திங்கள், 9 ஜனவரி, 2012

தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு - ''அரசின் திட்டங்களும் பலன்களும் எட்டிப்பார்க்காத காலணிகள்''

              அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தோழர்களோடு நேற்று புயலால் பாதிக்கப்பட்ட  கடலூர் மாவட்டப்பகுதிகளை பார்வையிட சென்றிருந்தேன். அப்படி பார்வையிட்டதில் எங்கள் மனதை அழவைத்த பகுதிகள் தலித் மக்கள் வாழும்  ''கிளிஞ்சிகுப்பம்'' மற்றும் ''சந்திக்குப்பம்'' ஆகிய  இரண்டு காலணிகள் ஆகும். சென்ற  மாதம் அடித்த ''தானே'' புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட அந்த மக்களை தமிழக அரசு அறிவித்த எந்த நிவாரணமும் எட்டிப்பார்க்கவே இல்லை. பாராளுமன்ற உறுப்பினரோ, சட்டமன்ற உறுப்பினரோ, கவுன்சிலரோ, மாவட்ட ஆட்சித்தலைவரோ அல்லது வருவாய்த்துறை  அதிகாரிகளோ கூட இதுவரை எட்டிப்பார்க்காத இவ்விரண்டு காலனி மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு தமிழக முதலமைச்சருக்கும், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன். பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உடனே உதவி செய்கவென்று வலைப்பூ நண்பர்கள் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். கீழே முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகலும் அங்கே எடுக்கப்பட்ட படமும்......
************************************************************











































---------------------------------------------------------------------------------



அனுப்புநர்

புதுவை ராம்ஜி,
காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம்,
எல். ஐ. சி. ஆப் இந்தியா,
புதுசாரம்,
புதுச்சேரி - 605 013.

பெறுநர்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு.

மரியாதைக்குரிய முதலமைச்சர் அவர்களுக்கு,

பொருள் : கடலூர் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாத ''தானே'' புயலில் பாதித்த
                 இரண்டு காலனிகள் பற்றியது.

              எங்கள் எல். ஐ. சி ஊழியர் சங்கத்தின் சார்பில் தானே
புயலில் பாதித்த இடங்களை கடந்த நான்கு நாட்களாக பார்வையிட்டு வருகிறோம்.
அப்படி பார்வையிட்டதில்
 08 - 01 - 2012 அன்று மதியம் மூன்று மணிக்கு புதுவை பகுதிக்குள்ளேயே
இருக்கும் கிளிஞ்சிக்குப்பம் மற்றும் சந்திக்குப்பம் ஆகிய இரண்டு
கிராமங்களை பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த கிராமங்கள் இரண்டும்
புதுச்சேரிப் பகுதியில் உள்ள தமிழகப் பகுதி ஆகும். குறிப்பாக கடலூர்
மாவட்டத்தை சேர்ந்தப் பகுதியாகும்.

              இதில்  கிளிஞ்சிகுப்பம் காலனிப்பகுதியில் மட்டும்  சரியாக
201 வீடுகளும்   சுமார் ஆயிரம் பேர் மக்கள்தொகையும் கொண்ட
கிராமமாகும்.இவர்கள் அனைவரும் தலித் மக்கள் ஆவர்கள்.

                   அதேப்போல் சந்திக்குப்பம் காலனிப்பகுதியில் மட்டும்
சரியாக 50 வீடுகளும் சுமார் 200 பேர்  மக்கள்தொகையும் கொண்ட கிராமமாகும்.
இவர்கள் அனைவரும் தலித் மக்கள் ஆவார்கள்.

                     மேலே சொன்ன 251 வீடுகளில் பத்துப் பதினைந்து ஓட்டு
வீடுகளைத் தவிர அனைத்தும் கூரை வீடுகள் தான். சென்ற டிசம்பர் 29 இரவு
அடித்த கோரப்புயலின் காரணமாக அனைத்து ஓட்டு வீடுகளிலும்  ஓடுகளெல்லாம்
சரிந்து வீட்டுக்குள்ளேயே விழுந்திருக்கின்றன. அதனால் ஒருவருக்கு தலையில்
காயம் ஏற்பட்டிருக்கிறது. அதேப்போல் குடிசை  வீடுகளில் சில வீடுகளில்
இருந்த கூரைகள் முழுதுமாகவும் மற்றும் வீட்டிலிருந்த பாத்திரங்கள்
துணிமணிகள்  அனைத்தும் காற்றில் பறந்து வீடுகள் ஆகாயத்தைப்
பார்த்துக்கொண்டிருக்கின்றன. அதேப்போல்    பெரும்பாலான குடிசை வீடுகள்
பூமியில் சாய்ந்தும் கிடக்கின்றன. இரவில் குழந்தைகள் - பெண்கள் உட்பட
அனைவரும் வீட்டின் உள்ளே சென்று படுத்து உறங்குவதற்கு அச்சப்பட்டு
பனியில் நனைந்து கொண்டே வீதிகளில் படுத்து உறங்குகின்றனர்.

               மேலும் அடித்தப் புயலில் பெரும்பாலான வீடுகளில்
பாத்திரங்களும், உடைகளும் பறந்து சென்றுவிட்டன. பள்ளிகுழந்தைகளின்
புத்தகங்களெல்லாம் மழைநீரில் நனைந்து மீண்டும் பயன்படுத்த முடியாமல்
வீணாகிப்போய்விட்டன.

               இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இந்த காலணிப்பகுதியை
இதுவரையில் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் பார்வை அந்தக் கிராமத்தில்
படவேயில்லை  என்பது தான் சோகமான விஷயமாகும். பாத்திரங்கள் இல்லை - சமையல்
பொருட்களும் இல்லை. அதனால் அவர்கள் அத்தனை பேரும் உணவுக்காக
அல்லாடுகிறார்கள். குழந்தைகள் உட்பட பட்டினி கிடக்கிறார்கள். யாரோ ஒரு
சில பணம்படைத்தவர்களும், தொண்டு நிறுவனங்களும் ஒரு சிலருக்கு மட்டுமே
உணவு கொடுக்கக்கிறார்கள். அதுவும் ஒரு வேளைக்கு மட்டும் தான்
கிடைக்கிறது. முழுமையாக சாப்பாடு கிடைக்காததால், குழந்தைகள் உட்பட பல
பேர் பட்டினியால் வாடுகிறார்கள்.

                குடிநீர் கூட எப்போதாவது தான் அளிக்கப்படுகிறது.
மின்சாரம் பக்கத்து கிராமங்களுக்கு எல்லாம்  வந்து விட்டன. ஆனால் இன்று
வரை இங்கே சரிசெய்யப்படாமல் இன்றுவரை இந்த கிராமம் இருளில்
மூழ்கியுள்ளது.

              அதேப்போல் இன்னொரு சோக நிகழ்ச்சியையும் தங்கள்
கவனத்திற்கு கொண்டுவரவிரும்புகிறேன். புயல் அடித்த அன்று விடியற்காலை
கிளிஞ்சிகுப்பம் காலணிப்பகுதியில் வசித்துவந்த  நாற்பத்தியாறு வயதான வேலு
என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. புயல் அடங்கியப்பிறகு
மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வெளியே வந்திருக்கின்றனர். ஆனால் சாலை
முழுதும் மரங்களும் மின் கம்பங்களும் விழுந்துக்கிடந்ததால்
மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல முடியாமல் வீட்டிலேயே வைக்கப்பட்ட
நிலையில் இறந்துவிட்டார். ஆனால் கிராம நிர்வாகம் அவர் புயலின் காரணமாக
இறந்துவிட்டதாக பதிவு செய்யாமால் சாதாரணமாக இறந்துவிட்டதாக பதிவு
செய்திருக்கிறது.

             இவ்வளவு நடந்தும், இந்த காலணிப்பகுதிகளுக்கு பாராளுமன்ற
உறுப்பினரோ, சட்டமன்ற உறுப்பினரோ, வார்டு கவுன்சிலரோ ஒருமுறை கூட வந்து
பார்க்கவில்லை என்பது தான் ஒரு சோகமான விஷயமாகும். அதனால் தாங்கள்
அறிவித்த எந்தவிதமான நிவாரணங்களும் அந்த மக்களை சென்று அடையவில்லை.

              எனவே இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட்டு, பாதிக்கப்பட்ட
பாதிக்கப்பட்ட கிளிஞ்சிகுப்பம்  மற்றும் சந்திக்குப்பம் காலனி மக்களுக்கு
உடனடியாக உணவும் குடிநீரும் கிடைக்க ஏற்பாடு செய்துதர வேண்டுகிறேன்.
அதேப்போல், வீடுகளை இழந்து தவிக்கும் அம்மக்களுக்கு வீடுகளைக்
கட்டிக்கொள்ள ஏற்பாடுகள்  செய்துதர வேண்டுகிறேன். மேலும் நீங்கள்
அறிவித்த அத்தனை நிவாரண உதவிகளும் அந்த மக்களையும் சென்றடைய ஆவணச்
செய்யும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.

               மேலும், புயலின் காரணமாக மரணமடைந்த வேலு குடும்பத்திற்கு
நீங்கள் அறிவித்த இழப்பீட்டினை தந்து அவரை இழந்து வாடும் அவரது
குடும்பத்திற்கும் தாங்கள் தலையிட்டு உதவி செய்யும்படியும்
கேட்டுக்கொள்கிறேன்.

             இன்னொரு முக்கியமான தகவலையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர
விரும்புகிறேன். பாதிக்கப்பட்ட அந்த காலனி மக்கள் அனைவரும் சென்ற
சட்டமன்றத்தேர்தலிலும் உள்ளாட்சித்தேர்தலிலும் தங்களது கட்சிக்கு
வாக்களித்தவர்கள் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

           அங்கே எடுக்கப்பட்ட படங்களையும் தங்கள் பார்வைக்காக இத்துடன்
இணைத்துள்ளேன்

        மிக்க நன்றி.


                                                             தங்கள் உண்மையுள்ள,


                                                                   புதுவை ராம்ஜி

கருத்துகள் இல்லை: