் பெயரை அடைமொழியாகக் கொண்டு, ''திருப்பதி லட்டு'' எனப் பிரபலமாக உள்ளது. இவ்வளவு பெரிய மக்கள் திரள் நாள்தோறும் வந்து சென்றாலும், இக்கோவிலின் ஒட்டுமொத்த பரப்பளவும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் உள்ளது பெருமை கொள்ளத்தக்க ஒன்றாகும்.
         ஆனால், இதன் பின் அப்பட்டமான ஒழுங்கின்மை உள்ளது என்பதையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.. நாட்டிலேயே மிகப் பணக்கார கோவில் என்றால் அது திருமலை - திருப்பதி தான். இக்கோவிலின் ஆண்டு வருமானத்தை மிதமாக மதிப்பீடு செய்தால் கூட அது ரூ.2,500 கோடியாகும். இதுதவிர, இக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களிலிருந்தும் இதற்கு வருமானம் கிடைக்கிறது. இருப்பினும், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் தொழிலாளர் நடைமுறைகள் முற்றிலும் நியாயமற்றவையாகவே  உள்ளன என்பதையும் தரிந்துகொள்ளவேண்டும். இங்கு பணியாற்றிடும் 20,000 தொழிலாளர்களில், 12,000 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்கள் ஆவர். நிரந்தரத் தொழிலாளர்கள் செய்திடும் அதே வேலைகளையே தான் இவர்களும் செய்துவருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கோவிலில் குறைந்தது 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர். இக்கோவிலின் பிரபலமான லட்டுக்களை தயாரிக்கும் தொழிலாளர்களின் நிலைமையைப் பாருங்கள். இந்த லட்டுக்களைத் தயாரிக்கும் பணியில் ''வைஷ்ணவ பிராமணர்கள்'' மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு உதவி செய்திட ஒரு குழு உள்ளது. இக்குழுவில் இருப்பவர்கள் வைஷ்ணவ பிராமணர்களாக இல்லாவிடினும் பிராமணர்களாக இருக்கவேண்டும். லட்டுப் பிரசாதத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 50 அல்லது அதற்கும் மேற்பட்ட வைஷ்ணவ பிராமணர்கள் அல்லாதோர், பணி நீக்கம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்...? சாதி ரீதியிலான நடவடிக்கைகள் சட்டத்தினால் தடுக்கப்பட்டவை அல்லவா...? எது எவ்வாறு இருப்பினும், 420 லட்டு தயாரிப்பாளர்களும், அவர்களது உதவியாளர்களும் சேர்ந்து நாளொன்றுக்கு 1.25 லட்சம் லட்டுக்களைத் தயாரிக்கின்றனர். பெரிய லட்டு 750 கிராம் எடையளவு கொண்டதாகவும், சிறிய லட்டு 75 கிராம் எடையளவு கொண்டதாகவும் இருக்க வேண்டும். லட்டின் எடையை எந்த எடை பார்க்கும் கருவியை பயன்படுத்தாமலேயே மிகத் துல்லியமாக ஒவ்வொரு முறையும் தயாரிக்கும் திறன் கொண்டவர்கள் இவர்கள். 1987-ஆம் ஆண்டில், புதிய நடைமுறை ஒன்று ஏற்படுத்தப்பட்டபோது, லட்டுதயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தாங்கள் நிரந்தரப் பணியாளர்கள் ஆக்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். பத்தாண்டுகள் கழித்து, இவர்கள் நிரந்தரமாக்கப்பட நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு அமலாக்கப்படவில்லை. இப்பணியாளர்கள் நிரந்தரமாக்கப்பட மேலும் பத்தாண்டு காலம் ஆனது. ஆனால், யாரெல்லாம் ஆரம்பத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்தார்களோ, அவர்களுக்கு மட்டுமே பலன் கிடைத்தது. இதன் காரணமாக, லட்டு தயாரிக்கும் பணியில் ரூ.35,000 மாதாந்திர ஊதியத்துடன் வெறும் 100 நிரந்தர பணியாளர் கள் மட்டுமே தற்போது உள்ளனர்.
            அதே நேரத்தில், இதே வேலையை செய்கின்ற பெரும்பாலானோருக்கு ரூ.15,000 மட்டுமே ஊதியமாக அளிக்கப்படுகிறது. ஊதியம் தவிர ஒரு சில சிறிய பயன்கள் இவர்களுக்கு அளிக்கப்பட்டாலும், இவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்பது கிடையாது. ஏதேனும் ஒரு அவசர காரணத்திற்காக இவர்கள் விடுப்பெடுத்தாலும், இவர்களது ஊதியத்தில் அதற்கு பிடித்தம் செய்யப்பட்டுவிடும். இதர துறைகளின் நிலைமை இதைவிட இன்னமும் மோசமானதாகும். 4000 துப்புறவு மற்றும் சுகாதார பணியாளர்களின் நிலைமை மிகவும் அவலமானது. இப்பணியில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள் ஆவர். இரவோ அல்லது பகலோ, எந்த நேரமும் சீருடை அணிந்த ஆண்களும், பெண்களும் கைகளில் துடைப்பக்கட்டைகளோடு சுத்தம் செய்து கொண்டிருப்பதனையும், கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதை உத்தரவாதம் செய்வதனையும் பார்த்திட முடியும். இவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் எவ்வளவு தெரியுமா...? ஒரு மாதத்திற்கு ரூ.6,500க்கும் குறைவான தொகையே இவர்களுக்கு அளிக்கப்படுகிறது என்பது வேதனையானது.  இவர்களுக்கு வேறு எந்த பயனும் கிடையாது,  ஈஎஸ்ஐ, வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) மட்டுமல்லாது, வாராந்திர விடுமுறையும்  கூட கிடையாது.
              இத்திருக்கோவிலை சுத்தம் செய்திடும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள ''சுலப் இண்டர்நேஷனல்'' என்ற நிறுவனத்தால் அடிமைகளாக இத்தொழிலாளர்கள் பணியிலமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பணிக்கான ஒப்பந்தத்தின் மதிப்பு இதுவரையில்  மிகவும் ரகசியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தும் இது குறித்த தகவல் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. எனினும், சட்டத்தின்படி, இத்தொழிலாளர்களின் இத்தகைய நிலைமைக்கு பிரதான பணியமர்த்துபவராக இக்கோவில் நிர்வாகமும் பொறுப்பாகும். பிரதான பணியமர்த்துபவர்களின் இத்தகைய பொறுப்பை வலியுறுத்தும் பிரிவை ராஜஸ்தான் மாநில வசுந்தர ராஜே அரசு நீக்கியதைப் போலவே தானும் நீக்கிட வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இலவசமாக உணவளித்திடும் இக்கோவிலின் உணவகங்களில் உணவு பரிமாறுபவர்களாகவும், சுத்தம் செய்பவர்களாகவும் பணி புரிபவர்களுக்கு ஒரு சில பயன்கள் கிடைக்கின்றன என்றாலும், இவர்களும் இது போன்ற பாரபட்சங்களை எதிர்கொள்கின்றனர். இங்கு பணியாற்றிடும் நிரந்தரத் தொழிலாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.25,000 ஈட்டிடும்போது, அதே வேலையை செய்கின்ற ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள இதர 600 தொழிலாளர்களுக்கு இதில் மூன்றில் ஒரு பகுதி தொகையே கிடைக்கிறது. இவை எல்லாவற்றையும் விட கொடுமையானது என்னவென்றால், இங்கு பணியாற்றுகிற நிரந்தரப் பணியாளர்கள் திருப்பதி வெங்கடாசலபதியை எந்த கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக தரிசித்திடலாம், ஆனால், ஒப்பந்தத் தொழிலாளர்கள் இதற்குக் கூட கட்டணம் செலுத்திட வேண்டும் என்பது தான் அந்த கொடுமை. ஆந்திரப் பிரதேச அரசால் நியமிக்கப்பட்ட ''திருப்பதி திருமலை தேவஸ்தான டிரஸ்ட்'' என்பது, ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களோடு, ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் தலைமையிலான செயலகத்தைக் கொண்டது. இவர்களே இக்கோவிலின் நிர்வாகத்திற்கு பொறுப்பானவர்கள் ஆவர். பக்தர்கள் தாராளமாக அளிக்கும் நன்கொடை வாயிலாக இக்கோவிலின் சொத்துக்கள் தொடர்ச்சியாக திரட்டப்பட்டு வருகிறது. பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் முடி கூட ‘விக்‘ தயாரிப்பாளர்களுக்கு மற்றும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்பனை செய்யப்படுவதன் வாயிலாக ஆண்டுதோறும் குறைந்தது ரூ.200 கோடிக்கும் மேல் வருமானமாக இக்கோவிலுக்கு கிடைக்கிறது.
         திருப்பதிக்கு வந்து செல்லும் பக்தர்கள் மனதில் அப்பயணத்தை நீங்கா இடம்பிடிக்கச் செய்திடும் தொழிலாளர்கள் மரியாதையோடும், கண்ணியத் தோடும் நடத்தப்படுவதனை கோவில் நிர்வாகமும், மாநில அரசும் உறுதி செய்திட வேண்டாமா....?

நன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா
தமிழில் - எம்.கிரிஜா
நன்றி : தீக்கதிர்

கருத்துகள் இல்லை: