கட்டுரையாளர் : தோழர். பிரகாஷ் காரத்
பொதுச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
பொதுச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தேர்தல் பிரச்சாரம் மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு
இடையிலேயே, முதலாளித்துவ ஊடகங்களில் சில, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மீது சேற்றை வாரிவீசுவதற்கும் தவறவில்லை. ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இதே
ஏப்ரல் மாதத்தில் தான் அன்றைக்கு இருந்த ஒன்று பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சியின் தேசியக் கவுன்சில் கூட்டத்திலிருந்து 32 உறுப்பினர்கள்
வெளிநடப்பு செய்து, அதன் பின்னர் சில நாட்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியை அமைத்தார்கள்.
1964 ஏப்ரல் 11 அன்று இது நடந்தது.
அதன் ஐம்பதாம் ஆண்டின் தொடக்கத்தைக் கொண்டாட இருக்கும் நிலையில்,
முதலாளித்துவ ஊடகங்கள் நம் கட்சி துவங்கிய 50ஆம் ஆண்டு தினத்தினை நினைவு
கூர்வதுபோல் நினைவுகூர்ந்து நம்மீது தாக்குதல் தொடுக்க தயங்கவில்லை. ஒரு
முன்னணி மலையாள நாளிதழ், இது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறது.
“கொள்கைகளும் தோல்விகளும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 50 ஆண்டுகளை
வீணடித்துவிட்டது.’’ (2014 ஏப்ரல் 12) என்று தலைப்பிட்டு மார்க்சிஸ்ட்
கட்சிக்கு எதிராக மிகவும் விரிவான முறையில் கதை புனைந்திருக்கிறது.
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சிக்கான காரணங்கள் குறித்து பல்
வேறு கதைகளை அது அளந்துவிட்டு, கடைசியாக அது “மார்க்சிஸ்ட் கட்சி வர்க்கங்
களின் இயற்கை குணம் மாற்றங்கள் அடைந்திருப்பதை கணக்கில் கொள்ளாததால்
அதனால் முன்னேறிச்செல்ல முடியாமல் இருக்கிறது,’’ என்று
குறிப்பிட்டிருக்கிறது. இந்தியாவில் வெளியாகும் `இளஞ்சிவப்பு’ முன்னணி
செய்தித்தாள்களில் ஒன்று தன்னுடைய தலையங்கத்தில், “வரலாற்றை எதிர்
கொள்ளல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய 50ஆம் ஆண்டு விழாவைத்
தொடங்குகையில் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது’’ என்று
குறிப்பிட்டிருக்கிறது. சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்வது
வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
உண்மையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி இதைத்தான் துல்லியமாகக் கோருகிறது. புதிய சவால்களை அடையாளம் கண்டு
அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் விழைவு. ஆயினும் அந்நாளேடு தன் தலையங்கத்தில் மேலும்
அடிக்கோடிட்டுக் கூறியிருப்பது என்ன தெரியுமா? “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி அதனுடைய வரலாற்றில் மாபெரும் சவாலை எதிர்நோக்கி இருக்கிறது. அதாவது,
இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமற்ற ஒன்று என்கிற அச்சுறுத்தலை அது
எதிர்கொண்டிருக்கிறது.’’ ஏன்?...“ஏனெனில், அதன் தலைமை இன்றைய காலகட்டத்தில்
ஏற்பட்டுள்ள தொழில்நுட்பம் மற்றும் தொழி லாளி வர்க்கத்தின் குணாம்சங்களில்
ஏற்பட்டுள்ள மாற்றங்களை அது கண்டுகொள்ளவில்லை.’’இவ்வாறு நம்மீது விமர்சனம்
செய்துள்ளவர்கள் எழுப்பியுள்ள பிரச்சனைகளின் சாராம்சத்தை எடுத்துக்
கொள்வதற்கு முன்பு, ஒன்றை அடிக்கோடிட்டுச் சொல்வது அவசியமாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது எப்போதுமே காலந்தோறும் மாறி வரும்
ஒவ்வொரு அம்சத்தையும் உன்னிப்பாகக் கவனித்து அதற்கேற்ற விதத்தில் தன்
கொள்கைகளை கோட்பாடுகளை அமைத்து, அதன் அடிப்படையில் தான் கொள்கைகளை
நடைமுறையில் பின்பற்றி வந்திருக்கிறது. மார்க்சிய - லெனினியத்தின்
உயிரோட்டமான சாராம்சம் என்பதே துல்லியமான நிலைமைகளின் துல்லியமான
ஆய்வுதான். அதன் அடிப்படையில்தான் அது செயல்பட்டுக் கொண்டு வந்திருக்கிறது.
நிலைமைகள் தொடர்ச்சியாக மாறுவதால், அதற்கேற்ற விதத்தில் மார்க்சிய நுண்ணாய்வையும் மாற்ற வேண்டியிருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறுமேயானால்,
உண்மையில், நாம் மார்க்சியத்தையே - அதன் புரட்சிகர உள்ளடக்கத்தையும்,
அதனுடைய விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுக் கோட்பாட்டையுமே -
மறுதலித்தவர்களாகிறோம். மார்க்சியம் மிகவும் விஞ்ஞானப்பூர்வமானது என்பதையும், எனவே, ஓர் ஆக்கப்பூர்வமான விஞ்ஞானம் எப்போதுமே வறட்டுத்தனமின்றி
இயல்பானதாகவும், இயற்கையானதாகவும், மெய்யானதாகவும் இருந்திடும் என்பதையும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் உயர்த்திப்பிடித்தே
வந்திருக்கிறது.
ஆம். இந்த அடிப்படையில்,நம்முடைய சமூகக்
கட்டமைப்பில் பல்வேறு வர்க்கங் களின் இயக்கத்தில் ஏற்படும் துல்லியமான
மாற்றங்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக, முதலாளித்துவத்தின் வளர்ச்சியானது, முழுமையாக முதலாளித்துவக்
கட்டமைப்புக்குள் இன்னமும் மாறாத பல்வேறு சமூக அடுக்கு களைக் கொண்ட
நம்முடைய அமைப்பின்மீது - அதாவது சாதிய அடுக்குகளும் மற்றும் அதன்
தொடர்ச்சியாக எழும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்குமுறையை ஏவி, அதீதமான அளவில் ஆதிக்கம் செலுத்த முன்வருகையில், இது மிகவும்
அவசியமாகிறது. ஆனால் இந்த விமர்சகர்கள் முன்வைக்கும் விஷயம் அப்படியானதல்ல.
அவர்கள் கூறும் விமர்சனங்கள் வேறானவைகளாகும்.
நவீன தாராளமயக்
கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் ’மேதைகள்’ இப்போது சொல்வது என்ன? காரல்
மார்க்ஸ் காலத்தில் இருந்த முதலாளித்துவத்தின் கீழ் இருந்த தொழிலாளி
வர்க்கத்தின் குணாம்சம் இன்றுள்ள தொழிலாளி வர்க்கத்துக்குக் கிடையாதாம்.
அன்றைக்கு இருந்ததுபோல் கரத்தால் உழைக்கும் தொழிலாளர்கள் அளவிலும் மற்றும் பல்வேறு வகையினர் கலந்து பணியாற்றுவதிலும் இன்றைக்குக்
குறைந்து விட்டார்களாம். எனவே, காரல் மார்க்சும் ஏங்கெல்சும் உலகை
மாற்றிட, முதலாளித்துவத்தை புரட்சிகரமான முறையில் தூக்கி எறிய, தங்களு டைய
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் முன்வைத்த, “உலகத் தொழிலாளர்களே,
ஒன்றுபடுங்கள், நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை, உங்கள் அடிமைச்
சங்கிலியைத் தவிர,’’ என்கிற முழக்கம் இனிப் பொருந்தாதாம். ஏனெனில்
தொழிலாளர் வர்க்கத்தில் பெரும்பகுதியினர் முதலாளித்துவ அமைப்பின் ஓர்
அங்கமாகவே மாறிவிட்டார்களாம், முதலாளித்துவச் சுரண்டலின் அடிமைத்தளையிலிருந்து வெளியேறி அவர்கள் செய்ய வேண்டியது நிறையவே இருக்கிறதாம்.
சுருக்கமாகச்
சொல்வதென்றால், இவ்வாறு விமர்சிப்பவர்கள் கூறவரும் கருத்து இதுதான்:
“மார்க்ஸ் காலத்திலிருந்த தொழிலாளி வர்க்கத்தின் குணம் இன்றையதினம் மாறி
விட்டதால், நவீன தாராளமய உலகமயக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படும் இன்றைய
சூழ்நிலைக்கு மார்க்சியம் பொருந்தாது. இந்த ’எதார்த்தத்தை’ மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க மறுப்பதால், அக்கட்சியும் இன்றைய கால கட்டத்திற்கு
பொருந்தாத ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. இதுதான் அக்கட்சி இன்றைய தினம்
எதிர்கொள்ளும் மாபெரும் சவாலாகும்.’’ ஆனால் உண்மை நிலைமை என்ன? உலக
முதலாளித்துவம் கடந்த ஆறு ஆண்டுகாலமாக தொடர்ந்து நெருக்கடிக்குள் சிக்கி
வெளிவர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மார்க்சியம்
இன்றைக்கும் பொருத்த முடையதே என்று உரத்தகுரலில் பிரகடனம் செய்கிறது.
உலகப் பொருளாதாரத்தையே சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும் தற்போதைய
நெருக்கடியைப் புரிந்து கொள்ளவும் ஆய்வு செய்யவும் காரல் மார்க்சின்
மூலதனத்தின் பிரதிகள் வேண்டும் என்று வாடிகனிலிருந்து தகைசான்ற போப் ஆணை
பிறப்பித்தாரே, அது ஒன்றும் தற்செயலாக ஏற்பட்ட விபத்தல்ல.
ஆயினும்,
இன்றைய நெருக்கடிக்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டுமானால் மார்க்சியத்தை
நன்கு கற்ற ஒருவராலேயே அதனைச் செய்திட முடியும். தொடர்ந்து இருந்து வரும்
உலகப் பொருளாதார நெருக்கடியும், உண்மையில் அத்தகைய நெருக்கடிக்கான ஆணி வேர்
எது என்பதையும், சர்வதேச நிதி மூலதனத்தின் உயர்வையும், இன்றைய உலக நாடுகள்
பலவற்றிலும் நவீன தாராளமயப் பொருளாதார ஒழுங்கை நிலைநிறுத்துவதில் அது
மேற்கொள்ளும் மேலாதிக்கப் பங்களிப்பினையும் மார்க்சியத்தால் மட்டுமே
புரிந்துகொள்ளப்பட்டு விளக்கப்பட முடியும். அமெரிக்காவில் சமீபத்தில்
நடைபெற்ற “வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்’’ இயக்கம் கம்யூனிஸ்ட்
கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று அல்ல. எனினும் தன்னெழுச்சியாக
நடைபெற்ற இந்த இயக்கத்தின் இறுதியில் சுயேச்சையாக எடுக் கப்பட்ட முடிவு
என்ன? “இந்தக் கிளர்ச்சிகள் `அமைப்புக்குள் உள்ள கோளாறு’க்கு எதிராக அல்ல,
மாறாக இந்த “அமைப்பே கோளாறானது’’ அதாவது “முதலாளித்துவ அமைப்பே
கோளாறானது’’ என்றும் அதற்கு எதிராகவே இது நடைபெற்றுள்ளது என்றும்
முடிவுக்கு வந்தது. இதே மாதிரி புரட்சிகரமான முடிவுக்குத்தான்
மார்க்சியமும் வருகிறது.
இந்தக் கோளாறான அமைப்புமுறை தூக்கி
எறியப்படும்போது மட்டுமே மனித சமூகம் ஒட்டுமொத்தமாக விடுதலை அடைய முடியும்.
ஆனால் நவீன தாராளமயக் கொள்கை யைப் பூஜிப்போருக்கு இது வெறும்
தெய்வநிந்தனையாகவே தோன்றும். எனவேதான் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியை இன்றையதினம் `பொருந்தாத’, `பொருத்தமற்றதான’ கட்சியாக இகழ்ந்துரைக்
கிறார்கள்.மேலும், தொழிலாளர் வர்க்கத்தின் சேர்மானத்தில் மாற்றங்கள்
ஏற்பட்டிருந்த போதிலும், கரத்தால் உழைப்பவர்கள் எண் ணிக்கை குறைந்து, அந்த
இடத்தை கருத்தால் உழைப்பவர்கள் நிரப்பியிருந்த போதிலும், (மனிதகுல
நாகரிகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுகையில் இது சாத்தியமே)
முதலாளித்துவத்தின் இயல்பான குணம் - அதாவது மனிதனை மனிதன் சுரண்டும் குணம் -
அதன் முதுகெலும்பாகத் தொடர்ந்து இருந்து வருவது இன்றைக்கும் மாறாததோர்
உண்மை அல்லவா? ஏனெனில், சுரண்டல் என்பது முதலாளித்துவ உற்பத்தியுடன்
இணைபிரியா ஒன்றல்லவா?இது ஏன்? ஏனெனில், முதலாளித்துவ உற்பத்தி நடைமுறையின்
அடிப்படையே சுரண்டல்தான்.
உற்பத்தி செய்யப்படும் பொருளின்
மதிப்பில், அந்தப் பொருளை உற்பத்தி செய்த தொழிலாளியின் பங்களிப்பு
எப்போதுமே அவருக்குக் கொடுக்கப்படும் ஊதியத்தின் மதிப்பைவிட அதிகமாகத்தான்
இருக்கும். இந்த வித்தியாசம்தான் முத லாளித்துவ உற்பத்தி முறையில்,
தொடர்ந்து உபரி மதிப்பை உற்பத்தி செய்கிறது. இந்தஉபரிமதிப்பைத்தான்
முதலாளிகள் லாபம்என்ற பெயரில் தமதாக்கிக் கொள்கிறார்கள். எனவே, தொழிலாளி,
கருத்தால் உழைப் பவரா அல்லது கரத்தால் உழைப்பவரா என்பதே இங்கே பிரச்சனை
இல்லை. எவரா யிருந்தாலும் அவரைச் சுரண்டுவது என்பதே முதலாளித்துவத்தின்
குணம். எனவே, இந்த முதலாளித்துவ அமைப்பு முறையை முற்றிலுமாகத் தூக்கி
எறிவதன் மூலம் மட்டுமே, இத்தகைய சுரண்டலிலிருந்து, மனிதகுலத் திற்கு
விடுதலையைக் கொண்டு வர முடி யும். இத்தகைய அறிவியல்பூர்வமான உண்மை யை நவீன
தாராளமயத்திற்கு வக்காலத்து வாங்கும் `மேதை’கள் ஒப்புக் கொள்ள மனம் வராது,
வெறுப்பார்கள். எனவேதான் அதனை மறைப்பதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி இன்றைய தினம் பொருத்தமற்றதாக மாறிவிட்டது என்று நம்மீது
பாய்கிறார்கள்.இத்தகைய விமர்சகர்களின் மற்றொரு வகையான செயல்பாடு என்பது,
முதலாளித்துவ சுரண்டல் அமைப்பின் அடித்தளங் களைப் பாதிக்காத விதத்தில்
பல்வேறு அரசுசாரா அமைப்புகள் நடத்தக்கூடிய இயக்கங்களை ஊக்குவிப்பதும்
மற்றும் ஆதரிப்பது மாகும். அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் அல்லது
ஆம் ஆத்மி கட்சிக்கு கார்ப்பரேட் ஊடகங்கள் அளித்த அளவுக்கு மீறிய
விளம்பரம், ஆகியவற்றிலிருந்தே இதனை நாம் தெரிந்துகொள்ள முடியும்.
அன்னா
ஹசாரேயின் உண்ணாவிரதம் நடைபெற்ற அதே சமயத்தில்தான் இடதுசாரிக் கட்சிகள்
அவர் முன்வைத்த அதே கோரிக்கைகளுக்காக பிரம்மாண்டமான முறையில் மக்கள்
இயக்கங்களை நடத்தின. ஆனால் அவை குறித்து அநேகமாக எதையுமே அவை கூறவில்லை.
அல்லது பெயரளவில் ஒருசில நொடிகள் கூறும். காரணம் என்ன? ஏனெனில், இடதுசாரிக்
கட்சிகளைப்போல அல்லாமல், முதலாளித்துவ அமைப்பின் அடித்தளங்களான சுரண்டல்
மற்றும் ஒடுக்கு முறை ஆகியவற்றின் மீது அவை கைவைப்பதில்லை.
முதலாளித்துவத்திற்கு, அதனுடைய அடித்தளத்தின் மீது கைவைக்காமல் இயங்கும்
அனைவருமே உன்னதமானவர்கள் தான், அவர்களை தூக்கி வைத்து அது கொண்டாடும்.
எனவேதான், அது, ‘ஊழலை ஒழிப்போம்’, ‘நேர்மையான அரசியல்’ போன்று இயக்கம்
நடத்தும் அனைத்து அமைப்புகளையுமே அவை வரவேற்கும். ஆனால், அதே சமயத்தில்,
இடதுசாரிகளைத் தனிமைப்படுத்திட வேண்டும் என்பதில் அவை குறியாக இருக்கும்.
ஏனெனில், இடதுசாரிகள் இந்த அமைப்பையே கேள்விக்குறியாக்குவது தொடர்வதும்,
இந்த அமைப்புக்கு மாற்று ஏதும் இல்லை என்று கூறுவதை இடதுசாரிகள் ஏற்க
மறுப்பதும்தான் காரணங்களாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப்
பொறுத்தவரை, இந்த முதலாளித்துவ அமைப்புக்கு மாற்று உண்டு என்றும், சோசலிச
அமைப்பே அதற்கு மாற்று என்றும் பிரகடனம் செய்கிறது.நம் வளர்ச்சியில்
அக்கறையுடன் நம் கொள்கைகளையும் நம் செயல்பாடுகளையும் நடுநிலையுடன்
விமர்சிப்பவர்களை நாம் வரவேற்கிறோம். ஆனால் அதே சமயத்தில், “குழந்தை
அழுக்காகிவிட்டதே என்று தண்ணீர் தொட்டிக்குள்ளே தூக்கி எறிவது’’ போன்று
விமர்சிப்பவர்களுக்கு நாம் கூறும் பதில், அத்தகைய விமர்சனங்களை ஏற்க
முடியாது என்பதும் அவற்றிற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்பதுமேயாகும்.
அதனால்தான், நாட்டில் தற்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில்,
நாட்டு மக்களின் பிரச்சனைகளையும் அவற்றிற்குத் தீர்வு மாற்றுக்
கொள்கைகளின் அடிப்படையில் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதுமேயாகும்
என்றும் அதன் அடிப்படையில்தான் நாட்டின் பெரும் பகுதி மக்களின்
வாழ்வாதாரங்களை மேம்படுத்த முடியும் என்றும் இடதுசாரிகள் பிரச்சாரம்
செய்து வருகின்றனர். கார்ப்பரேட் ஊடகங்களோ இத்தேர்தல் களத்தை
’தனிநபர்’களைத் தேர்வு செய்வது என்ற அளவிற்கு சுருக்கிக் கொண்டுள்ளன.
கோடிக்கணக்காக வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் நாட்டு மக்களுக்கு நிவாரணம்
அளிக்கக்கூடிய வகையில் மாற்றுக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டிய அரசாங்கம்
அமைய வேண்டும் என்பது குறித்து அவற்றிற்கு அக்கறை ஏதும் இல்லை.
மாறாக,
`தலைவர்கள்’ பிரச்சாரத்தின் போது ஒருவர்கொருவர் தனிப்பட்டமுறையில் கூறும்
கருத்துக்களைத்தான் அவை உயர்த்திப்பிடிக்கின்றன. மக்களைப் பாதிக்கும்
உண்மையான பிரச்சனைகள் குறித்து அவை கொஞ்சமும் கவலைப்படவில்லை. இன்னும்
சரியாகச் சொல்வதென்றால் அவற்றை அவை மிகவும் அருவருப்பாகவே கருதுகின்றன.
நம் ஜனநாயக அமைப்பில் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் ஊடகத்துறை, நவீன
தாராளமயக் கொள்கைகள் மனிதாபிமானமற்ற முறையில் மக்களைச்சுரண்டிக்
கொண்டிருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவர மறுப்பதோடு மட்டுமல்லாமல்,
மிகப்பெரிய அளவில் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளாக மாறிக் கொண்டிருப்பது
மிகப் பெரிய அவலமாகும்.அதிர்ஷ்டவசமாக, நாட்டு மக்கள் இவற்றை நன்கு
புரிந்து வைத்திருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் சிறந்ததோர் இந்தியாவை
உருவாக்கக்கூடிய விதத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் நலம்
பயக்கக்கூடிய விதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காட்டிடும்
மாற்றுத் திசைவழி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழில்: ச.வீரமணி
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக