செவ்வாய், 29 ஜூலை, 2014

மருத்துவக்கல்லூரியையே ஆக்கிரமித்த ''குப்பை உணவுகள்''

                       நேற்று எங்கள் செல்ல மூத்த மகள் ஹரிணி பாண்டிச்சேரி மருத்துவக்கல்லூரியில் முதலாண்டு மருத்துவப்படிப்பில் சேர்த்துவிட்டு, அப்படியே கல்லூரியின் சுற்றுச்சூழல்களையும், மகளோடு கூடப் படிக்கும் மற்ற பிள்ளைகளையும் பார்க்கலாமென்று நானும், என் மனைவியும் எங்கள் மகளோடு கல்லூரிக்கு சென்றோம். எங்கள் மகளை முதலாண்டு வகுப்பறையில் விட்டுவிட்டு நாங்கள் இருவரும் அந்தக் கல்லூரியின் வளாகத்தை சுற்றிவந்தோம். அப்பப்பா... ஏகப்பட்ட மரங்கள் அந்தப் பகுதியே குளிர்ச்சியாக தான் இருந்தது. வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நாங்களும் காரில் தான் சென்றோம். ஆனால் கார் எங்களுடையது இல்லை. எங்கள் வீட்டில் குடியிருக்கும் இஸ்லாமியக் குடும்பத்தை சேர்ந்தது. வீட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் இரு சக்கரவாகனத்தில் செல்லவேண்டாம், எங்கள் காரை தருகிறோம், மூவரும் காரில் சென்று வாருங்கள் என்று எங்களை அனுப்பிவைத்தார். நாங்களும் பெருமையாக காரில் சென்று இறங்கினோம். இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி சொல்லணும். 
              அப்படியாக சுற்றிப்பார்க்கும் போது ''காண்டீன்'' என்று எழுதப்பட்ட இரண்டு உணவகங்களும், பலவகையான உணவுப்பொருட்களின் பாக்கெட்டுகளை தோரணமாக தொங்கவிடப்பட்ட பெட்டிக்கடையும், ப்ரு காபி கடையும் என பன்னாட்டு உணவுப்பொருட்கள் மட்டுமே கொண்ட உணவகங்கள் தான் அங்கு இருக்கின்றன என்பதைப் பார்க்கும் போது  ஆச்சரியமாகவும் இருந்தது. அதை விட அதிர்ச்சியாகவும் இருந்தது. இந்த ''குப்பை உணவுகள்''  ஒரு மருத்துவக்கல்லூரிக்குள் நுழைந்தது எப்படி...? அல்லது  அனுமதிக்கப்பட்டது எப்படி...? என்று தான் புரியவில்லை. அந்த  குர்குரே, சார்லி, லேஸ், பெப்சி, கோகா கோலா, பிஸ்கட் வகைகள், சாக்லேட் வகைகள், கேக் வகைகள், ஐஸ் க்ரீம் என அனைத்துவகையான ''குப்பை உணவுகள்'' தான் ஆக்கிரமித்திருக்கின்றன. இன்றைக்கு கல்லூரி மாணவர்களின் நாகரீகமே இது மாதிரியான ''குப்பை உணவுகளை'' சாப்பிடுவது தான். அந்த நாகரீகத்தை தான் அங்கிருக்கின்ற உணவகங்கள் காப்பாற்றுகின்றன...! காசாக்குகின்றன...! அங்குள்ள மாணவர்கள் கோக் பாட்டிலோடு அலைவதைப் பார்க்கும் போது, யார் வீட்டு புள்ளைங்களோ இப்படி குடிச்சிக்கிட்டு அலையுதேன்னு நமக்கு கோபம் தான் வருகிறது.
               ஆனால் இவைகளையெல்லாம் பார்க்கும் போது இன்னொரு பாகம் ஆச்சரியத்தை தான் வரவழைத்தது. ''குப்பை உணவுகளை'' சாப்பிடாதீர்கள் என்று அறிவுறுத்துகின்ற மருத்துவர்களை உருவாக்கும் மருத்துவக்கல்லூரியில் இதுபோன்ற பொருட்களின் விற்பனை எப்படி அனுமதிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட உணவுப்பொருட்களை சாப்பிடுவதால் உண்டாகும்  நோய்களை பற்றி அறிவுப்பூர்வமாகவும், அறிவியல்பூர்வகாவும்  சொல்லித்தரப்போகும் மருத்துவக்கல்லூரியிலேயே மாணவர்களிடமே   அந்த உணவை விற்பனை செய்வது என்பது முறையாகும் என்று தான் தெரியவில்லை.
            அத்தகைய ''குப்பை உணவுகளை'' சாப்பிடுவதால், உடல் பருமன் நோய், மன அழற்சி நோய், இதய நோய், சர்க்கரை நோய், வயிற்றுப்புண் போன்ற நோய்கள் அவர்கள் அழைக்காமலேயே வந்துவிடும். நோய்கள் வராமல் தடுப்பது பற்றியும், வந்த நோய்க்கு மருத்துவம் பார்ப்பது பற்றியும் படிக்கிற மாணவர்களுக்கே நோய்களை உண்டுபண்ணுகிற ''குப்பை உணவுகளை'' விற்பனை செய்வது என்பது சரியாகுமா...? முறையாகுமா...?

கருத்துகள் இல்லை: