''உலகம் அழியும்'' என்ற புரளியை நம்பி மக்கள் பீதியோ அச்சமோ அடையவேண்டாம்
என்றும், உலகம் அழியும் என்பது வெறும் கற்பனையே அதை யாரும் நம்பவேண்டாம்
என்றும் புதுச்சேரி அறிவியல் இயக்கம் நேற்று 19.12.2012 அன்று மக்களிடம்
கூறியுள்ளது.
புதுச்சேரி அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள்
துணைத்தலைவர்
ஆர். தட்சிணாமூர்த்தி தலைமையில் புதுச்சேரி
பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
''மாயன் நாட்காட்டி
அடிப்படையில் டிசம்பர் 21 - ஆம் தேதியன்று உலகம் அழியும் என்ற புரளி
மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. மனிதகுல வரலாற்றில் தனது தொடர்
முயற்சியால் அறிவியல் துறையில் மிக உயர்ந்த நிலையில் வளர்ந்து இருக்கும்
இக்காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட வதந்திகள் அறிவியலின் பேரால்
பரப்பப்படுவது என்பது துரதிஷ்டவசமானது. குறிப்பாக சில மத அமைப்புகளும், சில
தனி நபர்களும் இத்தகைய அறிவியலுக்கு புறம்பான வேலைகளை செய்து வருவதும்,
அதன் அடிப்படையில் சிறப்பு யாகங்கள், தொழுகைகள், பிரார்த்தனைகள் என
மக்களிடம் அச்சம் ஊட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தேவையற்றது.
இப்படிப்பட்ட புரளிகளை நம்பி மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை. இதற்காக
சிறப்பு வழிபாடுகளையோ, சடங்குகளையோ செய்யத்தேவையில்லை. இந்த புரளிக்கான
காரணங்களை அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ள வேண்டும்'' என்றும், மற்றும்
ஊடகங்கள் மூலமாக மக்களிடையே உலவி வரும் மாயன் சம்பந்தப்பட்ட தகவல்கள்
பற்றியும், நாசாவின் பெயரால் சில தனிநபர்களும், ஊடகங்களும் பொய்யான
தகவல்களை பரப்பி வருவதையும் மக்கள் நம்பவேண்டாம் என்றும் அந்த
பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் விரிவாக எடுத்துக்கூறினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக