தருமபுரி மாவட்டம் நாய்க்கன் கோட்டை அருகே நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணா
நகர் காலனி மக்கள் மீது வன்கொடுமை நிகழ்த்தப்பட்டதை அறிவீர்கள்...
வன்னிய சாதிப் பெண் திவ்யா, தலித் வாலிபர் இளவரசனைத் திருமணம் செய்து
கொண்டதைச் சாக்காக வைத்துக் கொண்டு சாதிய வெறி சக்திகள் நீண்ட கால
வன்மத்தைத் தீர்த்துக் கொள்ளும் வெறியோடு நவம்பர் 7 அன்று 268 வீடுகளை
முற்றாக அடித்து நொறுக்கித் தீயில் போசுக்கியுள்ளனர்.
தங்களது ஜீவாதாரங்களை மட்டுமல்ல, தங்களது வாழ்நாள் சேமிப்பான அனைத்தையும் சுவடின்றி அழித்துப் போட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் உடனே போய் நின்று பாதுகாப்பு உணர்வும்
நம்பிக்கையும் ஊட்டியதோடு தேவையான நிவாரணப் பொருள்கள் வழங்கவும்
மார்க்சிஸ்ட் கட்சி போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது...
தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சி பி ஐ விசாரணை கோரி வழக்கு
தொடரப்பட்டுள்ளது. வெறியர்களை உடனே கைது செய்யக் கோரியும், நடுத் தெருவில்
நிற்கும் மக்களுக்குக் குடியிருப்புகள கட்டித்தர வேண்டும் என்றும் தொடர்
இயக்கங்களை நடத்தி வருகின்றனர்.
இதன்டையே சமூக அக்கறை கொண்டுள்ள சங்கம் என்ற வகையில், நமது இந்திய வங்கி
ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநிலக் குழு சார்பில், நிதிக்கான அறைகூவல்
விடப்பட்டதில் வசூலான ரூ.1 லட்சம் தொகை, நிவாரணப் பொருள்களாக அந்த
மக்களுக்கு நேற்று வழங்கப்பட்டது. தமக்கு உதவியளித்த உள்ளங்களுக்கு அந்த
எளிய மக்கள் கண்ணீர் ததும்ப நன்றி சொல்லியிருக்கின்றனர். ஒரே நாள் தகவலில்
பாத்திர பண்டங்களாக முன்னூறு செட் கடையில் வாங்கி அவற்றை தனித்தனி
குடும்பங்களுக்காக பார்சல் செய்து மொத்தத்தையும் மூட்டைகளில் கட்டி எடுத்து
வந்து அங்கே வழங்கவும் ஏற்பாடு செய்தது AIIEA மாவட்ட நிர்வாகி மாதேஸ்வரன்
மற்றும் தோழர்கள்...மகத்தான பங்களிப்பு அது
BEFI சார்பில் சென்ற தோழர்களில் ஒருவனாக நானும் சென்றிருந்தேன்...
நேற்று அதிகாலை தோழர்கள்
சென்னையிலிருந்து புறப்பட்டு தருமபுரி சென்றிருந்தோம்..இன்சூரன்ஸ் தோழர்கள்
சிலரும் SZIEF பொதுச் செயலாளர் சுவாமிநாதன் அவர்களோடு எங்களுடன் பயணம்
செய்தனர். சுவாமிநாதன் முன்னதாகவே அங்கு சென்றுவந்த விவரங்களை விளக்கினார்.
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நிகழ்வு நேரிட்ட மூன்றாம் நாளே ரூ.1,70,000 நிதி
வழங்கி அந்த மக்கள் பக்கம் நின்றது குறிப்பிட வேண்டியது. அங்கே
மார்க்சிஸ்ட் கட்சி சார்ந்த சட்ட மன்ற உறுப்பினர் டில்லிபாபு, தமிழக
தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ் அவர்களோடு இணைந்து
நத்தம் கொண்டாம்பட்டி அண்ணா நகர் மூன்று கிராமங்களுக்கும் நேரில்
சென்றோம்.
நீதி கோரும் போராட்டத்தில்
சாட்சியங்களாக நிற்கும் இந்த கொடூர காட்சிகளோடு, அதற்கு இரண்டு நாள்
முன்னதாகக் கூடத் தங்கள் வீட்டில் கை நனைத்த, பரஸ்பரம் குடும்ப
நிகழ்வுகளில் பங்கேற்ற, நன்கு பரிச்சயமான மனிதர்கள் தான் இந்த வன்கொடுமையை
இழைத்தனர் என்று கதறிய பெண்களின் அதிர்ச்சி வாக்குமூலங்களும்
முக்கியமானவை...
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று எழுதிய வள்ளுவர் படம் கூட
எரிக்கப்பட்ட குழந்தைகளின் பாடப் புத்தகங்களோடு சேர்ந்து எரிந்து
போயிருக்கும் என்றே தோன்றுகிறது...
பின் குறிப்பு இன்று தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்த மூன்று சிற்றூர்கள் மக்களும் சேர்த்து
சுமார் 2500 பேருக்கு மேல் பங்கேற்றதாக ஒரு தோழர் (கணேஷ், கோவை ) தகவல்
தெரிவித்தார். கொண்டாம்பட்டி ஊரிலிருந்து மக்களை ஏற்றி வந்த வேனில் BEFI
கொடி கட்டப்பட்டிருந்ததை அவர் உற்சாகமாகச் சொன்னார். இதை விட நமக்கு வேறு
பெருமிதம் என்ன இருக்க முடியும்? அவர்களது நீதிக்கான போராட்டத்தில் இன்னும்
செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக