கட்டுரையாளர் : தோழர். ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவர் தோழர் என். சங்கரய்யா. அவருடைய தந்தை 1911-இல் பம்பாய் சென்று கொதிகலன் பொறியியல் படிப்பை முடித்து மதுரையில் அரசுத்துறை பொறியாளராகப் பணியாற்றியவர். 1922-இல் பிறந்த சங்கரய்யா வழக்குரைஞராக வர வேண்டுமென்பது தந்தையாரின் விருப்பம். அவரும், தாத்தாவும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.
விடுதலைப்போராட்டம் வீறு கொண்டு எழுந்த நகரங்களில் ஒன்று மதுரை. அந்தப் போராட்டத்தில் மற்ற பகுதி மக்களோடு மாணவர்களும் ஈடுபட்டார்கள். அப்போது அந்நியர் ஆட்சியை எதிர்த்து அமெரிக்கன் கல்லூரி மாணவரான சங்கரய்யா அக்கல்லூரியில் கண்டனக் கூட்டம் நடத்தியதோடு, மதுரை நகரில் மாணவர்களைத் திரட்டி பெரும் ஊர்வலத்தையும் நடத்தினார். நாட்டின் அரசியல் விடுதலையோடு சமுதாய விடுதலையும் லட்சியமாகக் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். போராட்டத்தை ஒடுக்க முற்பட்ட அந்நியர் ஆட்சி நிர்வாகம் மாணவன் சங்கரய்யாவையும் கைது செய்தது. பட்டப்படிப்பின் இறுதியாண்டுத் தேர்வுக்கு 15 நாள்களே இருந்த நிலையில் கைது செய்யப்பட்ட சங்கரய்யா வேலூர் சிறையிலடைக்கப்பட்டார்.
சிறையில் அவருக்கு அரசியல் படிப்பு தொடர்ந்தது. தோழர்கள் ப. ஜீவானந்தம், வ.சுப்பையா, பி. சீனிவாசராவ், எம்.ஆர். வெங்கட்ராமன், வி.பி. சிந்தன் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களுடன், காங்கிரஸ் தலைவர்களும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். வேலூர் சிறையில்தான் காமராஜரை முதன்முதலாக சங்கரய்யா சந்தித்தார்.
18 மாதங்களுக்குப் பிறகு 1942 ஜூன் மாதம் தலைவர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். விடுதலையான பிறகு முழுநேரமாக சங்கரய்யா இயக்கப் பணிகளில் ஈடுபட்டார். பட்டப்படிப்பு இறுதித்தேர்வுக்கு சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட சங்கரய்யா தனது எதிர்காலம் பற்றி முடிவெடுக்க வேண்டிய அந்த முக்கியமான தருணத்தில், தனிப்பட்ட முறையில் தன்னுடைய சொந்தத் தேவைகள் பற்றிக் கவலைப்படாமல், நாட்டுக்கு சேவை செய்வதையே இலக்காகக் கொண்டு சிறை சென்றார்.
1942-இல் காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாளையங்கோட்டையில் மாபெரும் மாணவர் பேரணி நடைபெற்றது. அதில் தமிழ்நாடு மாணவர் சங்க பொதுச் செயலாளரான சங்கரய்யாவும் கலந்து கொண்டார். பேரணியைத் தடுத்த காவல்துறையினர் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் சங்கரய்யாவும் படுகாயம் அடைந்தார். நெல்லை மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து 1942 ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் சங்கரய்யா கைது செய்யப்பட்டு கேரளத்தில் உள்ள கண்ணனூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1944-இல் அண்ணல் காந்தி விடுதலையானபோதுதான் சங்கரய்யாவும் மற்ற கம்யூனிஸ்ட் தலைவர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள். மீண்டும் கட்சிப்பணியில் ஈடுபட்டபோது, கம்யூனிஸ்ட் கட்சியில் அன்றைய மதுரை மாவட்ட (மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல்) செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
1946-ஆம் ஆண்டு இந்தியாவை உலுக்கிய கடற்படை எழுச்சி பம்பாயில் தொடங்கி கல்கத்தா, சென்னை என்று அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது. கடற்படையிலிருந்த இந்திய வீரர்கள் அந்நிய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். அந்தப் போராட்டத்தை முறியடிக்க ஆங்கிலேய அரசு கடுமையான ஒடுக்குமுறையை ஏவிவிட்டது. இந்திய கடற்படை வீரர்களின் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவளித்தது. கடற்படை வீரர்களின் போராட்டத்தை ஆதரித்து மதுரையில் ஒரு பேரணியை சங்கரய்யா தலைமை தாங்கி நடத்தினார். பேரணியைக் கைவிடுமாறு அவரை காவல்துறை அதிகாரி துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். அதற்கெல்லாம் சங்கரய்யா பணியவில்லை. மதுரையில் முன்னைக்காட்டிலும் சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. அதில் கம்யூனிஸ்ட்டுகள் பிரதானமான பாத்திரம் வகித்தனர்.
இந்தப் பின்னணியில் தான் கம்யூனிஸ்ட்டுகள் மீது மதுரை சதி வழக்கு தொடுக்கப்பட்டது. தோழர்கள் பி. ராமமூர்த்தி, சங்கரய்யா, கே.டி.கே. தங்கமணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் 1946 டிசம்பரில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து, நாடு முழுவதும் மகிழ்ச்சியோடு சுதந்திரத்தை கொண்டாடத் தொடங்கிய 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவுதான் இந்தத் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
அந்த வழக்கிலிருந்து விடுதலையான பிறகு செப்டம்பர் 18 அன்று கட்சி அலுவலகத்தில் சங்கரய்யா ~ நவமணி திருமணம் பி. ராமமூர்த்தி தலைமையில் எளிமையாக நடைபெற்றது. இது சாதி மறுப்புத்திருமணம் மட்டுமல்ல, மத மறுப்புத் திருமணமும் கூட. ஆசிரியர் நவமணி பிராட்டஸ்டன்ட் கிறித்தவ குடும்பத்தைச் சார்ந்தவர். சங்கரய்யாவின் பெற்றோர்களுக்கு தொடக்கத்தில் இத்திருமணத்தை ஏற்பதில் தயக்கம் இருந்தாலும் அவருடைய உறுதியால் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டனர். சங்கரய்யா - நவமணி திருமணம் மட்டுமல்லாமல், அவர்களது பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கூட பெரும்பாலும் சாதி மறுப்புத் திருமணம் தான். ஆம், சங்கரய்யா வீட்டில் ஒரு சமத்துவபுரமே இருக்கிறது!
1948-ஆம் ஆண்டு கல்கத்தாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் 2-ஆவது அகில இந்திய மாநாடு நடந்தது. மாநாடு முடிந்தவுடன் நேரு அரசு கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதித்து ஆணையிட்டது. கல்கத்தாவிலேயே பல தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக சங்கரய்யா, பயணத்தின்போது ஒரிசாவில் இறங்கி அங்கிருந்து சில நாள்களில் தமிழகம் வந்து சேர்ந்தார். கட்சியின் கட்டளையை ஏற்று, கைதாகாமல் தலைமறைவாகவே இயக்கப் பணியாற்றி வந்தார். தலைமறைவாக இருந்துகொண்டு கட்சி வேலை செய்வது கடினமானது, ஆபத்து மிக்கது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, காவல்துறையினர் சங்கரய்யாவை கைது செய்தனர். பின்னர் நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் விடுதலையானதைத் தொடர்ந்து, 6 மாத சிறைவாசத்திற்குப் பிறகுதான் சங்கரய்யாவும் விடுவிக்கப்பட்டார்.
அடுத்து நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட சங்கரய்யா, மாநில மையத்திலிருந்து செயல்படுவதற்காக குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார். இந்நிலையில், 1962ஆம் ஆண்டு தோழர் சங்கரய்யா மறுபடியும் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறைப்படுத்தப்பட்டார்.
1964-ஆம் ஆண்டு கல்கத்தாவில் கட்சியினுடைய 7வது அகில இந்திய மாநாடு நடைபெற்று, அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. 1964 டிசம்பரில் கட்சியினுடைய மத்தியக்குழு கூட்டத்திற்குச் சென்றுவந்த பி. ராமமூர்த்தி, சுர்ஜித், பசவபுன்னையா ஆகியோருடன், சங்கரய்யாவும் கைது செய்யப்பட்டார். 16 மாதங்களுக்குப் பிறகுதான் விடுதலை செய்யப்பட்டார்கள்.
1967-இல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட சங்கரய்யா வெற்றிபெற்றார். 12 உறுப்பினர்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுவுக்கு சங்கரய்யாதான் தலைவர். சங்கரய்யா 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு செயலாற்றியிருக்கிறார்.
தோழர் சங்கரய்யா சிறந்த பேச்சாளர். அவருடைய கணீர் என்ற பேச்சு எவரையும் சுண்டி இழுத்து உணர்வூட்டக்கூடியது. ஒருமுறை பொதுவாக பேச்சு வன்மையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர், உள்ளத்தில் உண்மை உண்டாயின், வாக்கினிலே ஒளி உண்டாகும் என்றார்.
தன்னுடைய உடல்நலம் பாதித்ததால் மாநிலம் முழுவதும் சென்று சுறுசுறுப்பாக செயல்பட இயலாது என்று கூறி தன்னை மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று 2002ஆம் ஆண்டு அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அதன் பிறகும், இன்று வரையில் தன்னால் இயன்ற இயக்கப் பணியை தோழர் சங்கரய்யா நிறைவேற்றி வருகிறார்.
இன்று என். சங்கரய்யாவின் 93ஆவது பிறந்த நாள்.
நன்றி :
தினமணி
1 கருத்து:
வணக்கம்
இவரின் வாழ்க்கை சரித்திரத்தைமிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.. தங்களின் பதிவு வழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கருத்துரையிடுக