வியாழன், 16 ஜூன், 2011

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்...!

பெண்களுக்கு எதிரான கொடுமைகள்: இந்தியாவுக்கு 4வது இடம்

            உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத வரிசையில் இந்தியா நான்காவது இடத்தை வகிக்கிறது. பெண் சிசுக்கொலை, பெண் குழந்தைகள் கடத்தல் ஆகியவை இந்தியாவில் அதிகம் நிகழ்வதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

          லண்டனில் இயங்கி வரும் ''டிரஸ்ட்லா'' என்ற நிறுவனம் உலக அளவில் பெண்கள் நிலைமை குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் வரிசையில் முதலிடத்தில் ஆப்கானிஸ்தானும், இரண்டாவது இடத்தில் காங்கோவும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானும், நான்காவது இடத்தில் இந்தியாவும் உள்ளன என்று தெரியவந்துள்ளது. ஐந்தாவது இடத்தில் சோமாலியா உள்ளது.

             பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் முதல் ஐந்து இடங்களில் மூன்று நாடுகள் தெற்காசிய நாடுகளாக உள்ளன. பாலியல் கொடுமைகள், சுகாதாரச் சீர்கேடு, பாலின பாகுபாடு, பண்பாட்டு ரீதியிலான சித்ரவதைகள், மூட நம்பிக்கை அடிப்படையிலான கொடுமைகள், மதம் மற்றும் ஜாதியின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அதிகம் நடைபெறுகின்றன என்று அந்த ஆய்வு கூறுகிறது.

         இந்தியாவை பொறுத்தவரை பெண் சிசுக்கொலை, பெண் குழந்தைகள் கடத்தல் ஆகியவை அதிகமான அளவில்  நடைபெறுகின்றன என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டில் இந்தியாவில் ஒரு கோடி குழந்தைகள் கடத்தப்பட்டதாக மத்திய உள் துறை செயலாளர் மதுகர் குப்தா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டு நடந்த குழந்தைகள் கடத்தல் சம்பவங்களில் 90 சதவீதம் இந்தியாவிற்குள்ளும், 10 சதவீதம் வெளிநாட்டிற்கும் கடத்தப்பட்டதாகும். இந்தியாவில் 30 லட்சம் பெண் குழந்தைகள் கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும், இவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் மத்திய புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

            பெண்களை இளம் வயதிலேயே கட்டாயப்படுத்தி மணம் செய்து வைப்பது, கவுரவக்கொலைகள் ஆகியவையும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளாக இந்தியாவில் அன்றாடம் நிகழ்கின்றன. பாலின சமத்துவ மின்மையும் அதிகரித்து வருகிறது. அண்மையில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஆண் - பெண் வகிதம் 1000: 914 என்ற விகிதத்திலேயே 
உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 பெண்கள் சுகாதாரம் - மருத்துவம்  பற்றிய ஆய்வு : 

                உலக சுகாதார நிறுவனம் உலகத்தில் உள்ள 135 நாடுகளில் நடத்திய ஆய்வின் படி,  பெண்கள் சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் அக்கறை காட்டும் நாடுகளில் இந்தியா 133 - வது இடத்தில் உள்ளது என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும். இதில் இலங்கை  16 -வது இடத்திலும்,
பங்களாதேஷ்  33 - வது  இடத்திலும் இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. அதுமட்டுமல்ல, இந்தியப் பெண்களில் 51 சதவீதத்திற்கும் அதிகமானோர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மிகக் கொடுமையானது. 


 ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு :                      

             சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் கடந்தும் பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெணகளுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா  இன்னும் நிறைவேற்றப் படாமல் இருப்பது பெண்களுக்கெதிரான ஆட்சியாளர்களின் ஆணாதிக்கச் சிந்தனையை தான் காட்டுகிறது.

                  இனியாவது  "தையலை உயர்வு செய்"  என்ற பாரதியின் கட்டளையை ஏற்று நடப்போம்.   

கருத்துகள் இல்லை: