திங்கள், 17 டிசம்பர், 2012

புதுச்சேரியில் இந்தியா - வியட்நாம் நட்புறவு விழா - பாகம் - 2











        ஐந்தாவது இந்தியா - வியட்நாம் நட்புறவு விழா இன்று மாலை புதுவையில் நடைபெற்றது. ஏற்கனவே இரண்டு முறை இந்தியாவில் மேற்குவங்கம் - பீகார், கேரளம் - ஆந்திர மாநிலம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றிருக்கிறது. இரண்டு முறை வியட்நாம் நாட்டில் இந்த விழாவை நடத்தியிருக்கிறார்கள். இந்த முறை புதுச்சேரி மற்றும் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியிலுள்ள அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் தான் இந்த விழாவிற்கான முழு பொறுப்பும் ஆகும். புதுச்சேரியில் ஆளும்கட்சியாக என். ஆர். காங்கிரசாக இருப்பதால் இந்த சமாதான ஒருமைப்பட்டு அமைப்பை  காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே ஆக்கிரமிப்பு செய்துள்ளதாலோ என்னவோ இந்த விழா என்பது வெறும் ஆட்டம் - பாட்டம் - கொண்டாட்டம் மட்டுமே கொண்டே நிகழ்ச்சியாகவே நடத்தப்பட்டது. இந்த விழாவில் யாரும் ஒரு சிறு துளி அளவு கூட  வியட்நாம் நாட்டைப்பற்றியோ, பிரஞ்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது பற்றியோ, வியட்நாம் நாட்டின் மக்கள் தலைவர் ஹோ - சி- மின் பற்றியோ, அந்த நாட்டின் அரசியல் - ஆட்சிமுறை பற்றியோ திட்டமிட்டு மேடையில் பேசாமல் பார்த்துக்கொண்டார்கள். சோஷலிச வியட்நாமில் ஆட்சியாளர்களிடம் ஊழல் இல்லை, தீவிரவாதம் இல்லை, குண்டுவெடிப்பு இல்லை இது போன்ற நல்ல தகவல்களையும் திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள். இது போன்ற தகவல்களை எல்லாம்  இன்றைய இளையத்தலைமுறையினர்களுக்கு சொல்லவேண்டாமா...? எதற்காக இந்த விழா...? வெறும் ஆட்டம் - பாட்டத்திற்கு மட்டும் தானா...? விழா மேடையிலும் சரி, விழா சம்பந்தப்பட்ட விளம்பரங்களிலும் சரி வியட்நாம் நாட்டின் தலைவர் ஹோ-சி-மின் படத்தையும் போடாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
            ''சரித்திரம் தேர்ச்சி கொள்'' என்று நம்ப பாரதி சொன்னது போல் எப்போது தான் இவர்கள் சரித்திரத்தை மற்றவர்களுக்கு சொல்லப்போகிறார்கள்...? படிக்கப்போகிறார்கள்...? நம்ப நாட்டின் சரித்திரத்தையே அரைகுறையாக கொடுத்த ஆட்சியாளர்கள் எங்கிருந்து மற்ற நாட்டின் சரித்திரத்தை சொல்லபோறாங்க...?
            ஆனால் வியட்நாம் நாட்டின் கலைஞர்களின் குழு வியட்நாம் நாட்டின் மக்கள் தலைவர் ஹோ-சி-மின் பற்றிய வாழ்த்துப் பாடல் பாடினார்கள். வியட்நாம் மொழியில் பாடியதால் நமக்கு புரியவில்லையே என்றாலும், பாடலின் இடையிடையே ''ஹோ-சி-மின்'' பெயரை உரத்தி உச்சரிக்கும்  போது கேட்பதற்கே  நம் மனதிற்கு நெகிழ்ச்சியாகவும், எழுச்சியாகவும் இருந்தது.
         அண்டை நாடுகளோடு நட்புறவும் நல்லுறவும் கொள்ள இது போன்ற கூட்டு விழாக்கள் தேவை தான். ஆனால் அந்த நாட்டைப் பற்றிய தகவல்களை சொல்லி  நம் மக்களின் மனதில் நல்லெண்ணத்தை வளர்க்காமல் எப்படி நட்புறவு வளர்க்கமுடியும் என்பது தான் நமது கேள்வி....? 

கருத்துகள் இல்லை: