அறிவொளி பட்டியலில் திரிபுரா முதலிடத்தை பிடித்தது...!
இந்திய அறிவொளி வளர்ச்சி பட்டியலில் திரிபுரா, கேரளாவை பின்னுக்கு
தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனாலும் முழு கல்வி வளர்ச்சி பெற்ற
மாநிலமாக அது மாறவில்லை. இன்றைய தினத்தில் திரிபுராவில் 94.65
விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்று புள்ளி விவரங்கள்
கூறுகின்றன. நூறு விழுக்காடு கல்வியறிவு என்பது எங்கள் இலக்கு. அதை
விரைவில் நாங்கள் எட்டுவோம் என்று மிக நம்பிக்கையுடன் கூறுகிறார் திரிபுரா
மாநிலத்தை வழிநடத்திச் செல்லும் இடது முன்னணியைச் சார்ந்த முதல்வர் மாணிக்
சர்க்கார்.
உலக கல்வியறிவு தினத்தையொட்டி அகர்தலாவில் நடந்த
நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மாநில அறிவொளி
இயக்கத்திற்கு அவர் நன்றி கூறியதுடன், மாநிலத்துக்கு பெருமை சேர்த்துத்
தந்த இந்த பிரம்மாண்டமான இயக்கத்தில் தங்களது உடல் வருத்தங்களை
பொருட்படுத்தாது பாடுபட்ட அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியை
தெரிவித்துக்கொண்டார். மாநிலத்தின் அனைத்து மாவட்டத்தில் இருந்தும்
கிடைத்த மதிப்பீடுகளின் அடிப்படையில் அவர் மாநிலத்தின் அறிவொளி வளர்ச்சி
94.65 விழுக்காட்டை எட்டியது என்ற அறிவிப்பை கூட்டத்தில் வெளியிட்டார்.
இந்த
அருமையான தருணத்தில் மாநிலத்தை முழுகல்வியறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்க
வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் சில பிரிவு மக்களை, குறிப்பாக
மூத்த குடிமக்களை எங்களால் எட்ட முடியவில்லை என்று அறிவொளி இயக்க அதிகாரி
வருத்தப்பட்டார். எஞ்சியுள்ள 5.35 விழுக்காடு மக்களுக்கும் கல்வியறிவு
அளிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன என்றும் அவர் கூறினார். சுமார் 38 லட்சம்
மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் முழுவெற்றி அடைவோம் என்றும் அவர்
உறுதிபடக்கூறினார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் அதிகபட்ச
கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் பட்டியலில் திரிபுரா நான்காவது இடத்தில்
இருந்தது. 2011 புள்ளிவிவரப்படி திரிபுராவில் 87.75 விழுக்காட்டினர்
கல்வியறிவு பெற்றிருந்தனர். பாதுகாப்பு படையினர் ஆயுதமேந்திய
கலவரக்காரர்களைக் கட்டுக்குள் கொண்டு வந்த பின் அறிவொளி இயக்கத்தினரால்
தொலைதூர மலைப்பகுதி மக்களை அடைய முடிந்தது. அதன் பலனாக அப்பகுதிகளில்
அறிவொளி இயக்க வேலைகள் சிறப்பாக நடந்தன. மிசோரமில் கல்வியறிவு வளர்ச்சி
88.80 விழுக்காடு என்றும் கேரளாவில் இது 93.91 விழுக்காடு என்றும் திரிபுரா
அரசு அதிகாரிகள் கூறினர்.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி
திரிபுரா கல்வியறிவு வளர்ச்சியில் பன்னிரண்டாம் இடத்தில் இருந்தது. 2011
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது திரிபுரா நான்காவது இடத்துக்கு
முன்னேறியது என்றும் அவர் கூட்டத்தில் கூறினார். 2011 கணக்கெடுப்பில்
திரிபுரா 87.75 விழுக்காட்டை அடைந்த பின்பு, ஆகஸ்ட் 2012, அரசு எட்டு
மாவட்ட ஆட்சியாளர்களைக் கொண்டு ஒரு ஆய்வை நடத்தியது. 38 லட்சம் மக்கள்
வாழும் மாநிலத்தில் ஐம்பது வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களும்
அடங்கிய 1.31 லட்சம் மக்கள் மட்டுமே கல்வியறிவு பெறாதவர்கள் என்று
தெரியவந்தது என்று மாணிக் சர்க்கார் கூறினார். ஆகஸ்ட் 10 முதல் 25 தேதிவரை
கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்ட இந்திய புள்ளிவிவர நிறுவனத்தின் (ஐஎஸ்ஐ)
தலைமையில் புதிதாக கல்வியறிவு பெற்றவர்கள் பற்றிய இறுதி மதிப்பீடு
நடத்தப்பட்டது. ஐஎஸ்ஐ இடைக்கால அறிக்கையின்படி மாநிலத்தின் கல்வியறிவு
94.65 விழுக்காட்டை எட்டியுள்ளது தெரியவந்துள்ளது. ஐஎஸ்ஐ இறுதி அறிக்கை
கிடைக்கும் போது மாநிலம் 96 விழுக்காட்டை எட்டியிருக்கும் என்று முதல்வர்
தெரிவித்தார். கிராம பஞ்சாயத்து, கிராம சபைகள் உள்ளிட்ட உள்ளாட்சி
அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், உள்ளூர் மன்றங்கள் ஆகியவை முதல்வர்
மாணிக் சர்க்கார் தலைமையிலான மாநில அறிவொளி இயக்கத்தின் மேற்பார்வையில்
ஆத்மார்த்தமாக ஈடுபட்டதால் திரிபுரா இச்சாதனையை அடைய முடிந்தது.
திரிபுராவில் ஆண்களை விட பெண்களின் கல்வியறிவு வளர்ச்சி சிறப்பாக
இருக்கிறது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் திலிப் அச்சர்ஜீ
கூறினார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பெண்களின் கல்வியறிவு
64.91 விழுக்காடாக இருந்தது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் இது
83.15 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது 18.24 விழுக்காடு உயர்வாகும். ஆண்கள்
மத்தியில் இந்த உயர்வு 11.18 விழுக்காடுதான். ஆண்கள் மத்தியில் 2001ல் 81
விழுக்காடாக இருந்த கல்வியறிவு 92.18 விழுக்காடாக உயர்ந்தது என்றும் அவர்
கூறினார். இடது முன்னணி அரசின் திட்டங்களும் இதற்கு முன்னோடியாக இருந்தன.
மாநிலத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களில் பன்னிரண்டாம் வகுப்பு
வரை படிக்கும் பிள்ளைகள் அனைவருக்கும் இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டு
வருகிறது. அறிவியல் படிக்கும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்குஆண்டுதோறும்
ரூ.1718ம், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1485ம் வழங்கப்படுகிறது.
வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு முறையே ரூ.856ம், ரூ.645ம்
வழங்கப்படுகிறது. அதேபோல் கலைப்பிரிவு மாணவர்களுக்கு முறையே ரூ.855ம்,
ரூ.706ம் வழங்கப்படுகிறது. இதுபோன்ற முனைப்புகளை நாடு முழுவதும் கொண்டு
செல்ல வேண்டும்.
1 கருத்து:
இடதுசாரி அரசுகள் எப்போதும் மக்கள் நலனில் அக்கறைகொண்டு செயல்படுகின்றன,
வாழ்க இடது முன்னணி...
கருத்துரையிடுக