இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இந்த நாட்டில் பல்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இங்கு வாழ்பவர்கள் அனைவரும் சமம். இந்திய நாட்டின் பிரதமர் என்பவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர் அனைத்து மதத்திற்கும் பொதுவானவர். பொதுவானவராகத் தான் நடந்துக்கொள்ளவேண்டும். அனைவருடனும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடந்துகொள்ளவேண்டும். அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியாக பணியாற்றவேண்டும். இதை தான் நம்முடைய அரசியலமைப்புச்சட்டம் சொல்கிறது. இதை உறுதிமொழியாக சொல்லித்தான் பிரதமர் முதல் அனைத்து அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் நரேந்திரமோடி இதே உறுதிமொழியை ஏற்று பிரதமாராக பதவி எற்றுக்கொண்டாலும், உறுதிமொழியை விட்டு கொஞ்சமும் தயக்கமில்லாமல் விலகிச்செல்கிறார் என்பதும், மதச்சார்பின்மையை விட்டு எப்போதும் போல் விலகி நிற்கிறார் என்பதும் அவரது அன்றாட நடவடிக்கைகளே நாட்டு மக்களுக்கு காட்டிக்கொடுக்கும். அந்த அளவிற்கு ஒளிவு மறைவில்லாத ஆர்.எஸ்.எஸ். - இந்துத்துவா கொள்கைப்பிடிப்புடன் தான் அவரது ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்கிறார் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
''வாரத்திற்கொரு திட்டம் - அதற்கொரு விழா'' - இது தான் மோடி மக்களை கவர்ந்திழுக்கும் பாணி. மோடி 2019 - ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இப்போதே ஆரம்பித்துவிட்டார்.
சென்ற வாரத்திட்டம் என்னன்னா...? ''கிராமப்புற வளர்ச்சித் திட்டம்'' - இந்த திட்டத்தின்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கிராமத்தை தத்தெடுத்துக் கொள்ளவேண்டுமாம். இல்லை... இல்லை... மோடி ஸ்டைலில் சொல்லவேண்டுமென்றால் கிராமங்கள் எம்பிக்களை தத்தெடுத்துக் கொள்ளவேண்டுமாம். அதன் மூலம் கிராமங்களை வளர்ச்சியடைய செய்யவேண்டுமாம். கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பொருளாதாரத்திற்கும் வழிகாட்டிய ''மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்திற்கு'' மூடுவிழா நடத்திவிட்டு, ''கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின்'' மூலம் கிராமத்தை எப்படி வளர்ச்சியடைய செய்யப்போகிறார் என்பது தான் நமக்கு விளங்கவில்லை.
மோடி இவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய வாரணாசி நாடாளுமன்றத்தொகுதியில் வாரணாசிக்கு 25 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் ஜெயாப்பூர் என்ற கிராமத்தை தத்தெடுப்பதாக ஒரு பெரிய விழா நடத்தி அறிவித்தார். அது இரண்டு வகையான பிரிவினரைக்கொண்ட சுமார் 4000 பேர்கள் மட்டுமே வாழும் ஒரு சிறு கிராமம் ஆகும். அதுல இருக்கிற விசேஷம் என்னவென்றால், ஏற்கனவே கடந்த 2002-ஆம் ஆண்டிலிருந்தே அந்த கிராமம் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிற கிராமமாம். அதுமட்டுமல்ல 4000 மக்கள் தொகை கொண்ட அந்த கிராமம் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லாத கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது. கூர்ந்து கவனிக்கத்தக்கது. இது தான் ஒரு மதச்சார்பற்ற நாட்டின் பிரதமரின் இலட்சணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக