இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் டாக்டர்களெல்லாம் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துகிறார்கள். நேற்று அரசு மருத்துவமனை டாக்டர்களும், இன்று தனியார் மருத்துவமனை டாக்டர்களும் போராடுகிறார்கள். பரவாயில்லையே....நல்ல மாற்றம் தான்.. இத்தனை நாட்களாக மருத்துவர்களுக்கு போராடுவதற்கே நேரம் இருக்காது. இருபத்து நான்கு மணி நேரமும் நோயாளிகளை கவனிக்கிற டாக்டர்கள் தான் அதிகம். இது ஏதோ சேவை நோக்கோடு அல்ல. இலாப நோக்கோடு தான். இவர்கள் மருத்துவமனைக்கு வந்து உட்கார்ந்தால் பணம் கொட்டோகொட்டுன்னு கொட்டும். இவர்கள் காலையில் எழுந்திருக்கும் போதே ''கடவுளே...இன்னிக்கு நிறைய நோயாளிங்க வரணும்'' என்று தான் சாமியை வேண்டிகிட்டு எழுந்திருப்பாங்க....
அதற்கு இவர்களை குற்றம் சொல்லிப்பயனில்லை. இன்றைக்கு அரசின் தனியார்மயக் கொள்கை அடிப்படையில் கல்வியையும், மருத்துவத்தையும் தனியார் கையில் கொடுத்தது தான் இதற்கெல்லாம் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மருத்துவ படிப்புக்கு தனியார் மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கு பல லட்சங்களை கொட்டித்தான் இடம் வாங்க வேண்டியிருக்கிறது. இடம் கிடைத்தவுடன் படிப்பதற்கு பல லட்சங்களை கொட்டித்தான் பாடம் படிக்கவேண்டியிருக்கிறது. பல லட்சங்களை கொட்டித்தான் பாஸ் பண்ண வேண்டியிருக்கிறது. பிறகு பல லட்சங்களைக் கொட்டித்தான் வேலை வாங்கவேண்டியிருக்கிறது.
இப்படியாக காசு கொடுத்து மருத்துவர் பட்டம் வாங்கிய பிறகு, அவர்கள் மனசாட்சியையும், மனிதாபிமானத்தையும் விற்றுவிடுகின்றனர்.
நோயாளிகள் மருத்துவர்களை கடவுளாகத்தான் நம்பி வருகின்றனர். ஆனால் மருத்துவர்களோ நோயாளிகளை பணத்தை அள்ளித்தரும் எந்திரமாகத்தான் பார்க்கின்றனர் என்பது தான் ஒரு கேவலமான விஷயமாகும். மருத்துவம் என்பது இன்றைக்கு ஒரு வியாபாரமாக மாறிவிட்டது. படிக்கும் போது செய்த செலவுகளை ஒரு முதலீடாக தான் செய்கிறார்கள். பிறகு அன்று செய்த செலவுகளை நோயாளிகளிடமிருந்தே பல மடங்காக திரும்ப எடுத்துக்கொள்கின்றனர். இதில் ஏழை - பணக்காரர் என்ற வித்தியாசமே கிடையாது. ஏழைகளிடமும் இரக்கமின்றி பணத்தை பறித்துவிடுவார்கள்.
கல்வியும் மருத்துவமும் வியாபாரமாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில், அதை எதிர்த்து இந்த மருத்துவர்கள் எல்லோரும் இன்று போல் போராடியிருந்தால் அதை நாம் பாராட்டியிருக்கலாம்.
ஏழை மக்களாயிருந்தாலும் தனியார் மருத்துவமனைக்குத்தான் சென்று மருத்துவம் பார்க்கவேண்டிய சூழ்நிலையை உண்டுபண்ணியதும் இந்த ஆட்சியாளர்கள் தான் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. ஆட்சியாளர்களும் வேண்டுமன்றே அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்தாமல் இருப்பது மட்டுமல்லாமல், அரசு மருத்துவமனையின் மீதான நம்பிக்கையையும் இழக்கச் செய்துவிட்டார்கள். இதை எதிர்த்து மருத்துவர்கள் எல்லோரும் போராடியிருந்தால் நாம் பாராட்டியிருக்கலாம்.
அது மட்டுமல்லாமல், மருத்துவக்காப்பீடு என்ற பெயரில் மக்களை கட்டாயமாக தனியார் மருத்துவமனைக்கே செல்லும் படியான நிர்பந்தத்தை ஆட்சியாளர்களே உருவாக்கியிருக்கிறார்கள். இதன் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களும், தனியார் மருத்துவமனைகளும் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாட்டினை அரசாங்கமே செய்துகொடுக்கிறது. இதை எதிர்த்து அந்த மருத்துவர்கள் எல்லோரும் போராடியிருந்தால் நாம் பாராட்டியிருக்கலாம்.
அதுமட்டுமல்ல, கிராம புறத்தில் இயங்கும் ஆரம்ப சுகாதார மையமாக இருந்தாலும் சரி, மாவட்ட மருத்துவமனையாக இருந்தாலும் சரி அனைத்து அரசு மருத்துவமனைகளில் வேலை பார்க்கும் அத்தனை டாக்டர்களும் வெளியில் தனியாக கிளினிக் வைத்துக்கொள்வது அல்லது தனியாக மருத்துவமனை நடத்துவது அல்லது தனியார் மருத்துவமனையில் பணிபுரிவது போன்ற வழிகளில் வேலை செய்து பணம் சம்பாதிக்கத்தான் இவர்கள் விரும்புகிறார்களே தவிர மக்களின் வரிப்பணத்தில் தானே நாம் படித்தோம்... அவர்களுக்கு சேவை செய்வது நமது கடமையல்லவா... என்ற சேவை நோக்கோடு மருத்துவத் தொழில் செய்யும் டாக்டர்கள் மிக மிகக் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அரசு டாக்டர்கள் வெளியில் இது போல் தனியாக மருத்துவம் பார்க்கக்கூடாது என்று அரசு உத்திரவிடவேண்டும். அதேப்போல் அவர்களை அரசு கண்காணிக்கவும் வேண்டும். அரசுத்துறைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் வெளியில் தனியாக வருமானம் தரும் வேலைகளில் ஈடுபடக்கூடாது என்ற நடத்தைவிதிமுறைக்குள் அரசு டாக்டர்களையும் கொண்டுவரவேண்டும். இதற்காக இந்த மருத்துவர்கள் போராடியிருந்தால் நாம் பாராட்டியிருக்கலாம்.
கல்வியிலும், மருத்துவத்திலும் தனியார்மயம் ஒழிந்தால் தான் சிகிச்சையில் சாதாரண மக்களின் மரணம் ஒழியும்.... அதேப்போல், அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்துவதன் மூலமும், மருத்துவர்களின் சேவை மனப்பான்மை உயர்வதன் மூலமுமே நல்ல மருத்துவத்தை கொடுக்கமுடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக