வெள்ளி, 17 ஜூன், 2011

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தொடரும் ஊழல்களின் அணிவகுப்பு......

கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய் தளத்தில் ரூ.45 ஆயிரம் கோடி சூறை  ரிலையன்ஸ் எரிவாயு ஊழல்
            2 ஜி அலைக்கற்றை, விண்வெளி அலைக்கற்றை,  காமன்வெல்த் விளையாட்டு, பிரச்சார் பாரதி, மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு போன்றவற்றில் அரசுக்கு வரவேண்டிய வருமானத்தில் நட்டத்தை உண்டாக்கி, பெருமுதலாளிகளும், மத்திய அமைச்சர்களும், காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டுவதற்கு மன்மோகன் சிங் கண்டுகொள்ளாமல் வாய்ப்பளித்த விவரங்கள் ஒவ்வொன்றாக பூதம் போல் கிளம்பி வெளியே வருவதைப் பார்த்து இந்திய மக்களே அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

         சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக -  வரலாறு காணாத ஊழல்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியே வர வர மன்மோகன் ஆட்சியின் லட்சணம் மக்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது. இன்றைக்கு ஊழல்களின் அணிவகுப்பில் சிக்கித்திணறிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மத்திய அரசின் கருவூலத்திற்கு ரூ.45 ஆயிரம் கோடி அளவிற்கு மிகப்பெரும் இழப்பை 
ஏற்படுத்தி அம்பானியின் ரிலையன்ஸ் கம்பெனி நடத்தியுள்ள மிகப்பெரும் எரிவாயு ஊழலிலும் சிக்கியுள்ளது.

        மன்மோகன் சிங் அரசின் பெட்ரோலியத்துறை அதிகாரிகளும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் சட்டத்தை ஏமாற்றி ரூ.45 ஆயிரம் கோடி அளவிற்கும் அதிகமாக மக்கள் பணத்தை சுருட்டியிருப்பதை மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கையகம் ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது.
       நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த அனைத்து ஊழல்கள் தொடர்பாகவும் தொடர்ந்து மவுனம் காக்கும் பிரதமர் மன்மோகன் சிங், ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தியுள்ள எரிவாயு ஊழல் தொடர்பாக நாட்டு மக்களுக்கு அவசியம் பதில் சொல்லியே தீரவேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

          ஆந்திரா-ஒரிசா எல்லையை யொட்டி கிருஷ்ணா-கோதாவரி ஆறுகளின் கழிமுகப்பகுதியில் மிகப்பெரும் பெட்ரோலியம்- இயற்கை எரிவாயு வளம் குவிந்திருக்கிறது. இந்த பகுதியில் அரசு பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும், உள்நாட்டில் கிடைக்கும் இந்த மகத்தான வளத்தை கொள்ளையடித்து தனது லாபத்தை பெருக்க, பெரும் முதலாளியான முகேஷ் அம்பானி முடிவு செய்தார். இந்த பொதுச்சொத்தை பயன்படுத்துவதில் முகேஷ் அம்பானிக்கும், அனில் அம்பானிக்கும் இடையே மோதல் கூட ஏற்பட்டது. முதலாளிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலை பிரதமர் மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரம் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களும் ஓடோடிச்சென்று தீர்த்து வைக்க முற்பட்டார்கள் என்பது வெட்கக்கேடான தனிக்கதை.

       இந்நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கிருஷ்ணா - கோதாவரி இயற்கை எரிவாயு தளத்தில் (கேஜி கேஸ் பேசின்) மிகப்பெரிய 18 எரிவாயுக்கிணறுகளை, அரசிடம் ஒப்பந்தம் போட்டு பயன்படுத்தத் துவங்கியது. ஒரு குறிப்பிட்ட காலம் பயன்படுத்திவிட்டு-அதிலிருந்து பெட்ரோலியத்தையும் இயற்கை எரிவாயுவையும் எடுத்து 
கொள்ளை லாபம் பார்த்துவிட்டு- பின்னர் இந்தக்கிணறுகளில் பெட்ரோலியமோ அல்லது இயற்கை எரிவாயுவோ கண்டு பிடிக்கப்படவில்லை என்று கூறியது. அதைத்தொடர்ந்து இதில் பெருமளவில் மூலதனச் செலவு செய்துவிட்டதாகக் கூறி, பெட்ரோலியத்துறை யிடமிருந்து மிகப்பெருமளவிலான தொகையை கறந்து விட்டது. இந்தத்தொகையின் அளவு ரூ.45 ஆயிரம் கோடி என்று அதிர்ச்சிதரத்தக்க அறிக்கை ஒன்றை மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கையகம் தயாரித்துள்ளது.

          193 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையின்படி, கிருஷ்ணா கோதாவரி எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளில் உற்பத்தியை பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தங்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கும், பெட்ரோலிய அமைச்சகத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர், சம்பந்தப்பட்ட எரிவாயு கிணறுகளை மீண்டும் அரசிடம் ஒப்படைக்காமல், ஒப்பந்தக்காலம் முடிந்த பின்னர் அதே கிணறுகளில் தனது தந்தை பெயரில் திருபாய் 1 மற்றும் திருபாய் 3 என சுத்திகரிப்பு ஆலைகளை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அமைத்தது. எண்ணெய் வளம் கொழிக்கும் கேஜி - டி6 பிளாக் எனப்படும் தளத்தை சட்டவிரோதமாகக் கைப்பற்றியே ரிலையன்ஸ் நிறுவனம் தனது சொந்த ஆலைகளை அமைத் தது. இப்படிச் செய்ததன் மூலம் அரசு நிறுவனங்களுக்கு 117 சதவீதம் அளவிற்கு வருமான இழப்பை ஏற்படுத்தியது.

     ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த சட்டவிரோத செயல்களை சட்டப்பூர்வமாக ‘மாற்றியதில்’ காங்கிரஸ் தலைமையிலான அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சகம் முனைப்புடன் செயல்பட்டது. 
பெட்ரோலியத்துறையில் இயற்கை எரிவாயு தளங்களுக்கு பொறுப்பான ‘ஹைட்ரோ கார்பன் பொது இயக்குநரக’த்தைச் சேர்ந்த மிக முக்கிய அதிகாரி கள் பெருமளவில் லஞ்சம் வாங்கிக்கொண்டு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக வேலை செய்திருக்கிறார்கள்.

             இந்த இயற்கை எரிவாயு தளங்களில் பணியைத்துவக்கிய போது தனது மூலதனச் செலவு என்று 2.39 பில்லியன் டாலர்களை கணக்குக்காட்டிய 
ரிலையன்ஸ் நிறுவனம், பின்னர் மூலதனச்செலவினம் 8.8 பில்லியன் டாலர் என்று கணக்கை மாற்றி, அரசிடமிருந்து ரூ.45 ஆயிரம் கோடியை சுருட்டிவிட்டது. இதுதொடர்பான ஏராளமான விவரங்கள் மத்திய தலைமை கணக்கு மற் றும் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

       நாட்டை உலுக்கியுள்ள இந்த ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் 2006க்கும் 2011க்கும் இடையில் நடந்துள்ளது. இந்த காலகட்டத்தில் 
பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தவர் முரளி தியோரா ஆவார். இவர் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் முறைகேடுகளுக்கெல்லாம் ஏஜெண்டாக செயல்பட்ட ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

          அதிர்ச்சிதரத்தக்க இந்த விவரங்கள் கடந்த 2 நாட்களாக மன்மோகன் சிங் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சர்களுடன் அவசரமாக கலந்தாலோசனைகள் நடத்தி வருகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ஆ.ராசா, தயாநிதிமாறன் போன்ற மத்திய அமைச்சர்களின் வரிசையில் முரளி தியோராவும் சிக்குகிறார். இவர்கள் அனைவருக்கும் தலைமைப்பொறுப்பு வகிக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கும் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: