வியாழன், 9 ஜூன், 2011

தென் அமெரிக்கா சிவப்பாகிறது - பெரு நாட்டின் ஜனாதிபதியாகிறார் ஹுமாலா

 தென் அமெரிக்காவில் தொடர்கிறது இடதுசாரி அலை 





      பெரு நாட்டின் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவேன் என்ற வாக்குறுதிகளை அளித்துள்ள ஒல்லன்டா ஹுமாலா வெற்றி பெற்றுள்ளார்.

         48 வயதாகும் ஹுமாலா, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்றார். ஆனால் மக்கள் நலக் கொள்கைகளை முன்வைத்து தற்போது செய்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. முன்னாள் ராணுவ அதிகாரியான ஹுமாலாவுக்கு 51.5 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளதாக அதிகாரப் பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறும் போது அவர் பெறும் வாக்குகள் விழுக்காடு அதிகமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

        அவருக்கு அதிகமான வாக்குகள் கிடைத்துள்ள கிராமப்பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை விபரங்கள் மிகவும் மெதுவாக வந்தடைவதால்தான் இந்த எதிர்பார்ப்பு உள்ளது. தனது வெற்றி பற்றிக் கருத்து தெரிவித்துள்ள ஹுமாலா, பெரு நாட்டின் அனைத்து குடிமகன்களும் பலனடையும் வகையில் கொள்கைகளை உருவாக்குவோம். கனிமங்கள் மூலம்
கிடைக்கும் வருமானத்தை ஏழை மக்களின் நலன்களைப் பாதுகாக்க உதவுவோம். இயற்கை எரிவாயுவின் ஏற்றுமதியைக் குறைத்துவிட்டு, சொந்த நாட்டின் மக்களுக்கு குறைவான விலையில் அது கிடைக்குமாறு செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

       கடந்த தேர்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் ஆலன் கார்சியாவிடம் ஹுமாலா தோல்வியுற்றார். அவருக்கு எதிராக பெரு நிறுவனங்கள் இருந்தன. இம்முறையும் முதலாளித்துவ சக்திகள் 
எதிர்வேட்பாளர் கெய்கோ ஃபுஜி மோரிக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்தாலும், ஹுமாலா வெற்றி பெற்றுள்ளார். தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஹுமாலா, வேலைகள் உருவாக்குவது, வீடுகளைக் கட்டித்தருவது, பின்தங்கிய பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை உருவாக்கித் தருவது 
போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தருவோம்.

         கனிமவளத்திலிருந்து கிடைக்கும் அபரிமிதமான லாபத்தில் 65 விழுக்காட்டிற்கும் மேலான வருமானத்தை பன்னாட்டு நிறுவனங்களே அள்ளிச் செல்கின்றன. இது மாற வேண்டும். இந்த மாற்றத்தை உருவாக்கவே நான் இங்கிருக்கிறேன் என்று குறிப்பிட்டார். ஹுமாலாவின் வெற்றி ஜனநாயகத்தைப் பாதுகாத்துள்ளது என்று கருத்து தெரிவிக்கிறார் பெரு நாட்டைச் சேர்ந்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான மரியோ வர்காஸ் லோசா.

      பெரும் அளவில் இயற்கை வளம் கொட்டிக்கிடக்கும் பெரு நாட்டில், கிட்டத்தட்ட பாதிபேர் வறுமையில் வாடி வருகிறார்கள். அதிலும் கிராமப்புறங்களில் மூன்றில் இருவர் பெரும் நெருக்கடியில் உள்ளனர். ஆனால் கனிமவளத்தின் மூலம் ஏராளமான வருமானம் வருகிறது. அந்த வளத்திற்கும், பெருவின் பெரும் பாலான மக்களுக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

நன்றி : தீக்கதிர்                                      அரசியல் விழிப்புணர்வு  பெற          
     "தீக்கதிர்" நாளேட்டினை படியுங்கள்   

கருத்துகள் இல்லை: