ஒரு பிறந்தநாள்கூடக் கொண்டாடாத 13 லட்சம் பிஞ்சுகள்! |
ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் குழந்தைகள் பிறக்கும் நாடான இந்தியாவில், பிறந்து ஒரு ஆண்டைக்கூட கழிக்காமல் உயிரிழந்து போகும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 13 லட்சமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலான குழந்தைகள் பிறந்து சில வாரங்களிலேயே இறந்து போனவையாகும். மேலும் 16 லட்சம் குழந்தைகள் ஐந்து வயதை நிறைவு செய்வதற்குள்ளாகவே உயிரிழந்து விடுகின்றன. பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்தப் புள்ளி விபரங்கள் மேலும் ஒரு அதிர்ச்சியைத் தருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிரசவத்தின்போது உயிரிழக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை சராசரியாக 55 ஆயிரம் என்பதுதான் அது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சராசரியாக 2.62 கோடிக் குழந்தைகள் பிறக்கின்றன. ஒருவேளை, பிறப்பு அதிகமாக இருப்பதால்தான் இந்த உயிரிழப்புகள் என்று ஆட்சியாளர்கள் சமாளிப்பதற்காகக் கூறினாலும், சராசரியிலும் இந்தியா பெரும் அளவில் பின்தங்கியுள்ளது. ஒரு லட்சம் பிரசவங்களில் சராசரியாக 212 தாய்மார்கள் உயிரிழக்கிறார்கள். ஆயிரம் குழந்தைகளில் ஒரு ஆண்டை நிறைவு செய்யாமல் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சராசரியாக 50 ஆகும். 1990 ஆம் ஆண்டில் தாய்மார்கள் உயிரிழப்பது 570 ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை குறைந்து விட்டது என்றாலும் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கிய நிலைதான் காணப்படுகிறது. மேற்கு ஐரோப்பாவில் இது வெறும் 15 ஆக இருக்கிறது. ரஷ்யா மற்றும் பிரேசிலில் 133க்கும் குறைவாகவே இருக்கிறது. இந்தியாவைவிட அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீனாவிலோ, பிரசவத்தின் போது தாய்மார்கள் இறப்பது லட்சத்தில் 38 ஆக மட்டுமே உள்ளது. 2000 ஆம் ஆண்டில் பிறந்து, ஒரு ஆண்டு நிறைவு செய்யாமல் உயிரிழக்கும் பிஞ்சுக்குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு 65 ஆக இருந்தது. இந்தியாவைவிட ஏழை நாடுகள் என்ற பட்டியலில் இருக்கும் வங்க தேசம்(ஆயிரத்திற்கு 52) மற்றும் நேபாளம்(ஆயிரத்திற்கு 48) ஆகியவை முன்னேற்றம் கண்டுள்ளன. சீனா மேலும் பல கட்டங்கள் முன்னேறி ஆயிரத்திற்கு வெறும் 19 என்ற நிலையை எட்டிவிட்டது. பெரும்பாலான குழந்தைகள் பிறந்த சில வாரங்களிலேயே இறந்து விடுகின்றன. மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவர்கள் இல்லாதது அல்லது அவை பெரும்பாலான மக்களின் செலவுக்குட்பட்டு கிடைக்காதது போன்றவைதான் இந்தத் துயரமான நிலைக்குக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இதில் நகர் மற்றும் கிராமப்புற இடைவெளியும் அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் 55 குழந்தைகள் என்ற நிலையும், நகர்ப்புறத்தில் 34 குழந்தைகள் என்ற நிலையும் இருக்கிறது. சுகாதாரத்தில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ள கேரளா, வளர்ந்த நாடுகளை விட நல்ல நிலையில் உள்ளது. பிறந்து ஒரு ஆண்டுக்குள் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு 12 என்பதுதான் இம்மாநிலத்தின் நிலை. இதற்கடுத்து நல்ல நிலையில் இருக்கும் மாநிலங்களாக தமிழகமும், மேற்கு வங்கமும் உள்ளன. பிரசவத்தின்போது உயிரிழக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை கேரளாவில் லட்சத்திற்கு 81 ஆக மட்டுமே இருக்கிறது. அசாமில் 390, உ.பி.யில் 359 என்ற மோசமான நிலை நிலவுகிறது. மேம்பட்ட நிலையில் இருக்கும் மாநிலங்கள் மற்றும் நாடுகள் சொல்லும் சேதியே நல்ல கல்வி, நல்ல கட்டமைப்பு மற்றும் சத்துணவு ஆகியவை தான். இவற்றைச் செய்ய காங்கிரஸ் மற்றும் பாஜக போலல்லாமல் இடது சாரிகள் போன்ற அரசியல் உறுதியுள்ள ஆட்சிகள்தான் தேவை. பிரசவத்தின்போது அம்மா இறப்பது அல்லது குழந்தை பிறந்த சில நாட்களுக்குள் உயிரிழப்பது போன்றவை சுகாதார வசதிகள் போதுமானவையாக இல்லாததையே காட்டுகிறது என்கிறார் மக்கள் சுகாதார இயக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் அமித் சென்குப்தா. குழந்தை பிறப்பு என்பது இயற்கையிலேயே நடக்கும் ஒன்றாகும். அதில் இறப்பு என்பது பிரசவத்திற்கு தடை உள்ளிட்ட பல்வேறு அவசர நிலைக் காரணங்களால் மட்டுமே ஏற்படும். இதை எதிர்கொள்ள போதிய பயிற்சி பெற்ற ஊழியர்கள் மற்றும் வசதிகள் தேவைப்படுகின்றன. அவசர நிலையின்போது 30 முதல் 40 கி.மீ. வரை பயணம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், துயரமான. தவிர்க்க வேண்டிய உயிரிழப்புகள் ஏற்படும் என்று விளக்குகிறார் அமித் சென்குப்தா. அரசின் பொது சுகாதார நிலையங்களின் செயல்பாடுகளை முடக்கி விட்டதே இத்தகைய துயர நிலைகள் உருவாவதற்குக் காரணமாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முதலில் பதவியேற்றபோது சுகாதாரத்துறைக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு விழுக்காடு நிதி ஒதுக்குவது என்று இடதுசாரிக்கட்சிகளின் வலியுறுத்தலால் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், பெரும் பணக்காரர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்தும் காங்கிரஸ் தலைமையிலான அரசு, இந்த உறுதிமொழியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டது. இந்த உறுதிமொழி நிறைவேறும்பட்சத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவை வலுப்பெற்றுவிடும் என்பது அத்துறை வல்லுநர்களின் கருத்தாகும். |
வியாழன், 19 ஜனவரி, 2012
பெரும் பணக்காரர்களுக்கு சலுகை - ஆனால் தாய் - சேய் நலனில் அக்கறை காட்டாத மத்திய அரசு..!
லேபிள்கள்:
சுகாதாரம்,
தாய் - சேய் இறப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக